நடுப்பக்கக் கட்டுரைகள்

நாட்டுப்பற்றும் பாடத்திட்டமும்

டி.எஸ். தியாகராசன்

அண்மையில் நமது நாடு தனது 76-ஆவது ஆண்டு சுதந்திர நாளை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது. நாடே சுதந்திர இந்தியாவின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்த வேளையில், தாய்மண்ணிலும் மேலானது தங்கள் மதம் என்கிற உணர்வுடன் சிலர் நடந்து கொண்டது அவர்களது அறியாமையைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் தலைமையாசிரியை தேசியக் கொடியை ஏற்றி வணக்கம் செய்திட மறுத்துள்ளார். அதற்கு அவர் கூறிய விளக்கம் எவ்வளவு விபரீதமானது என்பதை நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை.
"எங்கள் மத வழக்கப்படி தேவனைத் தவிர வேறு எதனையும் வணங்கக் கூடாது' என்பது அவர் வாதம். உத்தர பிரதேசத்தில் ஒருவர் ஆகஸ்ட் 15 அன்று, தனது வீட்டின் உச்சியில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி மகிழ்ந்தார். இருவரும் அவரவர் சார்ந்த மதத்தை முன்னிறுத்தி தாம் வாழும் தாய்நாட்டை மறந்துள்ளனர் அல்லது மறுத்துள்ளனர்.
மகாகவி பாரதியார்,
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனைகூறி மனத்தில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
என்று பாடுவார். ஆனால் இவர்கள் நாமிருக்கும் நாடு நமது என்பதை அறியாமல், இது நமக்கே உரிமையாம் என்பது புரியாமல் தத்தம் மத உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
"தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்' என்று அழைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள தலைமையாசிரியரே "தேசியக் கொடியை நான் வணங்கேன்' என்றால் எங்கே தவறு நிகழ்ந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை.
பொதுவாக ஒரு நாட்டின் கடந்த காலப் புகழை, நிகழ்கால, வருங்கால சந்ததிகளுக்கு சொன்னால் சொல்லுபவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் பெருமிதம் உண்டாகும். நாட்டின் வீர புருஷர்களின் கடந்த கால வீரதீர செயல்களை, தியாகங்களை, வெற்றிகளை பாடப்புத்தகங்களில் இணைத்து படிக்கவும், பயிற்சி பெறவும் பழக்கியிருந்தால் தாய்நாட்டுப் பற்றும் பாசமும் மேலோங்கி இருக்கும்.
உலகின் பல நாடுகள், குறிப்பாக நம் நாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் தமது நாட்டை ஒரு காலத்தில் ரோமனியா பேரரசன் ஜூலியஸ் சீசர் அடிமைப்படுத்தியதை பிரிட்டனின் பாட நூல்களில் குறிப்பிடுவது இல்லை. மாறாக ஆங்கிலேயர்கள் உலகில் வென்ற நாடுகளின் பட்டியலைப் பெருமையோடு பாடம் நடத்துவார்கள். சூரியன் அஸ்தமிக்காத நாடு இங்கிலாந்து என்பதைப் பாடமாக வைத்திருப்பார்கள்.
"நெடும்பயணம்' நடத்தி சீனாவின் மன்னர் ஆட்சியை அகற்றிய மா சேதுங், சீனாவில் பொதுவுடைமை ஆட்சியை அமைத்த பிறகும் அதற்கு முன்னரும் கூட மங்கோலியர்கள் சீனாவை வென்றதையும், செங்கிஸ்கானுக்கு பயந்து பெருஞ்சுவரை கட்டிய வரலாற்றையும் போதிப்பதில்லை. அமெரிக்க வல்லரசை மிரள வைக்கும் அணு ஆயுத உற்பத்தி வல்லமை மிகு ராணுவ பலத்தைத்தான் பாடமாக புகட்டுகின்றனர்.
அமெரிக்காகூட ஒரு காலத்தில் ஆங்கில அரசின் பிடியில் சிக்குண்டு இருந்ததை அதிகம் சொல்லாமல், சுதந்திரம் வேண்டி போரில் வென்ற ஜார்ஜ் வாஷிங்டனின் வீரத்தை காட்சிப்படுத்துகிறார்கள். அதிலிருந்துதான் நவீன அமெரிக்க வரலாறே தொடங்கும்.
ஆனால் நமது இந்தியாவில் அப்படியல்ல. அன்றைய "இந்திரபிரஸ்தம்' என்ற பெயர் கொண்ட இன்றைய தில்லியை அடிமை வம்ச அரசன் கைப்பற்றினான். தான் தந்திரமாக பெற்ற வெற்றியைக் கொண்டாட அவன் நிறுவிய குதுப் மினார் ஸ்தூபி குறித்த செய்தி பரவசம் கொள்ளும் வகையில் நம் பாடநூல்களில் இடம்பெறுகிறது.
அதே பகுதியில் நான்காம் நூற்றாண்டில் இரண்டாம் சந்திரகுப்தர் எழுப்பிய எட்டு டன் எடையுள்ள இரும்புத் தூண் இன்று வரை துருப்பிடிக்காமல் இருக்கும் விந்தை குறித்த விரிவான வரலாறு நமது பள்ளி மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுவதில்லை.
தனது சின்னஞ்சிறு நாட்டை வென்று அடிமைப்படுத்த முயன்ற மொகலாய மன்னர் அக்பரால் போரில் வெல்ல முடியாதவர் ராஜபுத்திர அரசர் மேவார் நாட்டு ராணா பிரதாப் சிங். ஒரு சந்தர்ப்பத்தில் சில ஆண்டுகள் தாவர உணவை மட்டுமே உண்டு காட்டில் இருந்தபடியே காட்டிற்கு வெளியே இருந்த தேசப்பற்று மிகுந்த இளைஞர்களைத் திரட்டி போரிட்டவர்.
தன் வம்சத்தைச் சேர்ந்த ராஜா மான் சிங், அக்பரோடு இணைந்து போரிட்டும்கூட வெல்ல முடியாத தாய் நாட்டுப் பற்றாளர். அவர் தாய் மண்ணை நேசித்த பண்பை, வீரத்தை நம் நாட்டுக் குழந்தைகளுக்கு போதித்திருந்தால் பாரதம் இப்போதும் அடிமைத்தன சிந்தனையுடன் தொடர்ந்திருக்காது.
அல்ஜீரியா, ஆர்மீனியா, ஜோர்டான், சைப்ரஸ், எகிப்து, ஜார்ஜியா, ஈரான், இராக், இஸ்ரேல், கஜகஸ்தான் போன்ற 36 நாடுகளைத் தன் வசம் வைத்திருந்த அரசன் முகமது பின் காசிம் கி.பி. 715-இல் ஒரு லட்சம் வீரர்களோடு சிரியாவிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தான். அவனது படையில் இருந்த ஒவ்வொரு வீரனும் நான்கு காட்டெருமை பலத்திற்கு ஈடானவர்கள் என்று வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய ஆற்றல் வாய்ந்த பெரும் படையை வெறும் 40 ஆயிரம் வீரர்களைக் கொண்ட ராஜபுத்திர மன்னர் பப்பா ராவல் தோற்கடித்தார்.
அவர் தனது வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒரு நகரை உருவாக்கினார். அந்த நகரம் தான் இன்றைக்கு பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி. அவர் தோற்றுவித்த அரச வம்சம் சுமார் 500 ஆண்டுகள் நீடித்து இருந்தது. அவரது பெயரையோ, அவர் நடத்திய வெற்றிப் போரையோ பாரத நாட்டு மாணவர்கள் இன்றுவரை அறிந்திருக்கவில்லை.
உலகின் முதல் கடற்படையைக் கொண்டிருந்த பேரரசன் இராஜேந்திர சோழன் ஒன்பது லட்சம் போர் வீரர் படையை தன் வசம் வைத்திருந்த வரலாறு தமிழகத்துக்கு வெளியே பரவலாகத் தெரியாது. "விக்ராந்த்' விமானம் தாங்கிப் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டபோதுதான், இந்தியாவின் ஏனைய பகுதியினர் இராஜேந்திர சோழன் குறித்துத் தெரிந்து கொண்டனர்.
உலகில் முதல் முதலில் ஆற்று நீரைத் தேக்கி அணைகட்டி பாசனம் செய்து நீர் மேலாண்மையை அறிமுகப்படுத்திய கரிகால் சோழனை இந்தியாவில் வரலாற்றுப் பாடமாக போதிக்கிறோமா என்றால் இல்லை. ஏனென்றால், நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷார் அதை மறைத்து விட்டனர். சுதந்திரம் அடைந்தும் நாம் அதை எடுத்துச் சொல்லத் தவறிவிட்டோம்.
மொகலாய, சுல்தானியப் பெரும் படைகளை, குறைந்த அளவிலான படையைக் கொண்டு நிர்மூலமாக்கிய மராட்டிய வீர சிவாஜி குறித்து மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. நமது இளைஞர்களுக்கு வீரம் ததும்பும் தேசபக்த சாகசச் செயல்களை போதிக்க மறந்து விட்டோம்.
இறந்த பின்னரும் தன் கையில் பிடித்து இருந்த இந்திய தேசிய மூவண்ணக் கொடியை எடுக்க இயலாத நிலையில் சடலமாக விழுந்த திருப்பூர் குமரன் பற்றி அறியாத பாரதத்தவர் இன்னும் பல கோடி பேர் உள்ளனர்.
"இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பில் சுவாமி விவேகானந்தர் சென்னையில் 1897 பிப்ரவரி 14-ஆம் நாள் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர், "தற்போதைய கல்வியில் சில நன்மைகள் இருக்கின்றன. அதைவிட அதிகமாக தீமைகள் இருக்கின்றன. அதிகமாக இருக்கும் தீமைகள், குறைவாக இருக்கும் நன்மையை மறைக்கின்றன.
முதலாவதாக, இது மனிதனை உருவாக்குவதற்குரிய கல்வி அல்ல. முழுக்க முழுக்க எதிர்மறையான கல்வி. எதிர்மறை உணர்ச்சியை உண்டு பண்ணும் எந்தப் பயிற்சியும் மரணத்தை விடக் கொடியது. சுய சிந்தனையுள்ள, தனித்தன்மை வாய்ந்தவனாக இங்கு இருக்கும் ஒவ்வொருவனும், இந்த நாட்டில் படித்தவனாக இல்லாமல் வேறு எங்கோ கல்வி கற்றவனாக இருக்கிறான்' என்று சாடினார்.
மகாத்மா காந்தி "சுவாமி விவேகானந்தர் நூல்களை நான் மிகவும் ஆழ்ந்து படித்து இருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு இந்தியாவின் மீது இருந்த என் தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று' என்று கூறினார்.
பண்டித நேரு "சுவாமி விவேகானந்தர் சாதாரணமாக நாம் நினைக்கும் பொருளில் உள்ள ஓர் அரசியல்வாதி அல்ல. அவர் புதிய இந்தியாவின் தேசிய இயக்கத்தை ஆரம்பித்த முன்னோடிகளில் ஒருவர் என்பதில் ஐயமில்லை' என்றார்.
அம்பேத்கர் "நம் நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் சுவாமி விவேகானந்தர். அவரிடமிருந்தே புதிய இந்தியா தொடங்குகிறது' என்றார்.
மூதறிஞர் ராஜாஜி "நாம் இந்தியாவின் சமீபகால வரலாற்றை நோக்குவோமானால் நாம் எந்த அளவுக்கு சுவாமி விவேகானந்தருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பது தெளிவாக தெரியும். இந்தியாவின் உண்மையான மகத்துவத்தைப் பார்ப்பதற்கு அவர் நமது கண்களைத் திறந்து வைத்தார். அவர் அரசியலை ஆன்மிகப்படுத்தினார். இந்தியாவின் சுதந்திரம், அரசியல், கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றின் தந்தை அவர்' என்றார்.
திலகர், தான் நடத்தி வந்த "மராட்டா' என்ற ஆங்கில இதழில் "இந்திய தேசியத்தின் உண்மையான தந்தை சுவாமி விவேகானந்தர்தான்' என்று எழுதினார்.
நாட்டின் விடுதலைக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும், தொல் சமயத்திற்கும், பாரதத்தின் நீண்ட நெடிய பண்பாட்டு விழுமியங்களுக்கும் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய தொண்டு அளப்பரியது. ஆனால் அரசுப் பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் அவரது முழு பிம்பத்தை இன்று வரை காட்டிடவில்லை.
1947-க்குப் பிறகு கல்விக்கூடங்களின் பாடத்திட்டங்களில் பாரதத்தின் முன்னைய நாளின் வீர, தீர மன்னர்கள், தாய் மண்ணைக் காக்க போராடிய வீர புருஷர்கள், வந்தேறிய பகையாளர்களை உயிர் உள்ள வரை எதிர்த்து நின்ற வணங்காமுடியரசர்களை, விஞ்ஞான, மெய்ஞ்ஞான நுட்பங்களைக் கற்றறிந்த முன்னோர்களை அடையாளம் காட்டி இளைஞர்களை உருவாக்க நாம் தவறிவிட்டோம்.

கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT