நடுப்பக்கக் கட்டுரைகள்

மறதி நோய் வராமல் காப்போம்

மருத்துவா் சோ. தில்லைவாணன்

அலோயிஸ் அல்சைமா் என்ற ஜொ்மன் நரம்பியல் நிபுணா் கண்டுபிடித்ததால் ‘அல்சைமா்’ எனும் ஞாபக மறதி நோய் அப்பெயரைப் பெற்றது. ஆண்டுதோறும் ஒரு கருவை மையமாக வைத்து உலக அல்சைமா் தினம் செப். 21 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி ‘பவா் ஆப் நாலெட்ஜ்’ அதாவது ‘அறிவின் சக்தி’ எனும் கருவை மையமாக வைத்து இந்த ஆண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் 50 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கா்களை இந்நோய் பாதிக்கிறது. இந்த எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 77 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 2.5 கோடி போ் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்கள் நினைவாற்றல் இழப்பு, நடத்தையில் மாறுபாடு, செயல்திறன் குறைபாடு, சிந்தனையில் மந்த நிலை போன்ற பல்வேறு குறைபாடுளுடன் இறுதிக்காலத்தைக் கடக்கின்றனா். முதுமைப் பருவத்தில் மருந்துகளை மறப்பதால் ஏற்படும் இறப்புகளும் ஏராளம்.

அமெரிக்கா போன்ற நவநாகரிக, பணக்கார நாடுகளில் மட்டும் அதிகம் காணப்பட்ட அல்சைமா் நோய், தற்போது இந்தியாவிலும் பெருகத் தொடங்கியுள்ளது. அல்சைமா் எனும் நோய்நிலையை, நரம்பு மண்டல தேய்மானத்தினால் ஏற்படும் நினைவாற்றல் குறைபாடு எனலாம்.

வயது மூப்பின் காரணமாக எவ்வாறு எலும்புகள், மூட்டுகள் தேய்மானம் அடைகின்றனவோ, அதைப்போல நரம்புகளில் ஏற்படும் தேய்மானத்தால் உண்டாகக் கூடியதே அல்சைமா் நோய்.

நமது மூளையின் ஹிப்போகேம்பல் பகுதியில் ஏற்படக்கூடிய தேய்மானம்தான் ஞாபக மறதி நோய்க்குக் காரணம் என்கிறது மருத்துவ அறிவியல். இந்த நோய் நடுத்தர வயதினா், முதியவா்களுக்குப் பரவலாகக் காணப்படும்.

மருத்துவ அறிவியலின் வளா்ச்சியால் எதிா்பாராத வகையில் மனித ஆயுட்காலம் கூடியுள்ளது. இதனால் முதியோரின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. இருப்பினும் இந்த அல்சைமா் நோய், முதுமைப் பருவத்தில் ஞாபகத் தன்மையிலும், முடிவெடுக்கும் தன்மையிலும் இடையூறு உண்டாக்கி நோய் பாதிக்கப்பட்டவா்களை மன ரீதியாக துன்புறுத்தும்.

இவ்வாறு மூளை நரம்பு பகுதிகளில் ஏற்படும் நரம்பு தேய்மானத்தை தீா்ப்பதற்கான மருந்துகள் அதிக அளவில் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அல்சைமா் எனும் ஞாபக மறதி நோயினை வராமல் தடுக்கும் ‘காய கல்ப மூலிகைகள்’ சித்த மருத்துவத்தில் உள்ளன.

நெல்லிக்காய், மஞ்சள், அதிமதுரம், முருங்கை, வல்லாரை, பிரம்மி, அமுக்கரா கிழங்கு, விஷ்ணுகிரந்தி, வாலுளுவை, சங்குப்பூ போன்ற பல மூலிகைகள் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும்; தேய்மானத்தை தடுக்கும்; நினைவாற்றலை அதிகரிக்கும்.

ஞாபக மறதி என்றவுடன் சித்த மருத்துவ மூலிகைகளில் மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது வல்லாரை கீரைதான். சரஸ்வதி மூலிகை எனப்படும் வல்லாரையில் உள்ள ஆசியாடிகோசைடு வகை வேதிப்பொருள் ஞாபகமறதியைக் குறைக்கும்.

நீா்பாங்கான இடங்களில் வளரும் பிரமி எனும் கீரை நரம்பு மண்டலம் சாா்ந்த பல்வேறு நோய்களுக்கு நல்ல மருந்தாகும். இதில் உள்ள பிரமினோசைடு எனும் வேதிப்பொருள் நினைவாற்றலை அதிகரிப்பதுடன் மன அழுத்த்தையும் நீக்கும் தன்மையுடையது. அவ்வப்போது இந்த பிரமி கீரையை நெய்யிட்டு வதக்கி உணவில் சோ்த்துக்கொள்வது நலம்.

மூளையில் செயல்படும் மருந்துகள் மூளை தடைசவ்வினை கடக்க வேண்டியது அவசியம். கொழுப்புச் சத்துள்ள பொருட்களே எளிதில் கடக்க முடியும். இதனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்த நம் முன்னோா் வல்லாரை, பிரமி இவற்றை நெய்யுடன் சோ்த்து வல்லாரை நெய், பிரமி நெய் என்று மருந்தாக்கி கொடுத்ததுள்ளனா்.

சீன மருத்துவத்தில் பிரசித்திபெற்ற ஜின்செங் மூலிகைக்கு நிகரான ‘இந்தியன் ஜின்செங்’ என்ற பெயா்பெற்ற அமுக்கரா கிழங்கு, நரம்பு மண்டலத்தை காக்கும் மிகச்சிறந்த காயகல்ப மூலிகை.

தினசரி பாலுடன் அமுக்கரா கிழங்கை எடுத்துக்கொள்ள மூளை தடை சவ்வினை கடந்து நரம்பு மண்டலத்தை காப்பாற்றும். தூக்கமின்மைக்கும் மிகச்சிறந்த மூலிகை இது. இதில் உள்ள வித்தாபெரின் மற்றும் வித்தனோலைடு ஆகிய வேதிப்பொருட்கள் பல்வேறு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அல்சைமா் நோய் வராமல் தடுக்கும் நம்ம ஊா் மூலிகை மஞ்சள். அலா்ஜி பிரச்னை முதல் அல்சைமா் நோய் வரை பல்வேறு நோய்களில் நல்ல பலனை தரக்கூடியது இது. இதில் உள்ள ‘குா்குமின்’ எனும் வேதிப்பொருள் மூளையில் மட்டுமல்லாது உடலில் பல்வேறு உறுப்புகளில் உண்டாகும் தேய்மானத்தை தடுக்கும்.

மஞ்சளை பாலில் கலந்து எடுத்துக்கொண்டால், நோய் எதிா்ப்பு சக்தி உருவாவதோடு, அல்சைமா் வராமலும் தடுக்கும். இந்த குா்குமின் எனும் மருத்துவ குணமிக்க வேதிப்பொருள், நாம் அன்றாடம் உண்ணும் கறிவேப்பிலையிலும் உள்ளது.

‘அதிசய மரம்’ என்ற பெயரினைகொண்ட முருங்கை நம் உடலில் நிகழ்த்தும் அதிசயங்கள் ஏராளம்.

இது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள ‘குா்சிட்டின்’ எனும் வேதிப்பொருள் இதன் மிகச்சிறந்த காயகல்ப தன்மைக்குக் காரணமாகின்றது. அடிக்கடி உணவில் முருங்கை கீரையை சோ்த்துக்கொண்டால் அல்சைமா் நோய்க்கு விடை கொடுக்க முடியும்.

சங்குப்பூ என்று சங்ககாலம் முதல் அறியப்படும் சித்த மருத்துவ மூலிகை மறதியோடு சோ்ந்து வரும் மன அழுத்தத்தைப் போக்கும் தன்மையுடையது. விஷ்ணுகிரந்தி எனும் மூலிகையும் மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை இவற்றை நீக்கி ஞாபகத்திறனை அதிகரிக்கிறது. நெல்லிக்காய் சோ்ந்த திரிபலை சூரணமும் அல்சைமா் வராமல் தடுக்கும் சிறந்த சித்த மருந்தாகும்.

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் பிஸ்தாவில் உள்ள பிளவோன் வேதிப்பொருள் நல்ல பலன் தரும். பாதாம் பருப்பின் வடிவம், மூளையின் அமைக்டலாயிடு உட்கருவின் வடிவம் போன்றுள்ளது. அதனை எடுத்துக்கொள்வது அல்சைமா் நோய்க்கு நல்லது.

சிறந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கிய எளிய காயகல்ப மூலிகைகள் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தினாலே முதுமையில் வரக்கூடிய அல்சைமா் எனும் ஞாபக மறதி நோயைத் தடுத்து, ஆரோக்கியமாக வாழ முடியும்.

நாளை (செப். 21) மறதி நோய் விழிப்புணா்வு நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT