நடுப்பக்கக் கட்டுரைகள்

முதல் இடம் என்னும் மாயை!

வெ. இன்சுவை

 அண்மையில் ஊடகங்களில் வெளியான ஒரு செய்தி நம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஒருசேரக் கொடுத்து விட்டது. காரைக்காலில் உள்ள ஒரு பெண்மணி, எட்டாவது படிக்கும் தன் பெண்ணுக்குப் போட்டியாக ஒரு சிறுவன் அதிக மதிப்பெண் வாங்குகிறான் என்பதற்காக அவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து அவனைக் கொலை செய்திருக்கிறார்.
 ஒரு கொலை நடப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் - சொத்துத் தகராறு, குடி போதை, முன் விரோதம் இவற்றால் சட்டென உணர்ச்சி வயப்பட்டு கொலை செய்பவர்கள் உண்டு. ஆனால் தன் பெண்ணுக்குப் படிப்பில் போட்டியாக இருந்த ஒரே காரணத்திற்காக அந்தச் சிறுவனைக் கொலை செய்திருக்கிறார் அந்தப் பெண்மணி. பொறாமை, போட்டி மனப்பான்மை காரணமாக வாழ வேண்டிய ஒரு இளம் குருத்து அழிக்கப்பட்டு விட்டதே.
 எதிலும் போட்டி இருக்கலாம், அதில் தவறு இல்லை. ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உயிரைப் பறிக்கும் வரை போவதென்றால் அந்தப் பெண்ணின் குணம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்? முதல் இடத்தைப் பிடிப்பதற்காக, அந்தப் பெண் தன் குழந்தையை எப்படியெல்லாம் வதைத்திருப்பாரோ? என்னென்ன சித்திரவதைகளைச் செய்திருப்பாரோ?
 அவருடைய பெண் படிப்பில் சுட்டி. ஆனாலும், முதல் இடத்தைப் பிடிக்கவில்லை. இந்த அற்ப காரணத்திற்காக ஒரு பெண் கொலை வரை போவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
 இத்தகைய போட்டி, பொறாமை இன்று பல தாய்மார்களிடம் உள்ளது. தன் குழந்தை எல்லா போட்டிகளிலும் முதலாவதாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். குழந்தை வளர்ப்பில் அவர்கள் செய்யும் அலப்பறைகள் விநோதமானவை. குழந்தைகளின் உணவு விஷயத்திற்கே மிகவும் மெனக்கெடுபவர்கள், அவர்களின் படிப்பு விஷயத்தில் எப்படி இருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு வயது குழந்தைக்கே என்னென்னவோ கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
 அக்குழந்தைகள் பள்ளியில் சேருவதற்கு முன்னரே "தேர்வுக்குத் தயார்' என்ற நிலை, எல்லாக்குறளையும் ஒப்பித்தல், பல நாடுகளின் தலைநகரங்களையும், அந்நாடுகளின் கொடிகளையும் கண்டுபிடித்தல் இப்படி பல்வேறு விஷயங்களைத் திணித்து அக்குழந்தைகளின் பொது அறிவை வளர்க்கிறார்களாம்.
 இது மட்டுமல்ல, இசை, நடனம், ஹிந்தி, கராத்தே வகுப்புகளில் சேர்த்து விடுகிறார்கள். இன்றைய குழந்தைகளுக்கு விளையாட நேரமும் இல்லை, தோழர்களும் இல்லை என்பது சோகம்.
 முன்பை விட இப்போது இந்த வெறி அதிகமாகி விட்டது. அதற்கு முக்கியக் காரணம் கைப்பேசி. ஒவ்வொருவரும் வாட்ஸ்ஆப்பில் பல்வேறு குழுக்களில் இருக்கிறார்கள். உறவினர் வட்டம், நண்பர் வட்டம், பள்ளி நண்பர் வட்டம், கல்லூரி வட்டம், உடன் பணி புரிவோர் வட்டம், பெற்றோர் வட்டம் என பல குழுக்கள் உள்ளன.
 ஒரே வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களுக்குள் செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் பாடியது, ஆடியது, பேசியது என அனைத்துப் பதிவுகளையும் குழுக்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
 அவற்றைப் பார்க்கும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். குழந்தைகளை இன்னும் இரண்டு வகுப்புகளில் சேர்த்து விட்டு அவர்களைப் பாடாய் படுத்துகிறார்கள். அதுவும் உறவினர்களிடையே போட்டி அதிகம்.
 ஒப்புக்குப் பாராட்டி விட்டு உள்ளுக்குள் குமைகிறார்கள் உறவினர்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாக் கலைகளும் வசப்படுமா? சிலருக்குப் பாட்டு வரும்; சிலருக்கு நடனம் நன்கு வரும்; சிலருக்கு விளையாட்டு வரும்.
 தன் குழந்தையின் விருப்பம் அம்மாவுக்கு முக்கியமல்ல. உறவினரின் குழந்தையைவிட தன் குழந்தை புத்திசாலி என்று காட்ட வேண்டும், அவ்வளவுதான். இந்தப் போட்டி மனப்பான்மை பொறாமையில் கொண்டு விட்டு விடுகிறது. அடுத்த வீட்டுப் பிள்ளை அழகாகப் பாடினால் இவர்களால் தாங்கமுடியவில்லை.
 தங்கள் குழந்தைக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். குழந்தை அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால் அந்த கோபத்தை, ஆற்றாமையை, எரிச்சலை குழந்தை மீது காட்டுகிறார்கள். இதுவும் ஒரு விதத்தில் குழந்தைகளின் மீது ஏவப்படும் வன்முறையே.
 குழந்தைப் பருவத்தில் மனப்பாடம் செய்வது அப்படியே மனதில் நிற்காது. மறந்து போய் விடும். மூன்று வருடங்கள் கல்லூரியில் படித்த பாடங்களே, பட்டம் பெற்ற பின் மறந்து போய் விடுகின்றன. சில வருடங்கள் கழிந்த பின் பாடத்திட்டம் கூட நினைவில் இருக்காது. இதுதான் எதார்த்தம். இது புரியாமல் குழந்தைகளைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.
 தங்கள் குடியிருப்பில் ஏதாவது போட்டி நிகழ்ச்சி நடந்தால்கூட அதைப் பொழுதுபோக்காக எண்ணாமல் பதற்றம் அடைகிறார்கள். குழந்தைகளை வெகு சிரத்தையுடன் தயார் செய்கிறார்கள். பணம் செலவழிக்கிறார்கள். பரிசு உண்டு என்றால், தன் குழந்தை முதல் பரிசு வாங்க வேண்டும் என்ற வெறி வந்து விடுகிறது. ஏன் இந்த முதல் இட மோகம்? எல்லாரும் முதல் பரிசு பெற முடியுமா?
 சிலருக்கு எந்த நியாயங்களும் இல்லை; தர்மங்களும் இல்லை. ஒரு யானை கடந்து போகும் போது செடி கொடிகளையும், தோப்புகளையும் அழித்துக் கொண்டு போவதைப் போல பல தர்மங்களையும் நசித்து விட்டு வெற்றி பெறப்பட வேண்டுமா? ஊடக வெளிச்சம் பட வேண்டும் என்பதற்காக பல வழிகளில் யோசிக்கிறார்கள்.
 "மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் அளவு கடந்து ஏற்றும் போது அதன் அச்சு முறிந்துவிடும்' என்கிறார் வள்ளுவர். அது போல எதற்கும் ஒரு தாங்கும் சக்தி உண்டல்லவா? குழந்தையின் சக்திக்கு மீறி அவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு.
 தங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுவதுதான் அம்மாக்கள் செய்யும் மிகப் பெரும் தவறு. ஒரு குழந்தையை அதே வீட்டில் உள்ள மற்றொரு குழந்தையோடு ஒப்பிட்டு மட்டம் தட்டி பேசுகிறார்கள். பக்கத்து வீட்டுக் குழந்தையோடு ஒப்பீடு; உறவினர் குழந்தையோடு ஒப்பீடு; உடன் பணிபுரிவோர் குழந்தையோடு ஒப்பீடு.
 நம் கைவிரல்கள் கூட ஒரே அளவில் இல்லை. அதுபோல் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். பெற்றோர் அதைக் கண்டுபிடித்து வெளிக் கொணர்ந்தால் போதும். அதை விடுத்து தன் குழந்தை சகலகலா வல்லுநராக வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? அது முடியுமா? ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்?
 பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பிற குழந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுவது போல, குழந்தைகள் பிற பெற்றோருடன் தங்கள் பெற்றோரை ஒப்பிட்டுப் பேசினால் பொறுத்துக் கொள்வார்களா? மெத்தப் படித்தவர்களும் இத்தவறை செய்கிறார்கள்.
 ஒரு சிறுவனைக் கொலை செய்யும் அளவுக்கு ஒரு பெண் துணிந்திருக்கிறார் என்றால் சமூகம் எங்கு சென்றுகொண்டிருக்கிறது? இப்படி எத்தனை பேர் இருப்பார்களோ? நம் குழந்தையின் காலில் சிறு முள் குத்தி விட்டாலே நாம் பதறிப் போகிறோம். பள்ளிக்குப் போன மகன் எமனிடம் போய் விடுவான் என அச்சிறுவனின் பெற்றோர் நினைத்திருப்பார்களா? அவர்கள் எப்படி சமாதானம் அடைவார்கள்? ஆற்றிக்கொள்ளக் கூடிய துயரமா இது?
 பள்ளிகளில் குழந்தைகளின் பெற்றோருக்கு உளவியல் பாடம் நடத்த வேண்டும். ஆண்டுக்கு இருமுறை அவர்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்தி உளவியல் நிபுணர்களைக் கொண்டு அவர்களுக்கு அறிவுரை தர வேண்டும்.
 ஆண்டுதோறும் பள்ளி இறுதி ஆண்டில் மாநிலத்தில் முதல் மதிபெண் பெற்ற மாணவர்கள் எல்லாரையும் நமக்குத் தெரியுமா? அன்று படிப்பில் சுட்டியாக இருந்த எல்லாரும் இப்போது வாழ்வில் வெற்றி வாகை சூடி உள்ளார்களா? முதல் மதிப்பெண்ணிற்கும் வாழ்வியல் வெற்றிக்கும் தொடர்பில்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால் "முதல் இடம்' பைத்தியம் தெளிந்துவிடும்.
 தொழிலில் போட்டி இருக்கும்; அரசியலில் போட்டி இருக்கும்; விளையாட்டில் போட்டி இருக்கும். போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் கடின உழைப்பும், விடா முயற்சியும் அவசியம். அதை விடுத்து போட்டியாளர்களைக் கொலை செய்ய ஆரம்பித்தால் என்னாகும்?
 எவரிடம் திறமை இருந்தாலும் அதனை நாம் பாராட்ட வேண்டும். அந்தப் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நன்றாகப் படித்த சிறுவனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதற்குப் பதில் அச்சிறுவனைப் பாராட்டியிருக்க வேண்டும் அந்தப் பெண்.
 இருபது ஆண்டுகளுக்கு மேல் தன் விளையாட்டால் பலரையும் ஈர்த்து வரும் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ûஸ வாழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பகிர்ந்த (ட்விட்டர்) வாழ்த்து பலராலும் பாராட்டிப் பேசப்படுகிறது. இந்த மனப்போக்கு, மகிழ்ச்சி அலையைப் பரப்புகிறது. பாராட்டும் பண்பு ஒருவரின் எதிர்மறை எண்ணங்களைப் புறந்தள்ளி விடும்.
 ஒவ்வொரு மரணமும் நீங்காத வடுவாக நின்று விடுகின்றது. அப்படித்தான் போட்டி, பொறாமை காரணமாக நடந்த கொலை தாய்மையின் புனிதத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது.
 இனி இத்தகைய பொறாமைக் கொலை நடக்கக் கூடாது. நடக்காது என நம்புவோம். குழந்தைகளைத் துன்புறுத்தாமல் அவர்கள் இயல்பாக வளர, வாழ வகை செய்வோம். அவர்களின் குழந்தைப் பருவம் இனிமையாக இருந்தால்தான், அவர்களின் எதிர்காலம் வளமாக இருக்கும். இதனைப் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

SCROLL FOR NEXT