நடுப்பக்கக் கட்டுரைகள்

தேவைதான் இந்த விலக்கு விடுமுறை!

இரா. கற்பகம்

 நாட்டிலேயே முதல் முறையாக, கேரள உயர்கல்வித்துறை, அதன் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு "மாதவிலக்கு விடுமுறை' அளித்து ஆணை பிறப்பித்துள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும். மாதவிலக்கு என்பதைப்பற்றிப் பேசுவதோ, பொதுவெளியில் விவாதிப்பதோ வெட்கப்பட வேண்டிய விஷயம் என்ற உணர்வு பெரும்பாலான மக்களிடையே காணப்படும் நிலையில் கேரள உயர்கல்வித்துறை துணிச்சலாக இப்படி ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளதைப் பாராட்ட வேண்டும்.
 மாதவிலக்கு என்பது பெண்களுக்கு மாதந்தோறும் நிகழும் ஒரு இயல்பான உடல்நிலை மாற்றம் தான். என்றாலும் இதனால் அவர்களுக்கு உடலளவிலும் மனத்தளவிலும் ஏற்படும் அசெளகரியங்கள் நிறைய. உடலில் சிறு வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தாலே வலிக்கும். நாட்கணக்கில் உதிரப்போக்கு என்றால் உடல்வலியும் சோர்வும் ஏற்படத்தான் செய்யும். அப்போது ஓய்வு மிக மிக அவசியம்.
 அந்தக் காலத்தில் மூன்று நாட்கள் "தீட்டு' என்று ஒதுக்கி உட்கார வைத்துவிடுவார்கள். அவர்களை யாரும் தொடக்கூடாது. அவர்களுக்கு உணவு, தண்ணீர் எல்லாம் உட்கார்ந்த இடத்தில் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். அந்த மூன்று நாட்களும் அவர்களுக்குக் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது.
 கூட்டுக்குடும்ப முறை இருந்தபடியால் அவர்களது வேலைகளைப் பிறர் செய்தார்கள்; அவர்களது பொறுப்புகளைப் பிறர் ஏற்றுக் கொண்டார்கள்; அவர்களது குழந்தைகளைப் பிறர் பார்த்துக் கொண்டார்கள். இந்த ஓய்வு பின்னர் மாதவிலக்கு நிற்கும் காலத்தில் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதனை எளிதில் எதிர்கொள்ளத் துணை செய்தது.
 கூட்டுக்குடும்ப வழக்கம் காணாமல் போய், இப்போது அவரவர் வேலையை அவரே செய்ய வேண்டி இருக்கிறது. பெண்களும் ஆண்களுக்கிணையாகக் கல்வி, பொருளீட்டுதல் என்று ஆரம்பித்து இன்று எல்லாத் துறைகளிலும் கோலோச்சுகின்றனர். என்றாலும் உடற்கூற்றினை மாற்றியமைக்க முடியுமா? மாதவிலக்கை வேண்டாம் என்று ஒதுக்க முடியுமா? முடியாது. ஆனால் மிகவும் அவசியமான அந்த ஓய்வை எடுத்துக் கொள்ளலாமே. "இந்த மூன்று நாட்கள் எனக்கு மாதவிலக்கு நாட்கள். எனக்கு விடுமுறை வேண்டும்,' என்று கேட்பதைப் பெண்கள் வெட்கத்துக்குரியதாகக் கருத வேண்டியதில்லை.
 சில வருடங்களுக்கு முன் ஒரு ஆங்கில நாளிதழில் இரு பெண்ணுரிமைப் போராளிகளின் நேர்காணல் வெளியாகியிருந்தது. மாதவிலக்கு விடுமுறை தேவையா என்பது குறித்து அவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள். இருவரும் "மாதவிலக்கு என்பது சளி, காய்ச்சல் போன்ற இயற்கையான உடல் உபாதை; இதை வெளிச்சம் போட்டுக் காட்டி, விடுமுறை அளிப்பது பெண்களைக் கேவலப்படுத்தித் தனிமைப்படுத்தும் செயல்; இது ஆணாதிக்கத்துக்கு வழிவகுக்கும்' என்ற ரீதியில் கருத்துகளைக் கூறியிருந்தனர்.
 மறுநாள் அதே நாளிதழில், இப்பேட்டி குறித்து காஷ்மீரிலிருந்து ஒரு பெண்மணி எழுதிய கடிதம் பிரசுரமானது. அதில் அவர் "நான் மூன்று பதின்ம வயதுப் பெண்களின் தாய். மாதாமாதம் மூவரும் அடுத்தடுத்து மாதவிலக்கினால் வயிற்று வலியும் சோர்வும் வந்து படும் பாட்டைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது சளி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைதான், மறுக்கவில்லை. உடல் நோய்க்கு ஓய்வு கேட்பதில் என்ன கேவலம்? இதில் ஆணாதிக்கம் எங்கே வருகிறது? ஓய்வு எடுப்பதும் எடுக்காததும் அவரவர் விருப்பம் மற்றும் உடல்நிலையைப் பொறுத்தது' என்று எழுதியிருந்தார்.
 மாதவிலக்கு பற்றிப் பேசுவது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல என்ற எண்ணம் வருவதற்கே இத்தனை காலம் பிடித்திருக்கிறது. அதைப் பற்றி இருவேறு கருத்துகள் இருப்பதும் நல்லதே. மாற்றுக் கருத்து இருந்தால்தான் பொதுவெளியில் விவாதிக்கப்படும்; விவாதிக்கப்பட்டால்தான் தீர்வு கிடைக்கும். இப்போது தீர்வு கிடைக்க கேரளம் வழிகாட்டியிருக்கிறது. மேலும் விவாதிக்கப்பட்டுப் பிற மாநிலங்களும் இவ்விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
 பிற நாடுகள் பெண்களின் இப்பிரச்னையை எப்படிக் கையாளுகின்றன? சோவியத் யூனியன் (முன்பு ஒன்றாக இருந்த ரஷிய நாடுகளின் கூட்டமைப்பு) 1922-லேயே உழைக்கும் பெண்களுக்கு மாதவிலக்கு விடுமுறையை நடைமுறைப்படுத்தியது. ஆனால் பல காரணங்களால் அது வெற்றியடையவில்லை. இந்தோனேசியா 1948-இல் மூன்று நாட்கள் மாதவிலக்கு விடுமுறையை சட்டமாக்கியது. பிறகு 2003-இல் அதை இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக மாற்றியது.
 பிலிப்பின்ஸ் நாடு, மாதவிலக்கு நாட்களில் வீட்டிலிருந்து பணிபுரியும் உரிமையைப் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. தென்கொரியா 2001-இல் ஊதியமில்லாத ஒரு நாள் விடுமுறையை அறிவித்தது. பெரும்பாலான பெண்கள் அதை ஏற்றுக்கொள்ளாததால் அங்கு இந்த நடைமுறை தோல்வியடைந்தது. ஜப்பான், தைவான், ஜாம்பியா போன்ற நாடுகளில் மூன்று நாட்கள் மாதவிலக்கு விடுமுறை நடைமுறையில் உள்ளது. ஆனால் அங்கு பெரும்பான்மையான பெண்கள் மாதவிலக்கு விடுமுறையைப் பயன்படுத்தாமல் பணிக்குச் செல்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 பெண்கள் அதிக சுதந்திரம் பெற்றுள்ளதாகக் கருதப்படும் அமெரிக்கா, கனடா ஆகியவற்றில் மாதவிலக்கு விடுமுறை என்பது இல்லவே இல்லை. ஐரோப்பாவில் ஸ்பெயின் மட்டுமே சென்ற வருடம் முதல், மாதம் மூன்று நாட்கள் மாதவிலக்கு விடுமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பெண்கள் பெருமளவில் போராட்டத்தில் இறங்கிய பிறகு, இப்பிரச்னை விவாதிக்கப்பட்டது. மாதவிலக்கு விடுமுறை அளிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. எனவே, விரைவில் மாதவிலக்கு மற்றும் மாதவிலக்கு நிற்றல் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கும், பணியில் இருக்கும் பெண்களுக்கும் மட்டுமே மாதவிலக்கு விடுமுறை பற்றிப் பேசப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் சிறுமிகளின் நிலை என்ன? இப்போதெல்லாம் பெண் குழந்தைகள் பன்னிரண்டு வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள். மாதவிலக்கு என்பதைப் பற்றிய புரிதல் இல்லாமலேயே அதை ஏற்றுக்கொண்டு தினசரி, பள்ளி, பயிற்சி வகுப்பு, சிறப்பு வகுப்புகள் என்று வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார்கள்.
 அந்த வயதில் மாதவிலக்கு என்பதை ஒரு வெட்கப்படவேண்டிய விஷயமாகவே கருதுகிறார்கள். பெரும்பாலான பள்ளிகள் இப்போது இருபாலரும் பயிலும் பள்ளிகளாகவே இருக்கின்றன. தங்களுக்கு மாதவிலக்கு என்பது மாணவர்களுக்கோ ஆண் ஆசிரியர்களுக்கோ தெரிந்து விடுவது அவமானம் என்று மாணவிகள் கருதுகிறார்கள். அதனால், அவர்கள் வலியைப் பொறுத்துக் கொண்டு இயல்பாக இருக்கப் பழகிக் கொள்கிறார்கள்.
 பதினான்கு வருடங்களுக்கு முன் எனது மகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். வகுப்பில் முதல் மூன்று இடங்களில் இருப்பவள். மாதவிலக்கன்று வயிற்றுவலி அதிகமிருந்ததால் பள்ளிக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டாள். அன்று ஏதோ ஒரு தேர்வு இருந்தது. மறுநாள் பள்ளி சென்றபோது விடுப்பு எடுத்த காரணத்தைக் குறிப்பிட்டு என் கைப்பட ஆசிரியருக்குக் கடிதம் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்து அனுப்பினேன்.
 தேர்வு இருந்தபோது எப்படி விடுப்பு எடுக்கலாம் என்று கண்டித்து ஆசிரியை அவளை ஒரு பீரியட் முழுதும், அதாவது நாற்பது நிமிடம் வகுப்புக்கு வெளியே நிற்க வைத்துவிட்டார். ஏற்கெனவே சோர்ந்துபோயிருந்தவள் வலியும் அவமானமும் சேர்ந்து வீடு திரும்பினாள். மறுநாள் நான் தலைமை ஆசிரியையை சந்தித்து நடந்தவற்றைக் கூறினேன். அவரோ ஆசிரியை செய்தது சரி என்றே பேசினார்.
 நான், "இது பெண்கள் படிக்கும் பள்ளி. நீங்கள் ஒரு பெண். அந்த ஆசிரியையும் ஒரு பெண். ஒரு சிறு பெண் குழந்தையின் வலி உங்களுக்குப் புரியவில்லையா? உண்மையான காரணத்தை விளக்கி நான் கடிதமும் எழுதியிருக்கிறேனே. அப்படியிருந்தும் அவளை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தது சரியா' என்று வாதிட்டேன். அவர் அதையெல்லாம் ஒப்புக் கொள்ளவில்லை.
 நான், "நல்லது. நான் உடனடியாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியைப் பார்த்தது முறையிடுகிறேன்' என்று அதிரடியாகக் கூறியதும் அவர் சற்றே இறங்கி வந்து, "இனி இப்படி விடுப்பு எடுக்க வேண்டாம்' என்றார். அதற்குப் பின்னர் மாதாமாதம் முடியாத நாட்களில் விடுப்பு எடுத்தாலும் ஒன்றும் சொல்லாமல், "தொலையட்டும்' என்று விட்டுவிட்டார்கள்.
 கேரள பள்ளிக் கல்வித்துறை, மாதவிலக்கு விடுமுறை குறித்துப் பள்ளி மாணவிகளிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் இதுவரை எந்தக் கோரிக்கையும் வந்ததில்லை என்றும், இருந்தாலும் அவர்களுக்கும் மாதவிலக்கு விடுமுறை அளிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது. கோட்டயத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று அரசு அறிவிக்கும் முன்னரே, தங்கள் பள்ளி மாணவியர்க்கு மாதவிலக்கு விடுமுறை அறிவித்துவிட்டிருக்கிறது. பதினான்கு வருடங்கள் கழித்தாவது இப்படி நடக்கிறதே என்பதில் நமக்கு மகிழ்ச்சியே!
 பெண்களுக்குத் தேர்வு செய்யும் உரிமை கொடுக்கப்பட்டிருந்தால் மாதாமாதம் வரும் இத்தொல்லையுடன் கூடிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள். மாதவிலக்கு விடுமுறை என்ற உரிமையாவது அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்! கேரளத்தைப் பின்பற்றி மற்ற மாநிலங்களும் இதனை விரைவில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்!
 கட்டுரையாளர்:
 சமூக ஆர்வலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT