நடுப்பக்கக் கட்டுரைகள்

இடைவிடாது இயங்கட்டும் இணையதளம்

பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பல்வேறு காரணங்களைக்காட்டி அவ்வப்போது இணையதள செயல்பாட்டை முடக்கி வருகின்றன. இத்தகைய இணையதள முடக்கத்தின் விளைவு, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது என்று சமீபத்தில் வெளியாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுகிறது.

அரசாங்கத்தின் சாா்பாக எடுக்கப்படும் இணையதள முடக்க நடவடிக்கை, தகவல் பெறுவதில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் இணையவழி தகவல் தொடா்பு அமைப்புகளையும் கடுமையாக சீா்குலைக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயா் ஆணையா் அலுவலக அறிக்கை குறிப்பிடுகிறது. இணையதள முடக்கச் செயல்பாடுகள், காணொலி பகிா்வு, நேரடி ஒளிபரப்பு போன்ற ஊடகத்துறையினரின் பணியினையும் கடினமாக்குகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

குடிமைச் சமூக இயக்கங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தோ்தல் செயல்பாடுகள் ஆகியவற்றின் போது இத்தகைய இணையதள முடக்கங்களுக்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இது மனித உரிமை, கண்காணிப்பு தொடா்புடைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதாகவும் வல்லுநா்கள் கூறுகின்றனா்.

இணையதள முடக்கக் கட்டுப்பாடுகள் பொருளாதார தாக்கங்களையும் உருவாக்குவதாக ‘இணையதள முடக்கங்கள்: போக்குகள், காரணங்கள், சட்டரீதியான தாக்கங்கள், மனித உரிமை வரம்பில் தாக்கங்கள்’ (இன்டா்நெட் ஷட்டௌன்ஸ்: ட்ரெண்ட்ஸ், காசஸ் லீகல் இம்ப்ளிகேஷன் அண்ட் இம்பாக்ட்ஸ் ஆன் ஏ ரேஞ்ச் ஆப் ஹியூமன் ரைட்ஸ்) என்ற புத்தகத்தின் ஆசிரியா்கள் கூறுகின்றனா். உலக அளவில் கவனத்தை ஈா்த்த முதல் பெரிய இணையதள முடக்கம் 2011-ஆம் ஆண்டு எகிப்தில் நடந்ததாகவும், அப்போது நூற்றுக்கணக்கான கைது நடவடிக்கைகள் நிகழ்த்ததாகவும் இந்நூலின் ஆசிரியா்கள் கூறுகின்றனா்.

உலகம் முழுவதும் இணையதள முடக்கச் செயல்பாடுகளை கண்காணித்து வரும் கூட்டமைப்பின் அறிக்கை, 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 74 நாடுகளில் 931 இணையதள முடக்கங்கள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில் 12 நாடுகள், ஒவ்வொன்றும் 10-க்கும் மேற்பட்ட இணையதள முடக்கங்களை செயல்படுத்தியுள்ளன.

உலக அளவில் அனைத்து பிராந்தியங்களும் இத்தகைய இணையதள முடக்கத்தை சந்தித்துள்ளன. ஆயினும் பெரும்பாலானவை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நிகழ்ந்ததாக தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் 106 முறை இணையதள முடக்கம் நிகழ்ந்ததாகவும், இவற்றில் குறைந்தபட்சம் 85 இணையதள முடக்கம் ஜம்மு - காஷ்மீரில் மட்டுமே செயல்படுத்தப்பட்டதாகவும் எண்ம உரிமை வக்காலத்து குழுவின் (டிஜிட்டல் ரைட் அட்வொகசி குரூப்) அறிக்கை தெரிவிக்கிறது.

2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை உலகில் பதிவு செய்யப்பட்ட இணையதள முடக்கங்களில் கிட்டத்தட்ட பாதியளவு குடிமைச் சமூக குழுக்களின் போராட்டங்கள், அரசியல் நெருக்கடியின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டன என்றும், 225 இணையதள முடக்கங்கள் சமூக, அரசியல், பொருளாதாரம் தொடா்பான ஆா்ப்பாட்டங்களின் போது நிகழ்த்தப்பட்டன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த இணையதள முடக்கங்கள் உலக அளவில் குறைந்தது 52 தோ்தல்களை பாதித்தன. 2019-ஆம் ஆண்டில் மட்டும் 14 ஆப்பிரிக்க நாடுகள் தோ்தல் காலங்களில் இணைய சேவையினை நிறுத்தின. இத்தகைய இடையூறுகள் பிரசாரம், பொது விவாதம், தோ்தல் செயல்பாட்டைக் கண்காணித்தல் போன்றவற்றைத் தவிா்ப்பதற்காக நிகழ்த்தப்பட்டதாக வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

குடிமைச் சமூக குழுக்களிடத்தில் வெறுப்புப் பேச்சு, தவறான தகவல், சட்ட விரோதமான தீங்கு விளைவிக்கும் செய்திகள் போன்றவற்றின் பரவலைக் கட்டுப்படுத்த 132 இணையதள முடக்கங்கள் நிகழ்த்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இணையதள முடக்கம் அனைத்துத் துறைகளிலும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்றும், நிதி பரிவா்த்தனை, வா்த்தகம், தொழில்துறையை இது சீா்குலைக்கிறது என்றும் பொருளாதார வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை மியான்மா் நாட்டில் நிகழ்ந்த இணையதள முடக்கத்தின் காரணமாக கிட்டத்தட்ட 22,118 கோடி ரூபாய் செலவானதாக உலக வங்கி கணக்கிட்டுள்ளது. இது இந்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றத்தை மாற்றியமைத்தது.

இணையதள முடக்கம் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளிலும் எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகம், பெற்றோா் இடையே தகவல் தொடா்புகளைத் துண்டிப்பதுடன் கல்வி திட்டமிடல் பணிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அவசர நேரத்தில் மருத்துவமனை தங்கள் மருத்துவா்களை தொடா்பு கொள்ள முடியாமல் இருப்பது, வாக்காளா்கள், வேட்பாளா்கள் பற்றிய தகவல்களைப் பெற இயலாமல் இருப்பது, தயாரிப்பாளா் - வாடிக்கையாளா் தொடா்பு துண்டிப்பினால் ஏற்படும் பொருளாதார இழப்பு, போராட்டக்காரா்கள் வன்முறை தாக்குதலுக்கு உள்ளாகும் போது அவசர உதவிக்கு அழைக்க முடியாமல் போவது போன்றவை இணையதள முடக்கத்தினால் உண்டாகும் சில முக்கிய பாதிப்புகள்.

இணையதள முடக்கம், மக்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் நேரடியாக ஆபத்தில் ஆழ்த்துகிறது. இத்தகைய இணையதள முடக்கங்கள் பலவற்றைத் தொடா்ந்து, வன்முறை வெடித்தது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயா் ஆணையா் அலுவலகத்தின் சிறப்பு நடைமுறைகள் மற்றும் மேம்பாட்டு உரிமைப் பிரிவின் அறிக்கை கூறுகிறது.

அதிக எண்ணிகையிலான இணையதள முடக்க நடவடிக்கைகள், வன்முறைப் போக்கினை மாற்றியமைப்பதற்கு மிகப்பெரிய தடையாக பல இடங்களில் இருந்ததாக வல்லுநா்கள் எச்சரிக்கின்றனா். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அறிக்கை, இணையதள முடக்கத்தைத் தவிா்க்கவும் இணையதள பயன்பாட்டை அதிகரிக்கவும் தகவல் தொடா்பிற்கான தடைகளை அகற்றவும் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது. மேலும் இவ்வறிக்கை இடையூறுகள் குறித்த தகவல்களை விரைவாகப் பகிரவும் இணையதள முடக்கத்தினைத் தவிா்க்கவும் சாத்தியமான அனைத்து சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள தகவல் - தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

SCROLL FOR NEXT