நடுப்பக்கக் கட்டுரைகள்

திரெளபதி முர்மு: ஒடுக்கப்பட்டோரின் முகம்!

4th Jul 2022 11:24 AM |  முனைவர் வைகைச்செல்வன்

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடியால் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் ஒடிஸா மாநிலத்தின் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த திரௌபதி முர்மு, இந்திய நாட்டின் பெண்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதர்ச நாயகியாக, முன்மாதிரியாக விளங்குகிறார். முரட்டுக் கொடுங்கரங்கள் மூடி மறைத்திடினும் விரக்தி அடையாமல் வெடிக்கும் எரிமலையாய் நம் முன் நிற்கிறார் திரெளபதி முர்மு. 

பழங்குடியினப் பெண்மணி ஒருவர் இந்தியாவின் முதல் பிரஜையாக முடியும் என்கிற நம்பிக்கை கீற்றோடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த செய்தியை, அவரைப் போலவே நம்மாலும் முதலில் நம்ப முடியவில்லை. ஏனெனில் இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. 

ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்த ஒருவருக்கு அரசியலமைப்பு சாசனத்தின் உச்சபட்ச அதிகாரம் உள்ள குடியரசுத் தலைவராகும் வாய்ப்பை காலம் வழங்கியிருப்பதைப் பார்க்கிறபோது எல்லோருக்கும் நம்பிக்கை பிறக்கிறது. இது உண்மையிலேயே பெருமையான தருணம். ஏனெனில், பெண்கள் அதிகாரம் பெறுவது என்பது எளிதல்ல. அதற்கு அவர்கள் எத்தனையோ சிரமங்களை கடக்க வேண்டி இருக்கிறது. அவற்றை இவர் கடந்து வந்திருக்கிறார். 

ஒடிஸாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான மயூர்பஞ்சில் உள்ள பய்டாபோசி கிராமத்தில் 1958, ஜூன் 20-ஆம் நாள் திரௌபதி முர்மு பிறந்தார். அவருக்கு அரசியல் ஆர்வத்தை ஊட்டியவர் அவரது தந்தை பிரெஞ்சி நாராயண்டுடூதான். அவர்தான் கிராமத் தலைவர். அடிப்படை வசதிகளே கிடைக்காத கிராமத்தில் மகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்று முர்முவை பள்ளிக் கல்விக்குப் பிறகு, ராய்ரங்பூரில் கல்லூரிப் படிப்பை முடிக்க வைத்தார். இளங்கலைப் பட்டம் முடித்தவுடன் 1979 முதல் 1983 வரை ஒடிஸா மாநில அரசின் நீர்ப்பாசனம்,  மின்துறையில் இளநிலை உதவியாளரானார் முர்மு. 

ADVERTISEMENT

பின்னர் 1994-ஆம் ஆண்டு ஸ்ரீஅரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இளநிலை உதவியாளர், ஆசிரியர் என்று பயணப்பட்டாலும், தனது கவனத்தை அரசியல் மீதே வைத்திருந்தார் முர்மு. 1997-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, ராய்ரங்பூர் கவுன்சிலராகி, அரசியலில் தனது பயணத்தைத் தொடங்கினார். 
2013-இல் பழங்குடியினர் பிரிவின் துணைத்தலைவராகி அரசியலில் அடுத்த அடியை எடுத்து வைத்தார். பாஜக-வின் முக்கியத் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜுக்குப் பிறகு கட்சியில் இணைந்ததில் இருந்து அதிகாரத்திலேயே இருந்து வரும் பெண்மணி  திரெளபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒடிஸாவின் ராய்ரங்பூர் தொகுதியில் இருந்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக கூட்டணியுடன் பிஜு ஜனதா தளம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, முதலமைச்சர் நவீன் பட்நாயக் அரசில் 2000 முதல் 2004 வரை முர்மு அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.  போக்குவரத்து, வணிகம், மீன்வளம், கால்நடைத்துறைகளின் அமைச்சராக அவர் இருந்துள்ளார். 

2006-ஆம் ஆண்டில் இருந்து 2009-ஆம் ஆண்டு வரை பழங்குடியினர் மாநிலப்பிரிவுத் தலைவராகவும் திகழ்ந்தார். சிறந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கான விருதைப் பெற்ற முர்மு,  இரண்டாவது முறையாகப் போட்டியிடும்போது தனது பிரமாணப் பத்திரத்தில், தனக்கு சொந்தமாக வீடு  இல்லை, சிறிய வங்கி இருப்பு, கொஞ்சம் நிலம் மட்டுமே இருக்கிறது என்று தெரிவித்தது அரசியல் உலகையே வியப்படைய வைத்தது.  

2015-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார் முர்மு. அவரது பதவிக்காலம் முடிந்ததும் கரோனா காரணமாக பதவியை நீட்டித்தது மத்திய அரசு. கடந்த ஆண்டு ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்த ஆண்டு குடியரசுத் தலைவருக்கான வாய்ப்பு அவரைத் தேடி வந்திருக்கிறது. 
பழங்குடி மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட முர்மு, ஆளுங்கட்சியுடன் மோதலில் ஈடுபட்டு, அவர்கள் அனுப்பிய திருத்தங்களையும்  திருப்பி அனுப்பினார். அதனால், பழங்குடி மக்களின் பாராட்டையும் நம்பிக்கையையும் பெற்றார். 

திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கப்பட்டதில் பாஜக-வுக்கு அரசியல் ஆதாயம் இருக்கிறது என்ற விமர்சனம் எழாமல் இல்லை. மயூர்பஞ்ச் மாவட்ட எல்லை, ஜார்க்கண்டையும் மேற்கு வங்கத்தையும் ஒட்டி உள்ளது. அப்பகுதியில் முர்முவின் சாந்தல் பிரிவு மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அம்மக்களிடம் ஓட்டு வேட்டையாட முயல்கிறது பாஜக என்பதுதான் எதிர்த்தரப்பினரின் குற்றச்சாட்டு. 

ஆனால், அடித்தட்டு மக்களை, விளிம்பு நிலை மக்களை கரம் தூக்கி விடும் அரசியல்வாதியை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும். இந்த மகிழ்வான  தருணத்தில் முர்முவுக்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் கூட, அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது சோகம் கவ்விய துயரம்தான். இளம் வயதிலேயே அவரது கணவர் ஷியாம் சரண் முர்மு திடீரென மாரடைப்பால் காலமானார். 

அதைவிட துயரம், தன் வாழ்வின் அர்த்தமும் கனவும் என எண்ணியிருந்த தனது இரண்டு மகன்களை பறிகொடுத்து விட்டார். ஒரு மகனை உடல்நலக் குறைவாலும், மற்றொரு மகனை சாலை விபத்திலும்  பறிகொடுத்து விட்ட ஒரு தாயின் துயர்மிகுந்த வாழ்க்கையே திரௌபதி முர்முவின் வாழ்க்கை.  தனது ரத்தஉறவு என்று சொல்வதற்கு முர்முவுக்கு எஞ்சி நிற்பது ஒரே மகள் மட்டும்தான். 

எவ்வளவோ சோதனைகளும் வேதனைகளும் வலிகளும் நிரம்பியதாக இருந்தாலும் திரௌபதி முர்மு தனது லட்சியப் பாதையில் இருந்து எப்போதும் விலகிச் சென்றதே இல்லை. அதனால்தான், மின்சார வசதியே இல்லாத ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த  64 வயது பழங்குடியினப் பெண்மணி, குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். 
இப்போது பதாசாகி, துங்கிரிசாகி ஆகிய இரண்டு கிராமங்களில் மின்சார விளக்குகள் எரிவதற்கு காலம் வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. ஒடிஸா அரசு போர்க்கால அடிப்படையில் அக்கிராமங்களின் மின்சார வசதிகளுக்கான பணிகளைத் தொடங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் முர்முவின் கிராமம் மின்சார ஒளியில் மின்னும் என்று எதிர்பார்க்கலாம். 

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், இந்தியாவின் ஆயிரக்கணக்கான குக்கிராமங்கள் மின்சார வசதி கிடைக்காமலே, இருண்ட இரவுகளோடு ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு தலைவர் உருவானால், அடித்தட்டு மக்கள் இருக்கும் பகுதிக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்பதற்கு திரௌபதி முர்முவின் வாழ்க்கை நம் கண் முன்னால் நிற்கும் சாட்சியாகும். 

இந்த 16-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் 4,809 உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களும், மக்களவையில் 543 உறுப்பினர்களும், சட்டப்பேரவையில் 4,033 உறுப்பினர்களும் உள்ளனர். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும், சட்டப்பேரவை உறுப்பினருக்கும் வாக்கு மதிப்பு உண்டு. இம்முறை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு அந்தந்த மாநிலத்தின் மக்கள்தொகையைப் பொறுத்தது. உத்தர பிரதேசத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரின் வாக்கு மதிப்பு 208 ஆகவும், மிúஸாரமில் எட்டு,  தமிழ்நாட்டில் 176 ஆக இருக்கும். சட்டப்பேரவை உறுப்பினர் வாக்குகளின் மொத்த மதிப்பு (வெயிட்டேஜ்) 5,43,231 ஆக இருக்கும். 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு (வெயிட்டேஜ்) 5,43,200. எல்லா உறுப்பினர் வாக்குகளின் மொத்த வாக்கு மதிப்பு (வெயிட்டேஜ்), 10,86,431 ஆகும். 10.86 லட்சம் வெயிட்டேஜ் கொண்ட எலெக்டோரல் காலேஜில் பாஜக, அதன்  கூட்டணிக் கட்சிகளுக்கு 50 சதவீதத்துக்குக் குறைவான வாக்குகளே இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டுமானால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜேடி போன்ற கட்சிகளின் ஆதரவு பாஜக-வுக்கு தேவை.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன் வெளியான மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜக-வை பலப்படுத்தியிருக்கிறது. நான்கு மாநிலங்களில் 16 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக எட்டு இடங்களைப் பெற்றது. சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார். இதன்படி 48% வாக்குகள் என்டிஏ-விடமும், 38% வாக்குகள் யுபிஏ-விடமும், 14% ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி, பிஜேடி, டிஎம்சி, இடதுசாரிகளிடமும் இருக்கின்றன. 

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் கூட்டிப் பார்த்தால் அவர்களுக்கு 52 சதவீத எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் இருக்கின்றன. எல்லா எதிர்க்கட்சிகளின் வாக்குகளையும் ஒன்றிணைத்தால் போட்டி இருக்கும். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக்கின் முடிவுகளால் வெற்றி வாய்ப்புகள் திசைமாறக்கூடும். 

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான சூழல் மிகக் குறைந்த நிலையிலேயே இருக்கிறது. 48 சதவீத வாக்குகள் ஆளுங்கட்சிக்கும், 52 சதவீத வாக்குகள் எதிர்க்கட்சிக்கும் இருக்கின்ற நிலையில், ஒரு பதற்றத்தை ஏற்படுத்தினாலும், 52 சதவீத வாக்குகளை ஒன்றிணைக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. இந்த இடத்தில்தான் வெற்றிக்கான புள்ளி வைக்கப்படுகிறது.

கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT