நடுப்பக்கக் கட்டுரைகள்

மாணவர் நலன் காப்போம்!

23rd Jun 2022 06:12 AM | முனைவர் இரா. கற்பகம்

ADVERTISEMENT

 தமிழ்நாடு கல்வித்துறையின் சமீபத்திய சில அறிவிப்புகள் மாணவர்களின் நலம் காக்கும் வகையில் உள்ளன. வரும் கல்வி ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளி விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது மாணவர்களின் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் நன்மை பயக்கும்.
 மாணவர்கள் சனிக்கிழமைதோறும் தலையில் நல்லெண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால் உடல் சூடு தணிந்து உடலும் மனமும் குளிர்ச்சி அடையும்; கண்கள் ஒளி பெறும்; கண்பார்வை சிறக்கும். உடல்முழுதும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க, தோல் புத்துணர்ச்சி பெற்றுப் பொலிவுறும்; ஒவ்வாமை நோய்கள் நெருங்கா.
 அன்று ஒரு நாள் கணினி, கைப்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றுக்கும் விடுமுறை அளித்துவிட்டு தோட்டவேலை செய்தல், யோகாசனம் செய்தல், குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தைச் செலவிடுதல், நூலகத்துக்குச் செல்லுதல், வீட்டிலேயே நல்ல புத்தகங்களைப் படித்தல் போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடலாம்.
 எப்போதுமே பரபரப்பாகவே இருக்கும் மாணவர்களை இந்த விடுமுறை அமைதிப்படுத்தும். மனம் விட்டுப் பேச இந்த ஒரு நாள் விடுமுறையை மாணவர்களும் பெற்றோர்களும் பயன்படுத்திக் கொண்டால் மாணவர்களுக்கு மன அழுத்தம் பெருமளவு குறையும்.
 மேலும், ஒவ்வொரு நாளும் பள்ளியில் உடற்பயிற்சிக்கும் புத்தக வாசிப்புக்கும் தனித்தனியாக நேரம் குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுவும் வரவேற்கத்தக்கதே. இவற்றுக்கெல்லாம் ஏற்கெனவே அட்டவணையில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அரசுப்பள்ளிகளும் சரி தனியார் பள்ளிகளும் சரி அவற்றை நடைமுறைப் படுத்துவதில்லை.
 புத்தக வாசிப்பு மாணவர்களிடையே காணாமல் போய்க்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அரசு இவ்வறிவிப்பைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மாணவர்கள் பள்ளிக்கு கைப்பேசி கொண்டு வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆன்லைன் வகுப்புகளினால் கைப்பேசிக்கு அடிமையாகிவிட்ட மாணவ சமுதாயம் அதிலிருந்து மீண்டு வர இந்நடவடிக்கை தேவையே.
 கைப்பேசியின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க புத்தக வாசிப்பு குறைந்து விட்டது. அது மட்டுமல்ல, கைப்பேசியை வைத்துக்கொண்டு தற்படம் எடுப்பது, தேவையற்ற வலைதளங்களைப் பார்ப்பது என்று மாணவர்களின் கவனம் சிதறிக் கொண்டிருந்தது. பள்ளியில் கைப்பேசிக்குக் கட்டுப்பாடு கொண்டு வந்தாலும், வீட்டில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.
 மாணவர் நலனில் அக்கறை கொண்டு அரசு வெளியிட்டிருக்கும் இவ்வறிவிப்புகள் பாராட்டுக்குரியவை. ஆனால், அரசின் அறிவிப்புகளை தனியார் பள்ளிகள் எப்போதும் மதிப்பதேயில்லை. கரோனா கால பொதுமுடக்கம் முடிந்து பள்ளி வகுப்புகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டபோது, பள்ளிகள் மாலை மூன்று மணியுடன் மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. பல ஊர்களில் தனியார் பள்ளிகள் இவ்வுத்தரவை மீறி மாலை ஐந்து மணி வரை வகுப்புகளை நீட்டித்தன.
 சிறப்பு வகுப்புகள் எடுக்க அரசு தடை விதித்திருந்தும் பல பள்ளிகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகளை நடத்தின. சிலர், பள்ளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு முதன்மைக் கல்வி அலுவலருக்குப் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 கொள்ளை நோயின் பிடியிலிருந்து நாடு மீண்டு வந்து கொண்டிருந்த வேளையில் மாணவர்களின் நலன் கருதி மாநில அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் தனியார் பள்ளிகளுக்கும், பிற பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
 இதே நிலை இப்போதும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 சனிக்கிழமை விடுமுறை என்பது அறிவிப்போடு நின்றுவிடக் கூடும். பத்து, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளிலும் , மாணவர்களைச் சீருடையில்லாமல் சாதாரண உடையில் வரச் சொல்லிச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படலாம். அதிகப் பாடச்சுமையைக் காரணம் காட்டிப் பெற்றோர்களும் இதை நியாயப்படுத்தலாம்.
 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் சென்ற கல்வியாண்டில் கரோனா காரணமாக குறைக்கப்பட்ட அதே பாடங்கள்தான் இந்த கல்வியாண்டிலும் தொடர்கின்றன. ஆனால் சமச்சீர் பாடத்திட்டத்தில் இக்கல்வியாண்டில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து எல்லாப் பாடங்களும் நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
 பாடங்களை இருபது சதவீதம் குறைத்து, சனி, ஞாயிறு கட்டாய விடுமுறை அறிவித்து, சிறப்பு வகுப்புகளுக்குத் தடை விதித்து, மேற்குறிப்பிட்டுள்ள அறிவிப்புகளையும் நடைமுறைப்படுத்தினால் மாணவர்கள் நலம் காக்கப்படும்.
 பள்ளிப் பாடத்திட்டத்திலும் கற்பித்தல் முறையிலும் மாற்றங்கள் தேவை. பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் இருக்கிறார்களே தவிர, குழந்தைகள் உளவியல் வல்லுநர்களோ குழந்தை எழுத்தாளர்களோ இல்லை. பாடங்கள், நிறைய தகவல்களைத் தரும் வண்ணம் இருக்கிறதேயன்றி மாணவர்களைக் கவரும் வண்ணம் எளிமையாகவும் சுவாரசியமாகவும் இல்லை.
 கற்பிக்கும் முறையோ "தலைகீழாக' இருக்கிறது. பெரும்பாலான பள்ளிகளில் வினா விடைகளை முதலில் குறித்துக் கொடுத்து விடுகிறார்கள்; பிறகு பாடங்களை நடத்துகிறார்கள். வாராவாரம் தேர்வு எதற்கு? மாதமொரு தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, பிறகு இறுதித் தேர்வு; பொதுத்தேர்வு எனில் முதல் பாதிப் பாடங்களில் ஒரு திருப்புதல் தேர்வு; அடுத்த பாதிப் பாடங்களில் ஒரு திருப்புதல் தேர்வு என்று வைத்தால் போதுமே.
 படிக்க நேரமே கொடுக்காமல் தினந்தோறும் தேர்வு வைப்பதால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்குள்ளாகிறார்கள். கல்வித்துறை இவற்றையெல்லாம் சீர் செய்ய வேண்டும். புத்தகமயமான பாடங்களைக் குறைத்து, வாழ்க்கைக் கல்வி, கவின்கலை, விளையாட்டு, ஏதாவது ஒரு தொழில், முதலுதவிப்பயிற்சி போன்றவற்றையும் சேர்த்து பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
 உயர்கல்வித்துறையும் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்குக் காலையிலும், மாணவர்களுக்கு மாலையிலும் வகுப்புகள் நடத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இவ்வறிவிப்பு கலைக்கல்லூரிகளுக்கு மட்டும்தானா அல்லது தொழிற்கல்விக் கல்லூரிகளுக்குமா என்பது தெரியவில்லை.
 கல்லூரிச் சாலைகள் காதல் சோலைகளாக மாறி வெகு காலமாகி விட்டன. பெரும்பாலான மாணவ, மாணவியர் பல கனவுகளோடு தான் கல்லூரியில் நுழைகிறார்கள். படித்து முடித்து நல்ல வேலைக்குச் சென்று சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற குறிக்கோளோடுதான் கல்லூரியில் சேர்கிறார்கள். ஆனால் எல்லோருமா வெற்றியடைகிறார்கள்?
 ஆண் பெண் இருவருக்கும் இடையே உண்டாகும் இயல்பான ஈர்ப்பு, அதற்குத் தூபம் போடும் திரைப்படங்கள் இவற்றால் பலர் திசை மாறிப் போகிறார்கள். பல நேரங்களில் இருபாலரும் ஒன்றாகப் பயணிக்கவும், படிக்கவும், பழகவும் வேண்டியுள்ளது. மாணவிகளைப் பின் தொடர்வது, அவர்களை சீண்டுவது, கேலி செய்வது போன்ற குற்றங்கள் அதிகரிக்கின்றன. இதனால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
 பலர் குறிக்கோளை மறந்து காதல் என்னும் வலையில் வீழ்கிறார்கள். சில காதல், திருமணத்தில் முடிகின்றன; சில தோல்விகளில் முடிகின்றன; சில ஆணவக் கொலைகளில் முடிகின்றன. திருமணம் என்று ஆகிவிட்டால் பெரும்பாலும் அங்கு மாணவிகள் தங்கள் கனவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு குடும்பத்தை நிர்வகிக்கப் பழகிக் கொள்கிறார்கள். மாணவர்கள் பெரும்பாலும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தங்கள் குறிக்கோள்களையும் அடைந்து விடுகிறார்கள்.
 தோல்வி என்று ஆகிவிட்டால் அங்கும் அதிக அளவில் பாதிக்கப்படுவது மாணவியரே. இலக்கையும் எட்டாமல், விரும்பியவனையும் மணந்து கொள்ளாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக நிற்கிறார்கள். ஆணவக் கொலைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. இவற்றுக்கெல்லாம் விதிவிலக்குகள் உண்டு என்பதையும் மறுப்தற்கில்லை.
 மாணவ, மாணவியர் இதற்கெல்லாம் இடம் கொடாமல் இருக்கலாமே என்று கேட்கலாம். வயது அப்படி. அத்துடன் சூழலும் சேர்ந்தால் அவற்றை அவர்கள் எதிர் கொள்வது சுலபமன்று. இந்நிலையில் சூழலை சற்றே மாற்றியமைக்க இத்திட்டம் உதவக் கூடும்.
 மாணவர்களும் மாணவிகளும் வெவ்வேறு நேரங்களில் கல்லூரிக்கு வருவது அவர்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பினைக் குறைக்கும். கல்லூரிப் பருவத்தைக் கடந்த பிறகுதான் அவர்கள் தங்கள் அறிவு தெளிந்து முதிர்ச்சியடைகிறார்கள். அப்போது எடுக்கும் முடிவுகளே அவர்களது வாழ்க்கையை சிறக்க வைக்கும்.
 இரு வேறு நேரங்களில் தனித்தனி வகுப்புகள் எனும்போது அதே பேராசிரியர்கள் வகுப்புகளைக் கையாளுவது சாத்தியமில்லை. மேலும் கூடுதலாக பேராசிரியர்களை நியமிக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு ஆண்களையும் மாணவிகளுக்குப் பெண்களையும் பேராசிரியர்களாக நியமித்தால் பல பிரச்னைகள் தீரும்.
 மாணவர் நலனைக் காக்கும் பொறுப்பு பெற்றோருக்கும் இருக்கிறது. பிள்ளைகளுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். பள்ளியில், கல்லூரியில், நடந்தவற்றையெல்லாம் அவர்களிடம் கேட்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏதேனும் மாறுதல் தெரிந்தால் கவனமாகக் கையாள வேண்டும். மாணவர் நலன் காக்கப்பட்டால்தான் நாளைய சமுதாயம் நல்ல சமுதாயமாக உருவாகும்.
 
 கட்டுரையாளர்:
 சமூக ஆர்வலர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT