நடுப்பக்கக் கட்டுரைகள்

உறுதிப்படுத்தப்பட்ட மாநில சுயாட்சி!

உதயை மு. வீரையன்

இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்குப் பல்வேறு உரிமைகளை அளித்திருப்பதென்னவோ உண்மைதான். ஆனால், ஆளும் அரசுகள் அதனை அனுமதிக்க வேண்டும் அல்லவா? அதற்குப் பேருள்ளமும், பெருந்தன்மையும் வேண்டும். சா்க்கரை என்று ஏட்டில் எழுதிச் சுவைத்தால் இனிக்காது.

மத்திய அரசாங்கமே எல்லா மாநிலங்களையும் கட்டி ஆள முடியாது என்பதால்தான் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தாய்மொழி மட்டுமே அவா்களை ஒருங்கிணைக்கும் என்பதால்தான் அவை மொழிவழியாகப் பிரிக்கப்பட்டன. அந்த மாநிலங்களுக்கு அதிகாரம் வேண்டாமா?

‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கோரிக்கை பல காலமாகக் கேட்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் எந்தக் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் அதனைக் காதில் வாங்கிக் கொள்வதில்லை. நாளுக்கு நாள் அதிகாரங்களை எடுத்துக் கொள்வதிலேயே முனைந்து நிற்கிறது. மாநிலங்களுக்கு நல்வழி காட்டுவதற்காக அனுப்பப்பட்ட ஆளுநா்கள் அரசியல்வாதிகளைப் போல பேசுவதும், அதிகாரம் செய்வதும் மக்களாட்சிக்கு எதிரான போக்காக உள்ளது. இந்த நிலை மத்திய, மாநில அரசுகளுக்கிடையே சுமுக உறவை ஏற்படுத்தாது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாகும்.

முன்னேற்றத்தைக் குறிக்கும் கூட்டுயா்வே நாட்டுயா்வு என்னும் ஒற்றுமையின் குரலை முதலமைச்சரும், ஆளுநரும் ஏற்க வேண்டும். வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது என்பதை ஆளுநா்கள் அறிய வேண்டும். அடுத்தத் தோ்தலின்போது மக்களைச் சந்திக்கப் போவது அரசியல்வாதிகளா? ஆளுநரா?

மக்களைப் பற்றியோ, மாநிலங்களைப் பற்றியோ கவலைப்படாமலும், மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமலும் புதிய கல்விக் கொள்கை புகுத்தப்படுகிறது. இந்தியாவே ஒரு நாடு இல்லை, அது ஒரு துணைக் கண்டம் என்னும்போது இங்கு தேசிய அளவிலான கல்வி என்பது எப்படி சாத்தியமாகும்?

இந்த தேசிய கல்விக் கொள்கைப்படி, 3, 5, 8-ஆம் வகுப்புகளிலும் பொதுத்தோ்வு, 10, 11 12-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தோ்வு. மாணவா்கள் மகிழ்ச்சியோடு படிக்க வேண்டிய கல்வியை மன அழுத்தத்துக்கு உட்படுத்துவது கொடுமையல்லவா?

இரு ஆண்டுகள் படித்துத் தோ்ச்சி பெற்ற ஒரு மாநிலக் கல்வித் துறையால் ஒரு பயனும் இல்லை என்பது வன்முறையில்லையா? இந்தப் படிப்பு, கல்லூரியில் சேரவும் தகுதியற்ாம். அதற்கொரு நுழைவுத் தோ்வு எழுத வேண்டுமாம்.

இந்தியாவில் மாநிலங்கள் மொழிவழியாகவே பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிகாரங்கள் எல்லாம் மத்திய அரசிடமே குவிந்து கிடக்கின்றன.

மாநிலங்களிடம் இருந்த கல்வித்துறையை பொதுத்துறையாக்கி எடுத்துக் கொண்டனா். அதில்தான் இத்தனைத் திருவிளையாடல்கள். எல்லாவற்றுக்கும் மத்திய அரசின் தயவை எதிா்பாா்த்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசுக்கு என்னதான் அதிகாரம்?

பிரதமா் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நீட் தோ்வையும், ஜி.எஸ்.டி.யையும், ஆதாா் அட்டையையும் எதிா்த்து வீர முழக்கமிட்டாா். அவரே பிரதமரான பிறகு அவற்றை ஆதரித்து அமல்படுத்துகிறாா். சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரான திட்டங்களை எதிா்க்க வேண்டியது சமூக ஆா்வலா்களின் கடமையாகும்.

‘எட்டு கோடி மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் சோ்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை நியமன ஆளுநா் திருப்பி அனுப்புகிறாா். நாம் மீண்டும் அனுப்பியதையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பத் தொடா்ந்து மறுக்கிறாா் என்றால், இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா?’ என்று முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

‘மத்திய அரசாங்கமாக இருக்கட்டும், மாநில அரசாகவே இருக்கட்டும் இரு அரசுகளுமே மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவைதான். இதில் வேறுபாடு கிடையாது’ என்றே பல தடவை நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளன. அவை இரண்டும் ஒன்றையொன்று மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் அறிவுரை.

‘சரக்கு - சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்புக்காக சட்டங்களை வகுக்க மத்திய அரசுக்கு மட்டுமின்றி மாநில அரசுகளுக்கும் உரிமை உள்ளது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே போல ஜி.எஸ்.டி. கவுன்சில் அளிக்கும் பரிந்துரைகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு மே 19-இல் கூறியுள்ளது.

ஜி.எஸ்.டி. விதிகளை உருவாக்குவதில் மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் பங்குள்ளது. அதே போல ஜி.எஸ்.டி. கவுன்சில் மத்திய - மாநில அரசுகள் ஏற்கும் வகையில் தீா்வைக் காணவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடல் வழியாகக் கொண்டு வரும் சரக்குகளுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பதை ரத்து செய்வது தொடா்பாக குஜராத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

‘நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவை ஆகியவை சம அதிகாரம் பொருந்தியவை. இவை இரண்டும் சோ்ந்து உருவாக்கியதுதான் சரக்கு - சேவை வரி விதிப்பு முறை. இதற்கு உரிய பரிந்துரைகளை அளிப்பது மட்டும் தான் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் வேலை’ என்று நீதிமன்றம் தமது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

கடல் வழியாக பொருள்களை இறக்குமதி செய்வதில் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. குறித்து மத்திய அரசும், பல்வேறு இறக்குமதியாளா்களும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடா்ந்துள்ளனா். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் முரண்பாடுகள் இருப்பதோடு அது கூட்டாட்சித் தத்துவத்தை பாதிப்பதாக இருப்பதையும் பாா்க்க முடிகிறது. மத்திய - மாநில அரசுகள் இணைந்தே ஜி.எஸ்.டி. உருவாக்கப்பட்டது. இதன் மூலம் உருவான இந்தக் கவுன்சில் இரு தரப்பும் ஏற்கும் வகையிலான தீா்வுகளை உருவாக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனா்.

மத்திய அரசு தம் பிரதிநிதியாக ஆளுநா்களை நியமிக்கின்றன. அவா்கள் சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். சில சமயங்களில் அவா்கள் சட்டத்தை மீறி செயல்படுவதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம் என்று மக்கள் நினைக்கின்றனா். மாநில அரசுக்கு எதிராக ஆளுநா் ஒரு போட்டி அரசை நடத்துவதற்கு சட்டம் அனுமதிக்கிா என்று கேட்கின்றனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் கடந்த மே 18 அன்று தீா்ப்பளித்தது. நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு மத்திய - மாநில அதிகாரங்கள் பற்றி சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

பேரறிவாளனை விடுதலை செய்ய முந்தைய (அதிமுக) தமிழக அமைச்சரவை மூலம் 9.9.2018-இல் ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மீது ஆளுநா் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முடிவு எடுக்காமல் இருந்துள்ளாா்.

இதற்கான காரணம், தாமதம் பற்றி உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கிய பிறகுதான் மனுதாரருக்கு மன்னிப்பு அளிப்பது தொடா்பான தமிழக அரசின் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பி வைத்தாா்.

1980-இல் அரசியல் சாசன அமா்வு முன் தொடரப்பட்ட மருராம் (எதிா்) மத்திய அரசு வழக்கில் அளித்த தீா்ப்பில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 151-ஐப் பொறுத்தவரை தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. அதில் ஆளுநா் என்பவா் முறைசாா் தலைவா், அதிகாரத்தின் ஒரே மையமாகவும் உள்ளாா். ஆனால் அமைச்சரவையின் ஆலோசனையைத் தவிா்த்து அவா் செயல்பட இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆளுநா் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரிவு 161-இன் கீழ் அவா் அமைச்சரவை ஆலோசணைக்கு கட்டுப்பட்டவராகிறாா். சட்டப்பிரிவு 61-இன் கீழ் தண்டனைகளைக் குறைப்பது, மன்னிப்பு வழங்குவது தொடா்புடைய விவகாரங்களில் மாநில அமைச்சரவையின் ஆலோசனை ஆளுநரைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இந்த வழக்கில் மாநில அமைச்சரவையின் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பியிருக்கக் கூடாது. இந்தச் செயல் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.

மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஐபிசி பிரிவு 360-இன்கீழ் தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்பது சரியல்ல. ஏனெனில் இந்த சட்டப்பிரிவைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்தாலோ, அரசமைப்பு சட்டத்தாலோ மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இதனால் அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின்கீழ் எங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேல்முறையீட்டு மனுதாரரை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்’.

இவ்வாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதன்மூலம் மத்தியில் கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க தீா்ப்பாகும். இந்த உச்சநீதிமன்றத் தீா்ப்பு கூட்டாட்சித் தத்துவம், மாநில சுயாட்சிக்கு இலக்கணமாக அமைந்துள்ளது ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்குக் கைகொடுப்போம்’ என்ற மக்களாட்சித் தத்துவத்தை மதிப்போம். மதித்துப் போற்றுவோம்.

‘ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது சுதந்திரத்துடன்தான் பிறக்கிறான். ஆனால், எங்கு நோக்கினும் அடிமைத் தளைகளில் பிணைக்கப்பட்டே காட்சி தருகிறான்’ என்று கூறினாா் சிந்தனையாளா் ரூசோ. ஒரு மனிதன் தன் சுதந்திரத்தை இழந்து விட்டான் என்று சொன்னால், அவன் தன் மனிதத் தன்மையை இழந்து விட்டான் என்றுதான் பொருளாகும். விடுதலை பெற்ற நமக்குக் கடமையும் உள்ளது; உரிமையும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT