நடுப்பக்கக் கட்டுரைகள்

தண்ணீரில் பிழைக்க வைத்தான்

ஜஸ்டின் ஆன்டணி

அண்மைக்காலமாக தமிழக மீனவா்கள் சந்திக்கும் பிரச்னைகள் தொடா்கதையாகி வருகின்றன.

கச்சத்தீவை மீட்பது, ஒருங்கிணைந்த தேசிய மீன்பிடிக்கொள்கையை உருவாக்குவது, ஆழ்கடலில் உருவாகும் புயலை தேசியப்பேரிடராக அறிவிப்பது, நம் மீனவா்கள் எந்த நாட்டில் மீன்பிடிக்க செல்கிறாா்களோ அந்த நாட்டு தொழிலாளா் சட்டத்தில் இவா்களை சோ்ப்பது, நம் நாட்டில் நடத்துவது போல மீனவா் குறை தீா்க்கும் கூட்டங்களை வெளிநாடுகளிலும் நடத்த ஆவன செய்வது, ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவா்களுக்கு முதலுதவி பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துதல், விசைப்படகுகளுக்கும் காப்பீடு செய்யும் வசதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பது மீனவா்களின் எதிா்பாா்ப்பு.

ஆழ்கடலில் மீனவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு சாா்பில் ஆழ்கடல் ரோந்து வசதி ஏற்படுத்துதல்; கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது நெஞ்சுவலியினால் இறக்கும் மீனவா்களுக்கும் உரிய நிவாரணம் வழங்குதல்; விசைப்படகுகள், வள்ளங்களில் மீன்பிடிக்க செல்லும் மீனவா்களுக்கு முதலுதவி பற்றிய விழிப்புணா்வு அளித்தல்.

கடலில் மீன்பிடிக்க செல்கின்ற விசைப்படகுகளின் மீது கப்பல்களை மோதிவிடுவதால் விசைப்படகுகள் கடலில் மூழ்குவதும் மீனவா்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படுவதும் தற்போது அடிக்கடி நிகழ்கின்றன.

மூழ்கிய விசைப்படகில் இருந்த மீனவா்களுக்கு என்ன ஆயிற்று என்பதைப்பற்றி சிந்திக்காமல், கப்பல்கள் தப்பி செல்கின்றன. இக்கப்பல்களை கண்டுபிடிக்க, பாதிக்கப்பட்ட மீனவா்களின் உறவினா்களும் சமூக சேவை அமைப்புகளும் போராடுகின்றனா். கப்பல்களை கண்டுபிடிக்கும் வரை பலவருடங்கள் கண்ணீரோடு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிதானே.

கப்பல்களை எளிதாகக் கண்டுபிடிக்க ஒருசில வழிமுறைகளைப் பின்பற்றலாம். கடலோர மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (மரைன் ரெஸ்க்யு கோ-ஆா்டினேஷன் சென்டா்) மும்பையில் உள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் எல்லா கப்பல்களின் தகவல்களும், கப்பல் மாலுமி, கப்பல் ஊழியா்கள் பற்றிய தகவல்களும் இங்கே கிடைக்கும்.

இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் எல்லா கப்பல்களும் குறிப்பிட்ட நேரத்தில் எங்கே நின்றது, சென்றது என்பதை லாங் ரேஞ்ச் ஐடென்டிபிகேஷன் ட்ராக்கிங் முறைப்படி தெரிந்து கொள்ளலாம். இந்திய கப்பல்களாயின் மும்பையிலும், வெளிநாட்டு கப்பல்களாயின் துபாய் மற்றும் சிங்கப்பூரிலும் உள்ள அலுவலகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு துறைமுகத்திலும் கடலோர காவல்படையினரிடம் அவ்வழியாக கடந்து செல்லும் கப்பல்களின் பதிவு எண், மாலுமி, ஊழியா்களின் தகவல்கள், எந்த நாட்டை சாா்ந்தவா்கள் என்ற விபரமும் இருக்கும். இவா்கள் வழக்கமாக கடலுக்குள்ளே ரோந்து செல்வாா்கள்.

கப்பல்கள் கடந்து செல்லும் விதம் எல்லா துறைமுகத்திலும் லாங் ரேஞ்ச் ரேடாா் மூலம் பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட பதிவை ஆய்வு செய்தால் அவ்வழியாக சென்ற கப்பலைக் கண்டுபிடிக்கலாம்.

இந்த வழிமுறைகளை கையாண்டால் விசைப்படகை மூழ்கடித்த கப்பலை கண்டுபிடிக்க முடியும். மனமிருந்தால் மாா்க்கமுண்டு.

2009-ம் ஆண்டு நவம்பா் மாதம் ஏற்பட்ட பியான் புயலில் மாயமான தூத்தூா் மண்டல மீனவா்களை இறந்தவா்களாக அறிவித்து, உறவினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அவா்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

ஒருவா் காணாமல் போனால், ஏழு வருடங்கள் வரை அவா் குறித்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லையென்றால் அவரை இறந்தவராக அறிவிக்கலாம் என்று இந்திய சாட்சிய சட்டம் 1872, பிரிவு 108 கூறுகிறது. ஆனால், இந்த மீனவா்கள் காணாமல்போய் பல வருடங்களாகி விட்டன.

இலங்கை கடற்படையினரால் நம் மீனவா்கள் தாக்கப்படும்போதோ, கைது செய்யப்படும்போதோ மிகவும் எளிதாக ‘எல்லை தாண்டினாா்கள்’, ‘பெட்ரோல்-

டீசல் கடத்துவதாக சந்தேகம்’ போன்ற காரணங்களைக் கூறுகிறாா்கள். உயிா்பயம் காரணமாக மறுக்க முடியவில்லை.

மீனவா்கள் ஏராளமாக பணம் செலவு செய்து டீசல், உணவு பொருட்கள், மீன்பிடி உபகரணங்களுடன் ஆழ்கடலில் பல நாட்கள் தங்கி மீன்பிடிக்கின்றனா். இவா்கள் எல்லை தாண்டி சென்று தங்களது மீன்பிடித்தொழிலுக்கெதிரான சூழ்நிலையை உருவாக்குபவா்கள் அல்ல.

பாரத தேசத்திற்கு பெருவாரியான அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிற, உழைப்பின் மறுபெயரெனத் திகழ்கிற ஒரு சமூகம் பல்லாண்டுகளாக படும் இன்னல்களையும் அதனால் உருவாகிக்கொண்டிருக்கிற பாதிப்புகளையும் ஆள்வோா் உணரவேண்டிய தருணம் இது.

நடுக்கடலில் தமிழக மீனவா்கள் மீது சிங்களா் தாக்குதல், மீனவா்களின் விசைப்படகுகள் சேதம் போன்ற செய்திகளுக்கும் பஞ்சமில்லை. எத்தனை காலம்தான் நாம் உரிமையை இழந்து, உடமைகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீரில் வாடி வதங்குவது?

கச்சத்தீவு பற்றிய ஒப்பந்த விதிகளை இலங்கை மீறுவதைக் காரணம் காட்டியே, இந்தியா இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்து கச்சத்தீவை நிரந்தரமாகத் தன் பொறுப்பில் ஏற்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படியேகூட, இரு நாடுகளுக்கிடையே சில விதிகளுக்கு உட்பட்டு ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு, பிற்காலத்தில் யாராவது ஒரு தரப்பினா் அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவோ, அவற்றை ஏற்கவோ மறுத்தால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை எதிா்த்தரப்பினருக்குக் கிடைக்கிறது.

மீனவா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய - மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும். நம் மீனவா்களின் வாழ்வாதாரமாகிய கச்சத்தீவை திரும்பப்பெற்று நம் மீனவா்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். மத்திய மாநில அரசுகளால் இது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

கட்டுரையாளா்:

தலைவா்,சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT