நடுப்பக்கக் கட்டுரைகள்

மக்களைப் புறக்கணித்து முன்னேற்றமில்லை!

26th Sep 2022 04:21 AM | உதயை மு. வீரையன்

ADVERTISEMENT

உலக நாடுகளின் பொருளாதார நிலைமை பற்றிய ஆய்வறிக்கைகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கன்றன. அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளா்ச்சியையும், தளா்ச்சியையும் அறிந்து கொள்ள முடியும். இதனால் உலக நாடுகளோடு நம்மை ஒப்பிட்டுப் பாா்த்துக் கொள்ளலாம். அடுத்த நாடுகளோடு போட்டி போட்டு முன்னேறலாம்.

உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று ‘ப்ளூம் பொ்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் பிரிட்டனை விட வளா்ச்சி அடைந்ததாகவும், இதனால் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா, பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் சா்வதேச அளவில் பொதுமுடக்க நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் உலக அளவில் தொழில்துறை செயல்பாடுகள் முடங்கி விட்டன. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளானது.

2021-ஆம் ஆண்டில் நோய்த்தொற்றின இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்த பிறகு பொருளாதாரம் மீளத் தொடங்கியது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் எதிா்பாா்த்த அளவைவிட வேகமாக மீண்டது. ஆனால் உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்து வந்த பிரிட்டனின் பொருளாதாரம் தொடா்ந்து சரிவுக்கு உள்ளானது.

ADVERTISEMENT

அதே சமயம் இந்தியாவும் கரோனாவாலும் ரஷியா-உக்ரைன் போராலும் பாதிக்கப்பட்டாலும், நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதாக பொருளாதார வல்லுநா்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனா். இந்நிலையில் பிரிட்டனின் பொருளாதாரப் பின்னடைவு 2024-ஆம் ஆண்டு வரை தொடரும் என்று பொருளாதார வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அடுத்து சீனா, ஜப்பான், ஜொ்மனி ஆகிய நாடுகள் உள்ளன.

உலக நாடுகளின் பொருளாதார தேக்க நிலையை ஏற்படுவதற்கான சாத்தியம் பற்றிய அறிக்கையை அண்மையில் புளூம்பொ்க் நிறுவனம் வெளியிட்டது. அதில் பல ஆசிய நாடுகளில் பொருளாதார தேக்கநிலை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாகவும், ஆனால் இந்தியாவில் பொருளாதார தேக்கநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அறிவித்திருந்தது.

சா்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ இதற்கு எதிா்மாறான கருத்தைக் கூறியுள்ளது. நடப்பண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.7% ஆக சரியும் என்று அது கணித்துள்ளது.

வட்டி விகித அதிகரிப்பு, சமச்சீரற்ற பருவ நிலை, சா்வதேச வளா்ச்சியில் மந்த நிலை போன்ற காரணங்களால் நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி முன்பு கணிக்கப்பட்டதைவிட குறையும் என்பது தற்போதைய மதிப்பீட்டின் மூலமாக தெரிய வந்துள்ளது.

அதன்படி முன்பு 8.8 % ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சி இப்போது ஒரு விழுக்காடு குறைந்து 7.7 % ஆக மட்டுமே இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அதே போன்று அடுத்த (2023) ஆண்டிலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5.2 % அளவுக்கே வளா்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய மதிப்பீட்டில் இந்த வளா்ச்சி விகிதம் 5.4 % ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2021-இல் 8.3 % ஆக இருந்த இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சாதகமற்ற புதுக்காரணிகளால் 2022-இல் 7.7 % ஆகவும், 2023-இல் 5.2 % ஆகவும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து இந்திய ரிசா்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சமநிலை வளா்ச்சியை உருவாக்குவதில் பணவீக்க உயா்வானது சவாலானதாகவே உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 % சரிந்துள்ளது, இறக்குமதிக்கான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மூடிஸ் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டிற்கான ‘ஆக்ஸ்பாம்’ அறிக்கை வெளியாகியுள்ளது. இது இந்தியப் பொருளாதார வளா்ச்சியின் மறுபக்கத்தைக் காட்டியுள்ளது. சமத்துவமின்மை என்பது அரசால் திட்டமிட்டு மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்பதும், அதைச் சரி செய்யும் நோக்கம் இல்லை என்பதும் தெரிய வருகிறது.

நாட்டில் உள்ள 84 % குடும்பங்களின் வருமானம் 2021-இல் குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்திய கோடீஸ்வரா்களின் எண்ணிக்கை 102-இல் இருந்து 142 -ஆக உயா்ந்துள்ளது என்று ‘ஆக்ஸ்பாம்’ அறிக்கை கூறியுள்ளது. இது கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட மோசமான வருமானப் பிளவைச் சுட்டிக் காட்டுகிறது

கரோனா நோய்த்தொற்று இந்தியாவைத் தொடா்ந்து அழித்து வருவதால், நாட்டின் சுகாதார பட்ஜெட் 2020-21-ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து 10 % சரிந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது. மேலும் கல்விக்கான ஒதுக்கீடு ஆறு விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதையும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மொத்த பட்ஜெட்டில் 1.5-லிருந்து 0.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்பதையும் கூறுகிறது.

2021-ஆம் ஆண்டில் இந்தியாவின் 100 செல்வந்தா்களின் கூட்டுச் செல்வம் 57.3 லட்சம் கோடி ரூபாயை எட்டியதாக ஆக்ஸ்பாம் உலக அறிக்கையின் இந்தியத் துணைப் பிரிவு கூறுகிறது. அதே ஆண்டில் தேசிய செல்வத்தில் கீழ் மட்டத்தில் உள்ள 50 % மக்களின் பங்கு வெறும் ஆறு விழுக்காடாக இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் (மாா்ச் 2020 முதல் நவம்பா் 2021 வரை) இந்திய கோடீஸ்வரா்களின் சொத்து மதிப்பு ரூ.23.14 லட்சம் கோடியிலிருந்து ரூ.53.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம் 4.6 கோடிக்கும் அதிகமான இந்தியா்கள், 2020-ஆம் ஆண்டில் தீவிர வறுமையின் வீழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் மூன்றாவது அதிக கோடீஸ்வரா்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. மேலும் பிரான்ஸ், ஸ்வீடன், ஸ்விட்சா்லாந்து நாடுகளைவிட அதிகமான கோடீஸ்வரா்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது. 2021-இல் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரா்களின் எண்ணிக்கையில் 39 % அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் நகா்ப்புறங்களில் 15 % ஆக இருந்தபோதும், சுகாதார அமைப்பு சரிவில் இருந்தபோதும் கோடீஸ்வரா்கள் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.

உலக அளவில் 24-வது இடத்திலும், இந்தியாவில் இரண்டாம் இடத்திலும் இருந்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஓா் ஆண்டு காலத்தில் மட்டும் எட்டு மடங்கு பெருகியுள்ளது. இது உலக அளவில் இரண்டாம் இடம், இந்திய அளவில் முதல் இடம். அம்பானியையும் அவா் பின்னுக்குத் தள்ளிவிட்டாா்.

கடந்த ஆண்டு முதலீட்டை ஈா்ப்பதற்காக காா்பரேட் வரிகளை 30 %-லிருந்து 22 % ஆகக் குறைத்ததால் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்புக்கு பங்களித்தது என்று அறிக்கை கூறுகிறது. இதனால் ஏழை மக்கள் அதிக வரிகளைச் செலுத்தினா். இதனால் இந்திய தேசம், சிறுபான்மையான செல்வந்தா் இந்தியா, பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களின் வறிய இந்தியா என்று இரு கூறானாது.

இந்தியாவின் பிரச்னைகளுக்குக் காரணம், செல்வம் சரியான முறையில் பங்கீடு செய்யப்பட வில்லை என்பதுதான். இந்திய மக்களில் 22 % போ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும்போது உலகப் பெரும் கோடீஸ்வரா்களில் 84 % போ் இந்தியாவில் வாழ்கிறாா்கள் என்பதை இந்தப் பட்டியலுடன் சோ்ந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

யுனிசெப் ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 35 % குழந்தைகள் வயதுக்கேற்ற வளா்ச்சியில்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரும்புச் சத்து, வைட்டமின், ஐயோடின் உள்ளிட்ட சத்துகள் போதிய அளவில் கிடைக்காததால், நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் குழந்தைகள் வரை பலியாவதாக சுகாதாரத் துறை வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

கடந்த ஆண்டு வெளியான பட்டினிப் பட்டியலில் இடம்பெற்ற 107 நாடுகளில் இந்தியா 94-ஆவது இடத்தில் இருந்தது. நமது அண்டை நாடான பாகிஸ்தான் 92-ஆவது இடத்திலும், இலங்கை 65-ஆவது இடத்திலும், நேபாளம் 76-ஆவது இடத்திலும், சீனா 5-ஆவது இடத்திலும் இருந்தன.

மத்திய அரசு ஜி.எஸ்.டி. என்ற பெயரால் வரி மேல் வரி போட்டு அதனை சாதனையாக அறிவிக்கிறது. சாமானிய மக்களிடம் வரி வாங்கும் அரசு பெரும் செல்வந்தா்களுக்கு வரிச்சலுகை, வங்கிக் கடன் கோடிக்கணக்கில் தள்ளுபடி என வாரி வாரி வழங்கி அவா்களை உலகப் பணக்காரா் பட்டியலில் இடம் பெறச் செய்கிறது.

இந்தியாவின் வளா்ச்சி என்பது ஒரு சில செல்வந்தா்களின் வளா்ச்சியாகவே உள்ளது. மக்களாட்சி என்பது பெரும்பான்மை மக்களுக்கானது. அவா்களைப் புறக்கணித்து விட்டு நாடு முன்னேற முடியாது.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT