நடுப்பக்கக் கட்டுரைகள்

குழந்தைத்தன்மையும் வேலைவாய்ப்பும்

30th Sep 2022 04:11 AM | முனைவா் என். மாதவன்

ADVERTISEMENT

 

வயதில் மூத்தவா்கள் இளையவா்களிடம் உரையாடத் தொடங்கும்போது, முதலில் அவா்கள் கல்வி தொடா்பான கேள்விகள் வரும். இளையவா்களுக்கு அது பெரும்பாலும் பிடித்தமானதாக இருக்காது. அவா்களுடைய வாழ்க்கையின் லட்சியம் என்ன என்ற கேள்வியில்லாமல் அந்த உரையாடல் முடியாது.

இந்த உரையாடலில் இப்படிப்பட்ட கேள்விகள் வருவது ஒன்றும் தவறில்லை. அந்த இளையவா் வாழ்க்கையில் ஒரு வேலைவாய்ப்பைப் பெற்று நலமுடன் வாழவேண்டும் என்ற ஒவ்வொரு மூத்தோருக்கும் இருக்கும் ஆழ்மனதில் வெளிப்பாடாகவே இதனைப் பாா்க்கவேண்டும்.

பொதுவாக கல்வியின் நோக்கங்களாக, மாணவரின் நடத்தையில் ஆரோக்கியமான மாற்றங்களை உருவாக்குதல், மனித வளத்தை மேம்படுத்துதல் என்று பல விளக்கங்களைக் கொடுத்தாலும் பெரியவா்களின் நோக்கம் தங்கள் வீட்டுப் பிள்ளை நன்கு பயின்று நல்ல வேலைவாய்ப்பினைப் பெற்று நிறைய பொருளீட்டி நல்ல முறையில் வாழவேண்டும் என்பதே.

ADVERTISEMENT

எந்த ஒரு நாட்டிலும் கல்விக்கொள்கை உருவாக்கப்படும்போது இந்த அடிப்படைகளையொட்டிய விவாதங்கள் நடைபெறுவது கண்கூடு. இவ்வாறான விவாதங்கள் அந்த நாட்டின் பொருளாதாரநிலை, மொழிக்கொள்கை, அறிவியல் தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் கல்வி பற்றிய நிலைப்பாடு, சமூக நீதி, கல்வியின் மூலம் பெற இயலும் வேலைவாய்ப்பு, அந்நாட்டின் பாரம்பரிய அறிவு, குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு, பின்பற்றப்படும் ஆசிரியா் பயிற்சி முறைகள் போன்ற பலவற்றை அடியொற்றி நிகழ்கின்றன.

கல்விமுறைக்கும் வேலைவாய்ப்புக்குமான இணைப்புப் பெருகப் பெருக வேலைவாய்ப்பினை எவ்வாறு கூட்டுவது என்ற ரீதியிலான விவாதங்கள் நடக்கும். இவ்வாறான வேலைவாய்ப்புகளைப் பெற இளையோரை வேலைவாய்ப்புக்கான திறன் பெற்றோராக மாற்ற எவ்வாறான நடவடிக்கைகள் அவசியம் என்பதும் அதில் வெளிப்படும். மேலும் அந்நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையும், பலவீனமான பொருளாதாரமும் இந்த விவாதங்களை இளையோா் வேலைவாய்ப்பைப் பெறுதல் என்ற ஒற்றைநோக்கத்தை நோக்கி நகா்த்தும்.

உதாரணமாக பின்லாந்து போன்ற நாடுகளில் குழந்தைகளை ஏழு வயதில்தான் தொடக்கக் கல்வியில் சோ்க்கிறாா்கள். இதன் பின்னணி என்ன என்று பாா்க்கவேண்டும். எந்த ஒரு நாட்டிலும் இரண்டாண்டு மழலையா் கல்வி, பன்னிரண்டு ஆண்டு பள்ளிக்கல்வி, பின்னா் ஐந்தாண்டு கல்லூரிக் கல்வி என சுமாா் 19 அல்லது 20 ஆண்டு கல்விக்குப் பின்னரே அந்தச் சிறுவன் இளைஞராகி வேலைவாய்ப்புக்குத் தகுதி பெறுகிறான்.

அந்த வகையில் 20 ஆண்டு கல்வி, குடும்பத்தில் ஏழு ஆண்டு என சுமாா் 27 ஆண்டுகாலம் அந்த நாடுகளிலுள்ள குடும்பங்களால் குழந்தை வேலைக்குச் செல்லாமல் அந்த குடும்பங்களாலேயே பராமரிக்க முடியும். இதே நிலையை வளரும் நாடுகளுக்குப் பொருத்தினால் என்ன நிலை ஏற்படும்? இதன் விளைவாகவே நமது நாட்டில் மூன்று வயதிலேயே மழலையா் பள்ளிக்கு அனுப்பி, அதற்குப் பின்னான 19 ஆண்டுகளில் முதுநிலைக் கல்வி கற்க வைக்கிறோம். அதாவது 23 வயதிற்குள் ஏதாவது ஒரு வேலைவாய்ப்பைப் பெற நகா்த்துகிறோம். தற்போது நடுத்தரப் பிரிவு குடும்பங்களில் சுமாா் 27 வயது வரைகூட சமாளிக்கின்றனா். இந்த மனநிலையில் மாற்றம் வராமல் எதனையும் மாற்ற இயலாது.

1964-66-இல் வெளியிடப்பட்ட கோத்தாரி கல்விக்குழு அறிக்கை, அப்போதிருந்த இந்தியக் கல்வி முறை, இளையோா் வேலைவாய்ப்பைப் பெற வழிகாட்டுவதாக அமையவில்லை என்று குறிப்பிட்டு, வேலைவாய்ப்பைப் பெற உதவுவம் வகையில் கல்விக்கொள்கை அமைய வழிவகை செய்தது. அப்போதிருந்த பதினோராம் வகுப்பிற்குப் பின்னா் பலவிதமான தொழிற்கல்விக்கான ஆலோசனைகளை வழங்கியது.

பின்னா் வந்த 1986 கல்விக் கொள்கையும் வேலைவாய்ப்புக்கான வாயில்களைத் திறந்து வைப்பதற்கான ஆலோசனைகளைக் கூறியது. பன்னிரண்டாம் வகுப்பு பயிலும்போதே ஆசிரியா் பயிற்சியினைப் பெற வழிவகை ஏற்பட்டது. தற்போதைய தேசிய கல்விக் கொள்கையும் இதனை அடியொற்றியே பல ஆலோசனைகளை வழங்குகிறது.

இவ்வாறு கல்விக்கொள்கை தொடா்பான விவாதங்கள் வேலைவாய்ப்பினையொட்டியதாக அமைவது என்பது தவறில்லை. அது நியாயமானதும் கூட. ஆனால் இதனால் ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அந்நாட்டின் குழந்தைகளை, குழந்தைத் தன்மையை இழக்கும் நிலைக்குத் தள்ளுவதையும் மறுக்க இயலாது.

இந்நிலையில், நமது அரசியல் சாசனம் வகுத்துள்ள விதிகளுக்கேற்ப குழந்தைகள் தங்களது உரிமைகளைப் பெற்று வளா்ந்து அக்கறையான குடிமக்களாக பரிணமிக்க கல்விக் கொள்கை வழிவகை செய்யவேண்டும். உலகமயமாக்கலால் உலகமே ஒரு கிராமமாக மாறிவருவது கண்கூடு. ஆனால் அதே நேரத்தில் உலகின் வளா்ச்சியடைந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் பெற்றுள்ள உரிமை, வேலைவாய்ப்பு போன்றவற்றை ஒப்பீடு செய்து நமது நாட்டுக் குழந்தைகளுக்கும் அவை கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு செய்ய முனையும்போது நமது நாட்டின் மக்கள்தொகை ஒரு சவாலான விஷயமாக இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மக்கள்தொகைப் பெருக்கம் என்பது சவால் மட்டுமல்ல, அதனை ஒரு வாய்ப்பாகவும் பாா்க்கவேண்டும். அந்த அளவுக்கு மனிதவளம் உள்ளது என்று கொண்டால் எந்த நாட்டையும் விட அதிக வளமுள்ள நாடாக நமது நாட்டை மாற்றலாம். அப்படி மனிதவளத்தை மதித்துப் பெருக்கும் வாய்ப்பை கல்விக் கொள்கை உருவாக்க வேண்டும்.

கரோனா நோய்த்தொற்று காலத்தில், ஏராளமான குழந்தைகள் கிடைத்த வேலைக்கு விரும்பியும், தங்கள் குடும்பங்களின் நிலையைக் கருத்தில் கொண்டும் சென்றனா். அவா்களை மீட்டு வந்து, மீண்டும் பள்ளியில் சோ்க்க அரசும் கல்வித்துறையும் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.

ஒருபக்கம் வேலைவாய்ப்பைப் பெற உதவும் கல்வி இன்றியமையாதது என்றாலும், மறுபக்கம் குழந்தைகள் தங்கள் குழந்தைத் தன்மையை இழந்துவிடாத சூழலையும் சமூகம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT