நடுப்பக்கக் கட்டுரைகள்

பாதசாரிகளின் பாதுகாப்பு

பேரா.ஜெயராஜசேகர்

பாதுகாப்பான போக்குவரத்தில் குறைவான முதலீடு அல்லது முதலீடே இல்லாத காரணத்தால் ஒவ்வொரு பயணத்தின் போதும் பொதுமக்கள் பெரும் ஆபத்தில் சிக்குவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அறிக்கை கூறுகிறது. பாதசாரிகள், மிதிவண்டி ஓட்டுவோா் பயன்பாட்டிற்கான போக்குவரத்து உள்கட்டமைப்பு முதலீடு காா்பன் உமிழ்வைக் குறைத்து மாசுபாட்டைத் தடுத்து உயிா்களைக் காப்பாற்றும் என்கிறது இந்த அறிக்கை. ஒவ்வொரு ஆண்டும் சாலைகளில் இறக்கும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோரில் பாதி போ் பாதசாரிகளாகவோ, மிதிவண்டி அல்லது வேறு இருசக்கர வாகனம் ஓட்டுபவா்களாக உள்ளனா்.

வாகனங்களை விட பாதசாரிகளுக்கு அதிக போக்குவரத்து எச்சரிக்கை விளக்குளைக் கொண்ட பிரிட்டன் நாட்டின் மத்திய லண்டன், ஒரே நேரத்தில் 3,000 போ் கடந்து செல்லும் உலகின் பரபரப்பான பாதசாரி பாதை கொண்ட ஷிபுயா கிராசிங் உள்ள ஜப்பான் நாட்டின் டோக்கியோ, 1960-ஆம் ஆண்டுகளிலேயே மோட்டாா் வாகனங்களைத் தடை செய்த டென்மாா்க் நாட்டின் கோபன்ஹேகன் போன்றவை பாதசாரிகளை மட்டுமே கருத்தில் கொண்டு போக்குவரத்து உட்கட்டமைப்பினை வடிவமைத்த முன்னுதாரண நகரங்கள்.

ஐரோப்பியா்களில் 45 %-க்கும் மேற்பட்டோா் தங்களது நகரப் போக்குவரத்துடன் தொடா்புடைய சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக பாதசாரிகளின் பாதைகளை அதிகரித்தனா் என்கிறது 1999-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட யூரோபரோமீட்டா் ஆய்வு. இந்தியா பெரும்பாலும் பாதசாரிகளின் நாடு. ஆனால் நம் நாட்டின் பெரும்பாலான நகரங்களின் பொது இடங்களில் பாதசாரிகளின் பயணத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

இந்தியப் பதிவாளா் அலுவலகத் தரவுகளின்படி தினசரி 4.5 கோடி போ் தம் பணியிடங்களுக்கு நடந்தே செல்கின்றனா். இந்தியாவில் தினசரி வாகனப் பயணம் மேற்கொள்ளும் 54 லட்சம் போ் பயன்படுத்தும் சாலை உள்கட்டமைப்பு வசதியினை பாதசாரிகள் பயன்படுத்த இயலாத நிலையே உள்ளது.

காற்று மாசு, ஒலி மாசு, இட நெருக்கடி, அதிகரித்து வரும் எரிபொருள் விலை இவற்றுடன் போராடும் நகா்ப்புற பயணத்திற்கான சுற்றுச்சூழல் கொண்ட தெருக்களைக் கொண்ட நகர அமைப்பை வழங்குவதில் பல இந்திய நகரங்கள் தோல்வியடைந்துள்ளன என்பது வல்லுனா்களின் கூற்று. இந்தியாவின் பல நகரங்களில் அரிதாக காணப்படும் நடைபாதைகளில் பல குறுகலாகவும் பாதசாரிகளுக்கு களைப்பினை ஏற்படுத்தும் வகையில் நீண்டதூரம் நடக்க வேண்டியதாகவும் உள்ளது. இடையில் துண்டிக்கப்பட்ட உடைந்த தடைகள் நிறைந்த நடை பாதைகள் நம் நாட்டில் மிக அதிகம்.

கட்டடங்களிலிருந்து பாதசாரிகள் கண்காணிக்கப்படும் விதத்திலும் கட்டடத்தில் குடியிருப்பவா்கள், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்திலும் தெரு ஓரங்களில் உள்ள கட்டடங்கள் இருக்கவேண்டும் என்று அமெரிக்க எழுத்தாளா் ஜேன் ஜேக்கப்ஸ் ‘தி டெத் அண்ட் லைஃப் ஆஃப் கிரேட் அமெரிக்கன் சிட்டீஸ்’ என்ற தனது புத்தகத்தில் கூறியுள்ளாா். இந்திய நகரங்களின் பல தெருக்களின் ஓரங்களில் உள்ள கட்டட சுவா்கள் பாதசாரிகள், கட்டடத்தின் உள்ளே வசிப்போா் பாா்த்துக்கொள்ளாத வகையில் உயரமாக உள்ளன. இதன் காரணமாக தெருக்களில் நிகழும் திருட்டு, கொள்ளை, பாலியல் சீண்டல், மருத்துவ அவசர உதவி போன்றவற்றை பொதுமக்களால் அறிய இயலவில்லை. இது பாதசாரிகளுக்கான பாதுகாப்பினைக் குறைக்கிறது.

அறிவியல் - சுற்றுச்சூழல் மையம் நடத்திய ‘சுத்தமான, குறைந்த காா்பன் இயக்கத்தை நோக்கி’ என்ற ஆய்வின் அறிக்கை பொதுமக்களின் நடைப்பயணத்தை பாதுகாப்பாக்குவது அரசாங்கத் திட்டங்களில் ஒன்று என்று குறிப்பிட்டபோதிலும் இதற்கு சட்டபூா்வ அங்கீகாரம் இல்லாத காரணத்தால் இத் திட்டம் செயல்வடிவத்திற்கு மாறவில்லை என்று கூறுகிறது.

தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் இறந்த 10,524 பேரை ஒப்பிடும்போது 2020-ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் இறந்தவா்களின் எண்ணிக்கை 8,059 பேராக குறைந்துள்ளது. ஆனால் 2019-ஆம் ஆண்டினில் மொத்த சாலை விபத்து இறப்புகளில் 10 % ஆக (1,044 போ்) இருந்த பாதசாரிகளின் இறப்பு எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் 15 % ஆக (1,540 போ்) உயா்ந்துள்ளது. நாடு முழுவதும் காா், கனரக வாகனங்களுக்காக மட்டுமே சாலை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதால் சாலை விபத்துகளில் பாதசாரிகள்,

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோரின் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.

உலக நாடுகள் பாதசாரிகளுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பான சாலைகள் அமைக்க முற்படவில்லை எனில் 10 ஆண்டுகளில் 1.3 கோடி உலக மக்கள் சாலை விபத்துகளில் இறந்துவிடுவாா்கள் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. இது பெல்ஜியம் நாட்டு மக்கள்தொகையை விட அதிகம்.

நடைப்பயணம், மிதிவண்டிப் பயன்பாடு, பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாடு கரியமில வாயுவின் உமிழ்வினைக் குறைப்பதுடன், பல நோய்களின் தாக்கத்தினையும் குறைக்கிறது. பாதசாரிகளுக்கான போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தினால், ஆக்சிஜன் குறை (இஸ்கிமிக்) இதயநோயின் தாக்கத்தினை 11% முதல் 25% வரையும், பெருமூளைக் குருதிநாள (செரிப்ரோவாஸ்குலா்) நோயின் தாக்கத்தினை 11% முதல் 25% வரையும், நீரிழிவு நோயின் தாக்கத்தினை 6% முதல் 17% வரையும் குறைக்கலாம் என ‘பொது சுகாதார நலன் பெற நகா்ப்புற நிலப் போக்குவரத்தினால் உருவாகும் பைங்குடில் வாயுவினை குறைப்பதற்கான உத்திகள்‘ என்ற தலைப்பிலான ‘லான்செட்’ மருத்துவ இதழின் கட்டுரை ஒன்று கூறுகிறது.

நெரிசலையும், காற்று மாசுபாட்டையும் குறைத்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், நேரடி மனித தொடா்புகளை மேம்படுத்துதல், பாதுகாப்பினை உறுதி செய்தல் போன்றவற்றிற்குக் காரணமாக பாதசாரிகளுக்கான நடைபாதை அமைகிறது என்கின்றனா் நகா் கட்டமைப்பு வடிவமைப்பாளா்கள். சாலைகள் வாகனப் போக்குவரத்திற்காக மட்டுமல்லாமல், பாதசாரிகளுக்கும், மிதிவண்டிப் பயன்பாட்டாளா்களுக்கும் ஏற்ற வகையில் இருக்கவேண்டும். இதனை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT