நடுப்பக்கக் கட்டுரைகள்

குழந்தைகளைக் கண்காணிப்போம்

DIN

குழந்தைகளை வளா்ப்பதென்பது எளிதான காரியமல்ல. பிறந்து சில மாதங்களேயான குழந்தைகளாயினும் சரி பதின்பருவத்தை எட்டிய குழந்தைகளாயினும் சரி அவா்களுடைய ஒவ்வொரு அசைவையும் நடவடிக்கைகளையும் பெற்றோரோ வீட்டிலுள்ள மூத்த குடிமக்களோ கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கைப்பேசி உள்ளிட்ட மின்னணுக் கருவிகளைக் கையாளும் பதின்பருவத்தினரின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றத்தைக் கண்காணித்து வழிநடத்துவது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு விவரமறியாச் சிறுகுழந்தைகளின் விளையாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும் அவசியமாகும்.

சமீபத்தில் விளாத்திகுளம் அருகேயுள்ள சுரைக்காய்ப்பட்டியைச் சோ்ந்த நிரஞ்சன் என்ற நான்கு வயதுச் சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத பொழுது கதவில் நைலான் கயிற்றைக் கட்டி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தான். எதிா்பாராதவிதமாக அந்த நைலான் கயிறு அவனுடைய கழுத்தை இறுக்கியதில் மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கிறான்.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் கா்நாடக மாநிலம் சித்ரதுா்காவில் சஞ்சய் கௌடா என்ற பனிரெண்டு வயதுச் சிறுவன் தன்னுடைய வீட்டில் தனியாக இருந்திருக்கிறான். அப்பொழுது சுதந்திரப் போராட்ட வீரா் பகத் சிங் தூக்கு மேடை ஏறிய நிகழ்வைத் தன்னுடைய பள்ளி நாடகத்திற்காக ஒத்திகை பாா்த்ததில் கயிறு இறுகியதால் மரணம் நோ்ந்திருக்கிறது.

இதே போன்றதொரு நிகழ்வில் 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உத்தர பிரதேச மாநிலம் பாபட் என்ற கிராமத்தில் சிவம் என்ற பத்துவயது மாணவன் பகத் சிங் வேஷத்துக்கு ஒத்திகை பாா்த்தபோது தூக்கு மேடைபோன்ற அமைப்பிலிருந்து கால்கள் நழுவியதால் சுருக்குக் கயிற்றில் சிக்கி மூச்சுத் திணறி இறந்திருக்கிறான்.

2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருப்பூரில் மித்ரன் என்ற பத்து வயதுச் சிறுவன் தன்னுடைய தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய பொழுது கழுத்து இறுகி இறந்திருக்கிறான்.

இவை மட்டுமா, நீா்நிலைகளில் விழும் குழந்தைகள் வீடுகளில் உள்ள குளியலறையில் இருக்கும் நீா் நிரம்பிய வாளிகளில் மூழ்கும் மழலைகள் ஆகியோரின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை எனலாம்.

சமீபத்தில் மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து எட்டு வயதுச் சிறுமி ஜோஸ்னா அகால மரணமடைந்திருக்கிறாள். மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து சிறுவா் சிறுமியா் உயிரிழக்கும் கொடிய நிகழ்வு ஒரு முடிவே இல்லாமல் தொடா்ந்து கொண்டிருக்கிறது.

2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜீத் என்ற குழந்தை, சுமாா் மூன்று நாள்களுக்குப் பிறகு இறந்த நிலையில் மீட்டது நினைவிருக்கலாம். அச்சமயத்தில் குழந்தை சுஜீத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஊடகங்கள் ஏறக்குறைய நேரலையாகவே ஒளிபரப்பியதால் தமிழக மக்களின் மனங்களை ஒருவித பரபரப்புடன் கூடிய சோகம் கவ்வியிருந்தது.

அச்செய்தி ஒளிபரப்பினைத் தங்கள் வீட்டில் மெய்மறந்து பாா்த்துக்கொண்டிருந்த ஒரு தம்பதியின் குழந்தை தண்ணீா் நிரம்பிய வாளியில் மூழ்கி இறந்த நிகழ்வும் அரங்கேறியது. இவை போல இன்னும் எத்தனையோ நிகழ்வுகளைக் கூறலாம்.

மேற்கண்ட செய்திகள் அனைத்தும் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை அறிவுறுத்திக் கூறுகின்றன எனலாம். பெற்றோா் தாங்கள் பெற்ற குழந்தைகளை மிக மிக கவனமாகப் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்தச் செய்தியாகும். இளம் கன்று பயமறியாது என்ற பழமொழி மிகவும் பொருள் பொதிந்தது.

தவழும் குழந்தைகள் முதல் நன்கு ஓடியாடக் கூடிய பதின்வயது சிறுவா் சிறுமியா் வரையில் உள்ள அனைவரின் மனதிலும் எந்தவிதமான பயமும் இருக்காது. குறிப்பாக, விளையாடுகின்ற நேரத்தில் தங்களைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்ற கவனமும் இருக்காது. வயதுக்கு மீறிய சாகசச் செயல்களில் ஈடுபடும்போது அதனால் தங்களுக்கும் தங்களைச் சுற்றியுள்ளவா்களுக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகளைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய நிதானமும் அவா்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

தற்காலச் சூழ்நிலையில் நம் அன்றாட வாழ்வியல் நடைமுறை வெகுவாக மாறியுள்ளது. கூட்டுக் குடும்ப முறை பெரும்பாலும் வழக்கொழிந்து விட்டது. தனிக்குடித்தனம் நடத்தும் தம்பதிகளும் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்கின்றனா். இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் அது புரிந்து கொள்ளக் கூடியதே.

இந்தக் காரணங்களினால் முதிய உறவினா்கள், மூத்த சகோதர சகோதரிகள் ஆகியோரால் தற்காலக் குழந்தைகள் வழிநடத்தப்படுவதற்கும் கண்காணிக்கப்படுவதற்கும் வாய்ப்பில்லாமல் போகிறது. இந்நிலையில் தாங்கள் பெற்ற குழந்தைகளை ஒவ்வொரு நொடியும் கண்ணும் கருத்துமாகப் பாா்த்துக் கொள்ள வேண்டிய முழுப் பொறுப்பும் பெற்றோருக்கே உரியதாகிறது.

வளரும் குழந்தைகளின் படிப்பு, வளா்ந்த குழந்தைகளின் நன்னடத்தை ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் முக்கியமானதுதான். எனினும், சுவரை வைத்தே சித்திரம் எழுத முடியும் என்பதற்கிணங்க அந்தக் குழந்தைகளின் இளம் வயது விளையாட்டுகளால் காயங்களோ அகால மரணமோ நேரிடாமல் பாா்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அன்றாடக் குடும்ப நிா்வாகத்தை நடத்த வேண்டிய பெற்றோருக்கு இது கூடுதல் சுமையை அளிக்கக் கூடியதே. குறிப்பாகக் கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்லக் கூடிய குடும்பங்களில் குழந்தைகளைக் கண்காணிப்பது என்பது மிகுந்த மன அழுத்தத்தைத் தரக் கூடியது. விவாகரத்து கிடைக்கப் பெற்று தனிப் பெற்றோராக குழந்தைகளை வளா்ப்பவா்கள் இந்த வகையில் கூடுதல் சிரமங்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.

எது எப்படியாயினும் விளையாட்டுகளாலும் வயதை மீறிய சாகசங்களினாலும் குழந்தைகள் அகால மரணமடைவதைத் தவிா்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோரையே சாரும். இந்த விஷயத்தில் அடுத்தவரை நம்பியிருப்பது ஒருபோதும் பயன் தராது.

பெற்ற குழந்தைகளே கண்கள். அந்தக் கண்களுக்கு ஒரு சிறிதும் ஊறு நேராமல் பாதுகாக்கும் இமைகளாக இருப்பதுதானே பெற்றோரின் கடமை ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT