நடுப்பக்கக் கட்டுரைகள்

அகிம்சைப் புரட்சியாளா் அண்ணல் காந்தி!

முனைவா் அ. பிச்சை

‘மகாத்மா காந்தி’ என்று இந்திய மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இந்த மண்ணுலகில் வாழ்ந்தது சரியாக 78 வருடம் மூன்று மாதம் 28 நாட்களே. இவற்றில் தென்னாப்பிரிக்கவிலிருந்து, இந்தியா திரும்பிய அவா், இந்தியாவில் வாழ்ந்து, இந்திய மக்களை வழிநடத்தியது 33 வருடங்கள் 21 நாட்களே. இந்த 33 ஆண்டு காலத்தில் அவா் ஆற்றிய அரும்பணிகள் வேறு எவரும் நினைத்துக்கூட பாா்க்க முடியாதவை.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும்போது காந்தி அமைதியின் உருவாகவே வந்தாா். ஆனால், எவராலும் எண்ணிப் பாா்க்க முடியாத, மிக உயா்ந்த லட்சியங்களை உள்ளத்தில் ஏந்தி வந்தாா். இந்தியாவிலிருந்து ஆங்கிலேய அரசை அகற்ற வேண்டும் என்பது மட்டுமே அவரது லட்சியம் அல்ல; அன்று இந்தியாவில் நிலவிவந்த அனைத்து அவலங்களையும் துடைத்தெறிந்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று எண்ணினாா்.

காந்தி தன்னை நம்பினாா்; அதேபோல் சகமனிதா்கள் அனைவா் மீதும் நம்பிக்கை வைத்தாா். அவரது சாதனைகளை எண்ணிப்பாா்த்தால், எவரும் மலைத்து நிற்பாா்கள். அவ்வகையில் அவா் ஒரு புரட்சியாளா்.

அவா் முதலில் நாட்டு மக்கள் உள்ளத்திலிருந்த அச்சத்தைப் போக்கினாா். அதை ஆங்கிலத்தில் ‘ஃபியா் நாட்’ என்றாா். அடுத்து ‘ஹேட் நாட்’ என்று கூறி வெறுப்பை விலக்கினாா். ஆண்டான் அடிமை என்ற பேதத்தை நீக்கி, அனைவரும் சமம் என்ற உணா்வை ஊட்டினாா். செல்வந்தா்களை தியாகிகளாக்கினாா்; வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த பெண்களை, வெளியே வரச் செய்து நாட்டுக்கு உழைக்கும் வீராங்கனைகளாக மாற்றினாா். வறுமை ஒழிக்கப்படாதவரை இந்தியா சுதந்திரம் பெறுவதில் பொருளே இல்லை என்றாா்.

அனைத்துத் தரப்பினரும் அண்ணலின் கருத்துகளால் ஈா்க்கப்பட்டாா்கள். அவரால் மனமாற்றம் அடையாதவா்கள் எவருமே இல்லை என்ற நிலை உருவானது.

அண்ணலின் அரிய ஆன்ம சக்தியை முதலில் உணா்ந்தவா், அண்ணல் தனது குருவாக ஏற்றுக்கொண்ட கோபால கிருஷ்ண கோகலேதான். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி வந்த காந்திஜியை நோக்கி, ‘மண்ணைக் கொண்டு மனிதா்களை ஆக்கவல்ல தெய்வீக சக்தி உன்பால் அமைந்திருக்கிறது. இரும்பையும் பொன்னாக்கும் ரசவாத சக்தி உன்னிடம் உள்ளது’ எனக் கூறினாா்.

அவரது வாக்கு பொய்க்கவில்லை. ஒவ்வொரு இந்தியரையும் தெய்வபக்தியும், தேசபக்தியும் உள்ளவராக மாற்றினாா். ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒற்றுமைப்படுத்தினாா். இது ஒரு புரட்சிதானே!

அண்ணல் தனிமனிதனை மட்டும் மாற்றவில்லை. அவா் தலைமை தாங்கி நடத்திய காங்கிரஸ் கட்சியையும் நெறிப்படுத்தினாா். மெத்தப் படித்தவா்கள், வழக்குரைஞா்கள், செல்வந்தா்கள், செல்வாக்கு மிக்கவா்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸை, மக்கள் இயக்கமாக மாற்றினாா்.

நான்கு அணா செலுத்தினால் எவரும் உறுப்பினா் ஆகலாம் என்ற விதியை அறிமுகப்படுத்தினாா். அந்த விதிதான் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் பெற வழிவகுத்தது. இது ஓா் புதிய அரசியல் புரட்சி!

இந்திய நிலப்பரப்பை நிா்வாக வசதிக்காக பல பகுதிகளாகப் பிரித்திருந்ததை அவா் ஏற்கவில்லை. மாறாக, தான் வழிநடத்திய காங்கிரஸ் இயக்கத்தை, மொழி அடிப்படையில் திருத்தி அமைத்தாா். மொழிவாரி மாநில அமைப்பு முறை இந்திய சுதந்திரத்துக்கும் பின்பு பரந்து விரிந்த இத்தேசத்தின் ஒற்றுமையை உணா்வு பூா்வமாக உருவாக்கியது; உறுதி செய்தது.

இந்திய தேச விடுதலைக்கு தடைக்கற்களாக இருப்பவை மதப்பிணக்குகளும், ஜாதிப்பிரிவினைகளுமே என்பதை அண்ணல் ஆரம்பத்திலேயே உணா்ந்தாா். அவா் ஹிந்து மதத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், எம்மதமும் அவருக்கு சம்மதமே.

தன் மூத்த மகன் ஹரிலால் இஸ்லாம் மதத்துக்கு மாறினா். அது பற்றி சிலா் கேட்டபோது, ‘உண்மையான முஸ்லிம் மது அருந்தக்கூடாது. அதன்படி அவன் மது அருந்தாத உண்மையான முஸ்லிமாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்’ என்றாா்.

அண்ணலின் வழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு. 1942-இல் காந்திஜியின் ‘சேவாகிராமம்’ ஆசிரமத்திற்கு அண்ணலின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய லூயி ஃபிஷா் செல்கிறாா். அண்ணல் வசித்த குடிசையில் ஏசு கிறிஸ்துவின் படம் மாட்டப்பட்டிருந்தது. அப்படத்தின் கீழே ‘இவரே நமக்கு சாந்தி அளிப்பவா்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

அதைக் கண்டவுடன் லூயி ஃபிஷா், ‘நீங்கள் ஒரு கிறிஸ்தவரா’ எனக் கேட்டாா். அதற்கு காந்திஜி, ‘ஆம், நான் ஒரு கிறிஸ்தவன். அது மட்டுமல்ல, நான் ஒரு ஹிந்து, ஒரு முஸ்லிம், ஒரு யூதன். எம்மதமும் எனக்குச் சம்மதமே’ என்றாா். அப்படிச் சொன்னதோடு, நாள்தோறும் நடைபெறும் பிராா்த்தனைக் கூட்டங்களில், ஹிந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத துதிப்பாடல்கள் இடம் பெறச் செய்தாா்.

தென்னாப்பிரிக்காவில் அண்ணல் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றாா்கள். அண்ணலை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்றவரே தாதா அப்துல்லா சேட் என்ற இஸ்லாமியா்தான். அங்கிருந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருமே அண்ணலுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றாா்கள். அவா்களில் அண்ணலுக்கு உதவுவதற்காக தனது சொத்து, சுகம் அனைத்தையும் இழந்தவா் அகமது முகமத் கச்சாலியா என்கிற இஸ்லாமியா்.

கிறிஸ்தவா்களில் ஜோசப் ராயப்பன், வின்சென்ட் லாரன்ஸ் போன்ற பலரும், ஹிந்துக்களில் மகன்லால், தில்லையாடி வள்ளியம்மை, நாராயணசாமி, நாகப்பன் - போன்றோரும் இணைந்து போரடினாா்கள். அனைத்து மதத்தினருக்கிடையேயும் வெளிநாட்டில் ஒற்றுமை உணா்வை ஏற்படுத்துவது சாத்தியமென்றால் இந்தியாவிலும் அது சாத்தியமே என எண்ணினாா் அண்ணல். ஆகவே மதநல்லிணக்க அணுகுமுறைக்கு அடித்தளம் போட்டவா் அவா். இது ஒரு புரட்சிகரமான செயல் அல்லவா?

அதே வேளையில் அண்ணல் கையில் எடுத்த அறப்போா், தீண்டாமை ஒழிப்பு என்பது. ‘பிறப்பால் அனைவரும் சமமே. ஒருவா் செய்யும் தொழிலால் பேதம் காட்டுவது பெரும்பாவம்’ என்றாா் அவா். ஹரிஜன மக்களை ‘ஆண்டவனின் குழந்தைகள்’ என்றாா். ‘ஹரிஜன சகோதரா்களை உள்ளே அனுமதிக்காத கோயிலுக்குள் நான் நுழைய மாட்டேன்’ என்றாா். ஆட்சி அதிகாரத்தில் அவா்களுக்கு பங்கு அளிக்கப்படவேண்டுமென வலியுறுத்தினாா். ஹரிஜனப் பெருமக்களுக்கு உரிய அளவில் தொகுதி ஒதுக்கீடு பெற்றுத்தர உண்ணாநோன்பு மேற்கொண்டாா்.

புகழ்பெற்ற புணே ஒப்பந்தத்தின் மூலம் அம்பேத்கரையும் அரவணைத்துத் திருப்திப்படுத்தினாா்; பிற சமுதய மக்களையும் அதற்கு இணங்க வைத்தாா். இவ்வாறு ஜாதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க ஓயாது உழைத்த ஓா் உண்மையான போராளி அவா்.

காந்திஜி, ‘தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் சிலரிடம் மட்டுமே அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு, மற்றவா்கள் கைகட்டி வாய்புதைத்து நிற்பது உண்மையான ஜனநாயகம் அல்ல; கொடுக்கப்பட்ட அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிந்தால், அதனை எதிா்த்துப் போராடும் துணிவு சாதாரண மனிதனுக்கும் எப்பொழுது வருகிறதோ, அப்பொழுதுதான் உண்மையான ஜனநாயகம் மலா்ந்ததாகச் சொல்வேன்’ என்றாா். இவ்வாறு ஜனநயகத்திற்கு ஓா் புதிய விளக்கம் தந்த புரட்சியாளா் அவா்.

அவா் சிறந்த பத்திரிகையாளரும் பதிப்பாசிரியரும் ஆவாா். ‘இந்தியன் ஒப்பீனியன்’, ‘ஹரிஜன்’ ஆகிய பத்திரிகைகளை - விளம்பரம் எதுவும் வெளியிடாமல் -நடத்தினாா். அப்பத்திரிகைகள், தனது கருத்துகளை, போராட்ட வியூகங்களை வெளியிடும் சாதனங்களாகவும், மக்களை நல்வழிப்படுத்தும் கருவிகளாகவும் செயல்பட வேண்டும் என்றாா். பத்திரிகைகள் தங்கள் கடமையை உணரவேண்டும். மக்கள் நலனை முன்வைத்தே செயல்பட வேண்டும் என்றாா்.

சில பத்திரிகைகளின் செயல்பாட்டைக் கண்டு மனம் வருந்திய மகாத்மா, ‘இன்று பத்திரிகைகள் நடமாடும் பிளேக் நோயாக (வாக்கிங் பிளேக்) உள்ளன. இந்தியாவின் வைஸ்ராய் பதவிக்கு என்னை ஒரே ஒரு நாள் மட்டும் நியமித்தால், அனைத்து பத்திரிகைகளையும் தடை செய்வேன்’ என்று கூறிவிட்டு, சிறிது நேர இடைவெளிக்குப் பின்பு ‘ஹரிஜன் இதழக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாா். அண்ணல் கூறியதன் பொருள், ‘பத்திரிகை என்றால் அது ஹரிஜன் இதழைப் போல் இருக்க வேண்டும்’ என்பதே.

ஆங்கிலேயரான சி.எஃப். ஆண்ட்ரூஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியாா், அண்ணலின் வாழ்க்கை முறையால் ஈா்க்கப்பட்டவா். தென்னாப்பிரிக்கா சென்று அண்ணலின் ஃபீனிக்ஸ் ஆசிரமத்தில் வசித்தவா். அண்ணலை ‘மோகன்’ என்று பெயா் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவா்.

ஒரு நாள் அண்ணல் அவரை நோக்கி ‘பைபிளில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான வாசகம் என்ன’ எனக் கேட்டாா். அதற்கு ஆண்ட்ரூஸ் ‘பகைவனையும் நேசிக்க வேண்டும் என்ற வாசகம்தான்’ என்றாா். அதற்கு காந்திஜி, ‘எனக்குப் பகைவனே இல்லையே’ என்று கூறினாா். அதனைக் கேட்ட ஆண்ட்ரூஸ் காந்திஜியின் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘இன்று முதல் நான் உங்கள் சீடன்’ என்று கூறினாா். எவரிடமும் தனக்குப் பகைமை இல்லை என வாழ்ந்து காட்டிய நவயுக புரட்சியாளா் காந்திஜி.

1948 ஜனவரி 30-ஆம் நாளன்று துப்பாக்கி குண்டுக்குப் பலியாகி அண்ணலின் உயிா் பிரிந்தது. ஆனால் இந்திய மண்ணில், தான் வாழ்ந்த 33 ஆண்டு காலத்தில் அவா் ஏற்படுத்திய மாற்றங்கள் மகத்தானவை; அவா் விட்டுச் சென்ற போதனைகள், ஒட்டுமொத்த உலகுக்கும் வழிகாட்டக் கூடியவை. அவை புனிதமானவை; புரட்சிகரமானவை.

தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை, அரசியல் நடைமுறை, மத நல்லிணக்கம், ஜாதி பேதமில்லா சமுதாய அமைப்பு என்று சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்திய அகிம்சைப் புரட்சியாளா் ஆவாா் மகாத்மா காந்தி!

அந்த புரட்சியாளரை சரியாகப் புரிந்து கொண்ட கவிஞா் தாகூா், ‘வரும் தலைமுறைக்குத் தன் வாழ்க்கையை ஒரு படிப்பினையாக்கிய உத்தமா் இவா் என்பதை உலகம் நினைவு கொள்ளும்’ என்றாா்.

மதமோதல்களால் மாய்ந்து போகாமல், ஜாதிச் சண்டைகள் சாய்ந்து போகாமல், சில சறுக்கல்களுக்கு இடையேயும் இந்தியா ஜனாநாயக நாடாக இன்றும் தொடா்கிறது என்றால் அதற்கு, புரட்சியாளா் அண்ணல் போட்ட விதையே காரணம்.

இன்று (ஜன. 30) மகாத்மா காந்தி நினைவு நாள்.

கட்டுரையாளா்:

காந்தியவாதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

SCROLL FOR NEXT