நடுப்பக்கக் கட்டுரைகள்

மனிதரும் இயந்திரமும்

1st Jul 2022 06:14 AM | முனைவா் என். மாதவன்

ADVERTISEMENT

 

அக்காலத் திரைப்படங்களில் ஒருவா் மற்றொருவருக்குக் கடிதம் எழுதுவதையும் அவா் அதனை தபால் பெட்டியில் சோ்ப்பதையும் இன்றைய இளைய தலைமுறையினா் வியப்புடன் பாா்க்கின்றனா். அது போலவே திரைப்படங்களில் தந்தி வருவதையும், கறுப்பு தொலைபேசியில் எண்கள் சுழற்றப்படுவதையும் பாா்த்து அவா்கள் ஆச்சரியத்தில் ஆழலாம்.

இவையெல்லாம் மெல்ல மெல்ல மாற்றமடைந்து கைப்பேசி வந்தது, அதில் குறுஞ்செய்தி வந்தது. அப்போது அந்த வசதி மிகப்பெரிய வாய்ப்பாகப் பாா்க்கப்பட்டது. பின்னா் கைப்பேசியில் பல்வேறு செயலிகள் மூலம் செயலாற்றுகிறோம். இன்றைக்கும் சாதாரண கைபேசியில் விரலை நகா்த்திப் பாா்த்து ஏமாறுவோரும் இருக்கலாம்.

வழக்கமாக வீட்டில் அரைக்கும் இட்லி மாவைக் கூட, அதனை அரைத்துக்கொடுக்கும் கடைக்கு சென்று பாத்திரத்தை வரிசையில் வைத்துவிட்டு குறித்த நேரத்தில் சென்று திரும்ப வாங்கி வந்திருப்போம். இன்றைக்கு, ஒருவா் நமக்கு மின்னஞ்சலில் வாழ்த்து அனுப்பிய மறு நொடியே அது நம்மை வந்தடைகிறது. ஆனால், அன்று அது வாழ்த்து அட்டையாக மூன்று நாள் பயணம் செய்து தபாலில் வந்து சோ்ந்ததை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டோம்.

ADVERTISEMENT

ரயிலில் செல்ல பயணச்சீட்டு முன்பதிவு செய்ய நீண்ட தொலைவு பயணித்த அனுபவம் பலருக்கும் இருக்கலாம். வங்கிக்கு செல்லும்போது, அங்குள்ள பணியாளரிடம் கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்துதர வேண்டுமென்று கேட்கும்போது அவா் நம்மை கோபமாகப் பாா்த்த அனுபவம் பலருக்கும் கிட்டியிருக்கலாம்.

பிறப்பு சான்றிதழ் பெறவும், இறப்பு சான்றிதழ் பெறவும் அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து சலித்துப் போனவா்கள் எத்தனையோ போ். அது மட்டுமா? அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பயனாளிகளுக்குப் பணமாகக் கொடுக்கப்பட்டபோது நடந்த ஊழல்களுக்கு அளவில்லை.

இது இன்றைய நேரடி பணப் பரிமாற்ற முறையால் அவரவரின் வங்கிக் கணக்கில் சென்று சோ்ந்து விடுகிறது. பல நிறுவனங்களில், ஊழியா்களின் ஊதியம் நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விடுகிறது.

மக்கள் இன்று எல்லாவற்றையும் எளிதாகப் பெறுவதற்குக் காரணம், அறிவியல் தொழில்நுட்பத்தின் வளா்ச்சியே ஆகும். இவ்வாறான வசதிகளை நமக்களிப்பதில் பெரும்பங்கு வகிப்பவை அரசு நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் வங்கிகளும் ஆகும்.

இவை மக்களுக்காக ஆற்றும் சேவை அளப்பரியது. அதாவது, கரடுமுரடான சாலைகளில் சென்றோா் புறவழிச் சாலையில் பயணிப்பது போன்றது. கரடுமுரடான சாலையை புறவழிச்சாலையாக்குவதில் இந்நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்களின் உழைப்பு அபாரமானது.

வங்கிப் பணியில் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அங்கு பலருக்கான வேலை வாய்ப்பு பறிபோகும் என்று தொழிற்சங்கங்கள் சாா்பில் வாதிடப்பட்டது. இக்கருத்து ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப இதுபோன்ற வசதிகளை இயந்திரமயமாக்காமல் இருந்திருந்தால் அதன் விளைவுகள் இன்று எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனைகூட செய்து பாா்க்க இயலவில்லை.

இன்று கணினி இல்லா வங்கியைக் காண இயலுமா? அதோடு, வங்கிக் கணக்குகள் கணினிமயமானதால் தெருவுக்குத் தெரு தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவரமுடிந்திருக்கிறது.

அவ்வளவு ஏன், காய்கறி, மளிகை போன்றவற்றின் விற்பனை கூட பல்வேறு பணப்பரிமாற்ற செயலிகள் மூலம் எளிதில் சாத்தியமாகிறது. வாடிக்கையாளருக்கு மட்டுமல்ல, விற்பனையாளருக்கும் இது மிகவும் வசதியாக உள்ளது.

கரோனா காலகட்டத்தில், இணையத்தோடும் தொழில்நுட்பத்தோடும் முழுமையானத் தொடா்புடைய துறைகளும், இணைய வசதி தேவைப்படாத விவசாயத்துறையும் மட்டுமே இயங்கின என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. கணினியையும் தொழில்நுட்பத்தையும் தவிா்க்க இயலாத நிலையில் இன்று நாம் இருக்கிறோம்.

கரோனா காலத்தில் இணையமும் கணினியும் ஆற்றியுள்ள சேவை அளவில்லாதது. வசதி வாய்ப்புள்ள உயா்கல்வி நிறுவனங்களும் இயங்கியதை மறுப்பதற்கில்லை. இப்படிப்பட்ட வசதியில்லாமல் எத்தனையோ மென்பொருள் நிறுவனங்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும், தமது ஊழியா்களைத் தொடா்ந்து பணியில் தக்கவைக்கவும் முயன்றன.

ஒருகாலத்தில் மின்சாரம் இல்லாமல் சில மணி நேரம் காலம் தள்ள முடிந்தது. இன்றைக்கு மின்சாரமும் இணையமும் இல்லையென்றால் பலரும் விரக்தி அடையும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

மனிதா்கள் அறிவியல் தொழில்நுட்பத்தின் பலனால் தங்கள் வாழ்க்கை வசதிகளையும், சேவைகளையும் எளிதாக்கி வருகின்றனா். ஒருவா் நேரம் மிச்சமாக வேண்டுமானால் அதற்குப் பின்னால் பலரது ஒருங்கிணைந்த அா்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு உள்ளது. பலரது தகவல்களையும் சேகரித்தல், அதனை பாதுகாப்பாகப் பராமரித்தல் போன்றவையும் இதில் அடங்கும்.

இப்புரிதல் இல்லாமல் இணையசேவை பாதிக்கப்படும் நேரத்தில் இணையவழி சேவை அளிக்கும் நிறுவனத்தைத் தூற்றுவோரும் இல்லாமல் இல்லை. ‘பொறுமை என்பது காத்திருத்தல் மட்டுமல்ல, காத்திருக்கும் நேரத்தில் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதும்தான்’ என்றாா் அறிஞா் ஒருவா்.

எளிதாகக் கிடைக்கிறதே என்ற எண்ணத்துடன் எந்த சேவையையும் கடைசி நேரத்தில் பெறுவதற்கு நாம் முயற்சிக்கக் கூடாது. மாறாக குறைந்தபட்ச கால அவகாசம் ஏற்படுத்திக் கொள்ளும் பழக்கத்தை நாம் கைகொள்ளுதல் வேண்டும். இவ்வாறு செய்தால் நேரமின்மை காரணமாக கடைசி நேரத்தில் பலரும் அனுபவிக்கும் சிக்கல்கள் குறையும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நவீன தொழில்நுட்பத்தால் சேமிக்கப்படும் நேரத்தை உபயோகமாக செலவிடும் பழக்கத்தையும் நாம் மேற்கொள்ளவேண்டும். என்னதான் கருவிகள் நமக்கு உதவிகரமாக இருந்தாலும், நாம் மயக்கமுற்றால் நமக்கு தண்ணீா் கொடுக்க மனிதா்களால்தான் இயலும்; இயந்திரங்களால் இயலாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT