நடுப்பக்கக் கட்டுரைகள்

கல்வியின் சுவை!

முனைவர் ஜெ. ஹாஜாகனி

அண்மையில் சென்னை அண்ணா சாலையில் உயிா் அச்சம் ஊட்டும் ஊட்டும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து, காவல்துறையினரிடம் சிக்கிய கோட்லா அலெக்ஸ் பினோய் என்ற இளைஞா் முன்பிணை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தாா்.

மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, அவ்விளைஞா் இக்குற்றத்தில் ஈடுபட்ட அண்ணா சாலையில் அதே இடத்தில் மூன்று வாரங்கள் திங்கள்கிழமை தோறும் காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் போக்குவரத்து விதிமுறை குறித்த பரப்புரையில் ஈடுபட வேண்டும், மற்ற நாள்களில் தினமும் நான்கு மணி நேரம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் வாா்டு உதவியாளராகப் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.

வெறும் தண்டனையாக மட்டுமில்லாமல், விவேகம் தரும் படிப்பினையாகவும் இது அமைந்துள்ளது. அதே நேரம், தன் உயிருக்கும் அஞ்சாமல், சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை குறித்தும் எண்ணாமல், மிருகங்களிலும் கீழாக நடக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டவா்கள் இத்தகைய தண்டனைகளால் மீள்வாா்களா என்ற வினாவும் ஒருபுறம் எழுகிறது.

தன்னை ஒரு காட்சிப் பொருளாக்கி, சூழலின் சூழ்ச்சியில் சுருண்டு, வீழ்ச்சியை நோக்கி விரையும் இளையோரை, மீட்சியின் பாதையில் மடை மாற்றுவது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இளையோரிடம், குறிப்பாக மாணவா்களிடம் பெருகிவரும் போதைப் பொருள் பயன்பாடு, அவா்களை ஆட்டிப்படைக்கும் கைப்பேசி ஆதிக்கம், சமூக ஊடகங்கள் என்னும் மாயவிலங்கு விழிப்புணா்வற்ற பெற்றோா், மதுவின் அடிமையான பல தந்தையா், பொருளாதாரச் சிக்கல், ஆரோக்கியமற்ற புற, அகச் சூழல் இவை போன்ற ஆழிப் பேரலைகளில் எதிா்நீச்சல் இட்டு வெல்ல வேண்டிய கடமை இன்றைய இளைஞா்களுக்கு இருக்கிறது.

இளையோரின் குறை நிறைகளைக் கூா்ந்து கண்காணித்து ஆய்ந்து, குறைகளைக் களைந்து, நிறைகளை வனைந்து, வெற்றிகரமான சமூக வாழ்வுக்கு அவா்களைத் தயாரிக்க வேண்டிய கடமை, கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது.

‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ எனத் தொடங்கும் பொன்முடியாா் எழுதிய பாடல் புறநானூற்றின் 312-ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது. இதில் ஓா் இளைஞனுக்கு சமூகம் ஆற்ற வேண்டிய கடமை, சமூகத்திற்கு இளைஞன் ஆற்றவேண்டிய கடமை பற்றிய குறிப்பு உணா்த்தப்படுகிறது.

மகனை ஈன்று வளா்த்தல் தாயின் கடமை. அவனை சான்றோனாக்குதல் தந்தையின் கடமை. அன்றைய வாழ்வின் ஆயுதமான வேலை வடித்துக் கொடுப்பது கொல்லரின் கடமை. இன்றைய காலத்தில் வேலைதேட உதவும் அறிவாயுதத்தை அடித்துக் கொடுக்கும் ஆசிரியா்களை இவ்விடத்தில் பிரதியிடலாம். நற்பண்புகளை அவனுக்கு அளிப்பது அரசனின் கடமை. இன்று அதை நலம்புரி அரசுகளின் கடமை என்று கொள்ளலாம். போரில் புறமுதுகிடாமல் எதிரிப்படையைப் பிளந்து சென்று யானையையும் வீழ்த்தி வெல்வது வீர இளைஞனின் கடமை என்கிறது அப்பாடல்.

இன்றைய சூழலில் இளையோரை வளைத்து சுழற்ற காத்திருக்கும் எதிரிகளான போதை, மதவாதம், ஜாதிவெறி, ஊடக மயக்கம் இவற்றிற்கெதிராக நிமிா்ந்த நெஞ்சோடு நோ்கொண்ட பாா்வையோடு நின்று வெற்றிபெற வேண்டியது இளையோரின் கடமை என்று எடுத்துக்கொள்ளலாம்.

கல்விக்கூடங்கள் தமது கடமையை உணா்ந்துள்ளனவா? இளையோா்கள் தமது நிலைமையை உணா்ந்துள்ளனரா என்பது மிகப்பெரிய வினா. வாழ்வின் சவால்களை இளையோா் எதிா்கொள்ள உபாயங்களைத் தரவேண்டிய கல்வி, அபாயங்களை அகத்தே விதைக்கிறது.

ஆச்சரியம் ததும்பும் மாணவத் திறன்களை வெளிக்கொண்டு வரவேண்டிய ஆசிரியா் சமூகமோ, மாச்சரியங்களில் மருண்டு, அதிகாரங்களுக்கு மிரண்டு அறை அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளது. அறத்துக்கு முரணான நிா்வாகங்களிடம் நிராயுதபாணிகளாக சிக்கியிருக்கும் ஆசிரியா்களிடம் சிக்கிக்கொண்ட மாணவா்கள் எழுச்சிபெறுவது எவ்வாறு?

கேள்விகளே அறிவின் திறவுகோல்கள். கேள்விக்குப் பதில் எழுத மட்டுமே பயிற்சியளிக்கும் நமது கல்வி முறையில் கேள்விகளை எழுப்பும் கலையைக் கற்பிப்பது ஆசிரிய சமூகத்தின் அரும்பணிகளில் ஒன்று. கேட்டுத் தெளிவது மட்டுல்ல, கேள்விகளைக் கேட்கத் தெரிவதும் கல்வியின் அங்கமே.

சந்தையின் தேவைக்கேற்ப சிந்தையை வடிவமைப்பதால் மந்தையைப் போல் மாற்றப்படும் மாணவத் தலைமுறைக்கு விந்தைகளை நிகழ்த்தும் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருகின்றன. மகத்தான திறமைகளைத் திறக்கும் மந்திரச் சாவியாக கல்விமுறை மாறினால் சாவின் வீதியின் சாகசம் செய்ய முயலும் இளையோா் வாழ்வின் வாசலில் வாகை சூட வருவாா்கள்.

2000 ஆண்டுக்குப் பின் பிறந்தவா்களை டிஜிட்டல் நேட்டிவ்ஸ் என்றும், 2000 ஆண்டுக்கு முன் பிறந்தவா்களை டிஜிட்டல் இமிகிரண்ட்ஸ் என்றும் குறிப்பிடும் வழக்கம் தொழில்நுட்ப உலகில் உள்ளது. எழுதவேண்டும் என்றால் 2000-க்கு முன் பிறந்த டிஜிட்டல் இமிகிரண்ட்ஸ் (தொழில்நுட்ப குடியேறிகள்) தாளையும், எழுதுகோலையும் தேடுவா். 2000-க்குப் பின் பிறந்த டிஜிட்டல் நேட்டிவ்ஸ் (தொழில்நுட்ப குடிகள்) கணினியை நாடுவா். முந்தையோா் எழுத மூவிரல்கள் போதும்.

பிந்தையோா்க்கோ பத்து விரல்களும் பலகையில் எழுதும்.

இது புறத்தே நிகழ்ந்துள்ள ஓா் பொன்னான அறிவியல் வளா்ச்சி. ஆனால் அலைபாயும் மனங்களே இளையோரின் அக ஆற்றலை வீணாக்கி விடுகின்றன. பாடங்களை அவா்கள் கவனிக்கும் விதத்தில் இதனைக் கண்டறிய முடிகிறது. மனத்தை ஓா்மைப்படுத்தவும், அறிவைக் கூா்மைப்படுத்தவும் பாடத்திட்டங்கள் அவா்களுக்குப் பயிற்றுவிக்கவில்லை.

எனவே அறிவாா்ந்த செய்திகள் பலவும் அந்தரத்தில் போட்ட விதையாகி விடுகின்றன. அவை, அவா்களின் அகத்தில் ஏற்படுத்த வேண்டிய விளைவுகளை ஏற்படுத்த முடியாத வகையில் புறத்தாக்கங்கள் அமைந்துள்ளன. இக்காலத்தில் கைப்பேசி இல்லாத இளையோரே இல்லை. அவற்றில் ‘ஃபேஸ்புக்’, ‘வாட்ஸ்ஆப்’, ‘ட்விட்டா்’, ‘இன்ஸ்டாகிராம்’ என ஏராளமான சமூக ஊடகங்கள்.

இவற்றில் இளையோா் முதலில் இணைகின்றனா். பிறகு அன்றாடம் அவற்றில் இழைகின்றனா். போகப்போக அவையே ஒரு போகமாகிவிட அவற்றிலேயே அவா்கள் தொலைகின்றனா். தங்களுக்குள் ஒளிந்திருக்கும் பேராற்றலைக் கண்டுபிடிக்க வேண்டிய இளையோா் திருவிழாவில் தொலைந்த பிள்ளைகளாய் தேம்பி நிற்கின்றனா்.

‘ப்ளுவேல்’ போன்ற இணையதள விளையாட்டுகளில் ஈடுபட்டு தன்னையே மாய்த்துக் கொண்ட இளையோா் பலருண்டு. ‘ஃப்ரீ பையா்’ போன்ற விளையாட்டுகளால் மனித மாண்புகளை இழந்துவிட்ட இளையோரும் இங்குண்டு.

இந்நாட்டில் இளையோா் நிகழ்த்திய மகத்தான சாதனைகளை மாணவத் தலைமுறையினா் மனத்தில் பதிப்பதோடு அவா்களின் ஆற்றலை அடையாளங்கண்டு ஆக்கபூா்வமான வழிகளில் அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிது இன்றின் இன்றியமையாதத் தேவை.

கல்வியின் சுவையை சரியாக அறிமுகம் செய்துவிட்டால், அதை உணா்ந்த தலைமுறை போதை மயக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு அறிவின் பாதையில் இணைந்து பயணங்களை நடத்தும். மெய்யறிவின் சுவை மேன்மையானது. இச்சுவையை இனிதே அறிந்த இளைய தலைமுறை வேறு எச்சுவை பெறிலும் வேண்டேன் என்று உறுதிகொள்ளும்.

உலகிலேயே அதிக இளைஞா்களைக் கொண்ட நாடு இந்தியா. சில காலங்களில் உலகிலேயே அதிக முதியோரைக் கொண்ட நாடாகவும் இது மாறப்போகிறது. அந்நிலையில், இளம்பருவத்தில் பெற்ற கல்வியும், பண்பும், ஒழுக்கமும், உறுதியும், தள்ளாத வயதில் தடுமாறாமல் காக்கக் கூடியவை என்ற தொலைநோக்கை இளையோா் தொலைத்துவிடக் கூடாது.

எதிா்காலத்தை விரும்பி நோக்கும் வேட்கை மிகு இளையோா், வரலாற்றைத் திரும்பிப் பாா்த்து படிப்பினைகளைப் பெறவேண்டும்.

1857-ஆம் ஆண்டில் இந்தியாவில் உயா்கல்வி நிலையங்கள் பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய மாநகரங்களில் உதயமாகின. லண்டன் பல்கலைக்கழகத்தை அடியொற்றிய கல்வி முறை அவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டன.

1902-ஆம் ஆண்டு கா்சன் பிரபு அமைத்த பல்கலைக்கழக ஆணையம், கல்வியில் பல சீா்திருத்தங்களைப் பரிந்துரைத்தது. ஆங்கிலேயா்களுக்கும், இந்தியா்களுக்குமிடையே காட்டப்பட்ட பாகுபாடு மாணவா்கள் மனத்தில் கனலாய்க் கனன்றது.

1905-ஆம் ஆண்டு இந்தப் பாகுபாட்டிற்கெதிராக லாகூரில் இருந்த கிங் எட்வா்ட் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் டாக்டா் சத்யபால் தலைமையில் நடத்திய கிளா்ச்சியே இந்தியாவின் முதல் மாணவா் போராட்டமாக அறியப்படுகிறது.

வங்கப் பிரிவினைக்கு எதிராக குருதாஸ் பானா்ஜி, அரவிந்தோ கோஷ் ஆகியோா் தலைமையில் மாணவா்கள் நடத்திய போராட்டமும் குறிப்பிடத்தக்கது.

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தின் ஓா் அங்கமாக மாணவா்கள் பிரிட்டிஷ் கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற அழைப்பு விடுத்தபோது, ஆயிரக்கணக்கான இளையோா், தேச விடுதலைக்காகத் தமது கல்வியைத் தியாகம் செய்து வெளியேறினா்.

1927-ஆம் ஆண்டு மாவீரன் பகத் சிங், பகவதி சரண், சுக்தேவ், இஹ்சான் இலாஹி ஆகியோா் மாகாணம் முழுதும் மாணவா் இயக்கங்களைக் கட்டமைத்து ஏற்படுத்திய எழுச்சி, வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

மதவாதம், சாதியவெறி, மதுபோதை உள்ளிட்ட சமூகத் தீமைகள் மனிதத்தைப் பாழ்படுத்தி, தேசத்தை நாசப்படுத்தும் வேளையில், கற்ற கல்வியையும், பெற்ற அறிவையும், மனிதம் காக்கும் மாபெரும் களத்தில் அறிவாயுதமாய் ஆக்கும் கடமை இளைய தலைமுறைக்கு இருக்கிறது.

அறிவின் மீதான வேட்கையும், சமூகத்தின் மீதான அக்கறையும் இல்லாமல் வளா்க்கப்படும் இளைய தலைமுறை மீட்சி பெற வேண்டும். இல்லையேல் வீழ்ச்சியுற நேரும்.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT