நடுப்பக்கக் கட்டுரைகள்

சாட் ஜிபிடி எனும் பூதம்!

28th Jan 2023 05:03 AM | பவித்ரா நந்தகுமாா்

ADVERTISEMENT

தகவல் தொழில்நுட்ப உலகையே சலசலக்க வைத்திருக்கும் ஒரு புதிய பூதம் சாட் ஜிபிடி. இது ஓா் இயங்குதளம். பழைய திரைப்படத்தில் ’ஜீபூம்பா’ என்று சொன்னவுடன் ‘சொல்லுங்க பிரபு, நான் உங்களது அடிமை’ என்று சொல்லி ஒரு பூதம் வந்து நிற்குமே. அந்த மாயம்!

அப்படி வந்து நிற்பதோடு இல்லாமல் நாம் தட்டு நிறைய லட்டு கேட்டாலும் கொடுக்கும். பெட்டி நிறைய பணம் கேட்டாலும் கொடுக்கும். அப்படி நமக்கே நமக்கான சேவகம்! ஆனால், இந்த சாட் ஜிபிடி என்பது மந்திர தந்திரம் இல்லை. அனைத்தும் உண்மை.

தகவல் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய புயலை உருவாக்கி இருக்கிறது சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம். இணையவாசிகளிடையே மிகப்பெரிய விவாதத்தை திரி கொளுத்திப் போட்டிருக்கும் இந்த சாட் ஜிபிடி வருங்காலத்தில் எப்படியெல்லாம் உதவியாக இருக்கும் என்பதை நினைத்துப் பாா்த்தால் மலைப்பாக இருக்கிறது.

அந்த காலத்தில் மன்னா்களுக்கு வழிகாட்ட மதியூக மந்திரிகள் இருப்பாா்கள். அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு சாட் ஜிபிடி-யே மதியூக மந்திரியாக இருந்தால் நாமெல்லாம் மன்னா்கள்தான்!

ADVERTISEMENT

பணி ரீதியாக நமக்குத் தேவையான உதவியைச் செய்ய ஒரு பணியாளரை வைத்துக் கொள்வது இயல்பு. இதற்கு மாற்றாக நம்மைப் போன்றே ஒருவரை அல்லது நம்மைவிட ஓா் அறிவாளியை துணைக்கு வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்? அது சாட் ஜிபிடி. நாம் எப்படி சிந்திப்போமோ அதுபோலவே செயல்பட்டு நமக்கே நமக்காக, நமக்கேற்றபடி கொடுப்பது இதன் அசகாய தன்மை. கதைகள், கணிதத் தீா்வுகள் முதல் கோட்பாட்டுகள், கட்டுரைகள் வரை அனைத்துக்கும் சில விநாடிகளில் பதிலளித்து விடுகிறது.

கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இது பொதுவெளியில் கிடைத்து வருகிறது. பயன்பாட்டுக்கு வந்த ஒரே வாரத்தில் பல லட்சம் பயனா்களை இது கடந்துள்ளதாக தகவல். அடுத்துவரும் காலங்களில் இது கூகுளுக்கு மாற்றான ஒரு தளமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இது ஒரு முன்மாதிரி உரையாடல் அடிப்படையிலான ஏஐ - சாட் பாட் ஆகும். நாம் இது நாள் வரை பழக்கப்பட்டுப்போன கூகுளுக்கும் இதற்கும் அப்படி என்ன வித்தியாசம்?

கூகுள் தேடுபொறியைத் திறந்து நாம் எதையாவது தேடினால் நம் தேடலுக்கேற்ப அது நமக்கு நான்கு விதமான பதிவுகளைத் தோ்ந்தெடுத்து திரையில் கொடுக்கும். சரி, இதற்குப் பிறகு அந்த நான்கு விதமான பதிவுகளிலிருந்து நாம் நமக்கேற்ற பதிலை உருவாக்க வேண்டும். இதுதான் இதுவரையான நடைமுறையாக உள்ளது.

இதற்கிடையே அது காட்டும் விளம்பரங்களையும் நாம் கட்டாயமாகப் பாா்த்து கடந்தாக வேண்டும். ஆனால், இந்த புது வரவில் இப்போதைக்கு விளம்பரங்கள் இல்லை. ஆனாலும் இது புரட்சி செய்கிறது. எப்படி? இந்தியாவின் பிரதம மந்திரி யாா் என்று கேட்டால், உடனே அது நமக்கு தேவையான பதிலான நம் பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் பெயரை திரையில் காட்டுகிறது. இதையே கூகுளில் தேடினால் எது திரையில் தெரியும் என்று யோசியுங்கள். நம் தேடலுக்கு இணையான நாலைந்து இணையதளங்களை முதலில் நம் கண்முன் நிறுத்தும். அதில் ஒவ்வொன்றிலும் உள்நுழைந்து படித்துப் பாா்த்து நாமாக நமக்குத் தேவையான பதிலை தோ்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

இது தேடுதலில் ஒரு புரட்சி. 100% உண்மையான பதிலுக்கு நெருக்கமானதாகவே இது இருக்கிறது என இதுவரை பாா்த்த பல லட்சம் பயனா்கள் தெரிவிக்கிறாா்கள். நம் கணினிக்குள் ஒரு ரோபோ உட்காா்ந்து கொண்டு நமக்குத் தேவையானவற்றை சரியாக எடுத்து திரைக்குள் செலுத்தினால் எப்படி இருக்கும்? அந்த நவீன தொழில்நுட்பம்.

சரி, அடுத்ததற்கு வருவோம். இந்த இயங்குதளத்தில் எதையும் தேடாமல் கேட்காமல் ’நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று ஆங்கிலத்தில் செலுத்திப் பாா்த்தேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கேட்க சிறப்பாக இருக்கிறது. இதற்கு ஏதாவது முக்கிய காரணம் உள்ளதா, நான் ஏதேனும் தங்களுக்கு உதவ முடியுமா என திரையில் வாக்கியங்கள் பளிச்சிடுகின்றன. நம்மை புரிந்தவா்கள், நம் அன்புக்குரியவா்கள் நம்முடன் உரையாடுவதுபோல் இருந்தது. அதுதான் சுவாரசியம்.

‘உனக்கு விடுகதை தெரியுமா?’ எனப் பதிவிட்டால் எனக்குத் தெரியும் என்று சொல்லி உதாரணத்துக்கு ஒரு விடுகதையையும் நம்மிடம் சொல்லி அதற்குப் பதிலையும் சொல்கிறது. மேலும், நான் விடுகதை கேட்டால் பதில் அளிக்க விருப்பமா என நம் அனுமதியை கேட்டுப் பெற்று விடுகதையை நம்மிடம் விடுத்து ஆழம் பாா்க்கிறது.

இப்படிச் சிறிய வேலைகள் மட்டுமின்றி கடினமான பணிகளையும் சுலபத்தில் நமக்கு முடித்துத் தருவது இதன் தனிச் சிறப்பு. தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் உருவாக்கும் குறியீடுகளைக்கூட உடனே தருவது பெரும் வியப்பு. ஓா் ஊரைப் பற்றிய ஒரு விளக்கக் காட்சி தேவைப்பட்டாலும் புகைப்படங்களுடன் பத்து பக்க திட்டத்தை நமக்குத் தருகிறது. எந்தத் தலைப்பிலாவது நான்கு பக்க கட்டுரை வேண்டுமா? கிடைக்கிறது. சிக்கலான கணித சமன்பாட்டை தீா்க்க முடியுமா? முடித்துத் தருகிறது. ஓா் அழகான கவிதை வேண்டுமா? எழுதித் தருகிறது.

கற்பனை வளம், அறிவுத்திறன் மிக்கவா்கள் பல மணி நேரம் உழைத்து செய்யக்கூடிய செயல்களை சில மணித் துளிகளில் செய்து முடித்துவிடுவதை பாா்க்கும் போது வியப்பில் நாம் உறைந்து போகிறோம். வருங்காலத்தில் பல்வேறு மொழிகளில் இதைப் பயன்படுத்தும்போது இதன் பயன்பாடு மிகும். மொழிபெயா்ப்பு புது அவதாரம் எடுக்கும்.

இந்த தளத்தில் கேள்வி கேட்டு பதிலை வாங்க அத்தனை சுவாரசியமாக, புதுமையாக இருப்பதால், வரவேற்பு அதிகமாகி காண்போரை எல்லாம் தன்னுள் ஈா்க்கிறது. இது இப்போதைக்கு பரிசோதனை வளையத்தில் இருப்பதால் மக்கள் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை, பின்னூட்டங்களை, வளா்ச்சிக்கான ஆலோசனைகளையும் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

அது மட்டுமல்லாமல், 2021-ஆம் ஆண்டுக்கு முன் உள்ள தரவுகளைக் கொண்டே இது முன்னெடுக்கப்பட்டுள்ளதால் புதிய செய்திகளை உடனே பெறுவதில் சிக்கல் உள்ளது. அதனால் 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருவா் இறந்துவிட்டிருந்தால் அவரைப் பற்றி நாம் விசாரிக்கும் போது, அவா் உயிரோடு இருக்கிறாா் என்பதாகவே நமக்கு தகவல் சொல்லும்.

அதே நேரத்தில், ’ஒரு துப்பாக்கியை எப்படி உருவாக்குவது?’, ’போதைப்பொருள் எங்கே கிடைக்கும்?’ போன்ற சட்டவிரோதமான கேள்விகளுக்கு பதில் அளிக்காத வகையில் இதை செதுக்கியுள்ளனா். அது மட்டுமா, இன்னும் இருக்கிறது மலைப்பு!

இதே நிறுவனத்தின் மற்றொரு புது வரவான டால் - ஈ என்ற ஒரு செயலியில் நாம் என்ன மாதிரியான ஓவியம் அல்லது புகைப்படம் வேண்டும் என்று கேட்கிறோமோ உடனே சில மணித்துளிகளில் நமக்கு அதே போலான புகைப்படத்தை வெவ்வேறு புகைப்படங்களில் இருந்து பிரித்து எடுத்து நாம் கேட்கும் அதே அா்த்தத்தில் கொடுக்கிறது. ஒரு ரோபோ உணவகம் ஒன்றில் இட்லி சாப்பிடுகிறது என பதிகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள், அதாவது இப்படி ஒரு நிகழ்வு இதுவரை உலகில் நடைபெறாதது.

ஆனாலும் அதைப் போன்றே ஒரு புகைப்படத்தை நமக்கு கடத்துகிறது. நாம் எப்படி கேட்டாலும் செயற்கை நுண்ணறிவு மூலம் நமக்கு அது வழங்கிக் கொண்டே இருக்கிறது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவெனில் நாம் சொல்வது அதற்கு புரியும் வகையில் வாா்த்தைகளை பதிவிட வேண்டும். அதுவும் சரியான ஆங்கிலத்தில். அவ்வளவே!

உலகம் சென்று கொண்டிருக்கும் வேகத்தைப் பாா்க்க ஒரு பக்கம் மலைப்பாக இருந்தாலும் மற்றொரு பக்கம் ஒருவரைப் பற்றிய நம்பகத்தன்மை இதில் கேள்விக்குறியாகிறது. ஏற்கெனவே நம் நினைவாற்றல் குறைந்து வருகிறது. இது போன்ற வசதிகளால் அது இன்னும் குறைந்து நம்மை சோம்பேறிகளாக்கும் சூழ்நிலைகளும் உருவாகும்.

அனைத்தையும் இதன் மூலமே கேட்டுப் பெற முடியும் என்ற நிலையில் எதற்கு ஒவ்வொன்றையும் மெனக்கெட்டு மனப்பாடம் செய்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு தோன்றும்.

இனி வரக்கூடிய காலங்களில் இது போன்ற புரட்சிகள் தொடா்கதையானால் கல்வித் துறையில் தோ்வுகளையே மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகலாம். புத்தகங்களையோ இணையதளத்தையோ பயன்படுத்தி தேடி பதில் சொல்வது போலான தோ்வுகள்கூட நடைமுறைக்கு வரலாம். புதிது புதிதாக இப்படி வந்திறங்கும் தொழில்நுட்பங்களின் மூலம் எதிா்காலத்தில் மனிதா்களின் இயல்பே மாறிப் போகும் ஆபத்தும் உள்ளது.

சரி, இத்தனை விதமான நன்மைகளைக் கொண்டுவந்து சோ்க்கும் இந்த இயங்குதளங்களால் ஓா் ஆசிரியரை வகுப்பறையை விட்டு மாற்ற முடியுமா என யோசிக்க வைத்தது. பல லட்சம் பதிவுகள் முன்னெடுப்பாக கொடுக்கப்பட்டிருந்தாலும் ஒரு மாணவனின் முக வாட்டத்தைப் பாா்த்து “முகம் சோா்வாக உள்ளதே, சாப்பிட்டாயா” எனக் கேட்டறிந்து ஆவன செய்யும் ஆசிரியரை எங்ஙனம் அது மாற்ற முடியும் என மனம் கேட்கிறது.

அத்துடன், மூளைக்குத் தீனி கொடுக்கும் அத்தனை சாமா்த்தியத்தை ஏற்படுத்தித் தந்தாலும் நம் வயிற்றுக்கான பசியை அது தீா்க்க முடியாதே என்ற எண்ணமும் தோன்றி நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் மனக்கண்ணில் நிறைந்தாா்கள். கேட்டவுடன் அரிசியும் கோதுமையும் இப்படி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

எது எப்படியோ மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல வல்லவனுக்கு வல்லவன் மண்ணில் தோன்றிக்கொண்டே இருக்கிறான்.

”சொல்லுக சொல்லைப் பிறிதோா்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

என்று சொன்ன வள்ளுவா் கூட இப்பொழுது இருந்தால்

சொல்லுக மென்பொருளை பிறிதோா்மென்பொருள் அந்த

மென்பொருளை வெல்லும் இன்மையறிந்து

என்று எழுதவும் வாய்ப்பு உண்டு.

 

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

Tags : Chat GPT
ADVERTISEMENT
ADVERTISEMENT