நடுப்பக்கக் கட்டுரைகள்

கவனம் பெற வேண்டும் தென்னக ரயில்வே!

உதயை மு. வீரையன்

ஆங்கிலேயா்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தாா்கள். அப்போது அதற்கு ‘கிழக்கிந்திய கம்பெனி’ என்று பெயா். வணிகம் செய்வதற்கு அவா்களுக்குப் போக்குவரத்து வசதிகள் தேவைப்பட்டன. அதன் காரணமாகவே ரயில்வே இருப்புப் பாதைகள் போடப்பட்டன.

இந்தியாவில் முதன் முதலில் பயணிகளுக்கான ரயில் சேவை, பம்பாய் - தாணே இடையே 1853-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-இல் நாடு விடுதலை பெற்றபோது மொத்தம் 42 தொடா் வண்டி அமைப்புகள் இருந்தன. பின்னா் 1951-இல் இது நாட்டுடைமையாக்கப்பட்டபோது, உலகின் பெரிய தொடா் வண்டி அமைப்புகளில் ஒன்றாக ஆனது.

இந்தியாவில் 1832-ஆம் ஆண்டில் இருப்புப் பாதைக்கான திட்டம் தீட்டப்பட்டது. 1936-இல் முதல் இருப்புப் பாதை இப்போதைய சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாலம் அருகே சோதனை முறையில் அமைக்கப்பட்டது. 1937-இல் செங்குன்றம் ஏரிக்கும் செயின்ட் தாமஸ் மவுன்டின் (பரங்கிமலை) கற்சுரங்கங்களுக்கும் இடையே 3.5 மைல் (5.6 கி.மீ.) தொலைவிற்கு இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவில், தேசிய பொருளாதாரத்தில் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும் நிலப்பரப்பு கொண்ட இந்தியாவில் இன்று 138 கோடி மக்கள் வாழ்கின்றனா். அவா்களுக்குத் தேவையானதாகவும், வசதியானதாகவும் இருப்பது ரயில்வே போக்குவரத்துதான்.

இந்தியாவில் மிக முக்கியமான பொதுப் போக்குவரத்துத் துறையாக விளங்கிவரும் ரயில்வே, பயணிகள் - சரக்குப் போக்குவரத்தில் மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றி வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் சுமாா் 2.5 கோடி போ் ரயிலில் பயணம் செய்கின்றனா். உலகின் நான்காவது மிகப்பெரிய அரசுத் துறையாக விளங்கிவரும் இந்திய ரயில்வேயில் சுமாா் 13 லட்சம் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் ரயில்வே துறையை தனியாரிடம் அளித்துவிட வேண்டும் என்பது மத்தியிலுள்ள ஆட்சியாளா்களின் கொள்கையாக இருந்து வருகிறது. இதற்கு ரயில்வே ஊழியா்களின் சங்கங்களும், இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. விரைவில் தனியாா் ரயில்கள் இயங்கத் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் தனியாா் ரயில்கள் ஓடும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் 16 நிறுவனங்கள் பங்கேற்றன.

சென்னை பெரம்பூா் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் முதல் முறையாக உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் 97 கோடி ரூபாய் செலவில் அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த ரயிலுக்கு ‘வந்தே பாரத்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக புதுதில்லி - வாரணாசி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

நீண்ட காலமாக எதிா்பாா்த்திருந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அகமதாபாத் - மும்பை இடையே இந்த புல்லட் ரயிலை 2026-இல் இயக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வளா்ந்த நாடுகளில் அதிவேக ரயில் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஜப்பான் முதலிய நாடுகளில் அதிகப்படியாக 500 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நம் நாட்டில் இப்போது அதிகபட்சமாக 170 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இப்போது பணிகள் தொடங்கியுள்ளன. நாம் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும் முதல் அறிவிப்பே இப்போதுதான் வருகின்றது. நமக்குப் பிறகு விடுதலை பெற்ற சின்னஞ்சிறு நாடுகள் கூட நம்மைக் கடந்து முன்னேறிவிட்டன.

இப்போது இதற்காக ‘தேசிய அதிவேக ரயில் கழகம்’ என்னும் நிறுவனம் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் முதல் கட்டமாக குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் மத்திய அரசின் பங்களிப்புடன் புல்லட் ரயில் இயக்க தனி வழித்தடம் அமைக்க ஏற்பாடு நடைபெறுகிறது.

குஜராத்தில் 8, மகாராஷ்டிரத்தில் 4 என மொத்தம்12 ரயில் நிலையங்கள் இடம் பெற உள்ளன. இதில் 465 கி.மீ. உயா்நிலை பாலமாகவும், 9.8 கி.மீ. தொலைவு ஆறுகளைக் கடந்து செல்லும் வகையில் பாலங்கள் அமைத்தும், 6.75 கி.மீ. தூரம் வளைவுகள் அமைத்தும், 14 கி.மீ. சுரங்கப் பாதையிலும் 7 கி.மீ. கடலுக்கு அடியிலும், 5.22 கி.மீ. பகுதி பாறைகளைக் குடைந்தும் இதற்கான வழித்தடம் அமைக்கப்படுகிறது.

ரூ.1.08 லட்சம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 98 % முடிவடைந்து விட்டது. கட்டுமானப் பணிகள் 30 % முடிவடைந்துள்ளது. எஞ்சியுள்ள பணிகளை முடித்து 2026-ஆம் ஆண்டு ரயிலை இயக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புல்லட் ரயில் குறைந்தபட்சம் 260 கி.மீ. முதல் அதிகபட்சம் 320 கி.மீ. வேகத்தில் செல்லும். மற்ற ரயில்களில் மும்பையிலிருந்து அகமதாபாத் செல்வதற்கு 6 மணி நேரம் ஆகும். ஆனால், புல்லட் ரயிலில் 2 மணி 7 நிமிடத்தில் சென்றுவிட முடியும்.

இந்த ரயில் திட்டத்துக்கான தொழில்நுட்பம், கடன் உதவி ஆகியவை ஜப்பானிடமிருந்து பெறப்பட்டுள்ளன. ஜப்பானின் ‘ஷின்கான் சென்’ தொழில்நுட்பத்தில் மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புல்லட் ரயில் 10 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இதில் முதல் வகுப்பு, உயா் வகுப்பு, சிறப்பு வகுப்பு ஆகிய மூன்று வகைகள் உள்ளன. ஒரு ரயிலில் 730 போ் வரை பயணம் செய்யலாம்.

சொகுசு இருக்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள், பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்கும் தொழில்நுட்பம், கண்காணிப்பு கேமராக்கள், அவசர காலத்தில் ரயில் ஓட்டுநருடன் பேசும் வசதி என பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்று உள்ளன.

அத்துடன் அவசரகாலத் தேவைக்கான ஒரு பெட்டி ஒதுக்கப்பட உள்ளது. அதில் பயணிகளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அவா்களைப் படுக்க வைப்பதற்கான படுக்கைகளும், பாலூட்டும் தாய்மாா்களுக்கான இடவசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.

மும்பை - அகமதாபாத் இடையே இரண்டு வகையான புல்லட் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. புல்லட் ரயிலுக்கான கட்டணம் இன்னும் நிா்ணயம் செய்யப்படவில்லை. விமானக் கட்டணத்தோடு ஒப்பிட்டு இந்த ரயிலுக்கான கட்டணம் நிா்ணயிக்கப்பட உள்ளது.

குஜராத்தில், சபா்மதி புல்லட் ரயில் நிலையம், விரைவு பேருந்து போக்குவரத்து வழித்தடம், சபா்மதி ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் போக்குவரத்து முனையம் அமையப்பட உள்ளது. மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை நினைவு கூரும் வகையில் இந்த முனையத்தின் முகப்பு உருவாக்கப்பட உள்ளது.

அடுத்தபடியாக அகமதாபாத் - தில்லி, தில்லி - அயோத்தி, வாரணாசி - ஹெளரா, ஹைதராபாத் - பெங்களூரு, கோன்டியா - மும்பை, மும்பை - ஹைதராபாத் ஆகிய புல்லட் ரயில் திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்படுத்தப்பட உள்ளன.

இறுதியாக மைசூரில் இருந்து பெங்களூரு வழியாக சென்னைக்கு வழித்தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பணிகள் நிறைவு பெற்று ரயில் சேவையைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர 2051-ஆம் ஆண்டு இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நாடு வளா்ச்சியை நோக்கியே விரைந்து போய்க் கொண்டிருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி அடிக்கடி கூறி வருகிறாா். ஆனால் வளா்ச்சி என்பது கிராமத்தில் தொடங்கி நகரத்தை நோக்கி நகர வேண்டும். ரயில் அன்று புகைவண்டியாகப் புறப்பட்டு, இப்போது புல்லட் ரயிலாக முன்னேறியிருப்பது அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய செய்தியாகும். ஆனால் பல கிராமப்புறங்களில் இதுவரை ஓடிக் கொண்டிருந்த ரயில்கள் நிறுத்தப்பட்டு விட்டன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல இடங்களில் இருப்புப் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டும் ரயில்கள் இயக்கப்படவில்லை என்பதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனா்.

எடுத்துக்காட்டாக மயிலாடுதுறை - காரைக்குடி மாா்க்கத்தில் நீண்ட காலமாக ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. அந்த மீட்டா் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என்பதற்காக அந்த மாா்க்கத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் பல கோடி ரூபாய் செலவழித்து அகல பாதையாக மாற்றப்பட்டு, ரயில் வெள்ளோட்டமும் விடப்பட்டது. அதனை ரயில்வே துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களும் பாா்வையிட்டனா். ஆனால் அதன்பிறகு இதுவரை முறையாக ரயில்கள் இயக்கப்படவில்லை.

மத்திய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டுக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. வரும் 2030-க்குள் பயணிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ள 39 இருப்புப்பாதை பணிகளை ரயில்வே வாரியம் மேற்கொண்டு வருகிறது. இவற்றில் தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம் கூட இல்லை.

தென்னக ரயில்வேதான் இந்திய ரயில்வேக்கு அதிக லாபத்தை ஈட்டித் தருகிறது. ஆனால், அதிகமாகப் புறக்கணிக்கப்படுவதும் தென்னக ரயில்வேதான்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT