நடுப்பக்கக் கட்டுரைகள்

உற்சாக மனமே உன்னதங்கள் செய்யும்

10th Mar 2022 04:05 AM |  சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

 அதிகாலையில் இருவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம், "நேற்று முழுதும் எனக்கு மனசே சரியில்லை' என்றார். அதைக் கேட்ட மற்றவர், "என்ன, மனசு சரியில்லையா? நம்ம உடம்புல மனசுன்னு ஒன்னு இல்லையே, அப்புறம் எப்படி மனசு சரியில்லாமல் போகும்' என்று கேட்டார். ஆம், நம் உடலில் மனது என்ற ஒன்று கிடையாது. நமது உடலில் இல்லாத ஒன்றைச் சொல்லி அது சரியில்லை என்கிறோம்.
 அதிக பாரத்தை சுமந்து செல்லும் கனரக வாகனத்தின் டயர்களுக்கு காற்று எவ்வளவு அவசியமோ அது போல மனிதனுக்கும் காற்று அவசியம், மனமும் அவசியம். ஆனால் இவையிரண்டையும் கண்களால் பார்க்க முடிவதில்லை. காற்று இல்லையென்றால் எந்த வாகனமாக இருந்தாலும் நகரவே முடியாது. அதுபோலவே, எந்த மனிதராக இருந்தாலும் மூச்சு நின்று விட்டால் அடுத்த நொடியே அவரைப் "பிணம்' என்று சொல்லி விடுவார்கள். மனசு சரியில்லாமல் இருந்தால் எந்த மனிதராலும் எதையும் சிறப்பாக செய்ய முடியாது. உருவமே இல்லாத இந்த மனசுதான் மனிதர்களுக்குள் இருந்துகொண்டு அவர்களை ஆட்டிப்படைக்கிறது.
 மனிதருக்குள் இருக்கும் இந்த மனதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, நல்ல மனம், மற்றொன்று கெட்ட மனம். அதாவது ஒருவர் நல்லவர், மற்றொருவர் கெட்டவர். இந்த இருவரும்தான் எந்த ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கும் முக்கியமானவர்கள். கோபம், பேராசை, விரக்தி, ஒழுக்கமின்மை, பழிவாங்கும் உணர்வு இவையனைத்தையும் மனதுக்குள் இருக்கும் தீயவர் தருகிறார். அமைதி, நிம்மதி, அன்பு, பொறுமை, பாசம், சந்தோஷம் இவற்றையெல்லாம் மனதுக்குள் இருக்கும் நல்லவர் தருகிறார்.
 உதாரணமாக, கடிகாரம் அலாரம் அடிக்கிற போது, எழுந்து, அதை அணைத்து விட்டு, மீண்டும் நம்மைத் தூங்க வைத்து விடுபவர் தீயவர். அலாரம் அடிப்பதற்கு முன்பாகவே எழுந்து அதை அணைத்து வைத்துவிட்டு, பணிகளில் சுறுசுறுப்பாக நம்மை ஈடுபட வைப்பவர் நல்லவர். மனதிற்குள் இருக்கும் நல்லவரை தட்டிக்கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தால் நாம் வெற்றிக்கனிகளை எளிதாகப் பறித்துக் கொண்டே இருக்கலாம்.
 ஒரு மனிதனை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரிகள் வெளியில் இல்லை, அவன் மனதுக்குள்ளேயே இருக்கிறார்கள். உண்மையில் மனிதன் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பதற்கு பணமோ பொருளோ தேவையில்லை. இவை நமக்குள்ளேயே இருக்கின்றன. மனதை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொள்வதுதான் முன்னேற்றத்துக்கான அடித்தளம்.
 கடற்கரையோரமாக ஒரு வியாபாரி நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது கடற்கரை மணலில் ஒரு மீனவன் மீன்பிடி வலைமீது படுத்துப் பாடிக்கொண்டிருந்தான். அவனிடம் அந்த வியாபாரி, "இன்று நீ ஏன் மீன் பிடிக்கப் போகவில்லை' என்று கேட்டார். அதற்கு அவன் "நான் ஏற்கனவே நிறைய மீன்களைப் பிடித்து அவற்றை நல்ல விலைக்கு விற்றுவிட்டேன். இப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன்' என்றான்.
 வியாபாரியோ, "இன்னும் அதிகமான மீன்களைப் பிடித்தால் உனக்கு அதிகமான பணம் கிடைக்கும். நீ சொந்தமாக ஒரு படகு வாங்கலாம். அதிக மீன்களைப் பிடிக்கலாம். உன் வீட்டுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இருக்கலாமே' என்றார். அதற்கு அந்த மீனவன் "அவற்றையெல்லாம் வாங்கி சந்தோஷமாக இருப்பதை விட, இப்போதே நான் சந்தோஷமாகத்தானே இருக்கிறேன்' என்றான். மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை, நமக்குள்தான் இருக்கிறது என்பதற்கு இந்த மீனவன் கதை ஒரு உதாரணம்.
 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பள்ளி மாணவர்களிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள், "மாணவர்களே! மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்க. உற்சாக மனமே உன்னதங்களைச் செய்யும்' என்பதே. ஒரு குடிகாரத் தந்தைக்கு இரு மகன்கள் இருந்தனர். மூத்த மகனும் குடிகாரனாக இருந்தான். இளைய மகன் நல்லவனாக, மதுவிற்கு அடிமையாகாதவனாக இருந்தான்.
 ஒருவர் மூத்த மகனைப் பார்த்து, "நீ ஏன் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறாய்' என்று கேட்டார். அதற்கு அவன் "என் தந்தை குடிப்பழக்கம் உடையவர். அவரைப் பார்த்து எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டது. இப்போது என்னால் அதை விட முடியவில்லை' என்றான். மூத்த மகனிடம் கேட்ட நபர் இளைய மகனையும் பார்த்து "உன் தந்தையைப் போல உனக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லையா' என்றார். "என் தந்தையும், அண்ணனும் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள். அவர்களைப் போல நானும் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். எண்ணங்கள்தான் வாழ்க்கை' என்று சொன்னான் இளைய மகன். சுவாமி விவேகானந்தர் "நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்றார்.
 பலனை எதிர்பார்க்காமல் நாம் செய்யும் எந்த செயலையும் ஆர்வத்துடன் மேலும் மேலும் சிறப்பாக செய்து கொண்டே இருந்தால் நமது மனது உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கத் தொடங்கி விடும். வெற்றிக் கதவுகள் தானாகவே திறந்து விடும். அலாவுதீனின் அற்புத விளக்கு போல நாம் கேட்பதெல்லாம் நம் கண் முன்னே வந்து நிற்கும். இதுதான் வெற்றியின் ரகசியம்.
 எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் நீங்கள் மட்டும் தனித்து தெரிய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டால், புகழ் ஏணியில் ஏறி வெற்றிக்கொடியை பறக்கவிட வேண்டும் எனத் துடித்தால் அதற்கு ஒரேஒரு வழிதான் இருக்கிறது. அதுவும் உங்கள் கையில்தான் இருக்கிறது. அது என்னவெனில், உங்களுக்குள் இருக்கும் நல்ல மனது, தீய மனது எனும் இரண்டில் தீய மனதை விரட்டியடியுங்கள். நல்ல மனதை உற்சாகப் படுத்துங்கள்.
 மறந்துவிடாதீர்கள், உற்சாக மனமே உன்னதங்களைச் செய்யும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT