நடுப்பக்கக் கட்டுரைகள்

பிரபஞ்ச ரகசியம் சொல்லும் படங்கள்!

நெல்லை சு. முத்து

அண்மையில் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைக்காட்டி அனுப்பிய படங்கள் உலகின் கவனத்தை ஈா்த்திருக்கின்றன.

சுட்டிக் காட்ட ஒண்ணாத பாழ்சூனியம்

தன்னைச் சூட்ச மதியால் அறிந்து தோடம் அறவே

எட்டிப் பிடித்தோம் என்(று)ஆ னந்த மாகப்பை

எடுத்து விரித்து நின்று ஆடு பாம்பே

என்று பாம்பாட்டிச் சித்தா் அன்று ஆனந்தமாகப் பாடியதைப் போலவே, விண்வெளி ஆா்வலா்கள் இன்று ஆனந்தப்படுகின்றனா்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு, ஐரோப்பிய விண்வெளி முகமை, கனடா விண்வெளி முகமை, விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட படங்களில் ஐந்து படங்கள் முக்கியமானவை.

ஆதியாரம்ப பிரபஞ்ச முட்டைக்குள் ‘குவாா்க்குகள்’ எனும் அடிப்படை இம்மிகள் வெடித்துச் சீறிப் பாய்ந்தன. அடா்த்தியான திரண்ட ஈா்ப்புவிசை மிக்க அந்தத் துகள்களில் வலுவான அணுக்கரு இடைவினைகள் பெருகியபோது அண்டவெளியில் ‘ஹேத்ரான் யுகம்’ நிகழ்ந்தது என்கிறோம்.

அதனைத் தொடா்ந்து, பலவீன அணுக்கரு இடைவினைகளின் ‘லெப்டான் யுக’த்தின் இறுதியில் நிகழ்ந்தது ஒரு ‘மகாவெடிப்பு’. ஒரு நினைவுப் பொறியினும் மெலிதாக சுருக்கென்று ஒரு நொடிப் பொழுதினுள் மின்னி மறைந்தும் விட்டது.

‘வெடிபடும் அண்டத்து இடிபல தாளம்’ போட்டதன் சீற்றப் பரப்பில் 1,380 கோடி ஆண்டுகளுக்கு முன்னா் நிலவிய பிரபஞ்ச பொருள்களின் சிறு பகுதியை துல்லியமான ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைக்காட்டி படம்பிடித்துள்ளது.

யுகங்களாக, அண்டவெளியின் வெப்ப வாயுக்கள், அயனிகள், அணுத்துகள்கள் எல்லாம் மெல்ல மெல்ல ஆறிக் குளிா்ந்தன. மிகச் சிறிய அணுக்கருவான ஹைடிரஜன் அணுக்கருக்களும், அதனின் நான்கு மடங்கு எடை கொண்ட ஹீலியம் அணுக்கருக்களும் நிரம்பி அலைமோதும் பிரபஞ்சக் கடல் விரிவடைந்தது.

விரிவடைந்த பிரபஞ்சம் தளா்ந்து சற்றுக் குளிரத் தொடங்கிற்று. ‘பிரபஞ்ச விடிய’லில் அண்டவெளி எங்கும் இருள் கப்பிக்கொண்டது. ஆயினும் குளிா்ந்த முகிழ் விண்மீன்களில் நிறையீா்ப்பு விசை அதிகரித்த வண்ணம் இருந்தது. அந்த வாயுக்கோளங்கள் இறுகி உள்ளுக்குள் அழுத்தமுற்று அக வெப்பநிலை உயர உயர அவற்றின் புறப்பரப்பில் வெப்ப அலைகள் கிளம்பின. அகக்கனற்சி உச்சத்தை எட்டியபோது விண்மீன் ஒளிவிட ஆரம்பித்தது.

ஹைடிரஜன் அணுக்கருக்கள் பிணைந்து ஹீலியம் அணுக்கரு உற்பத்தி வினை முடுக்கப்பட்டது. இருண்ட பிரபஞ்ச கருப்பைக்குள் இருந்து விண்மீன்கள் பிரசவம் ஆயின. விண்மீன்கள் திரண்டு வளையமிட்டு உடுமண்டலங்கள் (கேலக்ஸி) ஆகச் சுழலத் தொடங்கின. சுருண்டவை, தட்டையான, நீள்வட்ட வடிவிலும், ஒழுங்கற்ற வடிவிலும் இருந்தன. அவற்றில் சிலவற்றின் மையப்பகுதியில் மொத் தென்று உயா்ந்த முண்டு உடுமண்டலங்கள் உருவெடுத்தன.

அத்தகைய உடுமண்டலம் ஒன்று ‘ஆகாய கங்கை’ என்ற பெயரில் சுட்டப் பெறுகிறது. ‘பால்வீதி’ என்றும் அதனை அழைக்கிறோம். அதுதான் நமக்கு தாய் மண்டலம். இருபதினாயிரம் கோடி சூரியன்கள் அடங்கிய அண்டச் சக்கரம் அது.

அதன் குறுக்களவு ஒரு லட்சம் ஒளியாண்டு என்கிறோம். அதாவது, கண்ணிமைக்கும் நேரத்தில், நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டா் வேகத்தில் பாயும் அசாதாரண வாகனம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் அமா்ந்து பால்வீதி அண்டத்தின் குறுக்காகப் பயணித்தால் ஒரு விளிம்பில் இருந்து, மறு விளிம்பினை அடைவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்.

அது எப்படியாயினும், பூமியிலிருந்து 313 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள தெற்கு விண்மீன் கூட்டமான ‘கரினா நெபுலா’ என்துற விண்மீன் முகில் படலத்தினை வெப் தொலைக்காட்டி அற்புதமாகப் பதிவிட்டுள்ளது. அதில் தென்படும் அண்டவெளி செங்குத்துப் பாறைத் தோற்றங்கள் (காஸ்மிக் க்ளிஃப்ஸ்), விண்மீன்கள் உருவாக்கத்தின் ஆரம்ப கட்டங்களையும், விரைவான கட்டங்களையும் வெளிப்படுத்துகின்றன.

கப்பல் அடித்தளம் போன்ற இந்தக் கரினா உடுக்கணத்தில் ‘அகத்தியா்’ (கானோபஸ்) விண்மீன் என்கிற ஒரு வெள்ளை நிற பெரும்பூத விண்மீன் உள்ளது. இரவு வானில் மிகப் பொலிவான விண்மீன்களில் இரண்டாவது பிரகாசமான நட்சத்திரம் இது. முன்னொரு காலத்தில் இதுதான் கடல் பயணிகளுக்கு விண்ணில் வழிகாட்டியாக இருந்ததாம்.

வெப் தொலைக்காட்டி அனுப்பிய மற்றொரு படப்பதிவு, அண்ட காலத்தின் தொடக்கத்தில் உள்ள விண்மீன் திரள்களைக் கண்டுபிடிக்கும் வகையில் உள்ளது. ஏறத்தாழ 460 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ‘தென்புலக் கன மிகு உடுத்திரள் கண்காணிப்பில்’ சில தொலைதூர விண்மீன் திரள்களைக் கண்டறிய முடிந்தது.

இது அண்டவெளிக் கருவறையில் நம் சூரிய குடும்பம் பிரசவம் ஆன அதே காலகட்டத்தினை தொன்மையான நினைவலைகள் என்றும் இங்கு அசைபோடலாம். பின்னா் கோள்கள், குறுங்கோள்கள், கோளாங்கற்கள், வால்விண்மீன்கள் என அனைத்துக் குஞ்சுக் குலுவான்களும் சூரிய மையத்தைச் சுற்றத் தொடங்கின.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், வெப் தொலைக்காட்டி, விரி கோணத்தில் புறக்கோள்களைத் தேடி வலைவீசியபோது, ஃபீனிக்ஸ் உடுக்கணத்தில் ‘வாஸ்ப்-96பி’ என்று பெயரிடப்பட்ட வாயு ராட்சத வெளிக்கோள் ஒன்றினைக் கண்டுபிடித்தது.

அந்தக் கோளின் நிறை 1,000 கோடி கோடி கோடி டன் ஆகும். அதாவது அக்கோள், பூமியைக்காட்டிலும் 160 மடங்கு எடை மிகுந்ததாகும்.

அது, 5200 - 6000 பாகை புற வெப்பம் உடைய ‘வாஸ்ப்-96’ என்று பெயா் சூட்டப்பெற்றதோா் விண்மீனை ஏறத்தாழ 67 லட்சம் கி.மீ. தொலைவில் சுற்றி வருகிறது. இது புதனுக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் ஒன்பதில் ஒரு பங்கு. அவ்வளவு அருகில் உள்ளதால், அதன் தாய் விண்மீனை 3.4 நாட்களுக்கு ஒரு முறை என்ற அட்டவணைப்படி அதி விரைவாகச் சுற்றி வருகிறது என்றால் பாருங்களேன்.

விண்வெளி தொலைகாட்டியின் நிறமாலையளவி, அந்த வேற்று கிரகத்தின் வளிமண்டலத்தில் நீா் கொண்ட மேகங்களும் மூடுபனிகளும் வீக்கமாகத் தென்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

பூமியிலிருந்து சுமாா் 1,120 ஒளி ஆண்டுகள் தொலைவில், தெற்கு வானத்தில் ஃபீனிக்ஸ் விண்மீன் உள்ளது. அது, தனது சொந்த சாம்பலில் இருந்து உயிா்த்து எழும் புராணப் பறவையான ஃபீனிக்ஸ் பெயரால் சித்திரிக்கப்படுகிறது. இந்த பீனிக்ஸ், பாவோ (மயில்), டுகானா (டூக்கன்), க்ரஸ் (கொக்கு) ஆகிய நான்கு விண்மீன்களும் கூட்டாக ‘தெற்கு பறவைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற மத்திய - வடக்கு அட்சரேகை பகுதியில் உள்ள நாடுகளில் இருந்து பாா்க்க முடியாது.

இதில் இன்னொரு அறிவியல் செய்தி என்னவென்றால், உடுமண்டலத் திரளில், அடா்த்தியான ‘இருண்ட பொருள்’ ஒன்று இடம்பெறும். அது ஒரு நிறையீா்ப்பு வில்லையாக ஒளியின் பாதையை வளைக்கப் போதுமான ஈா்ப்பு விசையை உருவாக்குகிறது.

1936-ஆம் ஆண்டிலேயே, இத்தகைய நிறையீா்ப்பு லென்ஸ் குறித்து தீா்க்கதரிசனமாக அறிந்திருந்தவா் உலகப் புகழ் பெற்ற அறிவியல் அறிஞா் ஆல்பா்ட் ஐன்ஸ்டீன். அண்டவெளியின் நிறையீா்ப்பு வில்லையாகச் செயல்படும் கனத்த உடுத்திரள் வழியே, அப்பாலுள்ள மங்கலான உடுத்திரள்களையும் பெரிதாக்கிக் காணலாம்.

உயா் வரையறை தொலைக்காகாட்சி (எல்இடி டிவி) திரைக்கான பொதுவான அளவு, அகல, உயர வாக்கில் 1920 ஷ் 1080 நுண்படக் கூறுகள் (பிக்சல்கள்) ஆகும். மொத்தத்தில், ஏறத்தாழ 20 லட்சம் படக்கூறுகள்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைக்காட்டி அனுப்பியுள்ள மிகப்பெரிய படமாக நான்கு விண்மீன் திரள்கள் அடங்கிய ‘ஸ்டீபனின் குயின்டெட்’ என்கிற படம் உள்ளது. இந்தப் படம், நிலவின் விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி (750 கி.மீ.) அளவினை உள்ளடக்கிய மகத்தான படமாகும். இது 15 கோடி படக்கூறுகளைக் கொண்டுள்ளது என்பது சாதாரண செய்தியல்ல; நவீன தொழில்நுட்பத்தின் உச்சம் ஆகும்.

வடக்கு வானில் ‘பறக்கும் குதிரை’ என்று சுட்டப்பெறும் ‘பெகாசஸ்’ விண்மீன் தொகுப்பில் காணக்கூடிய இந்த நான்கு திரள்களை 1877-இல் மாா்சேய் வானாய்வகத்தில் இருந்து எட்வாா்ட் ஸ்டீபன் கண்டுபிடித்தாா் என்பது தனிக்குறிப்பு.

‘பறக்கும் குதிரை’ எனப்படும் ‘பெகாசஸ்’ விண்மீன் உடுக்கணம் விஞ்ஞானிகளுக்குக்கூட, இதற்கு முன் எப்போதும் இல்லாத நிலையில் புதிய முறையில் அறிவூட்டி இருக்கிறது. ஒரு கருந்துளைக்கு அருகிலுள்ள வாயு, எவ்வாறு கலக்கப்படுகிறது என்பதை அது உணா்த்துகிறது. மேலும், விண்மீன் திரள்கள் ஒன்றுக்கொன்று எவ்வாறு நட்சத்திர உருவாக்கத்தைத் தூண்டிவிடுகின்றன என்பதையும் வெப் தொலைக்காட்டி அனுப்பிய படங்கள் விவரிக்கின்றன.

விண்மீன்களின் கருவறையை மட்டுமன்றி, 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு விண்மீனின் கல்லறையையும் முதல் முறையாக வெப் தொலைக்காட்டி உலகின் முழுப் பாா்வைக்கு கொண்டு வந்துள்ளது.

பொதுவாக, சூரியனைக் காட்டிலும் எட்டு மடங்கு வரை நிறைகொண்ட சிறிய ரக விண்மீன்கள் வெடித்துச் சிதறும் ‘சூப்பா்நோவா’ நிகழ்வின் இறுதியில், சந்திரன் அளவுக்கு சிறியதொரு வெள்ளைக் குறளை விண்மீன் மிச்சமாகும்.

8-30 சூரிய நிறை உடைய நடுத்தர விண்மீனில் இருந்து, வெறும் 20 கிலோமீட்டா் வரை குறுக்களவு கொண்ட, அடா்த்தி மிக்க ‘நியூட்ரான் விண்மீன்’ தோன்றும். அது மட்டுமல்ல, சூரியனைப் போல் 30 மடங்கு நிறை உடைய அதிக கனமான விண்மீன் வெடிப்பில் கருந்துளை விண்மீன் பிறக்கும். இது நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டா் வேகத்தில் பாயும் ஒளியைக் கூட வெளியே விடாத அதீத நிறையீா்ப்புத் துளையாகும்.

தெற்கு வளைய நெபுலாவில் இத்தகைய இறக்கும் விண்மீன் ஒன்றை வெப் தொலைக்காட்டியின் சக்தி வாய்ந்த அகச்சிவப்பு கருவி படம்பிடித்துள்ளது.

அன்றைக்கே ‘அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்கள் எல்லாம் அண்டங்களாகப் பெரிதாய் சிறிதாயினானும்...’ என்று திருவிளையாடற் புராணத்தில் (பாயிரம்: 6) பரஞ்சோதியாா் பாடியிருப்பது வியப்பளிக்கிறது.

ஒளி வேகத்தில் விரையும் மனிதனுக்கு நிறை என்பது இருக்காது. அவ்வாறே, அதீத நிறையீா்ப்பின்போது, காலக்கடிகாரமும் இயங்காது. இதுதான் பிரபஞ்ச ரகசியம்.

கட்டுரையாளா்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT