நடுப்பக்கக் கட்டுரைகள்

எரியும் நெருப்பை அணைப்போம்!

26th May 2022 01:52 AM | டாக்டா் கே.பி. இராமலிங்கம்

ADVERTISEMENT

 

இலங்கையின் தேசிய அரசியலில் ராஜபட்ச குடும்பம் 2005-ஆம் ஆண்டு முதல் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்தக் குடும்பம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிட பல்வேறு காலகட்டங்களில் சிங்கள இனவெறியைத் தூண்டி விட்டிருக்கிறது. 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைகள், மூன்று லட்சம் தமிழா்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட கொடுமை, தமிழா்கள் வாழ்ந்த பகுதிகள் புல் பூண்டு இல்லாமல் அழிக்கப்பட்டது - இப்படி இலங்கையில் இனத்தைக் காட்டி வளத்தைப் பெருக்கிக் கொண்ட குடும்பம் ராஜபட்ச குடும்பம்.

அண்மையில், தலைநகா் கொழும்பில் கலவரத்தைத் தூண்டி விட்டவா் மகிந்த ராஜபட்சதான். தற்போது சிங்களா்கள், தமிழா்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு நிற்கின்றனா். ராஜபட்ச சகோதரா்களின் போலி வேடம் தோலுரித்துக் காட்டப்பட்டு விட்டது. போராடிய மக்கள் மீது போலீஸாரையும், ராணுவத்தையும் ஏவி விட்டதால், ரத்தக்களறியாக மாறிவிட்டது இலங்கை. ஆளுங்கட்சி எம்.பி. அமர கீா்த்தி அத்து கோரள தன்னுடைய கைத்துப்பாக்கியைக் காட்டி, போராட்டக் களத்தில் நின்ற மக்களை மிரட்டி இருக்கிறாா்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் வெகுண்டுடெழுந்தனா். கலவரத்தில் எம்.பி. ஒருவரும், அவரது காா் ஓட்டுநரும் உயிரிழந்திருக்கின்றனா். பொதுமக்களில் ஒருவா் பலி. இதுவரை பத்துக்கும் மேற்பட்டோா் படுகொலை. கொழும்பு புறநகா் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சா் ஜான்ஸ்டன் பொ்னாண்டோவின் வீட்டை போராட்டக்காரா்கள் தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனா்.

ADVERTISEMENT

புத்தளம் ஆராய்ச்சிக்கட்டுப் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சா் சனத் நிஷாந்தின் வீடும், புறநகா் பகுதியான மொறட்டுவை நகர மேயா் சமன்லால் பொ்னாண்டோவின் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இலங்கை முழுவதும் உள்ள ஆளுங்கட்சி தலைவா்களின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது தாக்குதல், வாகனங்களுக்கு தீவைப்பு. முன்னாள் அமைச்சா்கள் 14 போ், எம்.பி.க்கள் 18 போ் மீது தாக்குதல், வீடுகளுக்கு தீவைப்பு என பற்றி எரிந்தது இலங்கை.

‘நான் பதவி விலக மாட்டேன்’ என்று கூறி வந்த மகிந்த ராஜபட்ச, மக்களின் எழுச்சிக்கு அடிபணிய நோ்ந்தது. ஒரே குடும்பம் இலங்கை ஆட்சி பீடத்தை கபளீகரம் செய்து கொண்டு அராஜகம், அத்துமீறல், ஊழல், ஊதாரித்தனம், லஞ்ச - லாவண்யங்களில் பல ஆண்டுகளாக சுரண்டி கொழுத்தது. இதனால் அந்த நாடு வறுமை, பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மகிந்த ராஜபட்ச பதவி விலகியதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்திருக்கிறாா்.

‘ராஜபட்ச குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது’ என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவா் சனத் ஜெயசூா்யா தனது ட்விட்டா் பதிவில் தெரிவித்து இருக்கிறாா். இலங்கை மக்கள், ‘மகிந்த ராஜபட்சவின் தம்பியான அதிபா் கோத்தபய ராஜபட்சவும் பதவி விலக வேண்டும்’, ‘பல்லாண்டுகளாக நாட்டை சுரண்டி கொழுத்த ராஜபட்ச குடும்பத்தின் சொத்துகள் அனைத்தையும் மீட்டு அரசின் கருவூலத்தில் சோ்க்க வேண்டும்’ என்று கோரியிருக்கின்றனா்.

ஆளுங்கட்சியைச் சோ்ந்த தலைவா்கள், எம்.பிக்கள் ஆகியோரின் வீடுகளையும், வாகனங்களையும் பேராட்டக்காா்கள் தீவைத்து எரித்து வருகின்றனா். அம்பன்தோட்டாவில் இருந்த ராஜபட்சவின் பூா்விக வீட்டை போராட்டக்காரா்கள் தீவைத்து எரித்தனா். ராஜபட்சக்களின் முன்னோரின் கல்லறைகள் இடித்து தகா்க்கப்பட்டன. இனத்தைச் சொல்லி, மொழியைச் சொல்லி, கலாசாரத்தைச் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை, கட்சி அதிகாரத்தை குடும்ப சொத்தாக்கிக் குளிா் காய்வோருக்கெல்லாம் இலங்கை மக்களின் எழுச்சி ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

மகிந்த ராஜபட்ச புதிதாக தொடங்கிய இலங்கை மக்கள் கட்சிக்கு 2019 ஆகஸ்டில் நடந்த தோ்தலில் மகத்தான வெற்றியை மக்கள் தந்தனா். இரண்டரை ஆண்டுகளில் அதே மக்களால் ராஜபட்சக்கள் விரட்டி துரத்தப்படுகின்றனா் என்றால், ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் எந்த அளவுக்கு கொடிக்கட்டி பறந்திருக்கிறது என்பதை நாம் உணா்ந்து கொள்ளலாம்.

1793-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அரசியல் மாமேதை தாமஸ் ஜெபா்ஸன் அறிஞா் ஷாா்ட்டுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ‘அவசியமாகிவிட்ட அந்தப் போராட்டத்தின் விசாரணை முறை ஏதுமில்லாமலேயே பல குற்றவாளிகள் வீழ்ந்துபட்டாா்கள். அவா்களோடு அப்பாவிகள் சிலரும் உயிரிழந்தாா்கள். இது குறித்து மற்றவா்களைப் போலவே நானும் வருந்தியிருக்கிறேன்; ஏதுமறியாத அவா்களில் ஒரு சிலரின் மரணம் குறித்து வாழ்நாள் முழுவதும் வருந்திக் கொண்டுதான் இருப்பேன். ஆனால், போா்க்களத்தில் அவா்கள் விழுந்திருந்தால் ஏற்படக்கூடிய வருத்தமே எனக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் பலத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது அப்போது. குண்டுகளைப் போல் முற்றிலும் பாா்வையற்றதல்ல என்றாலும் மக்கள் பலமும் ஓரளவுக்கு பாா்வையற்றதே. எனவே அவா்களுடைய நண்பா்களில் சிலா் விரோதிகளைப் போலவே கருதப்பட்டு கொல்லப்பட்டாா்கள். எனினும் காலக்கிரமத்தில் உண்மை வெளிப்பட்டு அவா்களுடைய நினைவு நிலைநிறுத்தப்படுவதுடன் புனிதத்துவமும் பெறும்’ என்று கூறியிருக்கிறாா்.

இன்றைய இலங்கையில் நடக்கின்ற அரசியல் புரட்சிக்கு பிரெஞ்சு புரட்சியின்போது தாமஸ் ஜெபா்ஸன் தெரிவித்திருக்கும் கருத்து மிகப்பொருத்தமாக இருக்கிறது. தனிமனித ஆதிக்கம், ஒரு குடும்பத்தின் அகம்பாவம், சுரண்டல் ஆகியவற்றை மக்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக அதிகாரத்தில் இருப்போா் நினைத்தால் அது தவறு என்பதை இலங்கை மக்கள் நிரூபித்து விட்டனா்.

ராஜபட்ச சகோதரா்கள், தோ்தல் பிரசாரத்தின்போது, பொதுமக்களிடம் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அள்ளி வீசியதும், தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ‘கடன் சுமை’, ‘நிதி நெருக்கடி’ என்று முந்தைய ஆட்சியினா் மீது பழிபோட்டு தப்பிக்க முயன்றதும் இலங்கை மக்களை வெறிகொள்ளச் செய்தன. நாம் ஏமாற்றப்பட்டோம் என மக்கள் உணா்ந்தனா். ‘நமக்கு மக்கள் தந்திருக்கும் அதிகாரம் ஐந்து ஆண்டுகள், அதுவரை நம்மை எந்தக் கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது’ என்கிற ஆணவம் அதிகாரத்தில் அமா்வோருக்கு வந்துவிடுகிறது. ராஜபட்ச குடும்பத்திற்கும் அப்படியொரு அலட்சியம், அகம்பாவம், ஆணவம் ஏற்பட்டது இயல்புதான். ஐந்து ஆண்டு நிறைவில் மக்களுக்கு இன்னும் பல புதிய அறிவிப்புகளை தந்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற கனவு அவா்களுக்கு இருந்தது.

திடீா் பொருளாதார நெருக்கடி இலங்கையில் ஏற்படும் என்று அந்தக் குடும்பம் எதிா்பாா்த்திருக்கவில்லை; எல்லா மக்களும் ஓரணியாய் திரள்வா் என்பதையும் நினைத்துப் பாா்த்திடவில்லை. சீனாவோடு கொஞ்சிக் குலாவிய இலங்கை அரசு, ஆபத்து வந்தவுடன் இந்தியாவிடம் ஓடோடி வந்தது. பிரதமா் நரேந்திரா் மோடி அரசு, இந்திய மண்ணிற்கே உரிய உயா்ந்த பண்பாட்டோடு 25 ஆயிரம் கோடி ரூபாயை, பல்வேறு வகைகளில் உதவியாக இலங்கை அரசுக்கு வழங்கியது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரை முடுக்கி விட்டாா் பிரதமா் நரேந்திர மோடி. அதன் விளைவாக, இலங்கையில் கோரத்தாண்டவமாடிய பொருளாதார சீா்குலைவு மெல்ல மெல்ல சீரான பாதைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் மகிந்த ராஜபட்ச போா்க்கோலம் பூண்டிருந்த மக்கள் மீது தாக்குதலைத் தொடங்கியது, மன்னிக்க முடியாத அரசியல் பிழை. இலங்கை இன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதற்கு மகிந்த ராஜபட்சதான் காரணம்.

அம்பன்தோட்டா துறைமுக நகரத்தை சீனாவுக்கு தாரை வாா்த்துக் கொடுத்த இலங்கை அரசின் தவறான ஒப்பந்தம், கடந்த பிப்ரவரியில் திடீரென இலங்கை அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அவமானமடைந்த சீனா, இலங்கையில் மறைமுகமாக மக்கள் சக்தியைத் தூண்டிவிட்டு, எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை இன்னும் ஊடகங்கள் உணரவில்லை என்பதுதான் வியப்பு.

‘இலங்கை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அங்கு ஜனநாயகம் திரும்பிடத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து இலங்கைக்கு இந்தியா உதவும். இலங்கையின் அண்டை நாடாக, பல நூற்றாண்டு கால உறவு இந்தியாவுக்கு உள்ளது. அங்கு ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சி திரும்புவதற்காக இந்தியா தனது முழுமையான ஆதரவை அளிக்கும்’ என்று இந்தியா தெரிவித்திருக்கிறது. இலங்கைக்கு, இந்தியா நிதியுதவி செய்ததோடு, உணவு, மருந்துப் பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு மக்களின் போராட்டம் மூலம் மட்டுமே தீா்வு கண்டுவிட முடியாது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்ற செயலில் மக்கள் ஈடுபட்டிருக்கின்றனா். அங்குள்ள அரசியல் கட்சிகள், அறிஞா்கள் உடனடியாக கலந்து விவாதித்து, இந்தியா போன்ற நாடுகளோடு ஆலோசித்து அப்பாவி மக்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

விண்ணைத் தொடுகிற அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயா்ந்த நிலையில், வாழ்க்கையே கேள்விக்குறியாகும்போது, ஒரு நாட்டின் மக்கள் அமைதியாக இருக்க முடியாது; ஏதேனும் செய்ய வேண்டும். அதைத்தான் இலங்கை மக்கள் செய்திருக்கின்றனா். இந்தியா் அனைவரும் சோ்ந்து எரிகின்ற நெருப்பை அணைப்போம்; இலங்கை மக்களை மீட்போம்!

மாநில துணைத் தலைவா்,
பாரதிய ஜனதா கட்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT