நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆங்கிலேய அரசை நடுங்க வைத்த அல்லூரி!

6th Jul 2022 03:46 AM | எம். வெங்கையா நாயுடு

ADVERTISEMENT

ஆந்திர பிரதேசப் பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் முத்திரை பதித்தவர் அல்லூரி சீதாராம ராஜு. வனப்பகுதிக்குள் மறைந்திருந்து கொரில்லா தாக்குதல் முறையில் தாக்கி பெரும் சேதம் விளைவித்த அல்லூரியை நினைத்தாலே ஆங்கிலேயப் படைகள் மிரண்டன. வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய இந்த அச்சமற்ற நாயகரின் நினைவுகளுக்கு நாம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துவோம்.
ஜூலை 4-ஆம் தேதி சுதந்திரப் போராளி அல்லூரி சீதாராம ராஜுவின் 125-ஆவது பிறந்த ஆண்டு தொடங்கியுள்ளது. சுதந்திரத்தின் பவளவிழாவைக் கொண்டாடும் நேரத்தில் இந்த விழாவும் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
1897, ஜூலை 4-இல் பிறந்த அல்லூரி சீதாராம ராஜு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஸா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 'மான்யம் வீருடு' என்று அழைக்கப்பட்டவர். அதன் பொருள், வனத்தின் நாயகர் என்பதாகும். இப்பகுதிகளில் பல வீடுகளில் குழந்தைகளுக்கு இவரது பெயரை வைப்பது வழக்கமாக இருக்கிறது.
ஆங்கிலேயருக்கு எதிரான இவரது துணிச்சலான சாகசங்களும் அதிரடித் தாக்குதல்களும் அக்காலத்தில் ஆங்கிலேய நிர்வாகத்தையே மிரளச் செய்தன. இவரது வாழ்க்கை இப்பகுதி மக்களிடையே கதாநாயக அந்தஸ்துடன் போற்றப்படுகிறது. ஆனால் நமது வரலாற்றுப் புத்தகங்களில் இவரது வீர சாகசங்கள் போதிய அளவு பதிவு செய்யப்படவில்லை.
பிறவியிலேயே புரட்சியாளராகப் பிறந்தவர் அல்லூரி. தனது 18-ஆவது வயதில் துறவறம் ஏற்ற இவர், மதராஸ் மாகாணத்தில் நடைமுறையிலிருந்த மதராஸ் 1882 வனச்சட்டத்தை எதிர்த்து, 1922 முதல் 1924 வரை "ராம்பா கலகம்' எனப்படும் போராட்டத்தை விசாகப்பட்டினம், கோதாவரி மாவட்டப் பகுதிகளில் முன்னெடுத்தவர்.
அந்தக் கடுமையான போராட்டத்தின் இறுதியில் தனது 27-ஆவது வயதில் ஆங்கிலேயப் படைகளின் தாக்குதலில் பலியானவர் அல்லூரி.
வனப்பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள், தங்கள் பகுதியில் போடு சாகுபடி முறையில் விவசாயம் செய்வதையும், அதில் கிடைக்கும் விளைபொருட்களை வனப்பகுதிக்கு வெளியே விற்பதையும் மதராஸ் வனச்சட்டம் தடுத்தது.
அதனால் வெகுண்ட, தீவிரமான தேசபக்தியால் உந்தப்பட்ட அல்லூரி, பழங்குடி மக்கள் ஆங்கிலேய அரசால் சுரண்டப்படுவதை எதிர்த்தும், வனத்துக்குள் பழங்குடி மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் அரசின் பிடியிலிருந்து அவர்களை மீட்கவும் தனது ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
ஆங்கிலேயரின் அநியாய ஆட்சிக்கு எதிராக பழங்குடி மக்களை அணிதிரட்டிய அல்லூரி, அவர்களையும் போராளிகளாக்கினார். "வாழ்க்கை என்பது நீண்டதாக இருப்பதைவிட மிகப் பெரியதாக இருக்க வேண்டும்' என்பது டாக்டர் அம்பேத்கரின் புகழ்மிக்க பொன்மொழி. அதன்படியே அல்லூரியின் காவிய வாழ்க்கை அமைந்தது.
கடந்த ஏப்ரல் மாதம், அல்லூரி பிறந்த பாண்டுரங்கி கிராமத்துக்குச் செல்லும் அதிருஷ்டம் எனக்கு வாய்த்தது. அங்கு அல்லூரியின் கிராமத்தைச் சார்ந்த மக்களையும், அவரது ரத்த சொந்தங்களையும் நான் சந்தித்தேன். அங்கு அல்லூரிக்கு உயரமான ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வேட்டியும் அங்கவஸ்திரமும் தரித்து, கரங்களில் வில் அம்புடன் அல்லூரி நிற்கும் தோரணையே கம்பீரம். அதைக் கண்டபோது, அசுரர்களின் அதர்மத்துக்கு எதிராக வில்லேந்திய கடவுள் ராமனே எனக்கு நினைவுக்கு வந்தார்.
அவரது பெயரிலுள்ள சீதாராமன் என்பது அன்னை சீதையின் பணிவையும் கருணையையும் கடவுள் ராமனின் துணிவையும் வீரத்தையும் அடையாளப்படுத்துகின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழ்ந்த, மிகவும் பின்தங்கிய மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காகத் தனது வாழ்வையே போர்க்களமாக்கிக் கொண்ட தன்னலமற்ற எளிய விடுதலைப் போராளி அல்லூரி.
எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அல்லூரியின் பள்ளிக்கல்வி தந்தையின் திடீர் மரணத்தால் தடைபட்டது. அதுவே இவரது ஆன்மிக நாட்டத்துக்குக் காரணமாக மாறியது. இளைஞரான அல்லூரி நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்றார்.
நாசிக், கங்கோத்ரி, சிட்டகாங் (தற்போது வங்கதேசத்தில் உள்ளது) போன்ற பல இடங்களுக்குச் சென்ற இவர், தனது தேசத்தின் குடிமக்கள் சமூக, பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கி இருப்பதையும், ஆங்கில காலனி ஆதிக்கத்தில் பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதையும் கண்டார்.
அந்த புனிதப் பயணம் இவரது கண்களைத் திறந்தது. இந்திய மக்களை காட்டுமிராண்டித்தனமான சுரண்டலுக்கு உட்படுத்திய, பழங்குடி மக்களை கடுமையாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை அல்லூரி உணர்ந்தார்.
வீடு திரும்பிய இளைஞர் அல்லூரி, கோதாவரி, விசாகப்பட்டினம் மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் வாழ்ந்த பகுதிகளை தனது பணிக்களமாக மாற்றிக் கொண்டார். அந்த மக்களின் மிகத் தாழ்ந்த வறுமை நிலையை மாற்றவும், அவர்களுக்கு கல்வியறிவு புகட்டவும், அதன் மூலமாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பல முயற்சிகளை அல்லூரி மேற்கொண்டார்.
அக்காலத்தில் ஆங்கிலேய அரசின் பிரதிநிதிகளாக இருந்த வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளால் வனப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியின மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்தனர்.
எனவே, மக்களை சிறிது சிறிதாகத் திரட்டி, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, ஆங்கிலேய அரசுடன் நேரடியாக மோதுவதற்கான ஆயத்தங்களை அல்லூரி செய்து வந்தார்.
பழங்குடியினரை வஞ்சித்த ஆங்கிலேய அரசின் கொடுஞ்செயல்களுக்கு எதிராக, "மான்யம் வீருடு' அல்லூரி சீதாராம ராஜுவின் தலைமையில் "ராம்பா கலகம்' (1922 - 1924) வெடித்தது. அக்கலகத்தில் அல்லூரியின் போர்க்கள சாகசங்கள் இன்றும்கூட, ஆந்திரத்திலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் நாட்டுப்புறக் கதைகளாகப் பாடப்படுகின்றன.
வனத்தின் உட்பரப்பையும் பழங்குடியினரின் பாரம்பரிய போர்க்கலைகளையும் நன்கு அறிந்தவர் அல்லூரி. மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர்முறையில் வித்தகரான இவரது தலைமையில் வனவாசி மக்கள் ஆங்கிலேயப் படைகள் மீது தொடர்ந்து நடத்திய தாக்குதல்கள் அரசை நிலைகுலையச் செய்தன.
ஆங்கிலேய அரசின் காவல் நிலையங்கள் மீதான இவரது தாக்குதல்கள் மிகத் துல்லியமானவையாகவும் தனித்துவமானவையாகவும் விளங்கின. தனது ஒவ்வொரு தாக்குதலின்போதும், அத்தாக்குதலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களின் பட்டியலை தனது கையொப்பத்துடன் காவல் நிலையத்தில் விட்டுச் செல்வது அல்லூரியின் வழக்கம்.
இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு மேலும் பல இரக்கமற்ற கொடூரங்களை அரங்கேற்றியது. ஆயினும் அல்லூரி நிதானம் தவறாமல் நடந்துகொண்டார். ஒருமுறை, அரசுடன் சேருமாறு அறிவுறுத்தவும் தன்னைக் கைது செய்யவும் வந்த இந்திய காவல் அதிகாரி ஒருவரைப் பிடித்த அல்லூரி, அவருக்கு உயிர்ப்பிச்சை அளித்தார்.
சுமார் இரண்டாண்டுகள் வனத்துக்குள் இருந்தவாறு அல்லூரி நடத்திய தீவிரமான யுத்தம் ஆங்கிலேய அரசுக்கு கெளரவ பிரச்னையாக மாறியது. கேரளத்திலிருந்து மலபார் சிறப்புப் படையை வரவழைத்த ஆங்கிலேய அரசு, அல்லூரியின் தொடர் யுத்தத்திற்கும் இவரது ஆதரவாளர்களின் கிளர்ச்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க முனைந்தது.
அந்தப் போரில், 1924 மே 27-ஆம் தேதி அல்லூரி சீதாராம ராஜு வீரமரணம் அடைந்தார். இந்திய விடுதலைப் போராட்ட நாயகர்களின் பட்டியலில், அந்த வண்ணமயமான சுதந்திரவானில் மிளிரும் அற்புதமான விடிவெள்ளிகளின் வரிசையில் இவரும் இணைந்தார்.
இந்தியாவில் தோன்றிய வீரப் புதல்வர்களுள் அல்லூரி சீதாராம ராஜு முக்கியமானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தேசிய அளவிலான நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அல்லூரி போன்றவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கும் உண்மையாகும்.
இத்தவறு இப்போதேனும் திருத்தப்பட வேண்டும். அல்லூரியின் வீர சாகசங்கள் நிறைந்த ராம்பா கலகத்தின் நூற்றாண்டை விரைவில் கொண்டாடப் போவதாக இந்திய அரசு தற்போது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆந்திர பிரதேச மாநிலம், பீமாவரத்தில் அல்லூரியின் 125-ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருப்பதும், அங்கு மாவீரர் அல்லூரியின் சிலையைத் திறந்து வைத்திருப்பதும் மிகப் பொருத்தமானது.
இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு நிறைவை பவளவிழாவாக நாம் கொண்டாடும் இத்தருணத்தில், இந்திய விடுதலைக்காகவும் இந்த நாட்டின் உருவாக்கத்துக்காகவும் போராடிய பழங்குடியின மக்களை நன்றியுடன் நினைவுகூர வேண்டும். நாட்டின் விடுதலைக்காக ஒன்றிணைந்து போராடிய அவர்களது தியாகத்தையும், தேச கெளரவத்தை விட்டுக்கொடுக்காத மன உறுதியையும் இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே நாட்டுநலனுக்காக தங்கள் வாழ்வை ஆகுதியாக்கிய விடுதலை வீரர்களுக்கு நாம் செலுத்தும் அர்த்தமுள்ள புகழஞ்சலியாக இருக்கும்.

கட்டுரையாளர்:
குடியரசு துணைத் தலைவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT