நடுப்பக்கக் கட்டுரைகள்

குழந்தையும் தெய்வமும்

கிருங்கை சேதுபதி

 முன்பெல்லாம் பண்டிகைகளை ஒட்டி, புத்தாடை எடுத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டாடுவதுண்டு. பின்னர் பிறந்தநாள். இப்போதோ, எடுத்ததற்கெல்லாம் கொண்டாட்டம்தான். போதாக்குறைக்குப் பள்ளிகளில் நடத்தப்படுகிற விழாக்கள் வேறு. ஒற்றைக் குழந்தை பெற்றவர்களுக்கு இது எளிதாக இருக்கலாம்; ஒன்றுக்குமேல் பெற்றவர்கள் பாடு திண்டாட்டம்தான்.
 "அதனால் என்ன? கொண்டாடக் கொண்டாடக் குழந்தைகள் குதூகலம் அடைவார்கள். நல்லதுதானே' என்று அமைதி கொண்டாலும், பல நேரங்களில் அளவுக்கு மீறிய கொண்டாட்டம் திண்டாட்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
 இருக்கப்பட்டபோது எதையும் எப்போதும் கொண்டாடிக் கொண்டிருக்கலாம். இல்லாத நேரத்தில், எப்படிக் கொண்டாடுவது?
 வசதி படைத்தவர்களின் இல்லக் கொண்டாட்டங்களுக்குச் சென்று வரும் பிள்ளைகள் தன் வீட்டிலும் அதுபோல் கொண்டாட வேண்டும் என்று அடம்பிடித்து அழும்போது படுசிரமம். தவிர்த்தால் அதற்கொரு நியாயத்தையும் முன்வைத்து வினாத் தொடுப்பார்கள். "நாம் மட்டும் அவர்கள் வீட்டுக்குப் போய்க் கொண்டாடிவிட்டு வந்தோம். பதிலுக்கு நாம் அவர்களை அழைக்க வேண்டாமா' என்று கேட்பார்கள். அதை ஆமோதிக்க, அம்மாக்கள் இருக்கிறார்கள்.
 வாழ்க்கைப்போக்கில் இயல்பாக நடத்தப்பட வேண்டிய கொண்டாட்டங்கள், அவரவர் வசதிக்கேற்பப் பகட்டும் படாடோபமும் நிறைந்தவையாக ஆகின்றபோது, எளிமை நழுவிப்போய்விடுகிறது. இவையே கொண்டாட்டத்திற்கான விதிமுறைகளையும் உருவாக்கிவிடுகின்றன. படிப்பது, நடிப்பது, திறன்களை வெளிப்படுத்துவது ஆகியவற்றில் இருக்கும் "போலச் செய்தல்' இத்தகைய கொண்டாட்டங்களில் வந்து நிறைந்து விடுகிறது. கெளரவத்திற்காகக் கட்டாயம் செய்யப்படவேண்டியவையாக, இவை ஆகி வளர்கின்றன. விருந்து, பரிசளிப்பு, குடும்பத்தோடு போக வாகனத்தேவை என்று கணிசமான செலவைச் செய்ய வைத்துவிடுகின்றன.
 இவையெல்லாம் நாம் சிறுபிள்ளைகளாக இருந்த காலத்தில் இல்லை. இப்போது வருமானம் வருகிறதோ இல்லையோ இந்த மாதிரிச் செலவினங்கள்தான் மிகுந்துபோகின்றன என்று அலுத்துக் கொள்கிறவர்களாலும் கூட இவற்றைத் தவிர்க்க இயலவில்லை.
 காலத் தேவைக்கேற்ற வளர்ச்சிதான் இது. நாம் பெறமுடியாத பல அனுபவங்களையும் ஆனந்தங்களையும் நம் பிள்ளைகள் பெறுவது தவறா என்று சமாதானப்படுத்திக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். "நாம் சம்பாதிப்பதும் சேர்த்துவைப்பதும் பிள்ளைகளுக்காகத்தானே. அனுபவித்துவிட்டுப் போகட்டும்' என்னும் பாச உணர்வு நியாயமானதுதான். அந்த அனுபவம் ஆக்கம் சார்ந்ததாக இருந்தாதல் வேண்டும். அவர்களைத் திசைமாற்றும் நிலைக்குக் கொண்டுசேர்ப்பதாக ஆகிவிடக்கூடாது.
 எந்தப் பொருளுக்கும் ஒரு விலையுண்டு. அது பண மதிப்பீட்டு விலை மட்டுமல்ல. உடல்சார் உழைப்பும் சம்பந்தப்பட்டது. விளையாட்டுப் பொருள்களோ, உணவுப்பண்டமோ, வாகனச் சலுகைகளோ, எதுவானாலும் அவற்றை நுகர்வதற்காகச் செலுத்தப்படும் தொகைக்குக் குறைந்த அளவேனும் உடல் உழைப்பு இருந்தே ஆகவேண்டும்.
 கேட்டதும் உடனே கிடைத்துவிடுகிற எந்தப் பொருளுக்கும் மதிப்பில்லை. அவ்வாறு பயன்படுத்தித் தூக்கி எறிகிற (யூஸ் அண்ட் த்ரோ) பழக்கத்திற்குக் குழந்தைகள் அடிமையாகிவருவது அவ்வளவு நல்லதல்ல. பொருள்களைப் பயன்படுத்துவதுபோலவே பின்னாட்களில் மனிதர்களைப் பயன் கொள்ளவும் அவர்கள் பழகிவிடுவார்கள். இன்றளவும் மறுசுழற்சிக்குப் பழக்கப்படாமல் வீணடிக்கப்படும் பொருள்கள்தாம் எவ்வளவு?
 இளம் வயதில் கேட்டதும் கிடைத்துவிடும் என்பதை அனுபவித்துப் பழகிய பிள்ளைகள் பிற்காலத்தில் தன் தேவைக்குரியன கிடைக்காதபோது ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்துவிடுகிறார்கள். இளவயதில் அடம்பிடிக்கப் பழகிய அவர்கள் பிற்காலத்தில் மிரட்டவும் தயங்காதவர்கள் ஆகிவிடுகிறார்கள். முரட்டுத்தனமும் முன்கோபமும் அவர்களை எந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்றே தெரியாது. அதிலும் இப்போது அதிகரித்துவரும் மதுப்பழக்கம் அதீத ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
 விரும்பும் ஒரு பொருள் கிடைப்பதற்குமுன் தோன்றும் ஏக்கம், அது குறித்த கனவு, கிடைத்த பின் ஏற்படுகிற மகிழ்ச்சி, அதனை முழுமையுறத் துய்ப்பதில் ஏற்படுகிற அனுபவம் எல்லாமும் கேட்டவுடன் கிடைத்துவிடுகிறபோது, கிடைக்காமல் போய்விடுகிறது. அதன்மீதான மதிப்பும், வாங்கிக் கொடுப்பவர் மீதான மரியாதையும் குறைந்து போய்விடுகிறது.
 என்னதான் உரிய விலை கொடுத்து ஒரு பொருளை வாங்கினாலும், அதனை முறைப்படத் துய்த்துப் பயன் கொள்ளாமல் தூக்கி எறிவது, அப்பொருளை உருவாக்கியவர்களின் உழைப்பை அவமதிக்கும் ஒரு சமுதாயக் குற்றம் அல்லவா? இது பிள்ளைப் பருவமுதலே உணர்ந்து களையப்பட வேண்டியது கட்டாயமல்லவா?
 வாழ்வின் தேவை கருதி நடக்க வேண்டிய கொண்டாட்டங்கள், வலுக்கட்டாய நிர்ப்பந்தங்களால் தவிர்க்க முடியாத தேவையை உண்டுபண்ணுகிறபோது, விளைவுகள் விபரீதமாகி விடுகின்றன. ஊக்கப்படுத்துகிறோம் என்கிற நிலையில் அவ்வப்போது பரிசுகளை அறிவிப்பதுகூட, ஒருவகையில் கையூட்டுப் பழக்கத்தை குழந்தைகளுக்குக் கைமாற்றிக் கொடுப்பதாக ஆகி விடுகிறது.
 அன்றாடக் கடமைகளைத் தவறாமல் நிறைவேற்றுவது வேறு; ஆர்வ மிகுதியால், தன் திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகளில் பங்கேற்பது வேறு. கடமை உயிர்ப்பண்பு; திறமைகளைப் புலப்படுத்துதல் உயர்பண்பு. அத்தகு திறன்களும் கடமைகளைச் செறிவுறச் செய்வதற்கு உறுதுணையாக வேண்டும். ஆனால், கடமை புரிவதே திறமை என்பதான நிலை இப்போது மலிந்து வருகிறது. அதனால் கையூட்டுக் கொடுத்தால்தான் எதுவும் நடக்கும் என்பதை நியாயப்படுத்தும் போக்கு வளர்கிறது.
 குழந்தைகள் விஷயம் இவ்வாறு இருக்க,தெய்வத்தைக் கொண்டாடும் மரபிலும் பகட்டும் படாடோபமும் மிகுந்துவிட்டன.
 அன்பு என்னும் தாய் ஈன்ற அருமைக் குழந்தை அருள். அதனை வாரிவழங்கும் தெய்வத்திற்கு எந்தவொரு கையூட்டும் வேண்டியதில்லை. பெற்ற அருளுக்கு பிரதிபலனாக அன்பைச் செலுத்துகிற முறைதான் பக்தியெனும் பெயர் தாங்கி வழிபாடாக எழுகிறது.
 நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
 மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே
 என்று தாயுமானவரின் பக்தியுள்ளம் பரிந்து பாடுகிறது.
 இவற்றின் புறவெளிப்பாடே பூசனை. சிறப்பொடு செய்யப்படும் பூசனைகள், வானத்து மழைநீரை வையகத்துக்குக் கொண்டுதரும் வல்லமை மிக்கவை என்கிறது திருக்குறள். காவிரிப்பூம்பட்டினத்தில் "இந்திர விழா' எடுக்கும் முறை எப்படிப்பட்டதென்று எடுத்தியம்புகிறது "சிலப்பதிகாரம்'. சூழலியல் சார்ந்து நடைமுறைப்படுத்தப் பெறும் திருவிழாக்கள், ஆடம்பரத்திற்கு இடம் கொடுத்து, இப்போது அல்லாடிக் கொண்டிருக்கின்றன.
 அக்காலத்தில் மக்கள் தொகைக் குறைவு என்பதோடு, வழிபாட்டுத் தலங்களும் இயற்கையோடு இணைந்து இயல்புற அமைந்திருந்தன. இப்போதோ, செயற்கை உபகரணங்கள் மிகுதியாகிவிட்டன. நெரிசல், தேவைகளின் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, தூய்மைக் குறைவு மிகுந்து வருகிறது. பக்தர்கள் பண்ணுகிற பூசனைகளில் இன்றியமையாதது தூய்மை பேணல் என்பதை மறந்துவிடலாகாது.
 ஆண்டுக்கு ஓரிருமுறை நடைபெறும் திருவிழாக்களின் ஆடம்பரச் செலவினங்களை முறைமைப்படுத்தினால், அன்றாடத் தேவைக்கான செலவினங்களைச் சீருறச் செய்துவிட முடியும் என்பது அனுபவம்.
 நாள்வழிபாட்டுக்குத் தேவையான திருவிளக்குகளுக்கு எண்ணெய் கூட இல்லாது சிரமமுறும் சிற்றூர் ஆலயங்களில், சிறப்புத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறபோது ஒளியூட்டப்பெறும் ஆடம்பர மின் விளக்குகள்தாம் எத்தனை எத்தனை? ஆர்ப்பாட்டங்கள்தாம் எவ்வளவு?
 நடமாடும் கோயில்களாக விளங்கும் உயிர்களுக்கு நல்லுதவி செய்வதற்காகப் படமாடும் கோயில்களை நிர்மாணித்தனர் முன்னோர். அவற்றின் இயல்பு கெடாது பராமரிப்பதுகூடத் திருப்பணி செய்யும் புண்ணியத்தைத் தரும்.
 விழா நாட்களில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர்மோர், பானகம் வழங்கிய அறக்கொடையாளர்கள் இப்போது, பாலிதீன் பைகளிலும், குடுவைகளிலும் அடைக்கப்பட்ட நீரை வழங்குவது காலமாற்றம் என்றாலும், அதனால் பெருகும் கழிவுகளை அப்புறப்படுத்துவது அவ்வளவு எளிதா? மண்டபங்களில் சமைத்து, அன்னதானம் இடுவோர் இப்போது சிரமம் குறைக்கப் பொட்டலங்களில் கட்டித் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். உண்டபின் போடப்படும் குப்பைகள் கணிசமான அளவில் மிகுந்து தூய்மைக்குறைவுக்கு வழிவகுத்துவிடக் காணலாம்.
 பிறவிப்பிணியைப் போக்கும் வழிபாட்டுத் தலங்களில் உடற்பிணி போக்கும் புனிதத் தீர்த்தங்களையும், மலர்பூத்துச் சொரியும்
 நந்தவனங்களையும் பேணுவதுகூட வழிபாட்டுநெறிதான் என்பதைப் பெரியபுராணத்து அடியார்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்; நடைமுறைப்படுத்திச் சிறந்திருக்கிறார்கள்.
 உழவாரப் படை தாங்கிய திருநாவுக்கரசர் பெருமானும், பிறக்கும்பொழுதே கண்காணா மாற்றுத் திறனாளியாக இருந்த போதிலும் திருவாரூர்த் திருக்குளம் கல்லிய தண்டியடிகளாரும் நமக்கு உணர்த்திய மரபு மீளவும் பின்பற்றத் தகுந்தது. அந்த மரபை அடிப்படையாகக் கொண்டு உழவாரப் படை அமைத்து, திருப்பணி செய்கிற குழுக்கள் பல வளர்ந்து வருகின்றன. வழிபடு தலங்களில் திருப்பணி செய்வதைக் கடமையாகக் கொண்டிருக்கின்றன.
 பாவம் செய்துவிட்டுப் பரிகாரம் தேடுவதைவிடவும், பாவமே புரியாமல் பயனுடைய வண்ணம் ஆவன செய்யப் பழகிவிட்டால், அனைத்தும் நன்றாகுமன்றோ? அதனால் குற்றங்களை மறந்துவிடுகிற குழந்தைகளையும், மன்னித்து விடுகிற தெய்வங்களையும் கொண்டாடுகிற விதத்தில் நாம் கவனத்தைச் செலுத்துவது அவசியம்.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT