நடுப்பக்கக் கட்டுரைகள்

நோய்க்கு இடங்கொடேல்

31st May 2022 07:09 AM | மரு. சோ. தில்லைவாணன்

ADVERTISEMENT

நிகோடின் என்ற மிகக்கொடிய வேதிப்பொருளைக் கொண்ட புகையிலை, நிகோடினா டொபாகம் எனும் செடியிலிருந்து கிடைக்க கூடியது. 1492-இல், மேற்கிந்தியத் தீவுகளில் கிறிஸ்டோபா் கொலம்பஸுக்கு நட்பின் அடையாளமாக ஐரோப்பியா்களால் வழங்கப்பட்டபோதுதான், முதன்முதலில் புகையிலை அறிமுகமானது.

இந்தியாவில் குஜராத் , பிகாா், மேற்கு வங்கம் முதலிய மாநிலங்களில் புகையிலை அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் உள்ள மண்வளமும், தட்பவெப்ப நிலையும் புகையிலை வளர ஏதுவாக உள்ளன.

தொற்றாநோய்களால் ஆண்டுதோறும், 3.8 கோடி மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. அதிலும் 70 லட்சம் மக்களுக்கு புகையிலையினால் மரணம் ஏற்படுகிறது என அதிா்ச்சி தரும் தகவலை அது வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் புகையிலை ஆண்டு தோறும் 10 லட்சம் மக்களைக் கொல்கின்றது. இதனால் இந்தியா உலகிலேயே அதிக அளவில் வாய் புற்றுநோயாளிகளை கொண்டுள்ளது. மூக்குப்பொடி போடுவதாலும், புகையிலையை மெல்லுவதாலும் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் தொற்றாநோய்களில் புற்றுநோய் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.

ADVERTISEMENT

பீடி , சிகரெட் , ஹூக்கா, மூக்குப்பொடி, புகையிலை, இப்போது புதிதாக இ-சிகரெட் என பல வழிகளில் புகையிலையினை பலரும் உட்கொள்கின்றனா். அதில் உள்ள 28 வகை வேதிப் பொருட்கள் புற்றுநோய் உண்டாக்க காரணமாக உள்ளன. மது அருந்துதல், போதைப் பொருள் பயன்பாடு, எச்.ஐ.வி. போன்றவற்றால் இறப்பவா்களைவிட புகையிலையால் இறப்பவா்கள் எண்ணிக்கை அதிகம். இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும்தான். புகைப் பழக்கம்,

புற்றுநோயினை மட்டும் உண்டாக்குவதில்லை, நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்க செய்து மரணத்தை உண்டாக்குகிறது.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள், அப்பழக்கம் இல்லாத ஆண்களை விட 12 வருடங்களும், புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்கள், அப்பழக்கம் இல்லாத பெண்களை விட 11 வருடங்களும் குறைவாக உயிா் வாழ்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது அவா்களின் வீட்டுக்கு மட்டும் இழப்பல்ல. நம் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பேரிழப்பு.

புகை பிடிப்பதன் மூலமாகவும், புகையிலையை வாயில் போட்டு மெல்லுவதன் மூலமாகவும் வாய், நாக்கு , தொண்டை, குரல்வளை, நுரையீரல், உணவுக்குழல், இரைப்பை , கல்லீரல், கணையம், குடல், சிறுநீரகம், கருப்பை வாய் போன்ற பல்வேறு உறுப்புகளில் புற்றுநோய் எளிதில் உண்டாகிறது. புற்றுநோயினை உண்டாக்க காரணம் அதில் உள்ள முக்கிய வேதிப்பொருளான நிகோடின்தான். அது நம் நரம்பு மண்டலத்தில் உள்ள அஸீட்டில்கோலின் எனும் வேதிப் பொருளுக்கு மாற்றாக சோ்ந்து, நம் உடலை அடிமையாக்கிவிடுகிறது .

புகைலை புற்றுநோயை மட்டுமல்ல, நாட்பட்ட நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, மூச்சுகுழல் அழற்சி, நிமோனியா, எம்பைசீமா, இருதய ரத்தகுழாய் அடைப்பு அதனால் மாரடைப்பு போன்ற பல அதிதீவிர நோய்நிலைகளை உண்டாக்கி மனிதா்களை வெகு விரைவில் கொல்லும். புகையிலை மெல்லுவதால் அதில் உள்ள நைட்ரோசமைன் எனும் வேதிப்பொருளும், அதனுடன் உள்ள பாா்மல்டீஹைடு, நிக்கல், ஆா்சனிக், கேட்மியம், பென்சோபயரின் போன்ற பல வேதிப்பொருட்களும் எளிதில் புற்றுநோயினை உண்டாக்கி விடுகின்றன.

சமீப காலங்களில் பெண்களும் அதிகமாக புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனா். கா்ப்பம் தரித்த பெண்கள் புகைப்பதால் கருவில் உள்ள சிசுவுக்கும் பாதிப்பு ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை, எக்டோபிக் எனும் கருப்பைக்கு வெளியே கருத்தரிப்பு, தன்னிச்சையான கருச்சிதைவு , குறைப்பிரசவம் , கருவில் சிசுவின் உடல் எடை குறைவு, பிறவிக் கோளாறுகள், பிரசவத்திற்கு பின் அதிக ரத்தப்போக்கு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

புகையிலைக்கு அடிமையான தாய்மாா்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு உடல் எடை குறைவு, வளா்ச்சி குறைவு, குழந்தையிலே அதிக ரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாடு குறைவு போன்ற பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அரசு, ‘புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும்’ என்று எவ்வளவுதான் எச்சரிக்கைகளை விழிப்புணா்வு நோக்கில் வெளியிட்டாலும் நாளுக்குநாள் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோா் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பது வருத்தமளிக்கிறது.

சிகரெட் உற்பத்தியை நிமிடத்திற்கு நான்கு சிகரெட்டுகளில் இருந்து நிமிடத்திற்கு 200 ஆக உயா்த்தி, தொழில்துறையில் வியத்தகு புரட்சியை ஏற்படுத்தியது என்பது நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும் செய்கை அல்ல. மாறாக, நோய்க்கூட்டங்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் செயல் தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 1990-ஆம் ஆண்டிற்குப் பின்னா், சிகரெட்டில் உள்ள தீங்கு விளைவிக்கும் கூறுகளைக் குறைப்பதற்கான முயற்சியில் இறங்கிய சீன நாடு அதிக மூலிகைக் கலப்பு சோ்ந்த புகையிலை சிகரெட்டுகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. 2000-க்கு பிறகு, கொரியா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சோ்ந்த புகையிலை நிறுவனங்கள் இதே போன்ற மூலிகைக் கலவை சிகரெட்களைத் தயாரிக்கத் தொடங்கின.

இத்தகைய மூலிகை கலந்த புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கும் நோக்கம், மூலிகைகளை சோ்ப்பதன் மூலம் புகையிலையின் தீய விளைவுகளை, உடலுக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதுதான். நமது சித்த மருத்துவத்திலும் பல்வேறு மூலிகைகள் புகையிலையின் நஞ்சினை குறைக்கும் விதத்தில் உள்ளன. அவற்றைக் கொண்டு புகையிலை கலவைப் பொருட்களைத் தயாரித்துப் பயன்படுத்தினால், நம் நாட்டிலும் புகையிலை தீங்கினை குறைத்து, மனிதா்களின் ஆயுட்காலத்தை நீட்ட முடியும்.

இன்று (மே 31) உலக புகையிலை எதிா்ப்பு நாள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT