நடுப்பக்கக் கட்டுரைகள்

நொய்யல் மீளட்டும்; கொங்கு செழிக்கட்டும்!

அன்புமணி ராமதாஸ்

 நொய்யல் பல வகைகளில் புனிதமான ஆறு. நொய்யல் ஆறு தோன்றுவதே தென்கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி மலையில்தான். மூலிகை வனங்களின் வழியாக பயணிப்பதால் நொய்யலாறு, அதன் தொடக்கப்பகுதிகளில் நோய் தீர்க்கும் மருந்தாகத் திகழ்கிறது.
 மேற்குத் தொடர்ச்சி மலையில், கோவைக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் உள்ள சீதைவனத்தில் உருவாகும் சிற்றருவிதான் 20 கி.மீ. பயணத்திற்கு பிறகு தொம்பிலிப்பாளையம் கூடுதுறையில் நொய்யல் ஆறாக மாறுகிறது. இடையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 22 ஓடைகளும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 12 சிறு ஓடைகளும் நொய்யலில் கலக்கின்றன.
 தொப்பிலிப்பாளையம் கூடுதுறைக்கு முன்னும் பின்னும் நொய்யலாற்றுடன் கோவைக் குற்றாலம், சின்னாறு, நீலியாறு, வைதேகி நீர் வீழ்ச்சி எனப்படும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி, கொடிவேரி ஆறு, முண்டந்துறை ஆறு, மசவொரம்பு ஆறு, சாடியாறு, காஞ்சிமா நதி உள்ளிட்ட ஆறுகளும் கலக்கின்றன. இந்த ஆறுகளும், ஓடைகளும் மூலிகை வனங்களை கடந்து வருகின்றன. தொம்பிலிப்பாளையம் கூடுதுறையிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள ஆலாந்துறை கூடுதுறை வரை நொய்யல் நோய்கள் தீர்க்கும் ஆறாகவே ஓடுகிறது. அதற்குப் பிறகுதான் நொய்யல் சீரழிக்கப்படுகிறது.
 நொய்யல் ஆற்றுக்கு சங்க காலத்தில் "காஞ்சியாறு' என்ற பெயர் இருந்திருக்கிறது. இந்த ஆறு கொங்கு நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகும். கொங்கு செழிக்க நொய்யலாறு காரணமாக இருந்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலையில் தோன்றும் நொய்யல் ஆறு, மொத்தம் 180 கி.மீ பயணித்து கரூர் மாவட்டம் நொய்யலில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதில் 68 கி.மீ கோவை மாவட்டத்திலும், 56 கி.மீ திருப்பூர் மாவட்டத்திலும், 24 கி.மீ ஈரோடு மாவட்டத்திலும், 22 கி.மீ கரூர் மாவட்டத்திலும் அமைந்திருக்கின்றன.
 நொய்யல், மக்களை வாழ வைத்த ஆறு; வணிகத்தை வளர்த்த ஆறு; வேளாண்மையை செழிக்க வைத்த ஆறு. கோவை, திருப்பூர் உள்ளிட்ட 86 நகர்ப்புறப் பகுதிகளுக்கும், 243 கிராமப்புறப் பகுதிகளுக்கும் நொய்யல் ஆறுதான் குடிநீர் ஆதாரமாக திகழ்ந்திருக்கிறது.
 நொய்யல் துணை வடிநிலப்பரப்பு 3,510 சதுர கி.மீ. இதில் 40 % பரப்பளவில் விவசாயத்திற்கு நொய்யல் ஆறுதான் பாசன ஆதாரமாக திகழ்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றுக்குத் தண்ணீர் கொடுக்கும் துணை ஆறுகளில் நொய்யலும் ஒன்று. நொய்யல், பவானி, அமராவதி ஆகியவையே காவிரியின் மூன்று முக்கிய துணை ஆறுகளாகும்.
 இவற்றைக் கடந்து உலகளாவிய வணிகத்திற்கும் நொய்யல் வகை செய்திருக்கிறது. அரபிக் கடல் பகுதி துறைமுகத்துக்கும், பூம்புகார், நாகப்பட்டினம் துறைமுக நகரங்களுக்கும் இடையேயான முதன்மையான வணிகப்பாதையான "இராஜகேசரி பெருவழிப் பாதை' நொய்யல் வழியாகச் சென்றது. 9-ஆம் நூற்றாண்டில் மாமன்னர் ஆதித்த சோழர் இதனைப் பெரிதுபடுத்திய கல்வெட்டு உள்ளது.
 சேர சோழ பாண்டிய மூவேந்தர்களும் இப்பாதையைப் பாதுகாத்துப் பயன்படுத்தினர். கிரேக்க, ரோமானியப் பகுதிகளுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான வணிகத்தின் மையமாக இப்பெருவழி இருந்துள்ளது. தமிழ்நாட்டின் மூவேந்தர்களையும் நீர் மேலாண்மை, வணிகம் வழியாக இணைத்து வைத்த பெருமையும் நொய்யல் ஆற்றுக்கு உண்டு.
 நொய்யல் ஆறு தோன்றும் வெள்ளியங்கிரி மலை, மழைமறைவுப் பகுதி ஆகும். மேற்குத் தொடர்ச்சி பகுதியில் ஆண்டுக்கு 3,000 மி. மீ. மழை பெய்யும் போதிலும், நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 630 மி.மீ. மட்டுமே மழை பெய்கிறது. அந்த அளவுக்கு மிகக் குறைந்த மழை பெய்தாலும் அதனை சேமித்து வைப்பதற்காக 32 அணைகளையும், 40-க்கும் மேற்பட்ட குளங்களையும் சோழ மன்னர்கள் அமைத்தனர்.
 நொய்யல் ஆற்றின் உபரிநீர் இந்த அணைகளிலும், குளங்களிலும் சென்று சேரும் வகையில் சங்கிலித் தொடர் போன்ற நீர்ப் பாதையை உருவாக்கினர். அதன் பயனாக நொய்யலில் இருந்து ஆண்டு முழுவதும் நீர் கிடைத்தது.
 நொய்யலாறு உருவாகும் இடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குக் கூட இப்போது தண்ணீர் வருவதில்லை. கோவையில் நொய்யலாற்றுக்கு நீர் கொண்டு வரும் 34 ஓடைகளைக் காணவில்லை. கூடுதுறைக்கு முன்பாக 244 சதுர மைல் கொண்ட நொய்யலாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீரே வருவதில்லை.
 இதற்கான காரணங்களில் முக்கியமானவை நீரோடைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்படுவதும், செங்கல் சூளைகளுக்காக வனவளமும், மண்வளமும் சீரழிக்கப்படுவதும் தான். நொய்யலாறு தொடங்கும் பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. பல செங்கல் சூளைகள் நொய்யலாற்றின் கரையிலேயே உள்ளன.
 செங்கல் சூளைகளுக்கு மண் எடுப்பதற்காக காட்டில் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. அதனால் நிலத்தின் நீர் சேமிப்புத் திறன் குறைகிறது. மழைநீர் ஒரே நாளில் பூமியில் நிற்காமல் வெளியேறி விடுகிறது. மற்றொருபுறம், பல அடி ஆழத்திற்கு மண்ணும், மணலும் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடுகிறது. நொய்யல் ஆறு தொடங்கும் இடத்திலேயே வறண்டு விடுகிறது.
 இவை தவிர, கோவை மாநகர எல்லைக்கு சற்று முன் தொடங்கி ஒரத்துப்பாளையம் அணை வரை நொய்யல் ஆறு மிகக்கடுமையான சுற்றுச்சூழல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. மனிதக் கழிவுகள், நகரக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள் என அனைத்தும் நொய்யல் ஆற்றில்தான் கலக்கவிடப்படுகின்றன. மங்கலம் கிராமத்திலிருந்து ஊத்துக்குளி, முதலிபாளையம் வரையிலான 50 கி.மீ. தொலைவில் கிட்டத்தட்ட 90 % சாயப்பட்டறைகள் அமைந்துள்ளன.
 தினமும் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 30 ஆயிரம் சாயப்பட்டறைகள் மற்றும் சலவைப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் 8.7 கோடி லிட்டர் நச்சுக் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலக்கவிடப்படுகிறது. மேலும், சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக அப்பகுதியில் செயல்படும் 18 சுத்திகரிப்பு நிலையங்கள் வெளியேற்றும் திடக்கழிவுகளும் நொய்யல் ஆற்றின் கரைகளில் கொட்டப்படுகின்றன. அவை மழைக்காலங்களில் நொய்யலில் கலந்து மேலும் அசுத்தமாக்குகின்றன.
 அவை முழுக்க முழுக்க நச்சுக்கழிவுகள். நமது குடிநீரில் டிடிஎஸ் அளவு 100 முதல் 500 வரை இருக்கக்கூடும். மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீரில் 500 முதல் 1,500 வரை டிடிஎஸ் இருக்கலாம். பாசனத்திற்கான தண்ணீரில் இந்த அளவு 2,100ஆக இருக்கலாம்.
 ஆனால், ஒரத்துப்பாளையம் அணையில் உள்ள தண்ணீரில் டிடிஎஸ் அளவு 6,000 முதல் 17,000 வரை ஆகும். அணை நீரில் உள்ள நச்சுத் தன்மையால் கரூர் மாவட்டத்தில் மட்டும் 20,000 ஏக்கரில் விவசாயம் அழிந்துவிட்டது. அணைகளைத் திறக்க வலியுறுத்தித்தான் உழவர்கள் போராடுவர். ஆனால், இந்த அணையை திறக்கவே கூடாது என்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
 ஒரத்துப்பாளையம் அணையில் சேரும் நொய்யல் நச்சு நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு, கொள்ளிடம் வழியாக வீராணம் அணைக்கு வருகிறது. அதே நீர்தான் வீராணத்திலிருந்து சென்னைக்குக் கொண்டு வந்து வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. அதைத்தான் சென்னை மக்கள் குடிக்கிறார்கள்.
 கடந்த காலங்களில் நொய்யலாற்றை மீட்க பல அமைப்புகள் முயற்சி மேற்கொண்டும் அதற்கு பலன் கிட்டவில்லை. ஆறுகளையும், வேளாண்மையையும் மீட்க வேண்டும் என்பதற்காக "பாலாறு காப்போம்', "தாமிரபரணி காப்போம்', "காவிரி காப்போம்', "வைகை காப்போம்', "காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் திட்டம்', "சோழர் கால பாசனத் திட்டம்', "தருமபுரி உபரி நீர் திட்டம்' உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை பயணம் மேற்கொண்ட நான், தற்போது நொய்யலைக் காக்கவும் களமிறங்கியுள்ளேன்.
 அதற்கான நடவடிக்கைகளின் ஒருகட்டமாக கடந்த ஜனவரி 11-ஆம் நாள் கோவையில் "பசுமைத் தாயகம்' அமைப்பின் சார்பில் "நொய்யலாற்றை மீட்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினோம். நொய்யலை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முதல் நடவடிக்கை அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.
 காலநிலை மாற்ற பாதிப்பு காரணமாக, இப்போது பெய்யும் மழை இன்னும் 15 ஆண்டுகள் கழித்து பெய்ய வாய்ப்பில்லை. அதைக் கருத்தில் கொண்டு, காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தாங்கிக் கொள்ளும் திறனையும் (அடாப்டேஷன்), பாதிப்புகளை குறைக்கும் திறனையும் (மிட்டிகேஷன்) ஏற்படுத்த வேண்டும்.
 மத்திய, மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இணைந்தால்தான் நொய்யலாற்றை மீட்க முடியும். நொய்யலை மீட்க முழுமையான (ஹோலிஸ்டிக்) திட்டம் உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டும். நொய்யலை மீட்டால்தான் கொங்கு நாடு செழிக்கும். அதற்காக முதல் கட்டமாக ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். வல்லுநர்களைக் கொண்டு நொய்யலாற்றை மீட்டெடுப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும்.
 இந்த திட்டத்தை செயல்படுத்தினால்தான் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நொய்யல் ஆறு, குடிநீர், வேளாண்மை, தொழில், வணிகம் என அனைத்து வகைகளிலும் கொங்கு நாட்டிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே பயனளிக்கும்.
 நொய்யல் மீளட்டும்; கொங்கு செழிக்கட்டும்!
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் மத்திய அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT