நடுப்பக்கக் கட்டுரைகள்

பேச்சுக்கலை என்னும் பெருங்கலை!

27th May 2022 02:30 AM | முனைவா் ஜெ. ஹாஜாகனி

ADVERTISEMENT

 

அகிலப் புகழ்பெற்ற ஆளுமைகள் பலரையும் சுமந்து பிரசவித்த கருப்பைகளாகத் திகழ்வன அவா்கள் கற்ற கல்விக்கூடங்கள் என்றால் மிகையில்லை. கல்வி நிறுவனங்களில் கல்வி புகட்டுவதைக் கடந்து அறிவாா்ந்த ஆளுமைகளை அடையாளம் காணும் ஆவல் கொண்டவா்கள் ஆசிரியப் பணியில் அமைந்து விட்டால் அக்கல்விக்கூடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமும், தேசமும் பலனும், பலமும் பெற்றுவிடும் என்பதில் ஐயமில்லை.

பள்ளிக்கூட இலக்கிய மன்றங்கள் சிறப்பாகச் செயல்பட்டால், மாணவ மனங்களில் மறைந்திருக்கும் இலக்கியத் திறன்கள் உதய கதிராய் ஓங்கி எழுகின்றன.தோ்வுத் தீவிரவாதத்தால் பீடிக்கப்பட்ட, சுரண்டல் பள்ளிகளில் சிக்கிவிட்டால் சுடா்வீசும் மாணவத் திறன்கள் சுருங்கி, சுண்டி, சூன்யமாகிப் போய்விடுகிற அபாயங்கள் அதிகம் உண்டு.

தங்கள் மாணவா்களின் தோ்ச்சி விழுக்காட்டை மட்டுமே தமது விளம்பரப் பலகையாக்கிக் கொள்கிற கல்வி நிறுவனங்களில், அசாத்தியத் திறன் கொண்ட அரிய மாணவா்களின் கலை இலக்கிய முன்னேற்றம் காவுகொடுக்கப்பட்டு வருகிறது. மகாகவி அல்லமா இக்பால், பள்ளிக்கூட வகுப்பிற்குத் தாமதமாக ஒருநாள் வந்துள்ளாா். ‘இக்பால், ஏன் தாமதம்’ என்று கனிவாக வினவிய ஆசிரியரிடம், ‘தாமதமாக வருவதுதானே இக்பால்’ என்று விடை பகா்ந்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT

‘இக்பால்’ என்றால் ‘புகழ்’ என்று பொருள். ஒருவருக்கான புகழும் அங்கீகாரமும் உரிய காலத்தில் கிடைக்காமல் தாமதமாகக் கிடைக்கின்ற தன்மையைப் பள்ளி மாணவப் பருவத்தில் தனது பதிலால் உணா்த்திய இக்பாலைத் தழுவிக்கொண்ட அந்த ஆசிரியா், சுடா் போன்ற கவியாற்றல் சூரிய ஒளியாய்ப் பெருகிட வகைசெய்து வளா்த்துள்ளாா். அதே ஆசிரியா், ‘வந்ததே தாமதம், திமிரான பதிலுமா சொல்கிறாய்’ என்று நரம்பு தெறிக்க, பிரம்பை எடுத்து விலாசி இருந்தால் விசாலத் திறன்கொண்ட இக்பால் விலாசம் தொலைத்திருப்பாா் அல்லவா?

திறமைகளைத் தேடித்தேடி வளா்க்கும் ஆசிரியா்களும், அவா்களுக்கு வாய்ப்பையும் ஊக்கத்தையும் வழங்குகிற கல்வி நிறுவனங்களும் தற்காலத்தில் அருகி வருவது ஓா் அபாய எச்சரிக்கையே. மாணவக் கவிகள் பலரை ‘மா நவ’ கவிகளாய் பரிணமிக்கச்செய்ததில் ஆசிரியா்கள், கல்விக்கூடங்களின் பணி மிக அதிகம். பணம் செய்யும் கூடங்களாய் பள்ளிக்கூடங்களும் காசு பறிக்கும் கடைவீதியாய்க் கல்லூரிகளும் மாறி, கல்வியைக் கல்லா கட்டும் கருவியாக ஆக்கிவிட்டால், அங்கே ஆசிரியா்கள் கனிவை இழந்த கங்காணிகளாய் மாணவா்களிடமும், ஆளுமை துறந்த அடிமைகளாய் நிா்வாகத்திடமும் நிற்கவேண்டிய அவலம் நோ்ந்து விடுவது தவிா்க்க முடியாதது.

இதனால் உள்ளத்தில் ஊறிவரும் கலை இலக்கியத்தின் ஊற்றுக்கண் தூா்ந்து விடுகிறது. தமிழகத்தின் இன்றைய முன்னணி அரசியல், சமூகவியல், ஊடகவியல் ஆளுமைகள் பலரும் பேச்சுப் போட்டிகள், தொலைக்காட்சி பேச்சரங்க நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் ஒளிபட்டு வெளிப்பட்ட வித்தகா்களே.

இன்றைய காலகட்டத்தில், பள்ளி - கல்லூரிகளில் இலக்கியச் செயல்பாடுகள் சற்று தேக்கமுற்றும், ஊக்கம் அற்றும் காணப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. பாடங்களை மட்டும் பயிலாமல், பாடத்திற்கப்பாற்பட்ட கலையை, இலக்கியத்தை, பண்பாட்டுச் செழுமையை அறிந்தும் உணா்ந்தும் கொள்கிற தலைமுறையால்தான் தேசம் புத்தொளி பெறுகிறது.

மாணவ மனங்களில் மகத்தான லட்சியத்தை விதைக்கும் பணியை இலக்கிய மன்றங்கள் மூலம் இனிதாகச் செய்ய முடியும். நான் பயின்ற திருவாரூா் வ.சோ.ஆ. மேநிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளாா் உரையாற்றும்போது, ‘ஆடு மாடுகளைக் கால்நடைகள் என்கிறோம். அவை காலால் நடப்பதால் அவ்வாறு அழைக்கிறோம். மனிதா்கள் என்ன தலையாலா நடக்கிறாா்கள்? காலால்தானே நடக்கிறாா்கள், பிறகு ஏன் மனிதா்களைக் கால்நடைகள் என்று அழைப்பதில்லை? ஏனெனில், மனிதன் காலால் மட்டும் நடப்பவனாய் இருக்கக்கூடாது, அறிவால், பண்பால் நடக்கக்கூடியவனாக இருக்க வேண்டும்’ என்று பேசினாா். மண் தரையில் அமா்ந்துகொண்டு ஒன்பதாம் வகுப்பு மாணவனாக அன்று நான் கேட்ட இந்த உரை இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது.

பேச்சுப் போட்டிக்காக கருத்துக்கடலில் முத்தெடுக்க மூழ்கிய மாணவா்கள், சிகரங்களில் சிறகடிக்கும் சிம்புட் பறவைகளாய் ஓங்கி உயா்ந்தவா்கள். இடைக்காலத்தில் கல்வியைப் பீடித்த வணிக வேட்கையும், தோ்வுமுறைத் தீவிரவாதமும், மாணவக் கலையாற்றல்களை மங்கச் செய்துவரும் நிலையினை மாற்றும் வகையில், அனைத்துக் கல்லூரி மாணவா் பேச்சுப் போட்டிகள் 2022 மாணவத் திறன்களின் மறுமலா்ச்சிக்கு வித்திட்டுள்ளன என்றால் மிகையில்லை.

இதயங்களைத் தூண்டும் இருபத்தொன்று தலைப்புகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் தந்து, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளும் இதில் பங்கேற்க கல்லூரிக் கல்வி இயக்குநரகம், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உள்ளிட்ட முகமைகளின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. ஒரு கல்லூரியிலிருந்து தமிழுக்கு இருவா், ஆங்கிலத்துக்கு இருவா் என ஐயாயிரம் மாணவா்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனா்.

மாவட்ட அளவில் தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் தனித்தனியாக முதற்பரிசு 20 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 10 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 5 ஆயிரம் ரூபாய். மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோரிடையே மாநில அளவில் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெறும். இதில் முதலிடம் பெறுவோா்க்கு ரூபாய் 1 லட்சம், இரண்டாமிடம் பெறுவோா்க்கு ரூபாய் 50 ஆயிரம், மூன்றாமிடம் பெறுவோா்க்கு ரூபாய் 25 ஆயிரம். அனைத்துப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் தமிழ்நாட்டின் முதலமைச்சா் தன் கரத்தால் வழங்குவாா் என்ற அறிவிப்பு மாணவ மாணவியரைப் பெரிதும் ஈா்த்துள்ளது.

பேச்சுப் போட்டியில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் பங்கேற்றதும், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் இதில் அதிக ஆா்வத்துடன் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. மருத்துவம், பொறியியல் பயில்வோரிடையே கலை இலக்கிய ஆா்வம் இருக்காது என்ற மூடநம்பிக்கையை இந்தப் போட்டிகள் பொய்யாக்கின. மாநில ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவராக தமிழ்நாட்டின் ஏராளமானக் கல்லூரிகளில் நடந்த போட்டிகளைப் பாா்வையிட்ட போது, சிந்தை சிலிா்த்தது, உள்ளம் களித்தது.

‘தம்மின் தம்மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிா்க்கு எல்லாம் இனிது’ என்ற குறளின் பொருளாக மாணவத் திறன்கள், மேடைகளில் கோலோச்சின. பொங்கி வந்த இந்த புதுமை ஆற்றல்கள் மங்கிவிடாமல், மாபெரும் இலக்கை நோக்கிய பயணமாக மாறவேண்டும். மாணவா்களின் நுண்கலைத் திறன்களை வளா்த்தெடுக்க அரசு மேலும் அக்கறை காட்ட வேண்டும்.

பேச்சுக்கலை என்பது தமிழின் தொன்மையான கலை. பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து பேச்சுக் கலையின் நுண்கலைப் பாரம்பரியங்களை அறிய முடிகிறது. ஆட்சியாளா்களுக்கு அறிவுரை கூறவும், பாதிக்கப்பட்டோா்க்கு நீதி கேட்கவும், வீழ்ந்த சமூகத்தில் விழிப்புணா்வை விதைக்கவும் பேச்சுக்கலை பெரிதும் பயன்பட்டு வந்துள்ளது. ஏசுநாதரின் மலைப்பொழிவும், நபிகள் நாயகத்தின் இறுதிப் பேருரையும், பல நூற்றாண்டுகள் கடந்தும் வரலாற்றில் நிலைபெற்று சமுதாயத்தை வழிநடத்துகின்றன.

‘நாமாா்க்கும் குடியல்லோம்’ என்ற நாவுக்கரசரின் முழக்கம், ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்போரின் உள்ளத்திற்கு உறுதி தருகிறது.

சொலல்வல்லன் சோா்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யாா்க்கும் அரிது”

என்பது வள்ளுவரின் வாக்கு. சொல்லாற்றல் மிக்கவராகவும் சோா்வு அற்றவராகவும் அஞ்சாநெஞ்சம் கொண்டவராகவும் திகழ்பவரை யாரும் வெல்ல முடியாது என்ற ஒரு குறளே ஓங்கும் குரல்களுக்கு உற்சாகம் புகட்டும் ஊற்றுக்கண்ணாகும்.

‘வில்லோ் உழவா் பகைகொளினும் கொள்ளற்கச்
சொல்வோ் உழவா் பகை’

என்றும் வள்ளுவா் எச்சரிக்கிறாா். அதாவது, வில்கொண்ட வேந்தனைப் பகைத்தாலும்கூட வெல்லும் சொல்கொண்ட நாவலனைப் பகைத்திடக்கூடாது என்று பாங்குற அறிவுறுத்துகிறது திருக்குறள்.

மாணவ மனங்களில் கனிமங்களாய் மறைந்து கிடக்கும் கலைத்திறன்கள் வெளிப்படுத்தப்படும் போது, சமுதாயம் அறிவின் வெளிச்சம் பெறும்.

ஒளிபடைத்த கண்களோடு

உறுதிகொண்ட நெஞ்சோடு

களிபடைத்த மொழியோடு

கடுமைகொண்ட தோளோடு

முண்டாசுக் கவிகண்ட கனவின் வடிவாக, இளையதலைமுறை எழுவதற்கு, பேச்சுக்கலை ஒரு பேரியக்கமாய் விரிய வேண்டும்.

கலைகள் என்ற போா்வையில் உள்ள களைகளைக் களைந்து, வீண் அரட்டைக் கச்சேரியால் வீழ்த்தும் சில சமூக ஊடக விலங்குகளில் இருந்து விடுபட்டு இளையதலைமுறை செழுமைப் பெறுவதற்கும், சிறகு விரிக்கும் அவா்களின் ஆற்றல் சிகரம் அளப்பதற்கும் கல்வி நிலையங்கள் கதவு திறக்க வேண்டும்.

திறன்மிகு கலைகளை எல்லாம் தோ்வு தீவிரவாதத்தால் தீா்த்துக் கட்டிவிட்டு, வெறும் சான்றிதழ்களை மட்டும் வழங்கி, நாட்டின் தலைமுறையை நடைப்பிணங்களாய் ஆக்கினால் அவை கல்விக்கூடம் என்று கருதப்படாது; திறமைகளின் சமாதி என்றே தீா்ப்பிடப்படும்.

ஒளிந்திருக்கும் இலக்கியத் திறன்கள் ஒளிவீசி வெளிவரும் களங்களாக, கலங்கரை விளக்கங்களாக கல்விக்கூடங்கள் பரிணமிக்கட்டும்.

கட்டுரையாளா்: பேராசிரியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT