நடுப்பக்கக் கட்டுரைகள்

நிர்வாகம் மேம்பட பொது விவாதம் தேவை!

க. பழனித்துரை

 நீண்ட நாட்களுக்கு முன் தில்லி விஞ்ஞான பவனத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒருவருடன் நானும் சென்றேன். ஒரு சிறிய அறையில் மத்திய திட்டக்குழுவின் உதவித் தலைவரும் சில அதிகாரிகளும் அமர்ந்திருந்தனர். நாங்கள் சென்றதும் மத்திய அமைச்சகத்தில் இணைச் செயலராக பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் சிறிய உரை நிகழ்த்தினார்.
 மத்திய அரசு எப்படி தன் நிர்வாகக் கட்டமைப்பை இயக்குகிறது என்பதாக அந்த உரை இருந்தது. நிதிநிலை அறிக்கையிலிருந்து புள்ளிவிவரங்களை எடுத்து மத்திய அரசின் துறைகள் செயல்படுவதை விளக்கினார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு கேள்வி கேட்க வேண்டும்போல் தோன்றியது. கேட்கத் தோன்றியதை எழுதி அமைச்சரிடம் கொடுத்தேன்.
 அவர் என்னை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அந்தக் கேள்விகளைக் கேட்டேன். அனைத்துக் கேள்விகளுக்கும் அந்த இணைச் செயலர், தான் ஒரு அரசு அதிகாரி என்பதை மறந்து அப்பட்டமாக அரசின் நிர்வாகச் சிக்கல்களைப் படம் பிடித்துக் காட்டினார்.
 அந்த உரையின் சாரம், "அரசுத் துறைகள் இயங்கிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் அதனால் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த இயலாத சூழலிலும் மாற்றுத் தேடுவதை தவிர்த்து இயங்கி வருகின்றது. இதை பொது நிர்வாக இயல் வல்லுனர்கள் பொது நிர்வாக இயந்திரத்தின் தோல்வி என்று கூறுவர்' என்பதே.
 அந்த நிகழ்வில் ஒவ்வொரு அரசுத் துறையும் செயல்பட அந்தத் துறைக்கு ஆகும் செலவு எவ்வளவு என்பதையும், அந்தத்துறை மக்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களின் மூலம் எவ்வளவு நிதி ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கிறது என்பதைப் பட்டியலிட்டார் அந்த இணைச் செயலர். இந்த புள்ளிவிவரத்தை ஒவ்வொரு ஆண்டும் போடப்பட்ட நிதிநிலை அறிக்கையிலிருந்து எடுத்து விளக்கினார்.
 அவர் விளக்கிக் கொண்டு வரும்போது, பல துறைகள் தாங்கள் செய்யும் திட்டப்பணிகளுக்கு செலவழிப்பதை விட, தங்களின் நிர்வாகக் கட்டமைப்புக்கு செலவிடும் தொகை அதிகமாக இருந்ததை என்னால் கவனிக்க முடிந்தது. அந்த நிகழ்வு முடிந்தபின் அந்த இணைச்செயலரை அணுகி, "நீங்கள் தந்த புள்ளிவிவரத்தை என்னுடன் பகிர்ந்துகொள்ள இயலுமா' என்று கேட்டேன். அவர் "இந்த புள்ளிவிவரம் அரசாங்கத்திற்காகத் தயாரிக்கப்பட்டது; அதை பகிர்ந்து கொள்ளவும் முடியாது' என்று கூறிவிட்டார்.
 தற்போது மத்திய அரசாங்கத்தில் ஓர் ஆய்வு நடைபெற்று வருகின்றது. அது நிறைவு பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால் அது நிர்வாக சீர்திருத்தத்திற்கான வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பு.
 மத்திய அரசு மக்களிடம் திரட்டும் வரிப்பணத்தில் மக்களையும் நாட்டையும் மேம்படுத்த திட்டங்கள் தீட்டி அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்கின்றது. அந்த திட்டங்கள் இரண்டு வகைப்படும். முதலாவது, மத்திய அரசின் துறைத்திட்டம் (சென்ட்ரல் செக்டார் ஸ்கீம்). இரண்டாவது, மத்திய அரசின் நிதியுடன் நடத்தப்படும் திட்டம் (சென்ட்ரல் ஸ்பான்சர்டு ஸ்கீம்).
 மத்திய அரசின் துறைத்திட்டம் என்பது முழுவதுமாக மத்திய அரசின் நிதியின் மூலம் மத்திய அரசின் துறைகளே நடைமுறைப்படுத்துவதாகும். மத்திய அரசின் நிதியுடன் நடத்தப்படும் திட்டம் என்பது மத்திய - மாநில அரசுகள் இரண்டும் நிதி தந்து மாநில அரசு நடைமுறைப்படுத்தும் திட்டமாகும்.
 2019-20 நிதிநிலை அறிக்கையின்படி 73 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சார்ந்து 830 திட்டங்கள் இரண்டு வகையிலும் நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசுத் துறைகள் நேரடியாகவும், மாநில அரசுகள் மூலமும் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தது. 73 மத்திய அமைச்சகங்களில், இரண்டு அமைச்சகங்களில் எந்தத் திட்டமும் இல்லை. மீதமுள்ள 71 அமைச்சகங்களில் நான்கு துறைகளில் மூலதன முதலீடுகள்தான் அதிகம்.
 இந்த நான்கு துறைகளில் மட்டும் 64 வகையான திட்ட ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. மீதமுள்ள 67 அமைச்சகங்களில் 766 மத்திய அரசின் துறைத் திட்டங்களும் மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதுவரை 76 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஆனால் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
 ஒட்டுமொத்த நிதியில் 96 % நிதியை 27 % திட்டங்கள் உள்வாங்கி விடுகின்றன. இந்த 27 % திட்டங்களுக்கு ரூ.500 கோடிக்குமேல் நிதி ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 73 % திட்டங்களுக்கு வெறும் 4 % நிதியைத்தான் ஒதுக்குகிறது மத்திய அரசு. 45 % திட்டங்கள், ரூ. 100 கோடிக்கு கீழ்தான் நிதி பெறுகின்றன. இது ஒட்டுமொத்த நிதியில் வெறும் 1 % மட்டுமே. ரூ.100 கோடியிலிருந்து ரூ. 500 கோடிவரை நிதியைப் பெற்று செயல்படுத்தப்படும் திட்டங்கள் வெறும் 3 % மட்டுமே.
 அதாவது, அதிக அளவிலான திட்டங்களுக்கு மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு கீழ் ஒதுக்கீடு உள்ள திட்டங்கள் தேவையா என்பதையும், அந்தத் திட்டங்களுக்கான செலவை நியாயப்படுத்த முடியுமா என்பதையும் அரசு ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
 அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் 90 % நடைமுறை சாத்தியமுள்ள, கண்காணிக்க சாத்தியமுள்ள திட்டங்களைத் தவிர்த்து மற்றவற்றை நிறுத்திவிடுவதே நல்லது என அரசு எண்ணுகிறது. எனவே, திட்டங்களை மறுசீரமைப்புச் செய்வதற்காக கீழ்க்கண்ட கருத்துக்கள் மத்திய அரசால் முன் வைக்கப்படுகின்றன.
 மத்திய அரசின் பல அமைச்சகங்கள் பல திட்டங்களை ஒரே குறிக்கோளுக்காக செயல்படுத்துகின்றன. இதை நிர்வாகச் சீர்திருத்த ஆணையமும் எடுத்துக் காட்டியுள்ளது. ஒரு அமைச்சகம் நடத்துகின்ற திட்டத்தின் நோக்கமே இன்னொரு அமைச்சகத்தின் திட்டத்தின் நோக்கமாக இருக்கின்றது. இதன் விளைவாக பெருமளவில் நிதி விரயமாகிறது.
 உதாரணமாக தொழில் செய்வதற்கு மிக எளிதான சூழலை உருவாக்க ஒரு அமைச்சகம் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு
 செய்கிறது. அதே பணிக்கு இன்னொரு அமைச்சகம் வேறொரு தொகையை ஒதுக்கீடு செய்கிறது. முந்திரி ஏற்றுமதியை ஊக்குவிக்க இரு அமைச்சகங்கள் வெவ்வேறு தொகையை ஒதுக்கீடு செய்துள்ளன.
 இயற்கை விவசாயத்தை பிரபலப்படுத்த ஒரு அமைச்சகம் ரூ. 2 கோடியை செலவு செய்கிறது. அதே திட்டத்தை மற்றொரு அமைச்சகம் 160 கோடி ரூபாய் செலவு செய்து நடைமுறைப்படுத்துகிறது. மூன்றாவது அமைச்சகம் அதே பணியை வேறு ஒரு திட்டப் பெயரில் 325 கோடி ரூபாய் செய்து நடைமுறைப்படுத்துகிறது.
 இதே போல் கல்விக்கான உதவித் தொகை தருவதை (ஸ்காலர்ஷிப்) பல்வேறு துறைகள் நடைமுறைப்படுத்துகின்றன. அவை அனைத்தும் கல்வித்துறை செய்ய வேண்டிய பணி. அதே போல் ஆராய்ச்சி ஊக்குவிப்புக்கு பல அமைச்சகங்கள் நிதி ஒதுக்கி பணியை மேற்கொள்ளுகின்றன. அவை எல்லாவற்றையும் ஒன்றிணைக்க வேண்டும்.
 பல திட்டங்கள் மிகக் குறைந்த நிதியுடன், எந்தக் காலத்திலோ ஆரம்பித்து இன்றும் தொடர்கிறது. ஆனால் அவற்றின் தேவை இன்று இருக்கிறதா என்றால் இல்லை. ஆனாலும் ஏன் தொடர்கிறது? அதற்கு ஏதும் பதில் இல்லை. பல கோடி ரூபாய் அதில் விரயமாகிறது. சில திட்டங்களால் மிகக் குறைந்த விளைவையே ஏற்படுத்த முடியும். அதை தெரிந்து கொண்ட பிறகும் மீண்டும் மீண்டும் அந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி செயல்படுகின்றன பல அமைச்சகங்கள்.
 ஆய்வுக்காக ஒதுக்கப்படும் நிதி பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சில துறைகளில் தேவைக்கு ஏற்ப நிதி கிடைக்கவில்லை. ஒருசில துறைகளில் நிதியை செலவிட முடியவில்லை. தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு இல்லாமல் இருப்பதால் அமைச்சகங்கள் நிதியை பெற்று வைத்துக்கொண்டு செலவு செய்ய வழி தெரியாமல் தடுமாறுகின்றன.
 ஒரே திட்டத்தை மாநில அரசும் செயல்படுத்துகிறது; மத்திய அரசும் செயல்படுத்துகிறது. இப்படிப்பட்ட நிதி ஒதுக்கீடு, திட்டச் செயலாக்கத்தை முறைப்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதை எந்த அளவுக்கு உறுதியாக நடைமுறைப்படுத்த நம் அதிகாரிகள் முனைப்புக் காட்டுவார்கள் என்பது தெரியவில்லை. பல துறைகளில் நடைமுறைப்படுத்தும் திட்டங்களைப் பார்த்தாலே, இந்தத் துறைகள் தங்கள் இருப்பைக் காட்டவே ஒரு சில திட்டங்களை தன்னகத்தே வைத்துக் கொண்டு செயல்படுகின்றன என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
 இந்த மறுசீரமைப்புக்கு ஒரு ஆய்வு வரையறையை, முறைமையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதை உபயோகப்படுத்தி ஒவ்வொரு துறையும் ஆய்வு செய்து புள்ளிவிவரத்துடன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தை பூர்த்தி செய்வதற்கு ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு அமைச்சகமும் ஆழ்ந்த ஆய்வு நோக்கோடு செயல்பட்டு, புள்ளிவிவரம் சேகரித்து ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும்.
 உண்மையிலேயே இந்த ஆய்வை நம் மத்திய அரசுத்துறைகள் நேர்மையாக செய்திட்டால், அதன் அடிப்படையில் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டால் மிகப் பெரிய அளவில் நிதி விரயம் தவிர்க்கப்படும். அது மட்டுமல்ல, நம்முடைய நிர்வாகத்தையும் ஓரளவுக்கு நாம் சரி செய்ய முடியும். நம் அரசியலில் பிரச்னை அல்லாதவற்றை பிரச்னையாக்கி நாம் அரசியல் செய்கின்றோம்.
 நிர்வாக மேம்பாட்டுக்கான, ஆளுகை மேம்பாட்டுக்கான, நிதி மேலாண்மை மேம்பாட்டுக்கான ஒரு பொது விவாதத்தை பொதுக்கருத்தாளர்களும், அரசியல் கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும். நாம் நிறுவனங்களை ஆளுகைக்காகவும், நிர்வாகத்திற்காகவும் கட்டமைத்துள்ளோம். இந்த நிறுவனங்கள் முறையாக செயல்பட்டிருந்தால் மிகப் பெரிய மாற்றத்தை சமூக பொருளாதார வாழ்வில் நம் மக்கள் பெற்றிருப்பார்கள். இதைத்தான் ஆய்வாளர்கள் "ஆளுகைத் தோல்வி' என்று கூறுகின்றனர்.
 இந்தச் சூழலை மாற்ற தற்போது ஒரு முயற்சி மத்திய அரசில் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான முன்னெடுப்பு நீண்ட காலமாக சிந்தனையில் இருந்தாலும் இப்போது அது நடைமுறைக்கு வருவதற்கான அறிகுறி தெரிகிறது. இதற்கான அழுத்தத்தை பொது கருத்தாளர்களும், அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்படுத்த வேண்டும். இது இன்று காலத்தின் கட்டாயமாகும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT