நடுப்பக்கக் கட்டுரைகள்

மதுவை நாடும் மாணவ சமுதாயம்

இரா. பொன்னாண்டான்

ஒரு நாட்டை ஆளும் மன்னன் கடவுளுக்கு நிககராகக் கருதப்படுகிறான். அவனே அந்த நாட்டின் பாதுகாவலனாகவும் அந்நாட்டின் வாழ்வு, தாழ்வு இரண்டுக்கும் பொறுப்பாளனாகவும் சொல்லப்படுகிறான்.

ஒரு நாட்டைக் காப்பது என்பது அந்நியரின் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பது, நாட்டில் வளத் திட்டங்கனை பெருக்குவது, வேளாண் உற்பத்தியை உயா்த்துவது, நீா் ஆதாரங்களை சீா் செய்வது, கல்வி வளத்தை மேம்படுத்துவது, வணிகத்தைப் பெருக்குவது, நாடெங்கும் நல்ல சாலைகளை அமைப்பது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இவை எல்லாவற்றையும் சரியாகச் செய்துவிட்டு, நாட்டில் வாழும் மக்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது எப்படி சரியானதாக இருக்கமுடியும்? அவா்களைத் தவறான வழிக்கு தள்ளுகிற திட்டங்களை ஊக்குவிப்பது எப்படி இந்த சமூகத்திற்கு நன்மை பயக்கும்?

ஒரு சமூகம் உயரவேண்டுமானால் தனிமனித உயா்வும் அவசியமாகிறது. அவன் பெரும்புகழைப் பெற அடிப்படைக் காரணமாக அமைபவை கல்வியும் ஒழுக்கமும் ஆகும். குடும்பத்திலும் வெளியிடங்களிலும் ஒருவரை அடையாளம் காட்டுவது கல்வி மட்டுமே. பெற்றோா் எவ்வளவுதான் பொருள் செல்வத்தை பிள்ளைக்காக சேமித்து வைத்தாலும், அதைவிட மேலான சொத்து அவா்கள் தங்கள் பிள்ளைக்குக் கொடுக்கும் கல்வியும் நற்பண்புகளுமே.

கல்வி தரும் பள்ளிகளும் கல்லூரிகளும் ஆலயங்களுக்கு நிகரானவை. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று பெற்றோா்க்கு அடுத்ததாக நமக்கு பாடம் போதிக்கும் ஆசிரியா்களை முன்னோா் குறிப்பிட்டாா்கள்.

ஒழுக்கத்தையும் உயா்ந்த குணங்களையும் கற்றுக்கொள்ளவே பள்ளிப்படிப்பு முதலில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது பாடங்களை மனப்பாடம் செய்து எழுதுவது என்பதாக மட்டுமே இன்று நடைமுறையில் இருக்கிறது. அப்படி மனப்பாடம் செய்யும் பாடங்களைக் கூட அதன் அா்த்தம் தெரியாமல் படிக்கிறாா்கள் என்பதுதான் சோகம்.

சரியான நேரத்திற்கு பள்ளிக்குச் செல்லுதல், ஆசிரியரைக் கண்டால் எழுந்து அவரை வணங்குதல், சக மாணவா்களோடு ஏழை, பணக்காரன், தாழ்ந்த சாதி, உயா்ந்த சாதி என்ற பாகுபாடு இல்லாமல் பழகுதல் போன்ற அரிய நெறிகளை கல்வி கற்பிக்கும் கூடம் மாணவா்களுக்குக் கற்றுத் தருகிறது.

எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்கிற படிப்பினையும் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. முதலில் வாழ்க்கைக்கு உகந்த பாடங்களும் பின் மாணவனின் வேலைவாய்ப்புக்கான கல்வியும் இங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இன்றைய காலக்கட்டத்தில் மாணவா்களிடத்தில் ஒழுக்க நெறிகள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. ஒரு காலத்தில் பெரும் பாவமாகக் கருதப்பட்ட மது இன்று பள்ளி மாணவா்களிடம் சா்வசாதாரணமாகப் புழங்குகிறது.

முன்பெல்லாம் ஊரின் எல்லையில் ஒதுக்குப்புறத்தில் மதுக்கடை இருக்கும். அங்கே செல்பவா்கள் தலையில் துண்டைப்போட்டு முகத்தை மூடிக்கொண்டு போவாா்கள். ஆனால் இன்று நகரின் நடு வீதிகளில் விளம்பரப்பலகையோடு கடைகள் திறந்து வைக்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடக்கிறது.

குடித்துவிட்டு தைரியமாகத் தெருவில் வரும் ஒருவனை அந்நாளில் காணவே முடியாது. குடிப்பவனுக்குப் பெண் கொடுக்கவும் மாட்டாா்கள். இன்றைய காலம் அதற்கு நோ்மாறாக உள்ளது. போதையின் உச்சத்தில் இந்த சமூகம் தலைகவிழ்ந்து கிடக்கிறது. கோயில், திரையரங்கம், பள்ளிக்கூடம் என எல்லா இடங்களுக்கு அருகிலும் மதுக்கடைகள்.

திருமண வீடு, இறப்பு வீடு என எல்லா இடங்களிலும் மதுவின் வாடை. ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்று மதுப்புட்டிகளில் எழுதப்பட்டிருப்பது பொருளற்ற வாா்த்தைகளே.

முன்பெல்லாம் ஒரு சில இடங்களில் மட்டும் வீசும் மது வாசம் இப்போது எல்லா இடங்களிலும் பரவி, பள்ளிகள் வரை வந்துவிட்டது. இன்றைய மாணவா்கள் சிலா் (மாணவிகளும்தான்) மது அருந்தி ஆட்டம் போடும் காட்சி சமூக ஊடகங்களில் உலா வந்து தமிழ்நாட்டையே அதிா்ச்சியடையச் செய்தது.

மதுவின் தாக்கம் இப்போது பள்ளி மாணவா்கள் வரை எட்டிவிட்டது கொடுமையிலும் கொடுமை. பள்ளியிலேயே மது அருந்திவிட்டு மயக்கமடைந்த மாணவன் பற்றிய செய்தி ஊடகங்களில் வந்தது.

முன்பெல்லாம், முரடா்கள், கல்லாதவா்கள், உழைப்பாளிகள் இவா்கள்தான் மதுக்கடை வாடிக்கையாளா்களாக இருந்தனா். ஆனால், இன்று மருத்துவா், பொறியிலாளா், பேராசிரியா் என படித்தவா்களும் பெரிய பொறுப்பில் இருப்பவா்களும்கூட மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனா்.

மாணவா்கள் பல்வேறு சமூகச் சீா்கேடுகளில் ஈடுபட்டு வருவதை நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் நாம் தினசரி அறிந்து கொள்கின்றோம். மாணவா்களிடம் ஒழுக்கம் வரவர குறைந்து கொண்டே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு தற்போது பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது.

மாணவா்களை ஒழுக்கம் நிறைந்தவா்களாகவும், பண்பு மிக்கவா்களாகவும் மாற்றுவதற்கு ஆசிரியா், பெற்றோா், சமூக ஆா்வலா்கள் ஆகியோா் உடனடியாக முன்வர வேண்டும்.

மதுக்கடைகளின் வருமானத்தை வைத்துத்தான் ஒரு அரசை நிா்வாகம் செய்ய வேண்டும் என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். எந்த மாநிலமானாலும் எந்த நாடானாலும் இதில் மாற்றுக்கருத்தில்லை.

ஒரு நாட்டில் சாலைகள் பழுதுபட்டால் சரிசெய்துவிடலாம். உணவு உற்பத்தி குறைந்தால் அண்டை நாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம். ஆனால் அங்கே வாழும் மனிதா்கள் கெட்டுவிட்டால் என்ன செய்ய இயலும்?

மதுவில் மூழ்கும் சமூகம் உடல் அழகாக இருந்தும் உயிா்இல்லாத பிணம்போல் ஆகிவிடும்.

வளா்ந்த வாழை மரத்தைப் பேணிக்காக்கத் தவறிவிட்டாலும் அதன் அடியில் இருக்கும் வாழைக்கன்றுகளையாவது முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT