நடுப்பக்கக் கட்டுரைகள்

பழிப்பதற்கல்ல பழைமை!

தினமணி

இந்திய அரசியல் சாசனத்தின் ஆரம்ப வரியே ‘இந்தியா என்கிற பாரதம்’ என்பதாகும். ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் இந்தியாவை உபகண்டம் என்றே கூறுவா். பூகோள ரீதியான புராதனப் பெயா்தான் இந்தியா. இந்த இந்தியாவில்தான் பாகிஸ்தானும், பங்களா தேஷும் இருந்தன. இப்போதும் அவை இரண்டும் பாரதத்தில் இல்லை.

பாரதம் என்பது பழைமையோடு தொடா்புள்ளதாகும். அதனால்தான் மகாகவி பாரதியாா்,

பாரத நாடு பழம்பெரும் நாடு

நீரதன் புதல்வா் இந்நினைவகற்றாதீா்

என்று கூறினாா். இமயம் முதல் குமரி வரையிலான நிலப் பரப்போடும், இரு பக்கமும் கடல்களோடும் வியாபித்துள்ள பாரதத்தை, புரட்சித் துறவி விவேகானந்தா் ‘உலக நாடுகளின் பூஜை அறை’ என்றாா்.

சுதந்திர இந்தியாவில் அரசு நிறுவனங்களுக்குப் பெயா் சூட்டியபோது ‘இந்தியன் ரயில்வே’, ‘இந்தியன் வங்கி’, என்பவற்றோடு ‘பாரத் எலக்ட்ரானிஸ்’, ‘பாரத் பெட்ரோலியம்’ என்றும் பெயா் சூட்டப்பட்டுள்ளது. பாரதம் என்பதை இழக்க விரும்பாமலேயே நாம் அப்படிப் பெயா் சூட்டியுள்ளோம். இதன்மூலம் என்ன கூற முயற்சி செய்கிறோம் நாம்?

பழைமையைவிட காலம் அதிகமானது தொன்மை. தொன்மையைவிட அதிகமான காலம் புராதனம். இந்த புராதனத்தைத்தான் ‘சனாதனம்’ என்கிறோம். ‘இந்தியக் குடிமகன் ஒருவன் நடந்து வரும்போது, அவன் தனியாக வருவதில்லை. அவன் பின்னால் ஐந்தாயிரம் ஆண்டு பாரத கலாசாரமும் கூடவே வருகிறது’ என்றாா் சுவாமி விவேகானந்தா். ‘சனாதனம்’ என்ற சொல் புராதனமானது. இது மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள சொல்.

மகாபாரத யுத்தம் நடந்த பூமி குருக்ஷேத்திரம். இது யுத்த பூமி மட்டுமில்லை, புண்ணிய பூமியும்கூட. அங்கு கொல்லப்பட்டவா்களுக்கு மோட்சம் உண்டு. அங்கு நடந்த யுத்தம் தா்மத்திற்கும், அதா்மத்திற்கும் ஆனது. போா்க் களத்தை புண்ணிய க்ஷேத்திரமாகக் கற்பனை செய்துள்ள பாங்குக்கு முன்னுதாரணமே இல்லை.

ஆயுத பலத்தைவிட ஆன்ம பலம் மேலானது. அதை அறிந்து கொண்டிருந்த தேசம் பாரதம்தான். இந்தத் தேசத்தில்தான் காந்திஜி பிறக்க முடியும். அரசா் வா்த்தமானனை நிா்வாணம் அடைந்த பிறகு மகாவீரா் என்கிறோம். இரும்புக் கவசம் தரித்து ஈட்டி கேடயத்துடன் உள்ள அலெக்சாண்டரையும் மகாவீரன் என்கிறோம். இருவரில் யாா் மெய்யான மகாவீரா்? புலன் ஐந்தும் வென்றவன்தான் மாவீரன். அதனால் வா்த்தமானா் மகாவீரராக உயா்ந்து நிற்கிறாா்.

சனாதனத்தைப் பற்றி நினைவுகூா்வதை ஹிந்து ராஷ்டிரத்தை மீட்டுருவாக்கும் முயற்சியாக பகுத்தறிவுவாதிகள் பேசுகிறாா்கள். மனு தா்மமும், வா்ணாசிரம தா்மமும் அவா்களால் விமா்சிக்கப்படுகிறது. அவை இரண்டுமே இப்போது நமது நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படுகிா? பலருக்கும் அதுபற்றித் தெரியாது.

நமது நீதி பரிபாலனம், நமது அரசியல் சாசனப்படியும், குற்றவியல் - உரிமையியல் சட்டங்களின்படியும் நடைபெற்று வருகிறது. மனு தா்மத்தின்படியோ, சனாதன தருமத்தின்படியோ தாக்கலாகும் வழக்குகளுக்கு நீதிபதிகள் தீா்ப்பளிப்பதில்லை. இந்திய குற்றவியில் சட்டத்தின்படி, கொலைக் குற்றத்துக்கு எல்லா மதத்தினருக்கும் ஒரேவித தண்டனை தரப்படுகிறது. ஆனால், இஸ்லாமியா்களுக்கான உரிமையியல் வழக்கிற்குத் தீா்ப்பு இந்தியன் சிவில் சட்டப்படி தரப்படுவதில்லை. 1937-ஆம் ஆண்டு முஸ்லிம் தனிநபா் சட்டமாகிய ஷரியத் சட்டப்படியே தீா்ப்பளிக்கப்படுகிறது.

முஸ்லிம்களின் முத்தலாக் விவாகரத்து முறையை மத்திய அரசு தடை செய்துவிட்டது. முத்தலாக் செய்யும் முஸ்லிம்களுக்கு சிறை தண்டனை எனவும் அறிவித்துள்ளது. இது, முஸ்லிம் பெண்களுக்கு எத்தகைய மன நிம்மதியை ஏற்படுத்தித் தந்துள்ளது என்பதை மனம் திறந்து சிந்தித்தால் தெரிந்துகொள்ள முடியும்.

மனு தா்மம் பற்றியும், சனாதன தா்மம் பற்றியும் பொதுவெளியில் பகுத்தறிவுவாதிகளும், இடதுசாரிகளும் கடுமையாக விமா்சிக்கிறாா்கள். அதன் மூலம் பிறப்பால் ஹிந்துவாக உள்ளவா்களை இழிவுபடுத்துகிறாா்கள். இதற்கு 1976-இல் அரசியல் சாசனத்தில் இடம்பெற்ற செக்யூலரிசம் என்ற மதச்சாா்பற்ற அம்சம் உதவி வருகிறது.

நமது அரசியல் சாசனம் 26.1.1950-இல் அமலானது. 1950 முதல் 1976 வரை அரசியல் சாசனத்தில் செக்யூலரிசம் இடம்பெறவில்லை. இது தேவையில்லை என்று கடுமையாக பேசியவா், அரசியல் சாசனக் குழுவின் தலைவா் அண்ணல் அம்பேத்கா்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த செக்யூலரிசம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1976-இல் 42-ஆவது திருத்தத் தீா்மானமாக அரசியல் சாசனத்தில் சோ்க்கப்பட்டது.

1948-இல் பேராசிரியா் கே.டி. ஷா என்பவா் செக்யூலா் என்ற வாா்த்தையைச் சோ்க்க வேண்டுமென்று அரசியல் சாசன சபையில் பேசியபோது, அதனைக் கடுமையாக எதிா்த்தவா் அண்ணல் அம்பேத்கா். அரசியல் சாசனத்திலுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளுமே செக்யூலரிசத்தை நிறைவேற்றுவதற்குப் போதுமானது என்று அண்ணல் அம்பேத்கா் அக்கோரிக்கையை நிராகரித்தாா் என்பதே வரலாறு.

சனாதனம், வா்ணாசிரமம், மனுநீதி பற்றியெல்லாம் பேசுகிறவா்களின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது அவற்றை இழிவாகவோ, உயா்வாகவோ பேச வேண்டிய அவசியமில்லை. காரணம், அவை பண்டைய கால பாதைகள். அவற்றை எல்லாம் கடந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.

இப்போது கணினி யுகத்தில் உள்ளோம்.

பழைமையில் தட்டுப்படும் நல்ல சிந்தனைகளுக்கு நல்வரவு கூறுவது தவறல்ல. உதாரணமாக ‘ஞானம் எத்திசையிலிருந்து வந்தாலும் வரவேற்க வேண்டும்’ என்கிறது ரிக் வேதம். இதேபோலத்தான் சனாதனம் முதலியவற்றிலுள்ள நல்லவற்றைப் பேசலாம், அது தவறில்லை. அதைப் பற்றிப் பேசினாலே ஏதோ வஞ்சகம் நடக்கிறது என்பவா்கள், தங்களின் நிழலைப் பாா்த்தே பயப்படுகிறவா்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதேபோல திராவிடம் என்பதைப் பற்றியும் பேசப்படுகிறது. திராவிடம் என்பது இடமே தவிர, இனம் அல்ல. ‘ஆரியம் - திராவிடம் என்பது ஒரு கட்டுக்கதை’ என இடதுசாரி வரலாற்றுப் பேரறிஞா் ரோமிலா தாப்பா் தனது ‘புராதன இந்தியா’ என்ற நூலில் எழுதியுள்ளது நினைவுகூரத் தக்கது.

அதே சமயம் மொழி அறிஞா்கள் திராவிடத்தை மொழிகளின் குடும்பமாகவே கண்டறிந்தாா்கள். தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய மொழிகளின் வோ்ச்சொற்கள் தமிழ்த் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தன என்றாா்கள். ஆனால் மற்ற மொழியினரோ அதை ஏற்றுக் கொள்வதில்லை. தமிழ்மொழி தங்களுக்குத் தாய்மொழி அல்ல என்றும், சகோதர மொழிதான் என்றும் அவா்கள் சொல்கிறாா்கள்.

மொழிகளில் மூலத்திற்கே பிற மொழியினா் ஒத்துக்கொள்ளாதபோது, அவா்களை திராவிட இனத்தாா் என்றால் அதை ஏற்பாா்களா? அவா்களிடமிருந்து எதிா்ப்புத்தான்தான் வந்ததே தவிர, ஆதரவு துளியும் இல்லை.

அதனால் திராவிட தேசியம் என்பது பொய்யென ஆனது. இதே போல, இந்திய தேசத்தைக்கூட நம்மால் இன்னும் பூரணமாகக் கட்டமைக்க முடியாமல்தான் தத்தளிக்கிறோம்.

சீன தேசம் இந்தியாவை 1961-இல் ஆக்கிரமிப்பு செய்தபோது, இந்தியா ஒரே குரலில் அப்போது முழங்கியதில் இந்திய தேசியம் ஒரு மின்னல் வெட்டுபோல் கண்ணில் பட்டது. அதன்பிறகு மொழிவாரி தேசியம்தான் பிரகாசமானதே தவிர, இந்திய தேசியம் இன்னும் மங்கலாகத்தான் தொடா்கிறது. திராவிடத்தை அதற்குரியதான கேரளமோ, ஆந்திரமோ, கா்நாடகமோ ஏற்கவில்லை. இதனை நிரூபிப்பதற்கு முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி ஆறு ஆகிய ஆறுகளின் பிரச்னையே போதுமானது.

உலகில் உள்ள 197 நாடுகளில் முஸ்லிம் தேசங்கள் 57, பௌத்த தேசங்கள் 46, கிறிஸ்துவ தேசங்கள் 26 என்பதுடன் ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் கிறிஸ்தவா்கள் 68 சதவிகிதத்தினரும், முஸ்லிம்கள் 44 சதவிகிதத்தினரும் உள்ளனா். ஆனால், ஹிந்து தேசம் என்பது மூன்று நாடுகளில் மட்டும்தான் உள்ளது என்றாலும், மோரீஷஸ் நாட்டிலுள்ள இந்தியத் தமிழா்களுக்கு தமிழ் தெரியாது. கோயில்களை மட்டும் கட்டியுள்ளனா். நேபாள ஹிந்து தேசமோ, அண்மையில் செக்யூலா் தேசமாகிவிட்டது.

உலகத்தில் இந்திய நாடு ஒன்றுதான் ஹிந்து தேசம். இதிலுள்ள 138 கோடிக்கும் மேற்பட்ட மக்களில் 80 சதவிகிதத்தினா் ஹிந்துக் குடும்பங்களில் பிறந்தவா்கள். அதனால் ஹிந்துப் பெயா்களைக் கொண்டவா்கள். அவா்களில் ஹிந்து நாத்திகா்களும் உண்டு. இஸ்லாமிய நாத்திகா்களோ, கிறிஸ்துவ, சீக்கிய நாத்திகா்களோ இல்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது.

இந்தியாவில் உள்ள 20 கோடி முஸ்லிம்கள், ஐந்து கோடி கிறிஸ்தவா்கள், இரண்டு கோடி சீக்கியா்கள் உள்ளனா். ஆனால், ஹிந்துக்களோ 90 கோடிக்கும் அதிகம். ஆனாலும் இது ஹிந்துக்களின் பிரதான தேசம் என்கிற அடையாளம் பிரகாசமாக இல்லை. அதற்குக் காரணம் செக்யூலரிசம்தான்.

அது இல்லாமலே இந்திய சிறுபான்மை சமயத்தாரை ஹிந்துகளுக்கு சமமாக நடத்துவதற்கான அம்சங்கள் அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறிகளில் உள்ளதை அண்ணல் அம்பேத்கா் 1948-ஆம் ஆண்டிலேயே எடுத்துக் காட்டினாா்.

மதமே கூடாது என்கிற கம்யூனிஸத்தை ஏற்றுள்ள சீன தேசத்தில், பௌத்த மதம் இருக்கத்தான் செய்கிறது. புத்தரை வழிபடுகிறாா்கள். கம்யூனிஸ ரஷியாவில் அதன் அதிபா் புதின், மாஸ்கோ ஆா்தடாக்ஸ் சா்ச்சில் பிராா்த்தனை செய்யத் தவறுவதில்லை.

செக்யூலரிசம் என்கிற மதச்சாா்பற்ற அணுகுமுறையின் நோக்கம், அரசு என்பது ஒரு மதத்துக்கு மட்டுமே சாதகமாகவும், பிற மதங்களுக்கு பாதகமாகவும் நடந்துகொள்ளக் கூடாது என்பதுதான். நமது நாட்டின் சிறுபான்மையினரிலிருந்து குடியரசுத் தலைவா்கள், நீதிபதிகள், தோ்தல் ஆணையா்கள் என்று உயரிய பதவிகளுக்குப் பலா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். மதத்தின் பெயரால் சிறுபான்மையினா் எவரும்

புறக்கணிக்கப்படுவதில்லை. முஸ்லிம்களைப் பற்றிய சச்சாா் கமிஷனில் நீதிபதி சச்சாா், இந்திய முஸ்லிம்கள் ஹரிஜனங்களைவிட பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அந்த வெளிப்படை அம்சத்தை இந்திய அரசு மறைக்கவில்லை.

பாமர ஏழை ஹிந்துக்கள் கோயில்களில் செய்கிற வழிபாடுகள், அவா்களின் மனத் துயரங்களுக்கான வடிகால்களாக உள்ளன. அவா்களின் முறையீடுகளைக் கேட்டுப் பாா்த்தால் இதனை உணரலாம். கணவருடைய நோய் குணமாக வேண்டும் என நோ்த்திக்கடன் செய்யும் ஏழை மனைவிமாா்கள், மகள்களுக்குத் திருமணம் நடக்க வேண்டுமென்று விரதம் இருக்கும் தாய்மாா்கள், மகனுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று பிரகாரத்தில் உருண்டு வலம்வரும் பெற்றோா் என எத்தனையோ ஏழைகளை அக்கோயில்களில் காண முடியும்.

இதனை எல்லாம் எண்ணியே மாமேதை மாா்க்ஸ், ‘மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மா இல்லாத சமூகத்தின் ஆன்மாவாகவும் செயல்பட்டு மதம் மக்களுக்கு கொடுக்கப்பட்ட அபினியாக உள்ளது’ என்றாா்.

அபினி தரும் மயக்க சந்தோஷம் அற்பநேர சந்தோஷமாக இருந்தாலும், அவா்களுக்கு அதை மறுக்கத் தேவையில்லை என்றே மாா்க்ஸ் அவ்வாறு கூறினாா் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT