நடுப்பக்கக் கட்டுரைகள்

தாயின் மணிக்கொடி பாரீர்!

சி.வ.சு. ஜெகஜோதி

 இதிகாச காலத்திலிருந்தே ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கொடி இருந்தது. பாரதப்போர் நடந்த காலத்தில் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் தனித்தனியாக கொடிகள் இருந்தன. சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியோடு ஆட்சி செய்தனர்.
 அதுபோல், ஆங்கிலேயர்களை நாட்டை விட்டே விரட்டியடிக்கவும், சிதறிக் கிடந்த இந்திய மக்களை இனம், மதம், மொழி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஒன்றிணைக்கவும் பொதுவான ஒரு கொடி சுதந்திரப் போராட்ட காலத்தில் நமக்குத் தேவையாக இருந்தது. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கொடி அவசியம் என்பதை தேசபக்தர்களும் உணர்ந்தனர்.
 சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரி நிவேதிதை, மும்பையை சேர்ந்த மேடம் காமா அம்மையார், ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்த பிங்கிலி வெங்கையா உட்பட பலரும் நம் நாட்டுக்காக ஒரு கொடியை உருவாக்க முயற்சி மேற்கொண்டார்கள்.
 அறியாமை, வறுமை, லஞ்சம் இவற்றையெல்லாம் நம் நாட்டிலிருந்து விரட்டவும், தேசப்பற்றை மக்கள் மனங்களில் ஆழமாக விதைக்கவும் கொடியின் அவசியத்தை உணர்ந்து 23.6.1947 அன்று கொடிக்கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும், ராஜாஜி, அம்பேத்கர், சரோஜினி நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் உறுப்பினர்களாகவும் இருந்தனர். அக்குழு அளித்த பரிந்துரையின்படியே நம் நாட்டின் தேசியக் கொடி உருவாக்கப்பட்டது.
 1947 ஆகஸ்ட் 14 ஆம் நாள் நள்ளிரவு கடந்தபின் இந்தியா சுதந்திரம் பெற்ற திருநாடாக மலர்ந்தது. அதே நாளில்தான் ஹன்ஸா மேத்தா என்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை புதிய தேசியக் கொடியை டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் வழங்கினார். ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் புதிய அரசு பதவியேற்றது.
 இவையனைத்தும் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு தங்கியிருந்த மாளிகையில் நடந்தன. அதே மாளிகையின் மைய மண்டபத்தில்தான் தேசியக் கொடியும் முதல் முதலாக ஏற்றப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு, தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
 இந்திய மக்கள் அளவில்லாத மகிழ்ச்சியுடன் தங்கள் இல்லங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்கள். தேசத்தலைவர்கள் பலரும் தேசியக் கொடியை புகழ்ந்து பேசவும், பாடவும், எழுதவும் செய்தார்கள். இன்று இந்தியா கொண்டாடி வரும் அனைத்து வெற்றி நிகழ்வுகளிலும் தேசியக் கொடியே பறக்கவிடப்படுகிறது.
 நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 முதல் 17 வரை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது வீட்டிலும், பணியிடத்திலும் தேசியக் கொடியை ஏற்றலாம் என்று கூறி தேசபக்தி உணர்வை ஊட்டியது.
 கடுமையான மழையிலும், பனிப்பொழிவிலும், சுட்டெரிக்கும் வெய்யிலிலும் குடும்ப உறவுகளை மறந்து நம் நாட்டின் எல்லையைக் காக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும், ராணுவ வீரர்களும் பணியாற்றிக் கொண்டிருப்தால்தான் நமது தேசியக் கொடி இன்றும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது.
 கும்பகோணத்தில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவரே நாற்காலி மீது ஏறி நின்று கொடி ஏற்றியதாகவும், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஒரு நடிகை தேசியக் கொடியை தலைகீழாகப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் நடனமாடியதாகவும் செய்திகள் வந்தன. இச்செயல்களின் மூலம் தேசியக் கொடியின் மகத்துவத்தையும், அதற்கான விதிமுறைகளையும் பலரும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம் என்பது புரிகிறது.
 தேசியக் கொடியை பறக்க விடுவதில் மத்திய உள்துறை அமைச்சகம் சில விதிமுறைகளையும் பிறப்பித்துள்ளது. கொடியின் நீளம், அகலம், உயரம், கொடியில் இடம்பெற்றுள்ள நிறங்களின் அளவு, கொடிக்கயிறு மற்றும் துணியின் தரம் ஆகியவற்றை அது தெளிவுபடுத்தியிருக்கிறது. பெரிய கட்டடங்கள், ராணுவத்தினரின் பீரங்கி வண்டிகள், பிரபலங்கள் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றில் என்ன அளவில் பறக்கவிடப்பட வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன.
 விடுமுறை நாளாக இருந்தாலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றி இறக்கப்பட வேண்டும். சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தேசியக் கொடி அனைவரின் கண்களிலும் படும்படி பறக்கவிடப்பட வேண்டும். தேசியக் கொடிக்கு அருகில் வேறு எந்தக் கொடியையும் அதைவிட உயரமாகப் பறக்க விடக் கூடாது. இவையனைத்துமே தேசியக் கொடிக்கான பொது விதிமுறைகள்.
 மேலும், முக்கியத் தலைவர்கள் இறக்கும்போது அரசு அறிவிப்பு செய்திருந்தால் மட்டுமே தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும்.
 ராணுவ வீரர்கள், முக்கியத் தலைவர்கள் இறந்து அவர்கள் உடல் அடக்கம் செய்யப்படும் போது அவர்கள் உடலில் போர்த்தப்பட்டிருக்கும் தேசியக் கொடியை எடுத்து மற்ற ராணுவ வீரர்கள் மடித்து அதை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
 சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி கீழிருந்து மேலாக ஏற்றப்படுகிறது. ஆனால் குடியரசு தினத்தன்று கம்பத்தின் உச்சியில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கொடி அவிழ்த்து விடப்பட்டு பறக்கவிடப்படுகிறது.
 நம் அடிமைச் சங்கிலி உடைபட்டு, நாம் விடுதலை பெற்ற நாள்15.8.1947. நமக்கென்று ஒரு அரசியல் சட்டத்தை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்திய நாள் 26.1.1950. முதல் முதலாக 1947-இல் தேசியக் கொடி ஏற்றப்பட்டிருந்தாலும் இது தான் நம் நாட்டின் தேசியக் கொடி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் 26.1.1950 .
 இன்று நாம் நமது தேசியக் கொடியை பெருமையுடன் ஏற்றி மகிழ்வதற்கு அன்றைய விடுதலைப் போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களே காரணம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.
 தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
 தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
 
 இன்று (ஜன.26) குடியரசு தினம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT