நடுப்பக்கக் கட்டுரைகள்

நம்பிக்கையூட்டும் பருவமழை

இரா. மகாதேவன்

தேசிய நீர் மேம்பாட்டு முகமை அமைப்பின் 36-ஆவது ஆண்டுக் கூட்டமும், நதிநீர் இணைப்புக்கான சிறப்புக் குழுவின் 20-ஆவது கூட்டமும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் தில்லியில் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெற்றது. 

இதில், கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை விரைவாக மேற்கொள்ளவும், தமிழகத்தில் இந்த இணைப்புக் கால்வாயை, கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கட்டளை அணையில் இணைப்பதற்கும் தமிழக அரசு வைத்த கோரிக்கையை மத்திய அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நதிநீர் இணைப்புக்கு ரூ. 60 ஆயிரம் கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக, கங்கையையும், காவிரியையும் இணைக்கும் கார்லண்ட் திட்டம் 1972-இல் முன்வைக்கப்பட்டது. 2,640 கி.மீ. தொலைவுக்கிடையே உள்ள இந்த நதிகளை இணைக்க அப்போது, ரூ. 15 ஆயிரம் கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. ஆனால், பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு 1,465 கிமீ தொலைவில் இருக்கக்கூடிய கோதாவரி நதியை, காவிரியுடன் இணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது நல்ல திட்டம்தான். ஆனால், சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் இது போன்று பெரிய பொருட்செலவில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எதுவும் விரைவில் முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு வந்ததில்லை என்பதே நிதர்சனம்.

சர்வதேச அளவில், கணக்கற்று உமிழப்படும் கார்பன் டை ஆக்ûஸடு காரணமாக, புவி வெப்பமயமாதல் அதிகரித்து, அதன் விளைவான சீரற்ற பருவநிலை மாற்றத்தால் மக்கள் படும் இன்னல்களுக்கு இதுவரை விரைவான எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

கனடாவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பின் 15-ஆவது சர்வதேச மாநாட்டில் 190-க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றன. இதில், பல்லுயிர் பெருக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாதுகாப்பதற்கான இலக்கை ஏற்கெனவே உள்ள 27 %-லிருந்து 30 % ஆக உயர்த்த 2030-ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதி திரட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதே வேளையில், பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பான உறுதியான வாக்குறுதிகள் தீர்மானத்தில் இடம்பெறவில்லை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்டை மாநிலத்திலிருந்து வரும் தண்ணீரைப் பெறுவதிலேயே பல பிரச்னைகள் உள்ள நிலையில், கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தியாகும் கோதாவரி நதியில் இருந்து தெலங்கானா, ஆந்திர மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்து குழாய் வழியாக வரும் தண்ணீர், கடைக்கோடி மாநிலமாக உள்ள தமிழகத்துக்கு எந்த அளவு கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

தமிழ்நாட்டுக்குள் உள்ள ஆறுகள், கால்வாய்களை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசு தேவையான நிதியை ஒதுக்கி விரைந்து செயல்பட வேண்டும் என்பதே இப்போது அவசர அவசியம். 1957-இல் முதன் முதலாக சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி இணைப்புத் திட்டம் 2016-இல்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

34 மாதங்களில் திட்டம் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டாலும், 2018-இல் நிர்வாக அனுமதி, 2019-இல் சுற்றுச்சூழல் அனுமதி என கடந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. 

அதேபோல, தாமிரபரணி - கருமேனி ஆறு இணைப்புத் திட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது. ஆனால், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன.

நூறாண்டு கோரிக்கையான காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் 2021-இல்தான் தொடங்கப்பட்டது. 262 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்துக்கு சுமார் ரூ. 14 ஆயிரம் கோடி செலவாகும் என கூறப்படும் நிலையில், இதில் பத்தில் ஒருபங்கு நிதிகூட இதுவரை ஒதுக்கப்படவில்லை என இந்தத் திட்டத்தால் பயனடைய உள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

மழைக்காலங்களில் கொல்லிமலையில் இருந்து கிடைக்கும் தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் காவிரியுடன் இணைக்கும் திட்டம் போன்ற பல திட்டங்கள் இன்னும் ஏட்டளவிலேயே உள்ளன.  

இந்த நிலையில்தான் கடந்த ஓரிரு ஆண்டுகளாக பருவமழை இயல்புக்கு அதிகமாகவும், இயல்பான அளவிலும் பெய்து விவசாயிகளின் தண்ணீர் தேவையை ஓரளவு சரிகட்டி வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை 25 மாவட்டங்களில் இயல்பான அளவும், ஏழு மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், எட்டு மாவட்டங்களில் மட்டும் இயல்பைவிட குறைவாகவும் பெய்துள்ளது. 

இதன் மூலம், பொதுப்பணித் துறையின் கீழ்உள்ள 14,138 பாசன ஏரிகளில் 4,087 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 3,022 ஏரிகள் 75 % முதல் 99 % வரையும், 2,952 ஏரிகள் 75 % வரையும் நிரம்பியுள்ளன. தமிழகத்தின் 33 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது. வறட்சி மாவட்டம் என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.85 மீ. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

இந்த நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டமும், ஆறுகளில் தடுப்பணை கட்டும் திட்டமும் முக்கிய காரணங்களாகும். 

கடந்த சில ஆண்டுகளாக இயல்பை ஒட்டி பெய்துவரும் மழையால் கிடைக்கும் நீர், காவிரியில் தென்மேற்குப் பருவமழை காலங்களில் வரும் கட்டற்ற வெள்ளம் போன்றவற்றை தமிழகத்தின் வறட்சி மாவட்டங்கள் பக்கம் திருப்பிவிடும் திட்டங்களை செயல்படுத்தினாலே தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் முப்போகம் விளையும் மாவட்டங்களாக மாறிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மிதுனம்

மே மாத பலன்கள்: ரிஷபம்

மே மாத பலன்கள்: மேஷம்

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

SCROLL FOR NEXT