நடுப்பக்கக் கட்டுரைகள்

அகற்ற வேண்டிய சீமைக் கருவேலம்

கண்ணன்

 இந்திய மண்ணிற்குரிய தாவரங்களை அழிப்பதோடு நிலத்தடி நீரையும் அடியோடு உறிஞ்சிக் கொண்டிருப்பவைதான் சீமைக் கருவேலம் எனும் கொடிய செடிவகை மரங்கள். சீமைக் கருவேல மரத்தின் தாவரவியல் பெயர் புரோசாபிஸ் ஜுலிபுளோரா என்பதாகும். இது மைமோசி எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
 இதன் தாயகம் வட அமெரிக்கா. புரோசேபிஸ் தாவர இனத்தில் ஏறத்தாழ 43 வகை இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். வட அமெரிக்காவிலிருந்து 1813-இல் ஹவாய், தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களுக்குப் பரவத் தொடங்கிய இத்தாவரம் 1876-இல் முதன் முதலாக இந்தியாவிற்குள் நுழைந்தது.
 லெப்டினன்ட் கர்னல் ஆர்.எஸ். பெட்டோம் என்பவர் பிரேசிலிலிருந்து வட இந்திய பாலைவனப் பகுதிகளுக்கு இத்தாவரத்தைக் கொண்டு வந்து சேர்த்தார். எம்.எஸ். சிவராமன் என்ற வேளாண்துறை இயக்குநரின் முயற்சியால் சீமைக்கருவேலம் தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டது. அதற்குக் காரணம், பெரும் பயன் கிட்டும் என அவர்கள் கருதியதே. ஆனால், நேர் எதிரிடையான பலன்களை இன்று நாம் அனுபவிக்கின்றோம்.
 தமிழகத்தின் ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவை மேடிட்டு அழிவை நோக்கிச் செல்வதற்குக் காரணம் சீமைக்கருவேலம் எங்கும் முளைத்து பரவியதே. இதனால் இம்மண்ணுக்குரிய மரங்களும், பல்வகை மூலிகைச் செடிகளும் அழிந்தன.
 நம் நாட்டில் மூன்று வகையான சீமைக் கருவேல மரங்கள் உள்ளன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூத்து, காய்த்து, நெற்றுகளை இம்மரங்கள் உதிர்க்கும். அவற்றைத் தின்னும் கால்நடைகள் மூலமாக எல்லா இடங்களுக்கும் இவை பரவுகின்றன. இம்மரத்தின் இலைகளை உண்ணும் கால்நடைகள் இறக்க நேரிடும்; அளவுக்கு அதிகமான நெற்றுக்களைத் தின்னும் ஆடு, மாடுகளும் இறக்கும்.
 எரிபொருளாகிய விறகு, தேன் உற்பத்தி, பிசின், தோல் பதனிட தேவையான பொருள் போன்றவை இத்தாவரத்தின் மூலம் கிடைத்தாலும், அதன் நீர் உறிஞ்சும் திறனையும், எந்தத் தாவரத்தையும் அருகில் வளரவிடாமல் தடுத்தலையும் எண்ணிப் பார்த்தால் அந்த பலன்கள் ஒன்றும் பெரிதல்ல.
 ஒரு மரம் சராசரியாக ஆண்டுக்கு 19 கிலோ நெற்றுக்களை உதிர்க்கின்றது. முளைத்த மூன்றாவது வருடத்திலேயே காய்க்கத் தொடங்கிவிடுகிறது. நன்கு வளர்ந்த பத்து வருட மரம் ஆண்டுக்கு 90 கிலோ வரை நெற்றுக்களை உதிர்ப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். இதை நோக்கும்போது இம்மரம் தன் இனப்பெருக்கத்தை எவ்வளவு வேகமாகச் செய்கின்றது என்பதை அறியலாம்.
 வேர்களின் அமைப்பே இதன் வளர்ச்சிக்கு உதவுவதாக அமைந்துள்ளது. மிகுந்த ஆழத்தை நோக்கிச் செல்லும் வேர்களையும், பக்கவாட்டில் நெடுந்தூரம் படர்ந்து பரவும் வேர்களையும் கொண்டுள்ளது. 30 மீட்டர் ஆழத்திற்குக்கூட வேர்கள் துளைத்துச் சென்றிடும். பக்கவேர்கள் எல்லா திசைகளிலும் தரை மட்டத்திலிருந்து 30 செ.மீ. ஆழத்திற்கும் 1.2 மீட்டர் ஆழத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் பரவி நீரை உறிஞ்சிக் கொள்ளும்.
 இப்பகுதியில் வேறு செடிகள் வளர இயலா நிலை ஏற்படுகின்றது. இதன் காரணமாக விஞ்ஞானிகள் இதனை நீர்தேடி (வாட்டர் ஸீக்கர்) எனக் கூறுவர். ஒரு கிலோ தாவரப் பொருளை உருவாக்க 1,730 கிலோ நீரை சீமைக்கருவேலம் செலவிடுகிறது.
 இவ்வாறு இத்தாவரம் பரவிய இடமெல்லாம் வேறு எந்த ஒரு தாவரத்தையும் வளரவிடாமல், நிலத்தடி நீர் முழுவதையும் தானே உறிஞ்சுவதோடு மண்ணின் வளத்தையும் பாழ்படுத்துகிறது. தமிழகத்து ஏரி, கண்மாய் போன்றவற்றில் முழுவதுமாகப் பரவி அவற்றைத் தூர்வார இயலாதவாறு மேடிட்டுக் கிடக்கின்றன. அவற்றிலிருந்து பாசனம் பெறும் வயல்களிலும் இவை நீக்கமற நிறைந்துள்ளன.
 சீமைக் கருவேலப் பரவலால் விவசாயம் செய்ய இயலாத வேளாண் பெருமக்கள் அவற்றை அழிக்க முற்படாமல் அப்படியே விட்டுவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை வெட்டி விறகாக விற்றுவிடுகின்றனர். பின்னர் மீண்டும் பயிர்செய்ய வேண்டிய தேவை இல்லை.
 அடுத்த ஆண்டுக்கு பல டன் விறகுக்கு அவை தயாராகிவிடும். இதனால் தமிழகத்தில் பல விவசாயிகள் விவசாயத்தை மறந்து எந்த உழைப்பும் இல்லாமல் ஆண்டுதோறும் சீமைக்கருவேல விறகு வெட்டுவதிலேயே முனைந்திருப்பது வேதனையான செயலாகும்.
 சீமைக் கருவேல மரங்களை அரசு ஒழிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக அரசியல் கட்சித் தலைவர் வைகோ நீதிமன்றத்திற்கே சென்று இவற்றை ஒழிக்க வழக்கு தொடுத்துள்ளார். இது போற்றுதலுக்குரிய செயலாகும்.
 சீமைக் கருவேலத்தின் தீமையை முற்றிலுமாக உணர்ந்த உயர்நீதிமன்றம், அவற்றை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணை பிறப்பித்துள்ளது. இது ஆறுதலான செய்தியாகும். சீமைக்கருவேலத்தின் தீமைகளை மக்கள் முழுவதுமாக உணர்ந்து அழிக்க முற்பட்டாலன்றி பயன் கிட்டாது.
 தற்காலத்தில் சீமைக் கருவேல மரங்களை வேரோடு பிடுங்கி எடுப்பதற்கும், எடுத்த மரத்தை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுப்பதற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. அவற்றின் துணைகொண்டு எவ்வளவு மரங்கள் இருப்பினும் எளிதில் வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்றிவிடலாம். வேரடி மண்ணை அகற்றினாலே நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுவிடும்.
 ஒரு காலத்தில் அரசின் வேளாண்துறையே கொண்டு வந்த கொடிய அரக்கனான சீமைக்கருவேலத்தை அத்துறையே அழிக்க வேண்டும். மரங்களை வெட்டுவதால் மட்டும் பலன் கிட்டாது. ஒரு மரத்தை வெட்டினால் அதன் அடிப்பகுதியிலிருந்து பல தூர்கள் துளிர்விட்டு பெருமரமாக மறு ஆண்டே நம் கண்முன் நிற்கும். எனவே வேரோடு அழித்தாலன்றி மீண்டும் மீண்டும் முளைப்பதை நம்மால் தடுக்க இயலாது.
 பொதுவாக பறவைகள் சீமைக் கருவேல மரங்களில் கூடு கட்டுவதில்லை. பறவைகளின் நுண் அறிவு நம்மையும் ஆட்கொள்ளட்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றிய இடங்களில் இம்மண்ணுக்குரிய வாகை, வாதமுடக்கி, மா, பலா, இலுப்பை போன்ற நாட்டு மரங்களை நட்டு வைப்பது மிகுந்த பலனளிக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT