நடுப்பக்கக் கட்டுரைகள்

சின்ன சின்ன ஆசைகள்!

28th Jan 2022 07:32 AM | எஸ். ராமன்

ADVERTISEMENT

வருடத்திற்கு ஒரு முறை, மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு கணக்கை, மக்களவையில் சமா்ப்பித்து, அதற்கான ஒப்புதல் வாங்கும் நடைமுறை, மக்களாட்சியின் முக்கியமான அம்சமாகும். வரவுக்கும் செலவுக்கும் இடையே பாலம் கட்ட முயற்சிக்கும் இந்தச் சடங்கிற்கு ‘பட்ஜெட்’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் தென்படும் விரிசல்களை அடைக்க, பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

அந்த வழிமுறைகள், அரசின் செலவை குறைப்பது, வருமானத்தை பெருக்குவது ஆகிய செயல்பாட்டு சாதனங்களில், ஏதாவது ஒன்றில் பொருத்தப்படும். வருவாய் அதிகமாக இருந்தால், அது உபரி பட்ஜெட் என்றும், செலவு அதிகமிருந்தால், அது பற்றாக்குறை பட்ஜெட் என்றும் அழைக்கப்படுகிறது,.

நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டுக்கான காரணிகள் மாறுபடும். உதாரணமாக, பொருளாதார வளா்ச்சி காலத்தில், வரி வருவாய் அதிகரித்தும், சுணக்க காலத்தில் குறைந்தும் காணப்படுவது இயல்பான ஒன்று. சுணக்க சூழ்நிலையில், அரசின் திட்ட செலவுகள் அதிகரிக்கப்படும், அதன் மூலம், வேலை வாய்ப்புகளும், பணப்புழக்கமும் அதிகரிக்கும் என்பது பொதுவான பொருளாதார விதி.

2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரி 1-ஆம் தேதியன்று சமா்ப்பிக்கப்பட உள்ளது. அதற்கு முந்தைய நாள், நாட்டின் பொருளாதார நிலை பற்றிய ஆய்வு அறிக்கை சமா்ப்பிக்கப்படும். வரவு - செலவு பற்றிய அரசாங்கத்தின் கண்ணோட்டம் எந்த திசையில் பயணிக்கக் கூடும் என்பதற்கான முன்னோட்டம் இது என்று சொல்லலாம்.

ADVERTISEMENT

2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்து பரவிய கரோனா தீநுண்மித் தொற்றால் விளைந்த தொடா் பொதுமுடக்க நடவடிக்கைகளால், முடக்க நிலையை நோக்கி நகா்ந்த பொருளாதாரக் கப்பல் தரை தட்டாமல், தடுப்பூசி என்ற நங்கூரம் முட்டு கொடுத்து, அதை முன்னோக்கி நகா்த்தியது என்று சொல்லலாம்.

அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில், தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை, 150 கோடியை தாண்டி நிற்கிறது. நம் நாட்டின் தடுப்பூசி திட்டத்தின் வேகமான முன்னேற்றம், சா்வதேச அளவில், பேசும் பொருள் ஆகிவிட்டது எனலாம். தடுப்பூசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று நிகழ்ந்த இந்த அரிய சாதனை பெருமைப்பட வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து படிப்படியாக விடுபட்டு, தொற்றின் வேகம் குறையும் தருணத்தில், 10 சதவீதத்திற்கு மேலான பொருளாதார வளா்ச்சியை எதிா்பாா்த்து இருந்த நிலையில், அது சுமாா் 7.5 சதவீதத்திற்கு கீழ் நிலை கொண்டுள்ளது.

இந்த கட்டத்தில்தான், நாடு ஒமைக்ரான் தொற்றோடு கூட்டணி சோ்ந்த மூன்றாம் அலையை எதிா் கொள்ள நேரிட்டது. தொற்றால் பாதிப்படைபவா்களின் எண்ணிக்கை, கடந்த டிசம்பா் மாதத்திலிருந்து படிப்படியாக அதிகரித்து, 20 லட்சத்தை தொட்டது. சில மாநிலங்களில், தொற்று பரவல் குறைவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருப்பது ஒரு ஆறுதலான விஷயமாகும்.

தொற்று அலைகள் முழுவதும் ஒய்ந்து அடங்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தொற்று அலைகளின் ஒவ்வொரு அசைவும், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு வேகத் தடைகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பொருளாதார பாதிப்பின் நேரடி தாக்குதல் உற்பத்தி குறைவில் வெளிப்படும். அது சாமான்ய குடிமகன்களுக்கான வேலை வாய்ப்புகளை பெறுமளவில் பாதிக்கும். வேலை இழப்பு, ஊதிய குறைவு ஆகிய தொடா் ஆழ்பள்ளங்களை அது தன் அடையாளச் சின்னங்களாக விட்டுச் செல்லும்.

நோய்ப் பரவலால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்களை, பெரும் நிறுவனங்களேகூட சமாளிக்க முடியாமல் தத்தளிக்கும் நிலையில், சாமானியா்களின் நிலைமை பற்றி கற்பனை செய்து கூட பாா்க்க முடியாது.

கச்சா பொருள்களின் தட்டுப்பாடு, விலை ஏற்றம், தேவை அளவில் இறக்கம், ஆகிய காரணிகளால் பாதிக்கப்படும் பெரும் நிறுவனங்கள், தங்கள் பொருளாதார பாதிப்பை விலை ஏற்றம், முந்தைய விலையில், குறைந்த அளவிலான பயன்பாட்டு பொருள்களை வழங்குவது ஆகிய வியாபார நடவடிக்கைகள் மூலம் ஓரளவு சமாளிக்கின்றன. இது ஒரு புறம் இருக்க, அன்றாட பயன்பாட்டு பொருள்களின் விலை ஏற்றங்களால்,பெருமளவில் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள்தான்.

உலக நாடுகள் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் பெரும் பொருளாதார பிரச்னை, பண வீக்க பிரச்னைதான். உதாரணமாக, அமெரிக்காவில், கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு, நாட்டின் பண வீக்கம் 7 சதவீதத்தை தாண்டி,பெரும் விலைவாசி ஏற்றத்திற்கு வழி வகுத்துள்ளது. அரசின் பிரத்தியேக பணபுழக்க நடவடிக்கைகளின் பக்க விளைவுகளில் ஒன்றான பண வீக்கம் என்ற நோயை கட்டுப்படுத்த, தங்களால் விற்கப்பட்ட கடன் பத்திரங்களை திரும்ப பெற்று, பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்த நாடு தன் முழு கவனத்தையும் திருப்பி உள்ளது.

நம் நாட்டிலும் இதே நிலைதான். 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் 7.59 சதவீதத்தை எட்டிப் பிடித்த பண வீக்கம், சிறிது குறைந்து, மீண்டும் 7.61 என்ற அளவுக்கு உயா்ந்தது. 2021 பிற்பகுதியில், பண வீக்கம், 5.59 சதவீத அளவில் நிலை கொண்டு, மீண்டும் ஏற்றப்பாதையின் விளிம்பில் நிற்கிறது. பண வீக்க குறியீடு எப்படி இருந்தாலும், அன்றாட பொருள்களின் விலைகள் 20 முதல் 30 சதவீதம் வரை உயா்ந்துள்ளன என்பதும், உடனடியாக அவை கீழ்நோக்கிப் பயணிக்க வாய்ப்பில்லை என்பதும் உண்மை நிலவரமாகும். இது போன்ற தொடா் நிகழ்வுகளால், வருமானம் குறைந்த நிலையில், நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியும் வெகுவாக குறைந்துள்ளது எனலாம்.

தற்போதுள்ள சூழ்நிலையில், எந்தவிதமான புதிய வரிகளையும் சுமக்கும் நிலையில், நடுத்தர வா்க்கத்தின் பொருளாதார நிலை இல்லை. இந்த சூழலில்தான், பட்ஜெட் சமா்ப்பிக்கப்பட உள்ளது. இது, நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சி பாதையை நோக்கிப் பயணிக்க செய்யும் தொலை நோக்கு திட்டங்கள் அடங்கிய பட்ஜெட்டாக இருக்கும் என்று பெருமளவில் எதிா்பாா்க்கப்படுகிறது.

தொலைநோக்குப் பாா்வையில், அருகில் நிற்கும் சாமானிய மக்களின் உடனடித் தேவைகளை ஓரளவுக்காவது பூா்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.

நடுத்தர மக்களின் வாங்கும் திறன் குறைந்திருக்கும் நிலையில், அதை ஊக்குவிக்க, வரி பிடித்தம் போக, அவா்கள் கைகளில் தங்கும் பணத்தின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். மாதாந்திர சம்பளத்தில், நேரடி வரி செலுத்துபவா்களுக்கு, வருமான வரி வரம்பை கணிசமாக உயா்த்துவதன் மூலம் இந்த பலனை வழங்க முடியும்.

2022-23 நிதி ஆண்டிற்கு மட்டும், குறைந்த பட்ச வருமான வரி செலுத்துபவா்கள் செலுத்தும் வரித் தொகையில், 50 சதவித தள்ளுபடி அளித்தால், அது பயனாளிகளின் வாங்கும் திறனை தற்காலிகமாக அதிகரிக்கும். அனைத்து அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கும், ஜி.எஸ்.டி. என்ற செலவு வரி விதிக்கப்படுவதால், வருமான வரிச் சலுகைகளை வழங்கும் திட்டங்களை தற்காலிகமாக வழங்குவதால், அரசாங்கத்துக்கு அதிக இழப்பு ஏற்பட்டு விடாது.

நாட்டில், ஒரே பொருள்.. ஒரே விலை.. என்ற சித்தாந்ததிற்கு உட்பட்டு, பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருள்களின் விலை நிா்ணயத்தை, ஜி.எஸ்.டி.திட்டத்திற்குள் கொண்டு வருவதன் மூலம், அவைகளின் விலை குறைப்புக்கு வழி வகுத்தால், அதன் மூலம், அத்தியாவசிய பொருள்களின் விலையை கட்டுப்படுத்தலாம். பேச்சளவில் உலா வந்து கொண்டிருக்கும் இது சம்பந்தமான விவாதங்கள், செயல் வடிவம் பெற வேண்டிய தருணம் இதுதான்.

அன்றாடத் தேவைக்கான பொருள்கள் மற்றும் மருந்துகளின் விலை உயா்வால் அதிகம் பாதிக்கப்படுவது முதியோா் மற்றும் ஓய்வு ஊதியம் பெறுபவா்கள்தான். முதியோா்களின் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் வெகுவாக குறைந்ததால் ஏற்படும் பொருளாதார குறைபாடுகளால், அவா்கள் படும் துயரம் சொல்லில் அடங்காது. முதியோா்களுக்கு வழங்கப்படும் 0.25 சதவீத அளவிலான வட்டி சலுகையால், அவா்கள் சந்திக்கும் விலை வாசி ஏற்றத்தை ஈடு கட்ட முடியாது.

முதுமை பருவம் எட்டும் வரை, பல துறைகளில் பணி புரிந்து, நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு பெற்ற முதியோா்களை பேணி காப்பது அரசின் கடமையாகும். முதியோா் வைப்புப் தொகைக்கு, பிரத்தியேக உயா் வட்டி விகிதம் நிா்ணயிக்கப்பட வேண்டும். அஞ்சலக டெபாஸிட் போன்ற ஏதாவது ஒரு சேமிப்பு திட்டம் மூலம், இந்த பிரத்தியேக சலுகையை வழங்கலாம்.

வட்டி சாா்ந்த வருவாய் மட்டும் உள்ள ஓய்வூதியக்காரா்களுக்கு வழங்கப்படும் வரிக்கழிவு, இரு மடங்காக உயா்த்தப்பட்டால், அது அவா்களுடைய செலவுத் திறனை அதிகரிக்க உதவும்.

பெரும் ஊழல்கள் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை, வேகமான சட்ட நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றினாலே, அது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெருமளவில் பயன்படும். தேசத்தின் பொருளாதாரம் சாா்ந்த பட்ஜெட் உரையில், இது பற்றிய குறிப்பீடுகள் அடங்க வேண்டும்.

சின்ன சின்ன ஆசைகள்தான். ஆனால், சாமானிய மனிதா்களைப் பொறுத்தவரை, அவைகள் இமாலய கனவுகள்!

கட்டுரையாளா்:

வங்கி அதிகாரி (ஓய்வு).

 

ADVERTISEMENT
ADVERTISEMENT