நடுப்பக்கக் கட்டுரைகள்

ஒப்பந்ததாரர்களின் அலட்சியம்

DIN

அரசுத்துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் கட்டுமானம், சாலை, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு போன்ற பணிகள் அரசு ஒப்பந்ததாரர்கள் மூலமே நிறைவேற்றப்படுவதை நாம் அறிவோம்.
 சில லட்சம் ரூபாய் முதல் பல கோடி ரூபாய் வரையிலான மதிப்பீடுகளில் அமைந்த திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் பல்வேறு சிறிய, பெரிய ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்படுகின்றன. அவர்களும் அந்த திட்டங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்கிறார்கள்.
 ஒப்பந்தத்திற்கான விண்ணப்பத்தைப் பெறுவது முதல், கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றி, அப்பணிக்கான முழுத் தொகையையும் பெறுவது வரையில் பல்வேறு போட்டிகளையும், மன அழுத்தங்களையும் ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதும் நிதர்சனமே.
 ஆனால், தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் எவையாயினும், தாங்கள் மேற்கொள்ளும் பணிகளைத் தரமாகவும், விமரிசனங்களுக்கு இடம் இல்லாத வகையிலும் நிறைவேற்றித் தருவது ஒப்பந்ததாரர்களின் தலையாய கடமை ஆகும். ஆனால், அண்மைக்காலமாக அவர்களில் பலரும் செய்து முடிக்கும் பணிகள் தரமாகவும் நிறைவாகவும் உள்ளனவா என்பது கேள்விக்குறியே.
 ஒப்பந்ததாரர்கள் மூலம் போடப்படுகின்ற சாலைகள் பலவும், அமைக்கப்பட்ட சில வாரங்களுக்குள் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதும், ஒரேயொரு மழைக்குக் கூட அவை தாக்குப் பிடிக்காமல் கரைவதும் வாடிக்கையாகி விட்டன. ஒருவேளை தரமான சாலை அமைந்துவிட்டாலும், அடுத்த சில நாட்களுக்குள் தொலைபேசி நிறுவனங்களின் கேபிள் பழுதுபார்க்கும் பணி, உள்ளூர்க் கழிவுநீர்க் கால்வாய் விரிவுபடுத்தும் பணி என்று ஏதேதோ காரணங்களுக்காக, ஒழுங்காகப் போடப்பட்ட சாலையைப் பெயர்த்து எடுக்கின்ற திருப்பணி தொடங்கிவிடும்.
 சாலைகளில் தங்கள் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் பள்ளங்கள் தோண்டிக் கம்பங்களை நட்டு, அவற்றில் தோரணங்களையும், பதாகைகளையும் நிறுவிட சுதந்திரம் வாய்க்கப் பெற்ற அரசியல் கட்சிகளும் தங்கள் பங்கிற்கு அவ்வப்பொழுது சாலைகளைச் சேதப்படுத்துகின்றன.
 ஆண்டுகள் பல கடந்த பின்பும் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப் படாத நகரங்களின் தெருக்களில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சேம்பர் எனப்படும் குழிகளுக்கான கான்கிரீட் மூடிகளின் சிமெண்டுப் பூச்சு உதிர்ந்து உள்ளிருக்கும் இரும்புக் கம்பிகள் பல்லிளிப்பது வாடிக்கையாகிப் போன விஷயம்.
 பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப் படாமல் இருப்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கின்றது. தோண்டப்பட்ட பள்ளங்களுக்குள் பொருத்தப்படுவதற்காக ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைக் குழாய்கள் உடைந்தும், விரிசலடைந்தும் காணப்படுவதும் உண்டு. இவையெல்லாம் உரிய காலத்தில் பணிகளை முடிக்காததன் விளைவுகளாகும்.
 மக்கள் வசிக்கும் தெருக்களின் சாலைகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் புனரமைக்கப்படுகின்றன. கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு வீடுகளின் வாசற்படிகள் தெருவை விட உயரமாக இருந்ததைப் பார்த்திருக்கிறோம். ஆனால், புதிதாகப் போடப்படும் சாலைகள் முன்பு இருந்ததை விட உயரமானதாகப் போடப்படுவது கண்கூடு. இவ்வாறு நான்கைந்து முறை போடப்பட்ட சாலைகள், அத்தெருவிலுள்ள வீடுகளின் வாசற்படியை விட உயரமாக அமைந்துவிட்டதைத் காணமுடிகிறது.
 இத்தகைய அமைப்பினால், மழைக்காலங்களில் தெருவில் விழும் மழை நீர் வெகு எளிதாக வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது. இதனால்,சாதாரண மழைக்கே பொதுமக்கள் திண்டாடும்படி நேர்கின்றது. மேலும், புதிய சாலைகளும், கால்வாய்களும் அமைக்கப்படும் பொழுதெல்லாம் குடியிருப்புகளில் வசிப்பவர்களும், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் போன்றோரும் தங்களின் வாகனங்களைக் கட்டட வாசலில் நிறுத்துவதற்கும் முடியாத நிலை உண்டாகின்றது.
 சாலைகள், கால்வாய்கள் போன்றவற்றை அமைக்கத் திட்டமிடும் அரசு அதிகாரிகளும், அரசு ஒப்பந்ததாரர்களும் மேற்கண்ட இடையூறுகளுக்கு இடமின்றி திட்டப்பணிகளைச் செய்து முடிக்க முன்வர வேண்டும். ஓரிரு நாட்கள் மட்டுமே எதிர்கொள்ளக் கூடிய இடையூறுகளை பொதுமக்கள் எளிதாகக் கடந்து சென்று விடுவார்கள். அதுவே நாட்கணக்கில், வாரக்கணக்கில் தொடருமானால் முணுமுணுப்புகள் எழத்தான் செய்யும்.
 இதுவரை கண்டதெல்லாம் நாம் காலம் காலமாக பார்த்து வருகின்ற ஒப்பந்தப் பணி கலாசாரத்தின் பழைய உருவமே. சமீப காலமாக இந்த கலாசாரம் ஒரு புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. வேலூர் நகரத் தெரு ஒன்றினைப் புதிதாக அமைத்த ஒப்பந்ததாரர், அத்தெருவில் வசிக்கும் ஒருவருடைய இருசக்கர வாகனத்தின் சக்கரங்களையும் கான்கிரீட் கலவையால் மூடி, இரவோடு இரவாகத் தம்முடைய பணியை முடித்துவிட்டு சென்று விட்டார்.
 மறுநாள் காலையில் அதனைக் கண்ட அவ்வண்டியின் உரிமையாளர் படாத பாடுபட்டு, இறுகிய கான்கிரீட் கலவையிலிருந்து தமது வண்டியை மீட்டிருக்கின்றார். நாமக்கல், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில தெருக்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென உள்ள அடிபம்பு குடிநீர்க்குழாய்களை அவற்றின் கழுத்துவரையிலும் கான்கிரீட்டால் மூடி, சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், நீண்ட பிடி கொண்ட அந்த அடி பம்புகளை பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
 கரூர் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் நடப்பட்டுள்ள சவுக்குக் கம்பங்களை அகற்றாமலேயே அவற்றுக்கும் கான்கிரீட் கலவை போட்டிருக்கிறார்கள். சற்றும் முன்யோசனையின்றி, எவ்வாறேனும் விரைவாகப் பணிகளைச் செய்து முடித்து, ஒப்பந்தத் தொகையைப் பெற்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் அலட்சியமாகச் செயல்பட்டதன் விளைவாகவே இவையெல்லாம் நிகழ்ந்துள்ளன.
 தவறு இழைக்கும் ஒப்பந்ததாரர்களை எச்சரிப்பதுடன், அவர்களிடமிருந்து உரிய நஷ்ட ஈட்டினைப் பெற அரசாங்கம் முன்வர வேண்டும். மேலும், இத்தகைய ஒப்பந்தப் பணிகள் நடக்கும்பொழுதே அவற்றை உரிய முறையில் மேற்பார்வையிடத் தகுதியுள்ள அலுவலர்களை நியமிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

SCROLL FOR NEXT