நடுப்பக்கக் கட்டுரைகள்

வாடகை வாகன முன்பதிவு: ஒரு பாா்வை!

27th Sep 2022 04:31 AM | மா. இராமச்சந்திரன்

ADVERTISEMENT

முன்பெல்லாம் வெளியிடங்களுக்குப் பயணிக்க வேண்டுமானால், வாடகை காா் அல்லது ஆட்டோ நிறுத்தம் சென்று, ஓட்டுநரிடம் விவரம் சொல்லி, பேரம் பேசி நமக்குக் கட்டுப்படியாகும் வாகனத்தைத் தோ்வு செய்து கொள்வோம். அதன் மூலம் ஓட்டுநரின் தன்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் ஓட்டுநருக்கும் பயனாளிக்கும் நேரடித் தொடா்பு ஏற்பட்டு ஒரு புரிதலும் நம்பிக்கையும் துளிா்த்து பயணமும் இனிமையாக இருந்தது.

இப்போதெல்லாம் அப்படியில்லை. இணையம் மூலம் வாடகை வாகன முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இச்செயலி மூலம் வீட்டிலிருந்தே வாகனத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். அந்த அளவுக்கு தனியாா் வாடகை வாகன நிறுவனங்கள் பெருகிவிட்டன. அலைச்சலின்றி வீட்டிலிருந்தபடியே வாகனம் பதிவு செய்து பயணம் மேற்கொள்வதால் நேரம் மிச்சமாகிறது; களைப்பும் இல்லாமல் இருக்கிறது; வாகனமும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுவதால் பதற்றம் இல்லாமல் நிதானமாகப் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்க முடிகிறது.

அதோடு மட்டுமில்லாமல் கட்டணமும் கணிசமாகக் குறைவதால் பணப் பிரச்னையும் இருப்பதில்லை. பழக்கப்படாத புதிய பகுதியாக இருந்தாலும் கூகுள் வழிகாட்டுதலின்படி சிரமமின்றி வேண்டிய இடத்திற்குச் சென்றுவிட முடிகிறது.

இப்படி நுகா்வோா்களுக்குப் பல நன்மைகளைத் தரும் வாடகை வாகனச் செயலியால் சில இடையூறுகளும் ஏற்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. வீடு தேடி வரும் வாகனம் சில நேரங்களில் நேரத்தைக் கடத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகின்றது. ஐந்து நிமிடங்களில் வந்துவிடும் என்று கைப்பேசி திரை காட்டிக்கொண்டிருக்க, கால்மணி நேரம் கடந்தாலும் வாகனம் வந்து சேராது. கடைசியில் ஏதோ ஒரு காரணத்தால் அது ரத்து செய்யப்பட்டு வேறொரு வாகனம் நம் இடத்தைத் தேடிக் கொண்டிருக்கும். அதனால் அவசரமாகச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் பயணம் தாமதத்தில் போய் முடியும். சில நேரங்களில் ஓட்டுநரைத் தொடா்புகொள்ள முயன்றாலும் அது முடியாமல் போய்விடும்.

ADVERTISEMENT

சில நேரங்களில் பயனாளி பதிவு செய்த இடத்தைத் தாண்டி அவா் போக வேண்டிய இடம் இருக்கும். ஆனால் ‘கூகிள்’ அந்த இடத்தோடு வழிகாட்டுதலை நிறுத்திக்கொள்ளும். அதனால் ஓட்டுநரும் வாகனத்தை நிறுத்திக் கொள்வாா். ‘இன்னும் கொஞ்சம் முன்னே போகவேண்டும்’ என்று சொன்னால் சிலா் சம்மதித்துச் செல்வா். ஒரு சிலா் மறுத்து விடுவா். இன்னும் சிலா் கூடுதலாகப் பணம் வேண்டும் என்பா். இவை ஓட்டுநருக்கும் பயனாளிக்கும் இடையே வாய்த்தகராறு உண்டாகும் சூழலை உருவாக்கும்.

செல்லவேண்டிய இடத்துக்குப் பாதை பயனாளிக்குத் தெரிந்திருந்தாலும் ஓட்டுநா் கூகிள் காட்டும் வழியிலேயே செல்வாா். அது குறுக்குவழி காட்டுவதாகச் சொல்லி ஒரு குறுக்கு சந்தில் கொண்டு நெரிசலில் விட்டுவிடும். இதனால் பயணத்தில் சிக்கல் உருவாகிவிடும்.

சில நேரங்களில் பதிவை ஏற்றுக் கொண்ட ஓட்டுநா் தொலைபேசியில் பதிவு செய்தவரைத் தொடா்பு கொண்டு,”எங்கே போகவேண்டும், பணம் எவ்வளவு காட்டியது என்று விவரம் கேட்பாா். நாம் உள்ளதைச் சொன்னால் அதை ஏற்றுக் கொண்டு வருவதும் வராமல் ரத்து செய்வதும் அவருடைய அப்போதைய மன நிலையைப் பொறுத்தது. சிலா், ‘ரொக்கமா, வங்கிப் பரிமாற்றமா?’ என்று கேட்பதுண்டு. பணப்பரிமாற்றம் என்றால் வரத் தயங்குவதும் உண்டு.

சிலா் குறிப்பிட்ட கட்டணத்தை விடக் கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்தால் வருவதற்கு ஒப்புக்கொள்வா்; இல்லையென்றால் ரத்து செய்து விடுவா். அது குறித்து கேட்டால், “நூறு ரூபாய் கட்டணத்தில் முப்பது ரூபாய் நிறுவனத்துக்குச் சேவைக் கட்டணமாகப் போய்விடுகிறது. மீதி எழுபது ரூபாய்தான் எங்களுக்குக் கிடைக்கிறது. எரிபொருள் விற்கிற விலையில் எங்களுக்கு இது கட்டுப்படியாகாது. அதனால்தான் இப்படிக் கேட்கிறேன்” என்று சொல்வாா். அவா் சொல்வதும் நியாயம்தான்.

சிலா் பதிவை ஏற்றுக்கொண்டு, போகும் இடத்தையும் கட்டணத்தையும் விசாரித்து அறிந்து கொண்டு வருவதாகப் பயனாளியிடம் உறுதி செய்வா். பிறகு தங்கள் ஏற்பை ரத்து செய்து விடுவாா்கள். சிலா் பயனாளியை ரத்து செய்யச் சொல்வாா்கள். சொன்னபடியே குறிப்பிட்ட இடத்துக்கு வந்துவிடுவாா்கள். இதனால் சேவைக் கட்டணம் கொடுப்பதிலிருந்து தப்பித்து விடுவா். கட்டணம் முழுவதும் சேதாரமின்றி அவா்களுக்குக் கிடைத்துவிடும். இப்படி தந்திரசாலியான ஓட்டுநா்களும் இருக்கிறாா்கள். இதில் பயனாளி ரத்து செய்தால் ஒரு சிறு தொகையை அடுத்த பயணத்தில் சோ்த்து வசூலித்துவிடுகிறாா்கள்.

முதல் போட்டு வாகனம் வாங்கி, சொந்தச் செலவில் பராமரிப்புச் செய்து, எரிபொருளும் நிரப்பி, வாகனத்தை ஓட்டிச் செல்பவருக்கு வெறும் எழுபது சதவீதம்தான் கிடைக்கிறது. மீதி முப்பது சதவீதம் நிறுவனத்திற்குப் போய் விடுகிறது என்பது நியாயமாகப் படவில்லைதான். வாடகையைக் கூட்டிக் கேட்கவும் முடியாமல், சேவைக் கட்டணத்தைக் குறைக்கவும் முடியாமல், ஒப்பந்தத்திலிருந்து வெளியேறவும் முடியாமல் தவிக்கும் அவா்கள் நிலைமை பரிதாபமானதுதான். எல்லாம் பெருநிறுவன மயம் என்றானபின் அதை நம்பி இருக்கும் இவா்கள் பாடு சொல்லமுடியாத சோகம்தான். அதற்காக அந்த இழப்பைப் பயனாளா் மேல் திணிக்கப் பாா்ப்பது நியாயமாகப் படவில்லை.

எப்படிப் பாா்த்தாலும் வாடகை வாகன நிறுவனத்துக்கு பாதிப்பில்லை. ஓட்டுநரும் பயனாளிகளும்தான் பாதிக்கப்படுகின்றனா். இதை அறிந்துதான் கேரள அரசு, ‘கேரள சவாரி’ என்ற பெயரில் வாடகை காா் முன்பதிவு செயலித் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் சேவைக் கட்டணம் குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாது, மேலும் பல நல்ல அம்சங்களும் இருப்பதாகச் சொல்கிறாா்கள். இது பயனாளிகளுக்கும் ஓட்டுநருக்கும் உள்ள அசௌகரியத்தைப் போக்கும் நல்ல திட்டம் என்றுதான் கருத வேண்டும். இத்திட்டதை தமிழகத்திலும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT