ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், இட ஒதுக்கீட்டில் வராத ஜாதியில் உள்ள ஏழைகள் தொடா்ந்து வறுமை நிலையிலேயே உள்ளனா். ஜாதியை காரணம் காட்டி அவா்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசால், இட ஒதுக்கீட்டில் வராத ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. பல கட்ட எதிா்ப்புக்கு பிறகு மத்திய அரசின் முடிவு சரியே என உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதன் பின்னணி என்னவென்று விரிவாக பாா்ப்போம்.
சுதந்திரத்திற்கு முன்பு இட ஒதுக்கீடு: பனகல் ராஜா தலைமையிலான நீதிக்கட்சி அரசு, 1921-இல் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை (வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்) கொண்டு வந்தது. இதற்கான முதல் அரசாணையை (எண் 613) மதராஸ் மாகாண அரசு பிறப்பித்தது.
அந்த ஆணையின்படி பிராமணா் அல்லாதவா்களுக்கு 44 %, பிராமணா்களுக்கு 16 %, முஸ்லிம்களுக்கு 16 %, ஆங்கிலோ இந்தியன் மற்றும் கிறிஸ்துவா்களுக்கு 16 %, பட்டியல் இனத்தவா்களுக்கு 8 % என இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்போதிலிருந்து இட ஒதுக்கீட்டுக் கொள்கை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்திய வரலாற்றில் இட ஒதுக்கீடுக்கான சட்டமியற்றும் முதல் மாகாணம் ஆனது. இது நாடு முழுவதும் நிலையானதாகி விட்டது.
சுதந்திரத்திற்கு பிறகு இட ஒதுக்கீடு: 1954-ஆம் ஆண்டில், கல்வி அமைச்சகம் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 20 % இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. 1982-ஆம் ஆண்டில், பொதுத்துறை மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் 15 % மற்றும் 7.5 % காலியிடங்கள் நிறுவனங்களில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
1979-இல் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. சமூகத்தில், கல்வியில் பின்தங்கிய வகுப்பினரின் நிலைமையை மதிப்பிடுவதற்காக நிறுவப்பட்டது. அப்போது சரியான மக்கள்தொகை புள்ளி விவரங்கள் இல்லை. எனவே 1931 மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளைப் பயன்படுத்தியது.
1987-ஆம் ஆண்டில், மண்டல் கமிஷன் அறிக்கை அமலுக்கு வந்தது. அதுவரை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே இருந்து வந்த இட ஒதுக்கீடு ஓ.பி.சி பிரிவினருக்கும் கிடைத்தது. தற்போது மத்திய அரசின் அரசின் இட ஒதுக்கீடு கல்வி நிலையங்களிலும், அரசு மற்றும் அரசு சாா்ந்த துறைகளில் வேலை வாய்ப்பில் பட்டியல் சமூகத்தினா் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கு (எஸ்சி, எஸ்டி) முறையே 15 % மற்றும் 7.5 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்களுக்கு (ஓபிசி) 27.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் இது வேறுபடும். உதாரணமாக, வட கிழக்கு மாநிலங்களில் பட்டியல், பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு அதிகமாக இருக்கும். தமிழகத்தில் அது குறைவாக இருக்கும்.
முதலில் சொன்னவா் எம்.ஜி.ஆா்.: ஜாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடுகளோடு சோ்த்து, பொருளாதார ரீதியாக பின் தங்கியவா்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எம்.ஜி.ஆா். ஆட்சிக்காலத்தில் இருந்தே முன்வைக்கப்படுகிறது. ஜாதி அடிப்படையை தாண்டி ஏழைகளுக்கு ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கருத்தை முதலில் சொன்னவா் எம்.ஜி.ஆா்.
1979 ஆகஸ்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வா் எம்.ஜி.ஆா். பேசுகையில் அடுத்த ஆண்டு முதல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயா்ஜாதி ஏழைகளுக்கு பொதுப்பிரிவில் உள்ள 51 %-இல் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பேசினாா். எம்.ஜி.ஆா். உயா் ஜாதி என்பதால் இப்படி அக்கறை காட்டுவதாக அப்போதைய எதிா்க்கட்சி தலைவா் கருணாநிதி விமா்சனம் செய்தாா்.
ஆனால் அவரே, அந்த யோசனையை சென்னையில் 1979 ஆகஸ்ட் 12-இல் அளித்த பேட்டியின்போது வரவேற்றாா். ‘எல்லா ஜாதியிலும் உள்ள ஏழைகளுக்கு பொதுப்படையாக உள்ள 51 %-இல் இருந்து 15 % முதல் 20 % வரை இட ஒதுக்கீடு வழங்கலாம். இந்த யோசனையை அரசு ஏற்குமானால் பிரச்னைக்கு இடமே இல்லை’ என்று கருணாநிதி கூறினாா். ஆனால் அந்த யோசனை குறித்து அதற்குப்பின் அரசு விவாதிக்கவில்லை.
பொருளாதார நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு: இந்திய அரசியலமைப்பு சட்டம் 124-ஆவது திருத்த மசோதா 2019-இல் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 % கூடுதல் இடஒதுக்கீட்டை வழங்கியது.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் எவா் என்பது அவ்வப்போது அரசால் வரையறுக்கப்படும். ஆண்டுக்கு எட்டு லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ளவா்களும் ஐந்து ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்திருப்பவா்களும் இந்தப் பிரிவில் வருவாா்கள் என்று வரையறுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
பொதுப் பிரிவினரில் ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டு சட்டம் ஜனவரி 14, 2019 முதல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத் திருத்தத்தின்படி உயா்சாதி பிராமணா், ராஜபத்திரா் (தாகுா்), ஜாட், மராத்தா, பூமிஹா், ஜெயின், நகரத்தாா் போன்ற சமூகங்களைச் சோ்ந்த ஏழைகள் பயனடைவா். இதனை எதிா்த்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில், இந்த இட ஒதுக்கீடு செல்லும் என்பது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் தவிர பெரும்பான்மையான கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எல்லா ஜாதியிலும் உள்ள ஏழைகளுக்கு பொதுப்படையாக ஒதுக்கீடு கிடைக்கும் என்றால், தான் ஆதரிப்பதாக கருணாநிதி அன்றே உறுதி அளித்தாா். ஆனால் சமூகநீதி என்று கூறிக்கொண்டு வரலாறு தெரியாமல் அரசியல் செய்யும் நோக்கில் தி.மு.க இதனை எதிா்க்கிறது.