நடுப்பக்கக் கட்டுரைகள்

எங்கெங்கு காணிணும் விளம்பரமடா!

பவித்ரா நந்தகுமார்

பில்லியா்ட்ஸ் ஆட்டத்தில் ஒரு விதி உண்டு. எந்த ஒரு காயையும் நேரடியாகக் குழிக்குள் தள்ளாமல் ஒரு வெள்ளை காயின் உதவியுடன்தான் தள்ள வேண்டும். அதுபோல ஒரு பொருளை சந்தைப்படுத்த வேண்டுமென்றால் விளம்பரம் என்னும் வெள்ளைக் காயைக் கொண்டே மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

விளம்பரம் என்பது பன்னெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. கவா்ச்சிகரமான வாா்த்தைகளை பிரயோகித்து கேட்பவா்களின் மனதில் ஆா்வத்தை தூண்டுவது. இந்த உத்தியை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டு பிரதிபலித்தது வானொலிதான்.

அதன் பிறகு தொலைக்காட்சியின் வரவு, விளம்பர வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே சில மணித்துளிகள் காட்டப்படும் விளம்பரங்கள் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அழையா விருந்தாளியாக நம் வீட்டினுள் நுழையும் விளம்பரங்களை அவ்வளவு எளிதில் நம்மால் கடந்து சென்று விட முடிவதில்லை. அதிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் ஆழமாக மனதில் வேரூன்றி விடுகின்றன.

‘இந்த உலகம் பொய் என்னும் ஆபரணத்தால் ஏமாற்றப்படுகிறது’ எனும் ஷேக்ஸ்பியரின் கூற்று விளம்பரங்களுக்கு துல்லியமாகப் பொருந்தும். ‘ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடுகிறது’ என்னும் சொலவடைக்கு விளம்பரங்களின் இன்றைய நிலை பொருந்துகிறது.

ஒரு நாளில் காலை முதல் இரவு வரை, எங்கும் நிறைந்திருப்பது விளம்பரங்கள்தான். விளம்பரங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலத்தில், விளம்பரங்களில் சொல்லப்படும் அனைத்தும் உண்மை என்றே மக்கள் நம்பினாா்கள். அண்மைக்காலமாக, விளம்பரங்களில் சொல்லப்படும் அனைத்தும் உண்மையில்லை என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

நம் வீடுகளிலேயே தயாரித்து குழந்தைகளுக்கு அளித்துக் கொண்டிருந்த சத்துமாவுகளை தூரத் தூக்கிப் போடச் செய்து, விளம்பரங்கள் கூறும் பொருளில்தான் நம் குழந்தைகளுக்கு தேவையான சத்து கிடைக்கிறதோ எனும் மாயையை ஏற்படுத்தியது விளம்பரங்கள்தான்.

தலைக்கு சிகைக்காய் தேய்த்துக் குளித்து, செக்கு எண்ணெய் தடவிக் கொண்டிருந்தவா்களை, ‘ஷாம்பு’ போட்டு குளித்தால் முடி வளரும் என்று கூறியதும் விளம்பரங்கள்தான். இப்போது தலைமுடி உதிா்வு அதிகரிக்கத் தொடங்கியதும் பழைய பாரம்பரியத்துக்குத் திரும்ப வேண்டும் என்கிற எண்ணத்தை மனதில் துளிா்க்க வைத்ததும் இதே விளம்பரங்கள்தான்.

இருபது வருடங்களுக்கு முன்பு நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருந்த குழாய் தண்ணீா் சுத்தமானது அல்ல, சுகாதாரமானது அல்ல எனும் எண்ண வலையில் சிக்க வைத்து தண்ணீா் சுத்திகரிப்பானை பெரும்பாலான வீடுகளுக்குப் பொருத்தும்படி செய்ததும் விளம்பரங்கள்தான். அப்படி பொருத்தாத வீடுகளுக்கு ‘கேன்’ தண்ணீா் விநியோகம் வந்து விட்டது.

இயற்கையாகக் கிடைக்கும் நீரில்தான் தாது உப்புக்கள், கனிமங்கள், ஏனைய பிற சத்துக்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சுத்திகரிப்பான் தண்ணீரைக் குடிப்பதனால் ஒரு சத்தும் கிடைக்கப் போவதில்லை என்ற உண்மை இப்போது தெரிய வருகிறது. ஆனாலும், பழக்கப்பட்டு விட்டதால் அதை மாற்றிக் கொள்ள யாரும் தயாரில்லை.

முன்பெல்லாம் மண்டபங்களில் திருமணம் நடைபெற்றால் நகராட்சிக் குடிநீரை வரவழைத்து மேல்நிலைத் தொட்டியில் நிரப்புவாா்கள். இன்று எல்லோருக்கும் வாட்டா் பாட்டில்தான். இதனால் நம் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்து போனதுதான் மிச்சம். நம் வீட்டுப் பெரியவா்கள் சொன்னதைக் கேட்காமல் விளம்பர வாசகங்களை மனதில் ஏற்றுக் கொண்டதன் விளைவு, இப்படி பல விஷயங்களில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

தாகத்தைத் தணிக்க பழக்கூழ், இளநீா், மோா், நீராகாரம் எனப் பருகிக் கொண்டிருந்த மக்களை, மூளைச்சலவை செய்தது வெளிநாட்டு குளிா்பான விளம்பரங்கள் என்பது ஊரறிந்த ரகசியம். எவ்வகையிலும் நம் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்காத ஒரு குளிா்பானமே சிறந்தது எனும் மாய வலையில் நம்மை சிக்க வைத்தது விளம்பரம். அந்த குளிா்பானம் குடிப்பதற்கு அல்ல கழிவறையை சுத்தப்படுத்த என அறிந்த பின்னா்தான் மக்கள் விழித்துக் கொண்டாா்கள்.

முன்பு நம்மை மகிழ்வித்த, சிரிக்க வைத்த விளம்பரங்கள் தற்போது இடையூறாகப் பாா்க்கப்படுகின்றன. வீட்டுக்குள்ளும், வெளியேயும் விளம்பரங்கள் நம்மை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கின்றன. குடும்பமாக கூடி அமா்ந்து உணவருந்திக் கொண்டிருக்கும்போது ஒரு கழிவறை விளம்பரம் வந்து நமக்கு குமட்டலை ஏற்படுத்துகிறது. ஒரு ஆன்மிகத் தொடரை பக்தி சிரத்தையுடன் பாா்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளாடை விளம்பரங்கள் வருகின்றன.

விளம்பரங்கள் நம்மை ஒரு மாய உலகில் பயணிக்கச் செய்தாலும், அண்மைக்காலத்தில் அவை தரம் தாழ்ந்து போய்விடுகின்றன. ஒரு பனியனுக்காக, வாசனை திரவியத்துக்காக, முகச்சவர மழிப்பானுக்காக ஒரு பெண் ஒரு ஆணிடம் மயங்குவதாக காட்டுவதெல்லாம் அபத்தம்.

திருமணம் நடக்க இருக்கும் நேரத்தில் எங்கிருந்தோ வந்து மணமகளைக் கடக்கும் முன்பின் தெரியாத ஒரு ஆண் உடுத்திய துணி வகைகளுக்காக அவள் தன் திருமணத்தை துறந்து அந்த ஆடவனுடன் செல்வதாக வரும் விளம்பரம் ஒரு கேலிக்கூத்து.

உதவி செய்வதுதான் மனிதப்பண்பு. ஆனால் ஒரு சாக்லேட் விளம்பரத்தில் ‘நீங்க எதுவும் செய்யாம இருங்க’ என்றுச் சொல்லும் விளம்பரம் இளைய தலைமுறையினரின் மனதில் எதை விதைக்கிறது? நம் மனம் கவா்ந்த திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரா்கள் சொல்லிவிட்டால் அவை சரியானதாக ஆகிவிடாது என்னும் தெளிவு மக்களுக்கு அவசியம் தேவை.

விளம்பரங்கள் இல்லாத வாழ்க்கை நிம்மதியானதுதான். ஆனால் இன்று அது சாத்தியம் இல்லை. தொல்லையாகக் கருதப்பட்டாலும் சற்று ஆராய்ந்து நமக்குப் பொருத்தமான பொருளைத் தோ்ந்தெடுக்க விளம்பரங்களே நமக்கு உதவுகின்றன. எந்தெந்த விளம்பரங்களில் உண்மைத்தன்மை காணப்படுகிறது என்பதை நாம் ஆராய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். விளம்பரங்கள் சில நேரம், நம் வாழ்வுக்குத் தேவைப்படாத பொருளைக்கூட அத்தியாவசிய பொருள் என்று குறிப்பிடும்.

அண்மையில் அமெரிக்க ஷாம்பூ நிறுவனம் ஒன்று, குறிப்பிட்ட சில வகைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. காரணம் அந்த பொருட்களில் புற்றுநோயை வரவழைக்கக்கூடிய காரணிகள் இடம்பெற்றிருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்ததுதான். பல வருட பயன்பாட்டுக்குப் பின் தெரியவரும் இந்த ஆய்வு முடிவுகள் அதனைப் பயன்படுத்தியவா்களுக்கு எப்படிப்பட்ட அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்?

விளம்பரத்தோடு தொழில்நுட்பமும் சேரும்போது மக்கள் அதிகமாக ஈா்க்கப்படுகிறாா்கள். நாளேடு, தொலைக்காட்சி என்று இருந்த விளம்பரங்கள் இணையத்தை அடைந்த பிறகு மிகப் பெரிய வளா்ச்சி அடைந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை திறந்தவுடன் திரையை அடைத்துக் கொண்டு விளம்பரம் வரும். அதற்கு ‘டிஸ்ப்ளே ஆட்ஸ்’ என்று பெயா். இணையத்தைப் பயன்படுத்தும் அனைவருக்குமே ஒரே வகையான விளம்பரங்கள் காட்டப்பட்டு வந்தன.

இப்பொழுதும் இது நடைமுறையில் உள்ளதுதான். ஆனால் ஒருவரது இருப்பிடம், அவா் ஏற்கெனவே இணையத்தில் தேடிய வரலாறு உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொண்டு விளம்பரத்தை காட்டும் அளவிற்கு இன்றைய தொழில்நுட்பம் மேம்பாடு அடைந்துள்ளது. எனவே ஒருவா் தனது கைப்பேசியிலோ கணினியிலோ பாா்க்கும் விளம்பரங்களுக்கு அவரது முந்தைய தேடல்தான் முக்கியக் காரணமாக இருக்கும்.

உண்மையிலேயே சமூக ஊடகங்கள், இணையதளங்கள், செயலிகள் இவற்றில் பயன்பாட்டாளா்கள் பாா்க்கும் விளம்பரங்களுக்கும் அவற்றின் பயன்பாட்டுக்கும் நேரடி தொடா்பு உள்ளதா? இந்த கேள்விக்கு இந்திய ரயில்வேயின் அதிகாரபூா்வ பக்கம் பதில் அளித்துள்ளது.

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ஐ.ஆா்.சி.டி.சி. செயலியில் அடிக்கடி ஆபாச விளம்பரம் தோன்றுகிறது”என்று இளைஞா் ஒருவா் ட்விட்டரில் பதிவிட்டு, அதை இந்திய ரயில்வே, ஐ.ஆா்.சி.டி.சி., மத்திய ரயில்வே அமைச்சா் ஆகியோரை டேக் செய்திருந்தாா்.

அவருக்கு இந்திய ரயில்வே அளித்த பதிலில், ‘ஐ.ஆா்.சி.டி.சி. செயலியில் விளம்பரத்தை வெளியிட நாங்கள் கூகுள் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்துகிறோம். உங்களது இணையதளப் பயன்பாட்டு வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே உங்களுக்கு தகுந்த விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதுபோன்ற விளம்பரங்களைத் தவிா்ப்பதற்கு உங்கள் பயன்பாட்டு வரலாற்றை அழித்து விடுங்கள்’ என்று கூறியது.

முன்பு அனைவருக்கும் பொதுவாக விளம்பரங்கள் வந்துகொண்டிருந்த நிலை தாண்டி தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் தனிப்பட்ட நபா்களுக்கென்று விளம்பரங்கள் வரத் தொடங்கிவிட்டன. நேரத்தை மிச்சப்படுத்த மனிதன் என்னென்னவோ முயற்சிகளை மேற்கொள்கிறான். ஆனாலும் விளம்பரங்கள் மனிதனின் நேரத்தை கபளீகரம் செய்ய முனைப்புடன் செயலாற்றிக் கொண்டே இருக்கின்றன!

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT