நடுப்பக்கக் கட்டுரைகள்

மாண​வ‌ர்​க​ளி‌ன் க‌ல்வி தடைப​ட‌க்​கூ​டாது

21st Mar 2022 06:45 AM | உதயை மு.வீரய்யன்

ADVERTISEMENT

கடந்த பிப்ரவரி 24 அன்று ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இதனால் அங்கு வசித்த இந்தியர்கள் 20 ஆயிரம் பேரின் நிலை கேள்விக்குறியானது. இதில் உயர்கல்வி பயிலச் சென்ற மாணவர்கள் நிலை மிகவும் பரிதாபமானது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதைக் கண்டித்து ஐக்கிய நாடுகள், பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது வாக்கெடுப்பிலிருந்து விலகி நின்ற 35 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உக்ரைன் போர் தொடர்பாக ஐ.நா. பொது அவையைக் கூட்ட வேண்டும் என்ற பாதுகாப்பு அவையின் வாக்கெடுப்பிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

போர் நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து இந்தியா விலகி நின்றதற்குக் காரணம் அது எதிர்கொண்டிருந்த முக்கிய சவால்களேயாகும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் போர் பதற்றம் நிறைந்த பகுதிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இந்தியாவின் ஒரே நோக்கம் அவர்கள் பாதுகாப்பாக தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான்.

மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில், ரஷிய மொழி பேசும் வெளியுறவுத் துறை அதிகாரிகளை ஈடுபடுத்தியதோடு அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கவும் வசதியாக வெளியுறவு இணைச் செயலர் தலைமையில் சிறப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்தப்போர் பற்றிக் குறிப்பிடும்போது, 'இந்தியா எப்போதும் அமைதியின் பக்கமே நிற்கிறது. அனைத்துச் சிக்கல்களையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்' என்று கூறினார். 

ADVERTISEMENT

இதனை இரு சாராரும் எண்ணிப் பார்க்க வேண்டும். போரைத் தொடங்குவது எளிது; அதனை முடிவுக்குக் கொண்டுவருவது  எளிதல்ல. போரால் ஏற்படும் அழிவுகளிலிருந்து உக்ரைன் மீண்டு வருவதற்கு எத்தனை காலம் பிடிக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 

போருடன் தொடர்புடைய இரு நாடுகளுமே இந்தியாவுடன் பொருளாதாரம், பாதுகாப்பு, உயர்கல்வி, அரசியல் தொடர்புகளைக் கொண்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து சுமார் 22,500 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள். உக்ரைனுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாத நிலையில், இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

இதுபற்றி மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. உக்ரைனின் அண்டை நாடுகளில் இந்த மாணவர்கள் தங்கள் கல்வியை நிறைவு செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

போர்த் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைனில் இருந்து இதுவரை 1,890 மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர்களை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து தமிழக முதலமைச்சர் வரவேற்றார்.

உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்று வந்த 1,921 மாணவர்களில் இதுவரை 1,890 மாணவர்கள் மீட்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தப் பணிகளை தில்லியிலிருந்து ஒருங்கிணைக்க எம்.பி.க்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 10 பேர் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. இந்தக் குழுவினர் தில்லியில் முகாமிட்டு தமிழக மாணவர்களை வரவேற்று தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் 1,524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் அழைத்து வரப்பட்டனர். மீதமுள்ள 366 மாணவர்கள் அவர்களின் சொந்த செலவில் தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்களைத் தவிர 31 மாணவர்கள் உக்ரைனிலும், அண்டை நாடுகளிலும் பாதுகாப்பான பகுதிகளில் குடியேறி விட்டனர் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாகத் திரும்ப நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், வெளியுறவுத் துறைக்கும் தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். என்றாலும் இந்தப் பிரச்னை இத்துடன் முடிந்து விடாது. உக்ரைனில் இருந்து திரும்பி வந்த மாணவர்களின் கல்வி  மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. இது தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.

அயல்நாட்டுக் கல்விச் செலவுக்காக மாணவர்கள் கல்விக் கடனாக பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். இந்தக் கல்விக் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். இந்திய மாணவர்கள் சுமார் 20 லட்சம் பேர் உக்ரைனில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் பெற்ற கல்விக் கடனை எப்படித் திரும்பப் பெறுவது என்பது பற்றி இந்திய வங்கிகள் சங்கம் விவாதித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஜனவரி மாதக் கணக்குப்படி, நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக இந்திய வங்கிகள் ரூ. 63 ஆயிரத்து 57 கோடி கல்விக் கடன் வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தத் தொகையில் உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் பெற்ற கடன் தொகை எவ்வளவு என்ற விபரம் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் உயர்கல்வி பயிலுவதற்கு வாய்ப்பில்லாத மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்தியாவிலிருந்து சுமார் 6 லட்சம் மாணவர்கள் கல்விக்காக ஆண்டுதோறும் வெளிநாடு செல்கின்றனர். இவர்களில் தமிழகத்திலிருந்து செல்வோர் சுமார் 40 ஆயிரம் பேர். இவர்களில் பெரும்பாலோர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், சட்டம், மேலாண்மை போன்ற துறைகளில் இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு முதுநிலை படிக்கச் செல்பவர்களே அதிகம். இளநிலை, மருத்துவப் படிப்புக்குச் செல்பவர்கள் தொகை குறைவாகும். நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கெல்லாம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. 540 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கே இடம் கிடைக்கும். மற்றவர்கள் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளையும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் நாட வேண்டும். இங்கெல்லாம் செலவு அதிகம் என்பதால் மாணவர்கள் வெளிநாடுகளை நாடுகிறார்கள்.

இப்படித்தான் ரஷியா, சீனாவுக்கு மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைன், ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அர்மேனியா போன்ற நாடுகள் தங்கள் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்தி வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்தன. இந்தியாவெங்கும் முகவர்களை நியமித்தன. விளம்பரம் செய்தன.

எளிய சேர்க்கை முறை, குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி, குறைவான கல்விக் கட்டணம் எனப் பல வசதிகள் இருந்ததால் 2016க்குப் பிறகு இந்த நாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இப்போது போரின் காரணமாக அவர்களின் கல்வி தடைபட்டுள்ளது. அரசாங்கம்ஆறுதல் சொன்னால் மட்டும் போதாது. அதற்கொரு வழிகாண வேண்டும்.

நார்வே போன்ற வளர்ந்த நாடுகளில் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7% வரை நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவிலும் அதே அளவுக்கு நிதி ஒதுக்கி கல்வித் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கை. ஆனால் இந்திய அரசு கல்விக்காக 3% மட்டுமே ஒதுக்கீடு செய்து வருகிறது.
கடந்த 2021}22 நிதிநிலை அறிக்கையை எடுத்துக்கொண்டால் கல்வித் துறைக்கு ரூ.93,224 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது மிகவும் குறைவான தொகை என்று கல்வியாளர்கள் கூறினர். ஆனால் இவ்வளவு குறைவாக ஒதுக்கப்பட்ட நிதியிலும், கடந்த 2022 ஜனவரி மாத நிலவரப்படி ரூ.56,567 கோடியை மட்டுமே கல்விப் பணிகளுக்காக மத்திய அரசு செலவிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் உதவி பெறும் கல்வி மையங்களில் மட்டும் ரூ.7,143 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 46 மத்திய பல்கலைக்கழகங்களில் 19,349 அனுமதிக்கப்பட்ட பேராசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

இதில் 6,535 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தரமான கல்வி வழங்க தரமான ஆசிரியர்கள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதும், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் கவலையளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களை அரசுகள் எப்படி சமாளிக்கப் போகின்றன என்பது இதுவரை தெரியவில்லை. மாணவர்களை மீட்டு வருவதில் காட்டப்பட்ட அக்கறை அவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்வதிலும் காட்டப்பட வேண்டும்.

இந்திய மாணவர்கள் இந்தியாவில் படிக்க வேண்டும் என்கிறார் பிரதமர். இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டுமானால் இங்கு போதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். உக்ரைன் உள்பட பல நாடுகளில் அரசாங்கமே அதிக அளவில் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன.

இந்தியாவில் மட்டும் தனியார் 'சுயநிதிக் கல்வி' என்ற பெயரால் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.
தற்போது உள்ள சூழலில் மீட்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் உக்ரைன் திரும்பிச் செல்ல வாய்ப்பில்லை என்பதைச் சுட்டிக் காட்டி, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள தமிழக முதலமைச்சர், அந்த மாணவர்கள் தங்கள் படிப்பை இந்தியாவில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT