நடுப்பக்கக் கட்டுரைகள்

பலப்படுத்த வேண்டிய ஆயுஷ் துறை

23rd Jun 2022 06:17 AM |  அ. அரவிந்தன்

ADVERTISEMENT

இந்தியாவில் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, கடந்த 2014-ஆம் ஆண்டில் மத்திய ஆயுஷ், சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தால் "தேசிய ஆயுஷ் இயக்கம்' (என்ஏஎம்) தொடங்கப்பட்டது.
 பொதுமக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவையாற்றுவது, கல்விமுறையை வலுப்படுத்துவது, மருந்துகளின் தரத்தை நிர்ணயிக்கப்பட்ட அளவில் நிலைப்படுத்துவது, மூலப்பொருள்களின் இருப்பு வீதத்தை உறுதிப்படுத்துவது ஆகியவையே இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கங்களாகும்.
 வளரும் நாடுகளுக்கான ஆய்வு, தகவல்முறை - 2021 அறிக்கை, இந்தியாவில் ஆயுஷ் துறை நிகழாண்டில் (2022) அதிகபட்சமாக 23.3 பில்லியன் டாலர் (ரூ.1.75 லட்சம் கோடி) வருவாய் ஈட்டும் என கணித்துள்ளது. இந்திய மூலிகை மருத்துவ சந்தையின் நிலவரம் ரூ.18.1 பில்லியன் டாலராக (ரூ.1.37 லட்சம் கோடி) மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய ஆயுஷ் இயக்கம் தொடங்கப்பட்ட 2014-ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை ஆறு ஆண்டுகாலத்தில் ஆயுஷ் துறை 17% வளர்ச்சி கண்டுள்ளது.
 தேசிய ஆயுஷ் இயக்கத்தின் ஒரு பகுதியாக மூலிகை குணமிக்க செடிகள் நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளின் நிலத்தில் மருத்துவ குணம் மிக்க தாவரங்களின் சாகுபடி, அறுவடைக்குப் பிந்தைய பராமரிப்பு, அடிப்படை செயல்முறை, சந்தைப்படுத்துதல் ஆகிய பல்வேறு பணிகள் இந்த இயக்கத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவ குணம் மிக்க 140 செடிகளின் சாகுபடிக்காக விவசாயிகளுக்கு 30%, 50%, 75% என மானியம் அளிக்கப்படுகிறது.
 இன்றைய நிலவரப்படி 56,396 ஹெக்டேர் நிலப்பரப்பில் மூலிகைச் செடிகள் நாடு முழுவதும் சாகுபடி செய்யப்படுவதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவிக்கிறது. விரைவில் 75,000 ஹெக்டேர் நிலப்பரப்பை எட்டுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்வானந்த சோனோவால் கூறுகிறார்.
 மேலும், "ஆத்மநிர்பார் பாரத் அபியான்' (தற்சார்பு இந்தியா) திட்டத்தின்கீழ், மூலிகை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆயுஷ் அமைச்சகத்தின் செயல்திறனிலும், மேற்கண்ட திட்டங்களின் வாயிலாகக் கிடைக்கப் பெறும் பலன்களிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
 2020-இல் மூலிகை மருந்துகளுக்கான சர்வதேச சந்தை மதிப்பு 657.5 பில்லியன் டாலராக (ரூ.50 லட்சம் கோடி) மதிப்பிடப்பட்டிருந்தது. இது நிகழாண்டில் 746.9 பில்லியன் டாலர் (ரூ.56 லட்சம் கோடி) வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் சீனாவில், கடந்த 2018-ஆம் ஆண்டில் மூலிகை சிகிச்சைகள் துறைக்கு 37.41 பில்லியன் டாலர் (ரூ.2.80 லட்சம் கோடி) வருவாய் கிடைத்ததாக ஐபிஐஎஸ் வேர்ல்ட் அறிக்கை கூறுகிறது.
 மேலும், 2030-க்குள் பாரம்பரிய மருத்துவ சந்தை வாயிலாக 737.9 பில்லியன் டாலர் (ரூ.55.35 லட்சம் கோடி) வரை சீனா வருவாய் ஈட்டும் என்று கணிக்கப்படுகிறது. சீனாவில் பொதுமக்களிடையே மூலிகையின் மகத்துவம் குறித்து இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே இந்தத் துறையின் அசாத்திய வளர்ச்சிக்குக் காரணம். கடந்த 1982-ஆம் ஆண்டில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு சீன அரசியலமைப்புச் சட்டம் முழு அங்கீகாரம் அளித்தது அத்துறையின் அசுர வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைந்தது.
 சீனாவில் கடந்த 2009-லிருந்து சுகாதாரக் கொள்கைகளில் பாரம்பரிய மருத்துவத்துக்கென தனி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆகையால், நவீன மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், பாரம்பரிய மூலிகைச் செடிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதிலும் சீனா கவனம் செலுத்தி வருகிறது.
 இந்தியாவில் தேசிய மருத்துவ தாவர வாரியம் (என்எம்பிபி), ஆயுஷ் துறைக்குத் தேவையான மூலக்கூறுகளை மாநில மருத்துவ தாவர வாரியம் (எஸ்எம்பிபி) வாயிலாக விநியோகிக்கிறது. அந்த வகையில், மாநில மருத்துவ தாவர வாரியத்தின் அடிப்படையை இன்னமும் வலுப்படுத்த வேண்டியது அவசியம்.
 அதில் மூலிகை மருத்துவப் பாதுகாப்பு, சாகுபடி, ஆராய்ச்சி-மேம்பாடு, மூலிகை தோட்டம், பண்ணை அமைத்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெற வேண்டும். வணிக ரீதியில் பார்த்தால், ஆயுஷ் வர்த்தகம், மூலப்பொருள்களின் தரவுத்தளம் இன்னமும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
 இன்றைய நிலவரப்படி, பெரும்பாலான இந்திய மருத்துவ சிகிச்சை (ஐஎஸ்எம்) உபகரணங்கள், மூலிகைப் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி நடைமுறையில் பின்பற்றப்படும் "ஹார்மோனிஸ்ட் சிஸ்டம்' குறியீட்டைக் கூட பெறவில்லை.
 கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி குஜராத்தின் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்துக்கான சர்வதேச மையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உலக அளவில் பாரம்பரிய மருத்துவத்துக்கென சர்வதேச மையம் இந்தியாவில்தான் முதல் முறையாக அமையவுள்ளது.
 ஒருங்கிணைந்த மருத்துவ முறையை வலுப்படுத்தவும், கல்வி, ஆராய்ச்சி, மருத்துவப் பயிற்சி, பொது சுகாதாரம், நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்துதற்கான பரிந்துரைகளை அளிக்கவும் நாடு முழுவதும் 50 நிபுணர்களைக் கொண்ட நான்கு குழுக்களை நீதி ஆயோக் ஏற்கெனவே அமைத்துள்ளது.
 அக்குழு மேற்கொண்ட ஆய்வின் முடிவில், ஆயுஷ் மருத்துவ முறை பற்றிய விவரம் அறிந்தோர் மத்தியில் மகத்தான வரவேற்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.
 நாட்டில் ஆயுஷ் அமைச்சகம் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவையை ஒவ்வொரு மாநிலத்திலும் உறுதிப்படுத்துகிறது. நவீன மருத்துவ முறைக்கு நிகராக ஆயுஷ் மருத்துவ முறையும் வெற்றி பெறுவதற்கான திறன் அதனிடம் உள்ளது.
 ஆனாலும் பாரம்பரிய மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அரசு, விழிப்புணர்வு ஊட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT