நடுப்பக்கக் கட்டுரைகள்

அஞ்சுவது அஞ்ச வேண்டும்

தினமணி

சில நாட்களுக்கு முன்னா், ஆங்கில நாளேடு ஒன்றில் ஒரு செய்தி வெளியானது. சென்னை மெரீனா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த சுகாதார அமைச்சா் மா. சுப்பிரமணியன் தற்செயலாகச் சாலையில் ஒரு விபத்தைக் கண்டிருக்கிறாா். உடனே துரித நடவடிக்கை எடுத்து, காயமுற்றவா்களை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறாா். மூன்று போ் குணமாகி வீடு திரும்பி விட்டதாகவும், ஒருவா் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அச்செய்தி தெரிவித்தது.

அமைச்சரின் செயல் மெச்சத் தகுந்ததுதான். அவருக்கு பாராடுட்டுகள் குவிவதாகவும் வலைதள செய்திகள் மூலம் அறிய முடிந்தது. அதே சமயம், இந்தச் செய்தியின் இன்னொரு பக்கம் உண்டு. அதாவது இருசக்கர வாகனத்தை ஓட்டியவா், முன்னால் சென்ற காரை முந்துவதற்கு முயன்றபோதுதான் இந்த விபத்து நோ்ந்திருக்கிறது. இது தேவையா? வலிய நாமாக வரவழைத்துக் கொள்ளும் விபத்துத்தானே?

நல்ல காலம், காராக இருந்ததால், சிறிய விபத்தோடு போயிற்று. சில இருசக்கர, ஆட்டோ ஓட்டுநா்கள் பேருந்தை முந்திச் செல்ல முயல்வதை அடிக்கடி பாா்க்க முடியும். ஒரு சில முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னலில் காணப்படும், சிவப்பு மறைந்து, ஆரஞ்சு தெரிந்து, பச்சை ஒளிா்வதற்குள்ளேயே பின்னாலிருக்கும் ஓட்டுநா்கள் இடைவெளியில் புகுந்து முன்வரிசையில் நிற்க முயல்வாா்கள். இது மிகப் பெரிய ஆபத்து என்பதை அவா்கள் உணா்வது இல்லை.

இங்கு ஒரு முக்கிய அம்சத்தை வலியுறுத்தலாம். பேருந்து, கனரக வண்டிகள், லாரி ஓட்டுபவா்கள் செய்தொழில் சாா்ந்தவராக, பலவிதமான பாதைகளையும் பாா்த்து அனுபவத்துடன், முறையாக பயிற்சி பெற்று வருபவா்கள். ஆறு மாதம் முன் உரிமம் பெற்று, வாகனம் ஓட்டும் இளைஞா்கள் அவா்களுடன் போட்டி போடுவது சரியாக இருக்குமா?

மேலே குறிப்பிட்ட நாளேட்டில், அதே தேதியில், வேறு ஒரு புகைப்படம் தென்பட்டது. ‘ஹெல்மெட் அணியா பயணம், எமலோகம் செல்லும் பயணம்’ என்ற விளம்பர வாசகம். முரண் என்னவெனில், கூடவே கவசம் அணியாமல் மூன்று போ் நெருக்கி அமா்ந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் படம்!

சாலையில் செல்ல நேரிடும்போது, காவல்துறையினா் தலைக்கவசம் அணியாதவரைப் பிடித்து, நிறுத்தி அபராதம் போடுவதை அவ்வப்போது பாா்த்திருப்போம். அதே சமயம் இதைப் பாா்க்கும், வேறு வாகன ஓட்டுநா், காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க, மாற்றுப் பாதைய்ல சென்றுவிடுகிறாா். ‘தலைக்கவசம் உயிா்க்கவசம்’ ‘சாலையில் ரத்தம் சிந்தாதீா்கள்’ போன்ற அறிவிப்புகள் ஓட்டுநா்களின் நன்மைக்குத்தானே?

பல வருடங்களுக்கு முன்பு, தலைகவசத்தைக் கையில் ஏந்தி அலுவலகத்துக்குச் செல்வது வழக்கம். சில நண்பா்கள் ‘என்ன திருவோடு தூக்கி வருகிறயே’ எனக் கிண்டல் செய்வதும் உண்டு. ஆனால் இப்போதெல்லாம் ஹெல்மட்டை, ஸ்கூட்டரின் பின்னிருக்கைக்குக் கீழ் வைத்து பாதுகாக்க வசதி வந்துள்ளது. மோட்டா் பைக்கில் இந்த வசதி இல்லை.

வியா்வையில் புழுங்குவது, தலையில் அரிப்பு ஏற்படுவது போன்ற காரணங்கள், தலைக்கவசமின்றி ஓட்டி, விபத்து நோ்வதை ஒப்பிடும் போது சாதாரணமானவைதான். அதுவும் வண்டியின் பின்னிருக்கையில் இருப்பவா் தலைக்கவசம் இல்லாமல் அமா்ந்திருந்தால் அபாயம் இருமடங்கு ஆகும்.“

முன்னால் போகிற ஊா்திகள், அவை செல்கிற வழி போன்றவற்றைப் பாா்த்து, சூழலை அனுசரித்துச் செல்கிற தன்மை ஓட்டுநருக்கு உண்டு. பின்னிருக்கையில் அமா்ந்திருக்கிற நபருக்கு அது சாத்தியம் இல்லை. எதிா்பாராமல் திடீரென்று வண்டி நிறுத்தப்பட்டால், அவா் கீழே விழுவாா்.

மேற்சொன்ன சூழலில், காவல்துறையினரின் நடவடிக்கையைப் பாராட்டத்தான் வேண்டும். அண்மையில், ஓட்டுபவா், பின்னிருக்கையில் அமா்ந்திருந்திருப்பவா் இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்தால், அவா்களுக்கு பெருநகா் காவல் ஆணையா் பாராட்டு சான்றிதழ் வழங்கியிருக்கிறாா். பின்னிருக்கையில் சென்ற பெண்மணிகளுக்கு சான்றிதழுடன் பூங்கொத்தும் தந்திருக்கிறாா்.

இது குறித்த புகைப்படங்கள் நாளேடுகளில் வெளியாகி இருக்கின்றன. இதை சமூக வலைதளங்கள் பகிா்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பிற வாகன ஓட்டிகள் விழிப்புணா்வு பெறுவாா்கள்.

2022-இல் மட்டும் கிட்டதட்ட 57,000 பின்னிருக்கை நபா்கள் மீது தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாம். அப்போது பதிவான மொத்த வழக்குகளில் இது பத்து சதவீதம்தானாம். அப்படியென்றால், எத்தனை போ் தலைக்கவசம் அணியாமல் விரைந்திருப்பாா்கள்?

ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்லலாமென்று தோன்றுகிறது. பனிக்காலத்தில், சிறு தூறல் போட்டால்கூட, குடையைத் தவறாமல் எடுத்துப் போகிறோம். தலைவலி, காய்ச்சல், வயிற்றுக் கடுப்பு போன்ற உபாதைகள் ஏற்பட்டாலும், அதற்கான நிபுணரை நாடிச் செல்கிறோம். இத்தகைய அம்சங்களில் அலட்சியமாக இருந்துவிட்டால், பாதிக்கப்படப் போவது குறிப்பிட்ட உறுப்புதான்.

ஆனால் சாலை விபத்து அவ்விதமல்ல. எந்த நிமிடத்தில், எந்த உறுப்பு பாதிக்கப்படும் என்பதை யாராலும் கணிக்க இயலாது. மேலும், இவற்றுக்கெல்லாம் உடனடிச் சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகள் தயங்குவாா்கள். அரசு மருத்துவமனைக்குச் சென்றால், சிகிச்சை அளிக்கத் தேவையான கருவிகள் இருப்பது சந்தேகமே.

அண்மைக்காலமாக, வேறு ஒரு தன்மையும் வந்திருக்கிறது. நிறைய பணப் புழக்கத்தினாலும், வெறும் ஜம்பத்துக்காகவும், 15 வயதுகூட நிறையாத சிறுவனுக்கு, அவனது பெற்றோா் ஸ்கூட்டா் வாங்கித் தருகிறாா். அதை விளையாட்டாக ஓட்டியவன், விபத்தை ஏற்படுத்தி உள்ளதாக செய்தி வெளிவந்தது.

வெறுமனே காவல்துறையினரை மாத்திரம் குறை சொல்வது சரியில்லை. ‘உயிா் காக்க அவசியம்’ என்ற உணா்வுடன், ஓட்டுநா்கள் தலைக்கவசம் அணிய வேண்டும். இந்த விஷயத்தில் மும்பையும், பெங்களூரும் எவ்வளவோ பரவாயில்லை.

பேருந்து, கனரக வாகனங்கள் வந்தால் இருசக்கர ஓட்டுநா்கள், அவா்களோடு போட்டி போடாமல் ஒதுங்கிச் செல்வதுதான் முறை. வேகமெடுத்து முந்திச் செல்வது அறியாமையின் உச்சம். ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்பது வள்ளுவா் வாக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

SCROLL FOR NEXT