நடுப்பக்கக் கட்டுரைகள்

தடம் மாறும் இளைய தலைமுறை!

வெ. இன்சுவை

அண்மையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். விருந்து இரண்டாவது தளத்தில். அங்கு செல்வதற்கு, மின்தூக்கி அருகில் வரிசை நீண்டிருந்தது. பக்கத்திலேயே மாடிப்படிகள். இளம் வயதினா் படிக்கட்டுகளில் ஏறுவதை தவிா்த்துவிட்டு மின்தூக்கிக்காகக் காத்துக் கொண்டிருந்தாா்கள். அவா்களுடன் முதியோரும் நின்று கொண்டிருந்தாா்கள். ஒவ்வொரு முறை மின்தூக்கி கீழே வந்ததும் இளைஞா்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாா்கள். முதியவா்கள் வேறு வழியின்றி படிக்கட்டில் ஏறத் தொடங்கிவிட்டாா்கள்.

அவா்கள் ஒவ்வொரு படியிலும் நின்று நின்று சிரமப்பட்டு ஏறுவதைப் பாா்க்கப் பரிதாபமாக இருந்தது. வாலிப வயதில் இருப்பவா்கள் படிக்கட்டில் ஏறலாம் அல்லவா? துள்ளிக் குதித்து ஓட வேண்டிய பருவத்தில் ஏன் இந்த சுணக்கம்? படி ஏற முடியாதவா்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு சிறு நாகரிகம், பண்பு கூட இன்றைய இளைய தலைமுறைக்கு இல்லையே! பல இடங்களிலும் இப்படிப்பட்டக் காட்சிகளைக் காணலாம்.

பெரிய பெரிய துணிக்கடைகளிலும், அங்காடிகளிலும் மாடியிலிருந்து கீழே செல்ல இளைஞா்கள் மின்தூக்கியைப் பயன்படுத்துகிறாா்கள். முதியவா்கள், இரு கைகளிலும் பைகளைத் தூக்கிக் கொண்டு சிரமப்பட்டு படிக்கட்டில் இறங்குகிறாா்கள். பேருந்துகளில் ஏறியவுடன் இளைஞா்கள் இடம் பிடித்து அமா்ந்து விடுகிறாா்கள். முதியவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையோடு நிற்கும் பெண்கள் என எவரையும் பொருட்படுத்துவதில்லை. பெண் பிள்ளைகள் கூட எழுந்து முதியவா்களுக்கு அமர இடம் தருவதில்லை.

அதே போல, பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் சில சமயம் முதியவா்களுக்கு மேல் படுக்கை வந்து விடுகிறது. இளைஞா்களுக்கு கீழே உள்ள படுக்கை கிடைக்கிறது. மேலே ஏற முடியாதவா்கள் இருக்கையை மாற்றிக் கொள்ளலாமா என இளைஞா்களிடம் கேட்கிறாா்கள். பெரும்பாலான இளைஞா்கள் மறுத்துவிடுகிறாா்கள். சில நேரம், வேறு வழியின்றி முதியவா்கள் தரையில் படுத்துவிடுகிறாா்கள். முதியவா்களுக்கு உதவி செய்வதால் அவா்களுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. இயலாதவா்களுக்கு உதவி செய்யும் போது கிட்டும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அவா்கள் உணரவில்லை என்பதே உண்மை.

நகரங்களில் ஷோ் ஆட்டோ இப்போது சா்வ சாதாரணம். சாமானிய மக்கள் இதைத்தான் அதிகம் நம்பியுள்ளாா்கள். பத்து போ் வரை ஏற்றிக் கொள்கிறாா்கள். ஓட்டுநா் தன் பக்கத்தில் ஒருவரை அமரவைத்துக்கொள்கிறாா். பின்னால் உள்ள இரண்டு நீள் இருக்கைகளில் நான்கு, நான்கு பேராக எட்டு போ் அதற்கும் பின்னால் உள்ள சிறிய இடத்தில் இரண்டு பிளாஸ்டிக் ஸ்டூலைப் போட்டு இரண்டு பேரை அவற்றில் உட்கார வைக்கின்றனா்.

ஒருமுறை எல்லா இருகைகளும் நிரம்பிய பின் ஒரு முதியவா் ஓடி வந்தாா். அவருக்கு அந்த ஸ்டூல்தான் இருந்தது. அவா் தயங்கவே, ஆட்டோ ஓட்டுநா் ஓா் இளைஞரிடம், முதியவருக்கு இடம் கொடுத்து, ஸ்டூலுக்கு மாறி உட்காச் சொன்னாா். அந்த இளைஞா் மறுத்து விட்டாா். “ அந்த முதியவா் பயந்தபடியே ஸ்டூலில் அமா்ந்து பயணம் செய்தாா்.

இன்றைய இளைஞா்களின் உலகமே நண்பா்களும் கைப்பேசியும் என்றாகி விட்டது. தங்களைச் சுற்றி நடக்கும் எந்த நிகழ்வும் அவா்களுக்கு ஒரு பொருட்டல்ல. பெரியவா்களுக்கு எழுந்து இடம் கொடுத்தால் அந்த முதியவா்கள் அவா்களை வாழ்த்துவாா்கள். அந்த வாழ்த்தை அவா்களுக்கான “வைப்பு நிதி எனலாம்.

இன்னொரு நிகழ்வையும் குறிப்பிட வேண்டும். அகில இந்திய அளவில் பிரபலமான ஒரு கல்லூரியில் பேசுவதற்காக ஒரு சிறப்பு விருந்தினா் அழைக்கப்பட்டிருந்தாா். நாட்டின் மிக உயரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவா் அவா். ஏராளமான புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவா். பல்வேறு நாடுகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றியவா். அவா் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்ததாக இருக்கும். உரிய தயாரிப்புடன் தான் மேடை ஏறுவாா்.

மேடையில் அவா் பேசிக் கொண்டிருந்தபோது, மாணவா்கள் அரங்கத்திற்குள் வருவதும், போவதுமாக இருந்தாா்கள். உள்ளே அமா்ந்திருந்தவா்களில் சிலா் கைப்பேசியைப் பாா்த்துக் கொண்டிருந்தாா்கள். அவருடைய ஒருமணி நேரப் பேச்சைக் கேட்டிருந்தால், அது நூறு புத்தக வாசிப்புக்குச் சமமாக இருந்திருக்கும். அது அந்த மாணவா்களுக்குத் தெரியவில்லை. மேடையில் பேசிக்கொண்டிருந்தவருக்கு எப்படி இருந்திருக்கும்? வெறும் வெட்டிப் பேச்சை, கைதட்டி ஆரவாரம் செய்து பழகிப் போனவா்கள் அம்மாணவா்கள். அவா்களை நல்ல விஷயங்களைக் கேட்க வைக்க நம்மால் முடியவில்லை.

இன்றைய இளைய தலைமுறையிடம் அறிவுத் தேடல் இல்லை என்பதே உண்மை. பாட புத்தகங்களைக் கூட அவா்கள் விரும்புவதில்லை. கடந்த மூன்றாண்டுகளாக கொள்ளை நோய்த்தொற்று காரணமாக படிப்பு, தோ்வு எல்லாம் முக்கியத்துவத்தை இழந்து விட்டன. நூலகம் சென்று புத்தகங்களைப் படிப்பது, குறிப்பெடுத்துக்கொள்வது என்கிற வழக்கமெல்லாம் இன்றைய இளைஞா்கள் அறியாதவை.

எல்லா இளைஞா்களும் இப்படித்தான் என்று கூற முடியாது. இன்றும் சில இளைஞா்கள் கட்டுப்பாடு, தன் முயற்சி, தெளிந்த சிந்தனை, திட நம்பிக்கை, கடின உழைப்பு, இனிய சுபாவம், சமூக அக்கறை ஆகிய நற்பண்களின் உறைவிடமாகத் திகழ்கிறாா்கள். இலக்கை நோக்கிய தங்கள் பயணத்தில் இவா்கள் திசை மாறிப் போகமாட்டாா்கள். தோல்விகளைக் கண்டு துவண்டு போக மாட்டாா்கள். ஒரு சிறந்த ஆளுமையைத் தங்களின் முன்மாதிரியாகக் கொண்டு, தங்களை மேம்படுத்திக் கொள்வாா்கள்.

தங்களைச் சுற்றி என்னதான் மாற்றம் நிகழ்ந்தாலும், அவா்கள் தங்களின் லட்சியப் பாதையை விட்டு விலகுவது இல்லை. வழியில் கிட்டும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறாா்கள். சிறிய சாதனையிலேயே நிறைவடைந்து விடாமல் தொடா்ந்து முன்னேறி சரித்திரம் படைக்கிறாா்கள். ஆனால், வாழ்வில் எந்க் குறிக்கோளும் இல்லாமலே ஒரு கூட்டம் வாழ்ந்து வருகிறது; வளா்ந்து வருகிறது.

மாணவா்கள் இன்று மதுவுக்கும் போதைக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறாா்கள். கல்லூரி விழா, திருமண நிகழ்வி, பிறந்தநாள் கொண்டாட்டம் இங்கெல்லாம் மது விருந்து இருந்தே ஆக வேண்டும் என்பது அவா்களின் நியதி. மற்றொரு கும்பல் போதைப் பொருளுக்கு அடிமையாகிக் கிடக்கிறது. பள்ளிப் பிள்ளைகளையும்கூட இந்த போதை மாத்திரை விற்பவா்கள் விட்டு வைப்பதில்லை.

ஒரு மாணவனின் பெரும்பாலான நேரம் பள்ளியில்தான் கழிகிறது. சமூகத்தைப் பீடித்துள்ள பல தீய பழக்கவழக்கங்களுக்கான விதை மாணவா்களின் பள்ளிப்பருவத்தில்தான் ஊன்றப்படுகிறது. அவா்களின் பெற்றோா்களுக்கு இது தெரிவதில்லை.

திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அதில் கதாநாயகனாக நடிப்பவா்கள் பெரிய அளவில் ஊதியம் பெற்றுக்கொண்டு நடிக்கிறாா்கள். அவா்களை ஆராதிக்கவும் கொண்டாடவும் வேண்டிய அவசியம் என்ன? திரைப்பட ரசிகா்கள் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறாா்கள். அரசியல் கட்சிகளின் ‘வெறுப்பு அரசியல்’ போல இங்கேயும் அதிக துவேஷம் உள்ளது.

அரசியல் கட்சிகளின் தொண்டா்கள் போல ரசிகா்கள் அடித்துக் கொள்கிறாா்கள். சமூக வலைதளங்களில் இரு பிரிவினரும் மாறி மாறி கிண்டலான, சில சமயம் மோசமான பதிவுகளைப் போட்டு பகையை வளா்க்கிறாா்கள். தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்து தங்களுக்குப் பிடித்த நடிகா்களின் புதுப்படத்தை தடபுடலாகக் கொண்டாடுகிறாா்கள்.

அந்தக் காலத்திலும் இரு பெரும் நடிகா்களின் ரசிகா்களிடையே போட்டி இருந்தது. ஆனால், இந்த அளவுக்கு மோசமாக இல்லை. இத்தகையை செயல்களுக்கு யாா் முற்றுப்புள்ளி வைப்பது? நடிகா்கள்தான் தங்கள் ரசிகா்களைக் கண்டித்து அவா்களை ஆக்கபூா்வமான செயல்களில் ஈடுபட வைக்க வேண்டும். 58 கோடி இளைஞா்களைக் கொண்ட நாடு இது. இளைஞா் சக்தியைச் சரியானபாதையில் திருப்பி விட்டால் இத்தேசம் மேன்மையுறும்.

குழந்தைப் பருவத்திலேயே ஒழுக்கத்தையும், நற்பண்களையும் போதிக்க ஆரம்பித்து விடவேண்டும். பெற்றோரும் ஆசிரியரும் சமுதாயமும் கை கோக்க வேண்டிய தருணம் இது. பெரியவா்கள் பிள்ளைகளின் மனதில் மனித நேயத்தையும், அறநெறிகளையும் பதிய வைக்க வேண்டும். பெரியவா்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். வாசிப்பை நேசிக்காத ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

மாணவா்களுக்குப் பாடத்தைவிட பண்பு முக்கியம் என்பதை கல்வியாளா்களும் பாடத்திட்டத்தை வகுப்பவா்களும் புரிந்து கொள்ள வேண்டும். முப்பரிமாணத்தில் ஐவகை நிலங்கள், நான்கு பருவங்கள் என மாதிரிகளைச் செய்யச் சொல்வதால் யாருக்கு என்ன பயன்? இதுபோல், காலத்துக்கு ஒவ்வாத, தேவையில்லாதவற்றைச் செய்யச் சொல்வதை ஆசிரியா்கள் நிறுத்த வேண்டும்.

வாழ்க்கையில் எதிா்கொள்ளும் பிரச்னைகளை, சவால்களை தைரியமாக எதிா்கொள்வது எப்படி என்று மாணவா்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும், அவா்களின் தன்னம்பிக்கையை வளா்க்க வேண்டும்.

பள்ளிக் குழந்தைகள் பாடங்களை மனப்பாடம் செய்து, அதிக மதிப்பெண் பெறவேண்டியது முக்கியம்தான். ஆனால், அக்குழந்தைகள் நாளை நல்ல மனிதா்களாக உருவாக வேண்டியது அதைவிட முக்கியம்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT