நடுப்பக்கக் கட்டுரைகள்

அக்னிபத் திட்டம்: ஒரு பார்வை!

22nd Jun 2022 04:27 AM |  முனைவர் வைகைச்செல்வன்

ADVERTISEMENT

 மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான "அக்னிபத்' திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கி விட்டது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்போராட்டங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் ஆங்காங்கே எழுந்திருக்கின்றன.
 இந்திய ராணுவத்தில் நிரந்தர சேவை, குறுகியகால சேவை ஆகிய பிரிவின்கீழ், வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குறுகியகால சேவையில் பணியாற்றுபவர்கள் 10 முதல் 14 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். இப்படி சேருகிற இவர்களுக்கும் ஓய்வூதியம், ஓய்விற்குப் பிறகான ராணுவப் படை பலன்கள் போன்ற அனைத்தும் கிடைக்கும்.
 ராணுவத்தில் தேவையில்லாத செலவைக் குறைக்க மத்திய பாதுகாப்புத் துறை நீண்ட நாட்களாகவே ஆலோசனை செய்து வந்தது. அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்தான் அக்னிபத் திட்டத்தை அரசு முன்வைத்திருக்கிறது. 2022 - 23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ரூ.5,25,166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஓய்வூதியத்திற்காக மட்டும் ரூ.1,19,696 கோடியை ராணுவம் செலவழித்து வருகிறது.
 அதாவது நான்கில் ஒரு பகுதி ஓய்வூதியத்திற்காகவே செலவு செய்யப்படுகிறது. ராணுவ வீரர்களின் ஊதியம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு ரூ.2,33,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் தொகையைக் கொண்டே தளவாடங்கள் வாங்குவது உள்ளிட்ட ராணுவத்திற்கான மற்றைய செலவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
 ஆகவே, இந்த செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக புதிய திட்டமாக வடிவமைக்கப்பட்டதுதான் அக்னிபத் திட்டமாகும். இந்தப் புதிய வேலைவாய்ப்பு முறைக்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வரை வயதுடைய ஆண், பெண் இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வித்தகுதியே அக்னிபத் திட்டத்திற்கும் பொருந்தும்.
 இந்தத் திட்டத்தின் கீழ் பணியில் சேருவோர் "அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில், நான்கு ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். முதல் ஆறு மாதங்கள் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். நடப்பு ஆண்டில் 46ஆயிரம் அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அடுத்த 90 நாட்களில் புதிய திட்டத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 2023-ஆம் ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகி விடும் என்று ராணுவம் தெரிவிக்கிறது. இவ்வீரர்களுக்கான மாதாந்திர ஊதியம், முதலாம் ஆண்டு ரூ.30ஆயிரம், இரண்டாம் ஆண்டு ரூ.33ஆயிரம், மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ.40 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஊதியத்தோடு சேர்த்து இதர படிகளும் கிடைக்கும். ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்புத் தொகையாக பிடித்துக்கொள்ளப்படும். மீதமுள்ள 70 சதவீத தொகை மட்டும் வழங்கப்படும்.
 வீரர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அதே அளவிலான தொகையை மத்திய அரசு தனது பங்களிப்பாக செலுத்தும். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவை நிதியாக ரூ.11.71 லட்சம் பணப்பலன் வீரர்களுக்கு வழங்கப்படும். இதற்கு வருமானவரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
 அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளில் சேரும் வீரர்கள் நான்காண்டுகள் பணிநிறைவுக்குப் பிறகு நிரந்தரப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்களில் 25 சதவீத அக்னி வீரர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவர். மீதமுள்ள 75 சதவீத வீரர்களுக்கு சேவை நிதி வழங்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இந்த அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிக்காலம் முடிந்ததும், பணி அனுபவ சான்றிதழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.
 அக்னி வீரர்களுக்கென்று தனிப்பட்ட தகுதிப்பட்டியல் உருவாக்கப்படும். முப்படைகளில் இதுவரை இருக்கும் எந்தப் பணி நிலைகளிலும், இந்த வீரர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என ராணுவம் தெரிவிக்கிறது. அதைப் போன்றே, பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பதக்கம், விருதுகள் அனைத்தும் அக்னி வீரர்களுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கிறது.
 அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால், அவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. பணி காலத்தில் பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வழங்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால் கூடுதலாக ரூ.44 லட்சம் நிதி வழங்கப்படும். பணியின்போது காயமடைந்து நூறு சதவீதம் மாற்றுத்திறனாளி ஆகிவிட்டால் ரூ.44 லட்சமும், 75 சதவீதமானால் ரூ.25 லட்சமும், 50 சதவீதமானால் ரூ.15 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும். இந்தத் தொகை சேமிக்கப்பட்டால், முப்படைகளையும் நவீனப்படுத்த முடியும் எனவும் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் எனவும், பாதுகாப்புத்துறை கருதுகிறது.
 அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சகங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை, பாதுகாப்புத் துறை அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
 ஆக, வேலைவாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும், ராணுவ வீரர்களுடைய ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான செலவைக் குறைக்க இந்தத் திட்டத்தை அரசு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் அக்னிபத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பிகாரின் சாப்ரா மாவட்டத்து இளைஞர்கள் போராட்டக் களத்தில் குதித்து அம்மாநிலத்தை வன்முறைக் காடாக மாற்றியிருக்கிறார்கள். இதனால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து அம்மாநிலத்தில் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. பிகார் மாநிலத்தில் மட்டுமல்ல, ராஜஸ்தான், அஸ்ஸாம், உத்தர பிரதேசம், ஹரியாணா போன்ற மாநிலங்களிலும் இந்த அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 இந்தத் திட்டத்தால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகிவிடும். அதனால் வேலையில்லாத இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராளிகள் குழுவை ஏற்படுத்தி விடுவார்கள் என்கிற அச்சம் நிலவுகிறது. ராணுவத்திற்கென்றே தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிற இளைஞர்கள், இந்தத் திட்டம் தங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக சொல்கிறார்கள். பிகார், ராஜஸ்தான், அஸ்ஸாம் மாநிலங்களிலும் தென் பகுதியில் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களிலும், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலும் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
 2019-ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து ராணுவத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள், கரோனா நோய்த்தொற்று காரணமாக எழுத்துத் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது. அதனால், அவர்களுக்கு இந்த அக்னிபத் திட்டம் மிகுந்த ஏமாற்றத்தையும், கவலையையும் உண்டாக்கியிருக்கிறது. இந்திய ராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த ராணுவமாக மாற்ற அக்னிபத் திட்டம் மிக முக்கியப் பங்காற்றும் என்று பாதுகாப்புத் துறை சொன்னாலும், இளைஞர்கள் அதனை ஏற்கும் மனநிலையில் இல்லை.
 ஆனாலும், அக்னிபத் திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று ராணுவ விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி கூறியுள்ளார்.
 இந்திய ராணுவத்தில் 14 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை, இந்திய இளைஞர்களின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் பேர் இந்திய ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள். இந்த இடங்களை நிரப்பக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அக்னிபத் திட்டம் மிகப்பெரிய துரோகமிழைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
 நான்காண்டு வேலைக்குப் பிறகு, வேலையில்லாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். அல்லது மீண்டும் தனியார் வசம் வேலைக்குச் செல்ல வேண்டும். ஆகவேதான், இளைஞர்கள் பதற்றம் அடைந்திருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், நமது இளைஞர்களுக்கு ராணுவப் பணி வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது என்று கூறப்பட்டாலும் பணி நிரந்தரம் இல்லை என்பதனால் இளைஞர்கள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.
 இந்திய ராணுவத்தின் ஒட்டுமொத்த தன்மையையும் இந்த அக்னிபத் திட்டம் சிதைத்துவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. ஏனென்றால், ராணுவப் பணி என்பது இடைக்கால பணியோ, பொழுதுபோக்கும் வேலையோ அல்ல. ராணுவ வாழ்க்கை என்பது, போருக்கும், உயிரிழப்பிற்கும் தயாரான ஓர்அர்ப்பணிப்பு. இதில் நிரந்தரமற்ற வேலை என்கிற நிலை உருவானால், ராணுவம் தனது நம்பகத்தன்மையை இழந்து விடும் என்கிற கூற்றையும் மத்திய அரசு கருதிப் பார்க்க வேண்டும்.
 உக்ரைன் போரில் ரஷியாவின் பின்னடைவை நாம் பார்த்தோம். உறுதியான எதிர்த்துப் போரிடும் திறனில்லாத பகுதிநேர அல்லது போதிய பயிற்சி பெறாத படையைக் கொண்டிருந்தால், இதுபோன்ற ஆபத்துதான் ஏற்படும். ஆகவே, அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவிற்கு நல்ல பயிற்சி பெற்ற ராணுவமே தேவை.
 வழக்கமாக ராணுவ வீரர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை பயிற்சி பெறுவார்கள். ஆனால், அக்னிபத் வீரர்கள் ஆறு மாதம் மட்டுமே பயிற்சி பெறுவார்கள். ஆகவே, போதிய பயிற்சி கிடைக்காமல் தங்களது திறனை இழந்து விடக்கூடும்.
 அது போன்றே, ராணுவத்தில் இடைக்கால பிரிவு, நிரந்தர பிரிவு என இரண்டு பிரிவுகள் இருப்பது, ராணுவத்தின் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திறனை வெகுவாக பாதிக்கும். அதனால் ஏற்றத்தாழ்வுகளும் உருவாகக்கூடும்.
 நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. இந்திய ராணுவத்தில் புதிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், பழைய படைப்பிரிவின் கட்டமைப்பு சீர்குலைந்து விடும். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 40ஆயிரம் இளைஞர்கள் தங்கள் பணியை இழப்பார்கள். கண்களை விற்று ஓவியம் வாங்குவது அறிவுடைமையல்ல!
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் அமைச்சர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT