நடுப்பக்கக் கட்டுரைகள்

உள்ளாட்சிகளின் மேம்பாட்டுப் பணி!

க. பழனித்துரை

 ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாடு 2015-இல் நடைபெற்றபோது, 193 நாடுகள் ஒன்று கூடி ஏற்றுக் கொண்ட ஆவணம் "உலகை மாற்றியமைத்தல்: 2030-க்கான நிலைத்த மேம்பாட்டுக் கொள்கை'. இந்த ஆவணம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க செயல்பாட்டுக் கையேடு. இதில் கூறப்பட்டுள்ள 17 நிலைத்த மேம்பாட்டு லட்சியங்களையும், 169 இலக்குகளையும் 2030-ஆம் ஆண்டுக்குள் அடைந்திட அரசாங்க அமைப்புகளும் மக்கள் நல அமைப்புக்களும் இணைந்து செயலாற்றிட வேண்டும் என்பதை எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றன.
 இந்தியாவும் அதற்கான முனைப்பை நீதி ஆயோக் மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்த 17 மேம்பாட்டு லட்சியங்களை அடைய மிக முக்கியமாக நம் உள்ளாட்சிகளுக்கு அதிகமான பொறுப்புகள் இருக்கின்றன. இதை உணர்ந்த தமிழக அரசு 24.4.2022 அன்று நடந்த கிராமசபையில் ஒவ்வொரு ஊராட்சியும் நடைமுறைப்படுத்த வேண்டிய விழிப்புணர்வையும் வழிமுறைகளையும் தீர்மானங்களாக நிறைவேற்றியுள்ளது.
 ஐ.நா.வின் தீர்மானத்தை நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் உள்வாங்கி தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளாட்சிகளையே சாரும். பெரும்பாலான செயல்பாடுகளுக்கான களம் உள்ளாட்சிகள்தான் என்பதை நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவு வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.
 அதற்கு நம் உள்ளாட்சிகளை தயார்படுத்திக்கொண்டு பணி செய்திட வேண்டும். தற்போது பஞ்சாயத்துகள் செய்யும் பணிகள் அந்த இலக்கை நோக்கித்தான் இருக்கின்றன என்றாலும், நம் உள்ளாட்சித் தலைவர்களுக்கும் அந்தப் பார்வை வரவேண்டும். வந்துவிட்டால் தங்கள் செயல்பாட்டுக்கான திறன்களை அதிகரித்து இலக்கை அடைவதற்கான உந்துசக்தியைப் பெறுவார்கள்.
 பிரதானமாக வறுமை ஒழிப்பது மையப்படுத்தப்பட்ட செயல்பாடாகும். உலகில் ஓர் ஒப்புரவு சமூகத்தை உருவாக்க, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உலகளாவிய உடன்படிக்கைதான் இது. இந்த இலக்குகளை அடைய அனைத்து நிலைகளிலும் செயல்படும்போது, இயற்கை பாதுகாப்பு என்பது பின்புலத்தில் இருந்து செயல்பட வேண்டும். அடுத்து இந்த செயல்பாடுகளில் மிக முக்கியமாக மக்களின் பங்களிப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
 நம் உள்ளாட்சிகளுக்கு பொருளாதார மேம்பாட்டை கொண்டு வருவதும், சமூக நீதியை நிலைநாட்டுவதும் மிக அடிப்படையான பணிகளாக விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மக்கள் பங்கேற்புடன் செய்திட வேண்டும். அது மட்டுமல்லாது அனைத்து செயல்பாடுகளையும் திட்டமிட்டு அடித்தட்டு மக்களின் பங்கேற்போடு செய்திட வேண்டும். இவையெல்லாம் நிலைத்த மேம்பாட்டு லட்சியங்களை அடைவதற்கு பேருதவியாக இருக்கும் என்பதை உணர்ந்து நம் பஞ்சாயத்துத் தலைவர்கள் செயல்பட வேண்டும். இதற்கு உள்ளாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளிடம் ஒரு புது சிந்தனையை உருவாக்க வேண்டும்.
 தற்போது அரசு தரும் நிதிக்கு பணி செய்ய அவர்களைப் பழக்கி வைத்திருக்கின்றோம். இந்த மனோபாவத்தை மாற்றிட வேண்டும். பஞ்சாயத்துத் தலைவர்களிடம், அரசு தரும் கட்டாயப் பணிகளைக் கடந்து, தனது விருப்பக் கடமைகளாக, நிலைத்த மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை செய்திடும் எண்ணத்தை உருவாக்க வேண்டும்.
 வறுமை ஒழிப்பு, மக்களுக்கு ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்வது, தரமான கல்வி கற்கும் வாய்ப்பு, பாலின சமத்துவத்தைப் பேணுவது, நீர்வள மேலாண்மை, நவீன எரிசக்தி அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்வது, கண்ணியமான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது, வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை உள்கட்டமைப்புக்களை உருவாக்குவது, சமத்துவமற்ற நிலைமையைக் குறைப்பது, பாதுகாப்பாக குடியிருப்புகளை உருவாக்குவது போன்றவை அந்த பிரகடனத்தின் சுருக்கம்.
 இந்தப் பணிகளில் எவற்றையெல்லாம் கிராம பஞ்சாயத்தில் செய்திட முடியுமோ அவற்றை செய்திட முதலில் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
 இந்த லட்சியங்களை அடைய 169 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய புரிதலை நம் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு பயிற்சியின் மூலம் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு அந்தப் புரிதலை ஏற்படுத்தி விட்டால், அவர்கள் இந்த இலக்குகளை அடைய எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க முனைவார்கள். நம் உள்ளாட்சித் தலைவர்களுக்கு ஒரு கருத்தை தெளிவாக்கிட வேண்டும். மத்திய - மாநில அரசுகளின் திட்டங்களால் பயன்பெற இயலாதவர்களை சென்றடைந்து அவர்களின் மேம்பாட்டுக்குச் செயல்படுவதுதான் உள்ளாட்சிகளின் முக்கியப் பணி என்பதை புரிய வைத்திட வேண்டும்.
 கிராம மேம்பாட்டுப் பணியை சாதாரணமாக எவரும் செய்திடலாம் என்ற பார்வை இருந்ததால்தான் கிராமங்கள் இன்று சீரழிவை சந்தித்திருக்கின்றன. வறுமை ஒழிப்போ, ஆரோக்கியம் பேணுதலோ, பொருளாதாரம் வளர்த்தலோ, வாழ்வாதாரம் பாதுகாத்தலோ, சுற்றுச்சூழல் பாதுகாத்தலோ எதுவாயினும் பஞ்சாயத்து நிலையில் செய்திட முடியும். அதற்கான நிபுணத்துவம் பஞ்சாயத்துத் தலைவர்களிடம் உருவாக்கப்பட வேண்டும்.
 ஒரு காலத்தில் இத்தனை செயல்பாடுகளும் நிபுணர்களின் செயல்பாடுகள் என ஒதுக்கப்பட்டிருந்தன. இன்று அத்தனை செயல்பாடுகளும் குடிமக்கள் செயல்பாடுகளாக உருவாக்கப்பட்டு அவர்களின் பங்கேற்போடு நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றன. எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள் தயாரிப்பும் மக்கள் தயாரிப்பும் இந்தப் பணிகளுக்கு மிகவும் இன்றியமையாதவை. எந்த நுணுக்க செயல்பாடும், எளிய மக்களிடம் சென்றடைய வேண்டுமானால், அதனை எளிமைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
 மக்களிடம் அளப்பரிய ஆற்றலும் சக்தியும் கடின உழைப்பும் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த மக்களுக்கு வழிவகை செய்து தருவதுதான் உள்ளாட்சியின் கடமை என்ற புரிதல் வேண்டும்.
 ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருந்த ஒரு முதிய பெண்மணி, படிக்காத பெண்களை ஒருங்கிணைத்தார். அனைவரும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்; எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். அந்தப் பெண்களின் சேமிப்பின் மூலம் சீட்டு கட்டும் நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். அதில் 24 பெண்களை இணைத்து சீட்டு நடத்தி, அந்த சீட்டு ஒவ்வொரு மாதமும் ஏலத்தில் எடுத்து, ஏலத்தில் எடுத்த பணத்தை வைத்து ஒரு கறவை மாடு வாங்கிக் கொடுத்து விடுவார்.
 ஒரு நேரத்தில் அந்த 24 பெண்களின் குடும்பத்திலும் பால் மாடுகள் இருந்தன. அனைத்தும் நாட்டு எருமை மாடுகள்தான். அனைவரும் பால் வணிகம் செய்ய ஆரம்பித்தார்கள். அதேபோல் ஆடு வாங்கிக் கொடுப்பார் அந்தப் பெண்மணி. அடுத்து கோழி வாங்கிக் கொடுத்தார். பத்து ஆண்டு காலத்தில் அந்தப் பெண்கள் தங்கள் குடும்பங்களை வறுமையிலிருந்து வெளியில் கொண்டு வந்து விட்டனர்.
 இந்த 24 குடும்பங்களையும் ஆய்வாளர் ஒருவர் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் அந்த அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர், "அந்தப் பெண்களுக்கு வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற வேட்கை இருந்தது. வறுமையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற வேட்கையுடன் செயல்படக்கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொண்டு தங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு, குழுவாக இணைந்து ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டதுதான் அவர்களுக்கு வெற்றியைத் தந்தது' என்று விளக்கியிருந்தார்.
 அது மட்டுமல்ல, அவர்களின் கடின உழைப்பு சாதாரணமானதல்ல. அடுத்து கூட்டு முயற்சியில் அனைவரும் நம்பிக்கையுடன் பங்கேற்றனர். இந்த முயற்சிக்கு ஒரு பெண் தலைமை தாங்கினார். அந்த நாளில் இன்று இயங்குவதுபோல் சுய உதவிக்குழு என்பதெல்லாம் இருக்கவில்லை. இன்றுபோல் நிதி உதவிக்கு நிறுவனங்களும் இல்லை. அரசும் வழிகாட்டவில்லை. அவர்களே சுயமாக ஆரம்பித்து நடத்தி வெற்றி கண்டனர். உண்மையான சுய உதவிக்குழு என்பது அவர்கள் நடத்தியதுதான். மாட்டுப் பாலும், கோழி முட்டையும், ஆட்டு இறைச்சியும்தான் அவர்களை கைதூக்கி விட்டன.
 இதே செயல்பாட்டைத்தான் இன்று உலக வங்கி "சமூக மேம்பாட்டில் சமூகம்' என்ற தலைப்பில் வறுமை ஒழிப்புக்கு ஒரு புது அணுகுமுறையாக உருவாக்கியுள்ளது. சமூகம் தன்னை இயக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வறுமையை குறைத்திட முடியும் என்று உலகுக்கு உலக வங்கி அறிவுரை வழங்கியது.
 எல்லா சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் மக்களை பங்கேற்க வைத்துச் செயல்பட வேண்டும் என்பதற்கு அடிப்படைக் காரணம் மக்களை அதிகாரப்படுத்துவதற்குத்தான்.
 மக்களை எப்படி அதிகாரப்படுத்துவது? மக்களுக்கு அடிப்படைப் புரிதலை ஏற்படுத்துவது. எதில் அடிப்படை புரிதலை ஏற்படுத்த வேண்டும்? சமூக பொருளாதார மேம்பாடு, அரசாங்கத்தின் ஆளுகை போன்றவற்றில் புரிதலை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்துவிட்டால், மக்களே ஆளுகையிலும் மேம்பாட்டு செயல்பாடுகளிலும் பங்கேற்க ஆரம்பித்து விடுவார்கள்.
 எப்பொழுது மக்கள் இத்தகைய செயல்பாடுகளில் பங்கேற்க முன்வந்து விட்டார்களோ அப்போதே அரசு மக்களுக்காக செயல்பட ஆரம்பித்துவிடும். இதற்கு மிக முக்கிய அடிப்படை செயல்பாடு, மக்களை பொறுப்புள்ள குடிமக்களாக தயார் செய்யும் பணிதான். இன்று இந்தப் பணியினை நோக்கித்தான் உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
 எனவே இந்த நிலைத்த மேம்பாட்டுப் பணிகளை உள்ளாட்சிகளில் செயல்படுத்த ஒரு உளவியல் சூழலை உருவாக்க வேண்டும். அந்த உளவியல் சூழல் என்பது "நம் ஊர் நம் கையில்' என்ற பார்வையை மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கிக்கொண்டு செயல்பட்டால் ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டுச் செயல்பாடுகளில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்துவிடலாம். அதற்கு நம் பஞ்சாயத்துக்கள் தயாராக வேண்டியது இன்றியமையாதது.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT