நடுப்பக்கக் கட்டுரைகள்

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை

29th Sep 2022 02:00 AM |  கிருங்கை சேதுபதி

ADVERTISEMENT

 நண்பர் ஒருவர், "என் மகனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் திருமணம். அழைப்பிதழ்கள் அச்சாகி விட்டன' என்றார். "மகிழ்ச்சி' என்றேன். "அதுதான் இல்லை' என்றார் சோகமாக.
 புரியவில்லை எனக்கு. அவர் தொடர்ந்தார். "ஒரே மகன். நிச்சயதார்த்தம் நடத்தினோம். மணப்பெண்ணும் பெற்றோருக்கு ஒரே மகள்தான். சந்தோஷமாக இருந்தது. திடீர்னு நேற்று மணப்பெண் போனில் கூப்பிட்டு "எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல. நிறுத்திருங்க அங்க்கிள்' னு சொல்லிடுச்சு'' என்றார்.
 நான் அவரிடம், "இதுவொன்றும் புதிதில்லை. நட்பும் உறவும் நிறைந்திருக்கும் திருமண மண்டபத்திலேயே இப்படித் திடீரென்று நின்றுபோகிற நிகழ்வுகள் பல. அக்கினி சாட்சியாக நிகழ்ந்தேறிய திருமணங்கள், சட்டத்தின் முன்னிலையில் பிரிந்துபோவதும் இப்போது வெகு இயல்பு. ஒருவகையில் நல்லதுதான். திருமணம் முடிந்து பிரிவதைவிட, இது பரவாயில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்' என்றேன்.
 ஆறுதலாகச் சொன்னதைக் கேட்டாலும் இந்த வேதனை அவர்கள் ஆயுட்காலம் வரைக்கும் இருக்கவே செய்யும். அவர்கள் முன்பெல்லாம் சிலராக இருந்தார்கள்; இப்போது பலர்.
 அவர், "நிச்சயதார்த்தத்துக்குப் பின்னால, பொண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கிட்டாங்க; பார்த்துக்கிட்டாங்க. நல்லாத்தான் இருந்தாங்க. யாரு கண்ணு பட்டிருச்சோ? அவனோட அம்மாவைத்தான் தேற்ற முடியலே. எம் மவனுக்கு என்ன குறைச்சல்னு அழுதுகிட்டே இருக்காங்க' என்றார்.
 "மூத்த தலைமுறைக்கு அழவாவது தெரிகிறது. இப்போதைய தலைமுறைக்கு அதுகூடப் பழக்கமில்லை. பின்னாலே அழுவதற்கு முன்னாலே அழுதுவிடுவது நல்லது என்று புரிய வையுங்கள்' என்றேன்.
 "என்ன பண்றதுன்னு தெரியல்லே. ஏன் இப்படியெல்லாம் நடக்குது? பிள்ளைங்களை ரொம்பப் படிக்க வச்சது தப்போ?' என வினவினார்.
 படிப்புக்கும் அறிவுக்கும் இடைவெளி இருப்பதுபோல, அறிவுக்கும் உணர்ச்சிக்கும் அதிக இடைவெளி வந்திருக்கிறது. மலரினும் மெல்லிய காம உணர்வு நெறிபிறழ்ந்திருக்கிறது. குடும்ப அமைப்பு சுமையென்று இளந்தலைமுறையினர் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
 மோகம் முப்பதுநாள். ஆசை அறுபது நாளெல்லாம் அந்தக் காலம். அதெல்லாம் இப்போது மணிக்கணக்கில் என்றாகிவிட்டது. படக்கென்று மனம் மாறிவிடுகிறது. வாழ்க்கை முறை மாறிவிடுகிறது. பழமையில் ஊறிப்போன நமக்குத்தான் இது புதிதாக இருக்கிறது. எதையும் எளிதாகப் பார்க்கவும் விலக்கவும் இவர்கள் பழகிவிட்டார்கள். இப்போக்கு ஆரோக்கியமானது இல்லை என்பதைக்கூட இவர்கள் நினைக்கத் தயாராக இல்லை.
 ஆயிரங்காலத்துப் பயிரான திருமணம் இப்போது அடிக்கடி நடைபெறும் மரக்கன்று நடுகிற விழாவாக ஆகிக் கொண்டு வருகிறது. வைக்கிற கணத்தில் அதன்பால் காட்டுகிற அக்கறையையும் ஈடுபாட்டையும் வளர்கிற போது அதன்மீது செலுத்துவதில்லை. மண்ணில் வேர் இறங்காமல், மரம்போல இட்டுநட்டு வைப்பதில் என்ன பயன் வந்துவிடக் கூடும்?
 ஆயினும் நம்பிக்கை தளராமல் இருக்கப் பழக்கமாகிப் போன ஒரு சமாதானத் தொடரை அவர் காதில் போட்டேன்: "காலப்போக்கிலே எல்லாமும் சரியாகிவிடும்'. அவர், "காலம் போகுதே சார். காலாகாலத்தில் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய வேண்டாமா' என்று கேட்டார்.
 பெற்றோருக்கு இருக்கிற கடமை மாதிரி, பிள்ளைகளுக்கும் கடமையிருக்கிறது என்பதை எப்படி அவர்களுக்குப் புரிய வைப்பது? வாழ்வதற்குப் பொருள் தேடுவதையே இலக்காகக் கொண்டு, வாழ்வின் பொருளை இழக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
 "எல்லாம் தலைமுறை இடைவெளி' என்றேன். "இனி, எங்கள் தலைமுறை தொடருமா என்பதே சந்தேகமாயிருக்கு' என்றார்.
 இந்தச் சோகம் இன்றைக்குப் பல பெரியவர்களைப் பீடித்திருக்கிறது. வாழையடி வாழையென மனித குலம் தழைப்பதற்குத் திருமணம்தான் வழி. ஆனால், இன்றைக்குப் பலபேர் திருமணம் எதற்கு என்று கேட்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள். இணைவிழைவீச்சு ஒன்று மட்டும்தானா திருமணத்தின் இலக்கு? அதற்கும் அப்பால் உணர்ந்துகொள்ளவேண்டிய பல அற்புதத் துய்ப்புகள் இருக்கின்றன என்பதை எப்படிப் புரியவைப்பது?
 விடுதியில் கிடைப்பதும் உணவுதான்; வீட்டில் சமைப்பதும் உணவுதான். முன்னதில் இல்லாத அன்பும் ஆசையும் பின்னதில் இருக்கிறதே. இது உணவு விஷயத்தில் மட்டுமல்ல; உணர்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தத் தவறிவிட்டோம்.
 குடும்பம் என்பது சட்டம் போட்டு நடத்துகிற நிர்வாகம் இல்லை; திட்டம் இட்டு நடத்துகிற வணிகமும் இல்லை; கஷ்டமோ, நஷ்டமோ ஆணும் பெண்ணும் இணைந்து இஷ்டப்பட்டு இயங்க வேண்டிய வாழ்வியல்முறை. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, உரிமையும் உணர்ச்சியும் செலுத்தித் துய்க்க வேண்டிய அனுபவம்.
 ஆனால், இன்றைய தலைமுறைக்குக் குடும்பம் என்கிற கட்டமைப்பின் பாதுகாப்பை, அதன் அருமையை உணர்ந்துகொள்ள அவகாசம் இல்லை. அன்பின் ருசியை, பிற சாதனங்களின் நுகர்வு சிதைத்து வருகிறது. காதலின் மேன்மையையும் கடமையின் சிறப்பினையும் அனுபவிக்கத் தெரியவில்லை.
 இன்பம், துன்பம் இரண்டும் போக, மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் இடைப்பட்டு நிற்குமே, அந்த அன்பின் சுவை அனுபவித்தால்தான் தெரியும். இதனை இலக்கியம் தவிர, வேறு எந்தப் படிப்பால் சொல்லிக் கொடுக்க முடியும்? பாடப் புத்தகம் தாண்டிப் படிப்பதற்கு நாம் என்ன சொல்லிக் கொடுத்தோம்? வகுப்பறை தாண்டி வாழ்வியல் நிலையில் அவர்கள் கண்ட அனுபவக் காட்சிகள் எவை?
 "கஷ்டப்படாம இருக்கணும்கிறதுக்காக, பெத்த பிள்ளையைக் கூடக் கொஞ்சறத்துக்கு நேரம் இல்லாம, வேலை, சம்பாத்தியம்னு நானும் அவளும் ஓடியாடிச் சம்பாதிச்சதெல்லாம் யாருக்காக? எதுக்காக? வயசான காலத்திலே பேரன் பேத்தியோட சந்தோஷமா இருக்கத் தானே? அது தெரியலியே, இந்தப் பிள்ளைகளுக்கு' முதுமையின் அயர்ச்சி எதிரொலித்தது அவர் குரலில்.
 இது காலம் கடந்து வரும் ஞானம். வசதிகள் செய்து கொடுத்த அளவிற்கு, நம் பிள்ளைகளுக்கு வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லிக் கொடுக்கத் தவறிவிட்டோம். குடும்ப உறவுகளுக்கு முன்னோடியாகப் பெற்றோரைக் கருத வேண்டிய பிள்ளைகள் மற்றவர்களைக் கருதிவிட்டார்கள்.
 எல்லைமீறி, நம் வாழ்க்கையில் ஊடகச் சித்திரங்கள் பதிவாகிவிட்டன. அவையே உண்மை என்று நம்பத் தொடங்கிய தலைமுறை போய், தாம் நடப்பதை ஊடகங்களில் சித்திரப்படுத்தி உலாவரச் செய்ய வேண்டும் என்கிற அளவிற்கு அதன்பால் அபரிமிதமான ஆசை வளர்ந்துவருகிறது.
 இப்பொழுதெல்லாம் திருமண நிகழ்வுகள் திரைப்பதிவுக் காட்சிகள் போல் அல்லவா நடைபெறுகின்றன. கணவன் - மனைவியாக வேண்டிய மணமக்கள் காட்சிப் பொருள்களாக ஆகிவிட்டார்கள். "அந்தக் கல்யாண வீட்டில் அப்படி', "இந்தக் கல்யாண வீட்டில் இப்படி' என்று அடுத்தவர்களைப் பார்த்துப் பார்த்துப் போலச் செய்து பழகியதன் அபரிமிதப் போக்கு, இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது.
 எல்லாவற்றையும் பிறரைப் பார்த்துச் செய்யப் பழகிய பிறகு, தனக்கென்ற தனித்துவமான சிந்தனையும் தன் குடும்பப் பாரம்பரியப் பெருமையும் இருக்கிறது என்பது எப்படிப் புரிபடும்? புரிய வைக்க நாம் என்ன செய்தோம்?
 இன்றைய தலைமுறையினர் எதையும் சுலபமாக எடுத்தெறிந்து விடுகிறார்கள்; எறிந்துவிட வேண்டியவற்றைக் கொண்டாடிக் கூத்தடிக்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. நல்லது, கெட்டது, சரி, தவறு எதுவும் புரியவில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது கூட இப்போது இல்லை.
 இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியவில்லை. கருவிகளைக் கையாளத் தெரிந்த அளவிற்கு மெல்லிய உணர்வுகளைக் கூட உணர, வெளிப்படுத்த முடியாதவர்களாக ஆகிவிட்டார்கள். கருவிகளுடனேயே காலத்தைப் போக்கிக் கருவிகளாகவே ஆகியும் விட்டார்கள்.
 இது இப்போது தனிநபர் பிரச்னையில்லை; சமூக பிரச்னை. வரதட்சணைக் கொடுமையைவிட, வளர்ந்துவரும் பிரச்னை.
 நிச்சயித்த திருமணம் இருக்கட்டும். இப்போது தாமே விரும்பிப் பிள்ளைகள் செய்துகொள்ளுகிற திருமணங்களின் முடிவும் இப்படித்தானே ஆகிவருகின்றன. இதற்கெல்லாம் யார் காரணம் என்று தேடுவதைவிடவும் அவரவரும் சுயமாகச் சிந்தித்து நல்லதொரு முடிவு எடுப்பதே நல்லது.
 தன் பணியிலோ, தன் பணியைச் செய்யும் கருவியிலோ ஏற்படும் சிக்கல்களை விடுத்துச் சீர்செய்யத் தெரிந்த இந்தத் தலைமுறையினர்க்குத் தன் வாழ்வின் சிக்கல்களை அடையாளம் கண்டு அவற்றிலிருந்து காயம் படாமல் விடுவிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உடல் நலக் குறைவுக்காக மருத்துவரை அணுகுவதைப்போல, இதுபோன்ற உளச் சிக்கல்களுக்கும் மருத்துவர்களை அணுகுவது நல்லது.
 அதற்குமுன்னதாக, பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவதும் உரிமைக்கு உற்ற தோழர்களிடம் மனங்கலந்து பேசுவதும்கூட நல்லது. எத்தனையோ பொறுப்புகளை வகித்துத் திறம்படச் செய்துவரும் நமக்கு இதுவும் ஒரு இன்றியமையாத பொறுப்பு என்பது தெரிய வேண்டும் அல்லவா?
 இது குறித்த அறிவுரையையோ, ஆலோசனையையோ கேட்க இளைய தலைமுறையின் வாழ்க்கைமுறையும், இளமைத் துடிப்பும் இடம் கொடுக்காது என்பது தெரியும். ஆனால், இந்த நிலை இப்படியே நீடித்தால் தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை இயற்கைநியதியோடு எண்ணிப் பார்த்து நல்ல முடிவெடுப்பதும் செயற்படுத்துவதும் நல்லது. அதற்காகவாவது அவர்களுக்குள்ளே ஓர் அமைப்பை நிறுவிச் செயற்படுத்துவது காலத்தின் தேவை என்று சொல்லத் தோன்றுகிறது.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT