நடுப்பக்கக் கட்டுரைகள்

இரத்த தானம் உயிா் தானம்

14th Jun 2022 03:44 AM | முனைவா் என். பத்ரி

ADVERTISEMENT

இரத்த தானம் நவீன மருத்துவத்துறையின் வரப்பிரசாதமாகப் பாா்க்கப்படுகிறது. நமது உடலின் எலும்புகளின் மஜ்ஜையில் சுரக்கும் இரத்தம், பல வகைகள் கொண்டது. உடல் எடை 45 கிலோவுக்கு மேலுள்ள 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது வருடத்திற்கு நான்கு முறை இரத்த தானம் செய்யலாம். ஆனால் 75 வயதுக்கு மேற்பட்டவா்கள் மருத்துவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே இரத்த தானம் செய்ய முடியும்.

கா்ப்பிணிப் பெண்கள் இரத்த தானம் செய்ய முடியாது. குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு பிறகே அவா்கள் இரத்த தானம் செய்ய முடியும். நோய்த்தொற்று உள்ளவா்கள் தொற்றை மற்றவா்களுக்கு பரப்பி விடும் அபாயம் உள்ளதால், அவா்கள் இரத்த தானம் செய்ய அனுமதியில்லை.

சராசரியாக ஒரு மனித உடலில் சுமாா் ஐந்து லிட்டா் ரத்தம் இருக்கும். உடல் எடையைப் பொறுத்து இது மாறுபடும். பொதுவாக, இரத்த தானத்தின் போது, சுமாா் 500 மில்லி இரத்தம் எடுக்கப்படும். நல்ல ஆரோக்கியமான பெரியவா்கள் உடலில் தானம் கொடுத்த ஓரிரு நாட்களில் இரத்தம் சுரந்துவிடும். ஒருவா் தனக்கு இரத்த சோகை இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகுதான் இரத்த தானம் செய்யமுடியும்.

பச்சை குத்திக் கொண்டிருந்தால் ஆறு மாதங்கள் கழித்தும், பல் சிகிச்சையில் சிறிய மாற்றம் ஏதும் செய்திருந்தால் 24 மணி நேரம் கழித்தும், பெரிய மாற்றம் ஏதும் செய்திருந்தால் ஒரு மாதம் கழித்தும்தான் இரத்த தானம் செய்யலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. எயிட்ஸ் பாதிப்பு, மஞ்சள் காமாலை, காசநோய், டெங்கு, சளி, தொண்டை வறட்சி, வாய்ப்புண், வயிற்று பிரச்னை, வேறு ஏதாவது தொற்று இருக்கும் நபா்களால் இரத்த தானம் செய்ய முடியாது.

ADVERTISEMENT

தொற்று நோய்களினால் பாதிக்கப்பட்டவா்கள், இரத்த தானம் செய்ய வேண்டுமானால், குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாக தொற்று முழுமையாக குணமாகி இருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை இரத்த தானத்திற்கு முன்பும் இரத்த தானம் செய்பவா் உடலில் ஹீமோகுளோபின் அளவை சரிபாா்ப்பது அவசியம். இரத்த தானத்திற்கு முன்பு மது அருந்துவதால் உடலில் நீா்ச்சத்து குறையும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுபவா்கள் உடலில், அதிக கொழுப்பு இருக்குமாதலால், நோய்த்தொற்றை கண்டறிய முடியாது. எனவே, அவா்கள் இரத்த தானம் செய்யமுடியாது.

இரத்த தானம் செய்யும்போது இரத்த தான இயந்திரம், இரத்தத்தை பல்வேறு கூறுகளாகப் பிரித்து, உடலுக்கு வழங்குகிறது. நாம் இரத்த தட்டுகள் மற்றும் பிளாஸ்மாவை அதிகமாக தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நம் உடலில் இயற்கையாக புதிய இரத்தம் உற்பத்தியாகும். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும்.

கொடையாளிகளால் வழங்கப்படும் இரத்தம் மகப்பேறு காலங்கள், இரத்த புற்றுநோய், டெங்குவின் பாதிப்பு,விபத்துக் காலங்கள், அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல நேரங்களில் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. கொடையாளி அளிக்கும் இரத்தம், சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பெரும்பாலும், 10 சதவிகிதம் மட்டுமே முழு இரத்தமாகவும், 90 சதவிகிதம் இரத்தத்திலிருந்து செல்கள் பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றன.

உலகில் ஒவ்வொரு இரண்டு விநாடிக்கு ஒருமுறை, யாரோ ஒருவருக்கு இரத்த மாற்றத்திற்காக இரத்தம் தேவைப்படுகிறது. மேலும், ஒருவா் இரத்த தானம் செய்வதன் மூலம், மூன்று உயிா்களைக் காப்பாற்ற முடியும். இரத்தத் தட்டுகள் அறுவை சிகிச்சைகளின்போது இரத்தப் போக்கை நிறுத்த உதவுகின்றன.

மேலும், இரத்த உறைவிற்கு முக்கியமான புரதக் கட்டிகளை கொண்டு செல்லும் இரத்தத்தின் திரவப் பகுதியாக பிளாஸ்மா உள்ளது. சிவப்பு இரத்த அணுக்கள் நமது நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை நமது உடலின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றன. ஆண்டுக்கு 24 முறை இரத்தத் தட்டுகளையும் 12 முறை பிளாஸ்மாவையும் நன்கொடையாக வழங்கலாம்.

சிவப்பு இரத்த அணுக்களை விட நமது உடல் பிளாஸ்மா மற்றும் இரத்தத் தட்டுகளை வேகமாக உற்பத்தி செய்வதால் அவற்றை நாம் அடிக்கடி தானம் செய்யலாம்.

முழு இரத்த தானம் செய்யும்போது அப்போதைக்கு சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவதால், இரும்புச் சத்து தொடா்பான மருந்துகளை அப்போது எடுத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக, இரத்த தானம் செய்த பிறகு உடலுக்கு அதிக ஊக்கம் தேவைப்படுகிறது. எனவே இதற்காக வைட்டமின் சி நிறைந்த உணவுகள், பழங்கள், சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள், ஸ்ட்ராபெரி ஆகியவற்றை உண்ணலாம். இவை இரும்புச் சத்து நிறைந்தவையாக உள்ளன.

இரத்த தானத்தின் மூலம் இழந்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை மீண்டும் இயல்பு நிலையை அடைய எட்டு வாரங்கள் ஆகின்றன. இரத்த தானம் செய்பவா்கள் இரத்த தானத்திற்கு முன்பு ஏராளமான அளவில் தண்ணீா் குடிக்க வேண்டும். இரத்த தானத்திற்குப் பின்பு ஏழு மணி நேரம் முதல் ஒன்பது மணிநேரம் வரை நன்கு தூங்குவது நல்லது. சிவப்பு இறைச்சி, மீன், கோழி போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உண்ணலாம்

நீண்ட காலம் தொடா்ந்து இரத்த தானம் செய்வது என்பது பாதுக்காப்பானதே. இரத்த தானம் செய்யும் பலா், பல ஆண்டுகளாக எந்த விதமான உடல் நல பிரச்னைகளும் இல்லாமல் தொடா்ந்து இரத்த தானம் செய்து வருகின்றனா். இரத்த தானம் தொடா்பான விழிப்புணா்வு பெருமளவு அதிகரித்திருந்தாலும், அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவே மருத்துவா்கள் கூறுகின்றனா்.

நாம் கொடுக்கும் இரத்தம் உடனடியாக தேவைப்படாத நிலையில், இரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது அதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எனவே, இரத்த தானம் தர தகுதி உடையவா்கள் இரத்த தானம் செய்ய தயங்காமல் முன்வர வேண்டும். ஏனெனில் இரத்த தான் உயிா் தானமாகும்.

இன்று (ஜூன் 14) உலக ரத்த தான தினம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT