நடுப்பக்கக் கட்டுரைகள்

தொடர்கதையாகும் வன்முறை

DIN

அக்னிபத் என்னும் இந்திய ராணுவத்திற்கான புதிய தேர்வுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பலரும் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் சாலை மறியலில் ஈடுபட்டும் நெடுஞ்சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்குவதற்குக் காரணமாயினர்.

மேலும், பல்வேறு ரயில் நிலையங்களில் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கெல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகள் பலவற்றிற்கு தீவைத்ததுடன், ரயில் நிலையச் சொத்துகளையும் சூறையாடியுள்ளனர். 

இந்தப் போராட்டங்களின் காரணமாக பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் நெடுந்தூரம் பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் சொல்லொணாத சிரமங்களுக்கு ஆளாயினர். உற்பத்தித் துறைக்கு வேண்டிய மூலப் பொருட்கள் கொண்டு செல்வதில் ஏற்பட்ட தாமதத்தால் தொழில் துறையும் கணிசமான இழப்பைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது.

வன்முறை, தீவைப்பு காரணமாக நூற்றுக் கணக்கான ரயில் பெட்டிகள் சேதப்படுத்தப் பட்டதாலும், பல்வேறு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும் நமது ரயில்வே துறை பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளது.  

சாதாரண ரயில் பெட்டி ஒன்றைத் தயாரிக்க ரூ. 80 லட்சமும், குளிர்சாதன ரயில் பெட்டி ஒன்றை உருவாக்க ரூ. 3.5 கோடியும், ரயில் எஞ்சின் ஒன்றைத்தயாரிக்க ரூ.20 கோடியும் செலவு செய்யப்படுகிறது.  இவ்வளவு விலை மதிப்பு மிக்க  ரயில் பெட்டிகளும், எஞ்சின்களும் சேதப்படுத்தப்பட்டதாலும், பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதாலும், ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டதாலும் நமது  இந்திய ரயில்வே துறைக்கு ரூ. 1,000 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் தற்போது பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டன. ரயில்வே துறையின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. 

அக்னிபத் திட்டத்தால், தங்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் நினைப்பவர்கள் ஒன்று சேர்ந்து நீதிமன்றம் மூலம் தீர்வு காண முனையலாம். அல்லது அமைதியான போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம், தங்கள் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடுவதன் மூலமும் தங்களின் குறைகளை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம். இதன் மூலம் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில்  விவாதித்துத் தீர்வு காண ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால், ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு போராட்டங்கள் நடத்தி வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதும், பொது சொத்துகளைச் சூறையாடுவதும் எப்படி சரியாக இருக்க முடியும் ?

எதிர்காலத்தில், இந்தப் போராட்டக்காரர்களில் யாரேனும் தங்கள் குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் செல்லும்பொழுது, வேறு ஏதாவது ஒரு போராட்டத்தின் விளைவாக பாதி வழியில் பரிதவிக்க நேர்ந்தால் அந்தப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்களா?

பொது இடங்களில் அமைந்த தங்களது கடையோ, வணிக நிறுவனமோ சேதப்படுத்தப் பட்டால் கூட அந்தப் போராட்டம் நியாயமானதுதான் என்று வழிமொழிவார்களா ? நியாயம் என்பது எல்லோருக்கும் ஒன்றாகத்தானே இருக்க முடியும் ?

அக்னிபத் போராட்டக்காரர்களால் ரயில்வே சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதைப் போன்று, கேரள மாநிலம், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தியின் அலுவலகமும் இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மண்டலங்களைக் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் பொதுமக்கள் பலருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இவ்விஷயத்தில் ராகுல் காந்தி கருத்து எதுவும் தெரிவிக்காமல் மெüனமாக இருக்கிறார் என்றும் கூறி இத்தாக்குதல் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வன்முறைத் தாக்குதலில் ராகுல் காந்தியின் தொகுதி அலுவலக ஊழியர்கள் சிலரும் தாக்கப்பட்டிருக்கின்றனர். 

ஒரு ஜனநாயக நாட்டில் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு என்பது உண்மைதான். மத்திய } மாநில அரசுகள், பல்வேறு நிறுவனங்களின் தலைமைகள் ஆகியவற்றின் முடிவுகளை எதிர்த்து போராட்டம் நடத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், எத்தகைய போராட்டமானாலும் தனியார் உடைமைகள், அரசாங்கச் சொத்துகள் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படுத்தாமலும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்காத வகையிலும் நடைபெற வேண்டும். 

அதே சமயம், அரசாங்கத் தலைமைகளானாலும் சரி, நிறுவனத் தலைமைகளானாலும் சரி, தங்களுடைய முடிவுகளை எதிர்த்து போராட்டம் நடத்த முனைபவர்களுடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஒருவேளை திரும்பப் பெற முடியாத முடிவு ஒன்றை எடுத்திருந்தால், அதனை எதிர்ப்பவர்களும் ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலான விளக்கங்களை அளிக்க முன்வர வேண்டும். 

ஆனால், எந்த ஒரு முகாந்தரமும் இன்றி திடீரென்று ஒரு போராட்டச் சூழலை உருவாக்கிப் பொது சொத்துகளைச் சேதம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

நியாயமான போராட்டங்களை நடத்திட அனுமதிக்கின்ற அதே வேளையில், எதிர்பாராமல் நடைபெற வாய்ப்புள்ள திடீர்ப் போராட்டங்களுக்கான முன்னெடுப்புகளைக் முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கான முயற்சிகளை மத்திய } மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும். மேலும், கலவரத் தடுப்புப் படையினரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி எப்போதும் தயார் நிலையில் வைப்பதும் மிகவும் அவசியம். 

சேதங்கள் ஏற்படுத்தியவர்களைத் தண்டிப்பதைக் காட்டிலும், சேதங்களே ஏற்படாமல் தவிர்ப்பதே அறிவுடைமையாகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT