நடுப்பக்கக் கட்டுரைகள்

நாம் யார் என்பதறிவோம்!

23rd Nov 2022 03:17 AM |  கோதை ஜோதிலட்சுமி

ADVERTISEMENT

புராணங்களில் இடம் பெற்றிருக்கும் நவீன அறிவியல் கருத்துகளை ஆய்வு செய்யும் அறிவியல் அறிஞர்கள் அதை உண்மை என்று நிரூபிக்கிறார்கள். மற்றொருபுறம் நம்முடைய புராணங்கள் கட்டுக் கதைகள் என்று நம்மவர்களே சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள்.
 சங்கத் தமிழ் இலக்கியங்களில் காதலும் வீரமும் மட்டுமே பேசப்படுவதாகப் பொதுவாகச் சொல்லி வைக்கிறார்கள். சங்க இலக்கியம் வானியல் முதலான அறிவியல் பற்றியும் பேசுகிறது. ரிக் வேதமும் வானியல் தொடர்பான நுட்பங்களைப் பற்றிப் பேசுகிறது. இரண்டிலும் நமக்குப் பரிச்சயம் இல்லை. தமிழரான நமக்கு ஏன் இவற்றைப் படிப்பதற்கான சூழல் அமையவில்லை?
 புராணங்கள் வரலாற்றைச் சொல்பவை. காலம் மிகக் கடந்த காரணத்தால் அவற்றை நிறுவுவதற்கான தரவுகள் இல்லாமல் போய்விடுகின்றன. புராணங்களே சான்றுகளாக எஞ்சி நிற்கின்றன. காஞ்சி மகா ஸ்வாமிகள், தமது "தெய்வத்தின் குரல்' எனும் நூலில் புராணங்கள் மட்டுமல்ல, ஸ்தல புராணங்களும் அதிகத் தகவல்களைச் சொல்கின்றன என்று குறிப்பிடுகிறார்.
 ஸ்தல புராணங்கள் ஓர் இடத்தின், ஆலயத்தின் கதை என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், அவற்றில் பொதிந்திருக்கும் உண்மைகள் ஏராளம். ஸ்தலபுராணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கின்றன என்று சொல்கிறார்கள். மகா ஸ்வாமிகள் நம்முடைய கற்றலில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மிடம் இருப்பவற்றை நாமே கற்றுக்கொள்ளாமல் உண்மை எது பொய் எது எனத் தெரியாமல் நிற்பதன் பின்புலம் யாது?
 சென்ற நூற்றாண்டு வரை ஒவ்வொரு சமூகத்திற்கும் எழுதப்பட்ட வரலாறு இருந்தது. தற்போது யாருக்கும் அது பற்றிய உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. படிப்பவர் இல்லாத காரணத்தால் ஒவ்வொன்றாக அழிந்து போய்விட்டன.
 நம்முடைய மூதாதையர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்னென்ன அரும்பெரும் சாதனைகளைச் செய்தார்கள் என்பவை பற்றிய தகவல்கள் நமக்குத் தெரிவதில்லை. "ஜாதிகளை ஒழிக்கிறோம்' என்று பெருங்குரலில் பேசியவர்களால் ஜாதிய அரசியல் இன்றளவும் நடக்கிறது. ஆனால், நமது சமூகப் பெரியவர்களின் வரலாறுகள் காணாமல் போய்விட்டன. இதன் பின்னிருக்கும் காரணம் என்ன?
 சமீபத்தில் மனுஸ்ம்ருதி குறித்த ஒரு புத்தகம் அரசியல் கட்சியினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலும் அட்டைப் படத்தில் உடன்கட்டை ஏறுவது போன்றதொரு காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மனுஸ்ம்ருதியில் உடன்கட்டை ஏறுவது போன்ற பழக்கங்கள் பேசப்படவில்லை. ஆனால் நமக்கு அது தெரியாது. பிறர் சொல்வதை நம்பி ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
 "சதி' என்று கூறப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம் வடவரின் கலாசாரத்தில் இருந்த கொடிய முறை என்று பேசுகிறார்கள். உண்மையில் சங்க இலக்கியங்களில் உடன்கட்டை ஏறுதல் தெளிவாகப் பேசப்பட்டிருக்கிறது. கணவன் இறந்துவிட்டால் பெண்கள் கொடுமையான கைம்மை நோன்பு மேற்கொண்டதைப் பற்றி புறநானூற்றில் பதினெட்டுப் பாடல்கள் பேசுகின்றன. அப்படிப்பட்ட வழக்கம் பார்ப்பனர்களிடம் இருந்திருக்கவில்லை.
 போர்க்களம் புகுந்த தமிழ் மறக்குல வீரர்களின் மனைவியர் இங்ஙனம் கைம்மை நோன்பு மேற்கொண்ட தகவல்களே இருக்கின்றன. மொட்டை அடித்துக் கொண்டு பத்திய உணவை உண்டு சரளைக்கற்கள் நிறைந்த தரையில் பாய் கூட இல்லாமல் அவர்கள் படுத்துக் கொண்டனர் என்றெல்லாம் செய்தி இருக்கிறது. இளம்பெண்களும் கைம்மை நோன்பைத் தங்கள் வாழ்நாளெல்லாம் பின்பற்றினர் என்றும் புறநானூறு பேசுகிறது.
 "உடன்கட்டை ஏறுதல்', "உடன்பள்ளி கொள்ளுதல்' என்று கணவனின் இறந்த உடலை எரித்த தீயில் பெண்கள் தாங்களும் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி பேசப்பட்டிருக்கிறது. பாண்டியன் அறிவுடை நம்பியின் இளம் மனைவி உடன்கட்டை ஏறிய செய்தியை நேரில் பார்த்ததாகப் புலவர் மதுரைப் பேராலவாயர் பதிவு செய்கிறார்.
 பாண்டிமாதேவி பெருங்கோப்பெண்டு கற்றறிந்த பெண். அவளே தன் இறப்புக்கு முன்பதிவு செய்வதாக ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றிருக்கிறது. "பல்சான்றீரே பல்சான்றீரே செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும் பொல்லா சூழ்ச்சிப் பல்சான்றீரே' என சான்றோர்கள் அவளை உடன்கட்டை ஏற வேண்டாமெனத் தடுப்பதாகவும் கைம்மை நோன்பை விட என் காதல்கணவரோடு வீடுபேறு அடைவதே தனக்கு ஆனந்தம் என்று சொல்வதாகவும் அந்தப் பாடல் அமைந்திருக்கிறது. மன்னன் ஆய்அண்டிரன் இறந்த பொழுது அவனது மனைவியர் அவனோடு உடன்கட்டை ஏறியதை நேரில் பார்த்ததாக உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடுகிறார்.
 உடன்கட்டை ஏறுதல் கொடிய வழக்கம் என்பதிலே நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஒழிக்கப்பட வேண்டியது என்பதை உணர்ந்தே சான்றோர்கள் அதனை மறுத்துள்ளனர். என்றாலும் அதனை வடவரின் சதி என்று சொல்வதில் அர்த்தமில்லை. அப்படிக் கூறுவதில் அரசியல் மட்டுமே இருக்கிறது. இப்படிப் பேசுவோருக்குத் தமிழின் புறநானூறு தெரியுமா? தெரிந்திருந்தும் நம்மிடம் கதை சொல்கிறார்கள் என்றால் நம்மை முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதுதான் பொருள். அவர்களுக்கே தமிழில் இப்படி ஓர் இலக்கியம் இருப்பது தெரியவில்லை எனில் தமிழறியாத இவர்களையா நாம் நமக்கான வழிகாட்டிகள் என்றும், தலைவர்கள் என்றும் ஏற்பது?
 சிந்திக்க வேண்டிய இடம் இதுவே. நமக்குப் புறநானூறு தெரிந்திருக்குமேயானால் இத்தகைய வழக்கம் நாடு முழுவதும் இருந்திருக்கிறது என்ற புரிதல் ஏற்பட்டிருக்கும். வெற்று அரசியலை அடையாளம் கண்டு ஒதுக்கியிருப்போம். அரசியல் நமது தேவைகளை, முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டும் என்று உணர்ந்திருப்போம். அப்படி நாம் உணர்ந்துகொள்ளும்பட்சத்தில் அரசியல்வாதிகள் நம்மை உணர்ச்சிவயப்படச் செய்து அரசியல் செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படியென்றால், நாம் தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாமல் போனதில் அரசியல் இருக்கிறதா?
 ஹிந்துக்களைப் பொறுத்தவரை எந்த இறைவனை வணங்குகிறோம் என்பதை விட எந்த தர்மத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். பாவம், புண்ணியம் என்ற சிந்தனையே அவர்களை வழிநடத்துகிறது. கர்மவினை என்று நமக்கு ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொள்வதும், நல்வாய்ப்புகளை முன்னோர் செய்த புண்ணியம் என்று எண்ணி நன்றி பாராட்டுவதும் ஒவ்வொரு ஹிந்துவின் மரபணுவில் நிறைந்திருக்கிறது. தர்ம சாஸ்திரங்கள் தெரியாவிட்டாலும் இந்த நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது.
 தொல்லியல் அறிஞர் நாகசாமி, "தர்ம சாஸ்திரங்களைத் தொகுத்து எளிதாகப் புரியும்படியாக திருவள்ளுவர் திருக்குறளை வழங்கியிருக்கிறார்' என்று சான்றுகளோடு நிரூபித்து நூல் எழுதியிருக்கிறார்கள். இதனைப் படிப்பதற்கான வாய்ப்பு நமக்குப் பள்ளிக்கூடத்திலோ, கல்லூரியிலோ கிடைப்பதில்லை. ஆனால், திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் என்று புதிது புதிதாகக் கதை சொல்கிறார்கள். முழுமையாகத் திருக்குறளை தர்ம சாஸ்திரங்களின் சாரத்தைப் படிப்பதற்கான வாய்ப்பு நமக்கு வாய்க்காததற்குப் பின்னும் அரசியல் இருக்கிறதா?
 சமய மறுமலர்ச்சி தமிழ் மண்ணில் நிகழ்ந்ததைப் போல உலகின் வேறு எந்தப் பகுதியிலும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. புற சமயங்களால் நம்முடைய சமயங்கள் நலிவுற்றபொழுது, ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றி தமிழால் சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமத்திலும் கூட அந்த கிராமத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பெருமையை ஏந்தி நிற்கும் படியாக தமிழ் தேவாரமும் திவ்யப்பிரபந்தமும் பாடுகின்றன.
 "தமிழ் ஞானசம்பந்தன்' என்றே தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார் திருஞானசம்பந்தர். "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்தவன்' என்று திருஞானசம்பந்தர் சமயம் பரப்பியதைக் காட்டிலும், அன்றாடம் தமிழ் பரப்பியது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தெரியாமல் போனதற்குக் காரணம் யார் அல்லது எது?
 தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளைப் படிப்பது தொடர்பாக சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சம்ஸ்கிருதம் நமக்கு விரோதமானது என்பதை நிறுவுவதற்காகவே மனுஸ்ம்ருதி போன்ற நூல்கள் எதிர்மறை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. தமிழை வாழ வைத்து அடுத்த தலைமுறைக்குத் தந்த தமிழ் அறிஞர்கள் பன்மொழிப் புலமை கொண்டவர்களாக இருந்தனர் என்பதை இன்றைய தலைமுறை அறியுமா?
 பல மொழிகளைக் கற்றுணர்ந்தவர் பன்மொழி வல்லார். "ஒரு மொழியின் இலக்கியத்தை சிறந்தது என சொல்லவேண்டுமானால் பிற மொழி இலக்கியங்களைப் பற்றிய அறிவும் சிறப்பெனக் குறிப்பிடும் இலக்கியத்தின் மொழியில் நுண்மாண்நுழைபுலமும் பெற்றிருக்க வேண்டும். பிறவற்றை அறியாமலோ, தன்னுடையதை முழுமையாக உணராமலோ புதிய தடங்களைக் காண முடியாது' என்கிறார் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்.
 இவரை இளைஞர்களுக்குத் தெரியுமா? வரலாறு, பொருளியல், அரசியல், சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர். சம்ஸ்கிருதம், ஹிந்தி உட்பட பதினெட்டு மொழிகள் அறிந்திருந்தார். அவரைப் பற்றி நமக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டதற்குப் பின்னிருக்கும் அரசியல் எது?
 தமிழர்கள் என்று பெருமிதப்படும் நமக்குத் தமிழ் முழுமையாகத் தெரியாது. பள்ளிக்கூடங்களில் தமிழில் தேர்ச்சி பெறுவது கூட கடினம் என்ற நிலைக்கு எப்படி வந்தோம்? தமிழின் பொக்கிஷங்களை நம்மிடமிருந்து மறைப்பதற்கான காரணம் யாது? காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் தொடர்பு உண்டு என்று நம்பும் தமிழர்களை ஹிந்துக்கள் இல்லை என்று வாதிடுவது எதனால்?
 தர்ம சாஸ்திரங்களை நம்பும் நாட்டில் "சநாதனத்தை வேரறுப்போம்' என்ற கூக்குரலுக்குப் பின்னிருக்கும் மர்மம் என்ன? தமிழ் கற்றுக் கொள்வதற்கு முயலும்பட்சத்தில் இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அரசியல் தந்திரங்கள் எடுபடாமல் போகும். நாம் யார் என்பதையும், நம் முன்னோர் காட்டிய வழி யாதென்பதையும் தெரிந்து கொண்டால் புதிய சிந்தனைகளோடு புதிய வாசல் திறக்கும்.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT