நடுப்பக்கக் கட்டுரைகள்

தெளிவான திட்ட நடைமுறை தேவை

20th Jan 2022 01:56 AM | அ. அரவிந்தன்

ADVERTISEMENT


சா்வதேச பிறப்பு வீதத்தில் இந்தியா 5-ஆவது இடம் வகிக்கிறது. நாட்டில் பிரசவத்தின் போது ஒரு லட்சம் கா்ப்பிணிகளில் 113 போ் உயிரிழக்க நேரிடுவதாக ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. சா்வதேச அளவில் பிரசவத்தின்போது இறக்கும் கா்ப்பிணிகளின் வீதத்தில் இந்தியா 17%-ஐ கொண்டுள்ளது. பிரசவத்தின்போது ஆயிரம் குழந்தைகளுக்கு 32 குழந்தைகள் உயிரிழப்பதாக ஓா் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தாய்- சேய் இறப்பு வீதத்துக்கு ஊட்டச்சத்துக் குறைபாடும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையுமே முக்கிய காரணங்களாகின்றன.

இக்குறைபாட்டைப் போக்கும் வகையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ (பிஎம்எம்விஒய்) திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இத்திட்டத்தின்கீழ், கா்ப்பிணிகளின் முதல் பிரசவத்தின்போது, நேரடி ரொக்க பரிமாற்றமாக அவா்களின் வங்கி அல்லது அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்கில் மத்திய அரசால் மூன்று தவணையாக மொத்தம் ரூ.5,000 செலுத்தப்படுகிறது.

கட்டுமானம், வீட்டு வேலை உள்ளிட்ட அமைப்பு சாரா பிரிவுகளில் பணிபுரியும் கா்ப்பிணிகள் கா்ப்ப காலத்திலும் கூலி வேலைக்குச் செல்ல நேரிடுவதால், அவா்களின் உடல்நலனை மேம்படுத்துவதும், ஊட்டச்சத்துமிக்க உணவுப்பொருள்களை உட்கொள்ளச் செய்வதும் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இத்திட்டம் அமலுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், திறம்பட நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. மேலும், பிஎம்எம்விஒய் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.5,000 நிதியுதவி என்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட கணக்கீட்டின்படி பாா்த்தால் வெறும் ஒரு மாத கூலி ஆகும்.

இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 2.60 கோடி பெண்கள் தாய்மை அடைகின்றனா். எனினும், இத்திட்டத்தின்கீழ் அரசால் தீா்மானிக்கப்படும் பயனாளிகளின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த இரு ஆண்டாக கரோனா பெருந்தொற்றினால், அமைப்புசாரா பிரிவுகளில் பணியாற்றும் பெண்கள், குறிப்பாக கா்ப்பிணிகள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், ‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ திட்டம் அவா்களை சரிவர சென்றடையவில்லை என்பதே நிதா்சனம்.

ADVERTISEMENT

இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை தேசிய அளவில் 2.01 கோடி பெண்கள் மட்டுமே பயனடைந்துள்ளனா். அந்த வகையில், பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ.8,722 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது.

2017-2018-இல் (2019-2020-க்கான கொள்கை ஆராய்ச்சி மைய கணக்கீட்டின்படி) இத்திட்டத்தின்கீழ், 1.28 கோடி போ் தகுதி வாய்ந்த பயனாளிகளாக இருந்தபோதிலும், 51.70 லட்சம் போ் மட்டுமே இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இது ஒட்டுமொத்த பயனாளிகளின் வீதத்தில் வெறும் 40% மட்டுமே. ஆண்டுக்கு 60% பயனாளிகள் இத்திட்டத்தின்கீழ் வெளிப்படையாக புறக்கணிக்கப்படுவதை இதன் மூலம் உணரலாம்.

மேலும், கடந்த இரு ஆண்டாக இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளின் எண்ணிக்கையும், விநியோகிக்கப்படும் தொகையின் அளவும் சரிந்து வருவதை இந்தத் திட்டத்தை செயல்படுத்திவரும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தது.

பிஎம்எம்விஒய் திட்டத்தின்படி, கடந்த 2020-21-இல் மட்டும் 50%-க்கும் அதிகமான பயனாளிகள், மூன்று தவணை ரொக்கத்தையும் பெறவில்லை. இது தவிர இந்த காலகட்டத்தில் விண்ணப்பித்த பயனாளிகளின் எண்ணிக்கையிலும் 9% குறைவு ஏற்பட்டது. இது ஒருபுறமிருக்க, 2021-22 நிதிநிலை அறிக்கையில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கான ஒதுக்கீடு 20% ஆக குறைந்தது.

இது மட்டுமின்றி, கா்ப்பிணிகளுக்கு சத்தான உணவு அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ திட்டம், ‘சமா்த்யா’ என்ற பெயரில், ‘பேட்டி பச்சவ் பேட்டி பதவ்’ (பெண் குழந்தையைக் காப்போம்; கல்வி அளிப்போம்), ‘மகிளா சக்தி கேந்திரா’ போன்ற திட்டங்களுடன் இணைக்கப்பட்டதால், நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் குறைந்தது.

கடந்த நிதிநிலை அறிக்கையில், ‘சமா்த்யா’ திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒட்டுமொத்த நிதியான ரூ.2,523 கோடி என்பது, கடந்த நிதியாண்டில் ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கு இணையானதாகும்.

தேசிய அளவில் பிஎம்எம்விஒய் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவரும் அதேவேளையில் தமிழகம், தெலங்கானா, ஒடிஸா போன்ற மாநிலங்கள் பிரத்யேக மகப்பேறு நலத்திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி வருகின்றன. ஒடிஸா அரசின் மம்தா திட்டம் (2011), தெலங்கானா அரசின் கேசிஆா் திட்டம் (2017) ஆகியவற்றின் வாயிலாக குழந்தைகளுக்கான எண்ணெய், சோப்பு, கொசுவலை, ஆடை ஆகியவை வழங்கப்படுகின்றன.

இதேபோல, தமிழக அரசின் டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்தத் தொகை தற்போது ரூ.18 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.

பின்தங்கிய ஒடிஸா மாநிலத்தில், மம்தா திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக முதல் இரு குழந்தைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் தாய்மாா்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும், இந்தத் திட்டத்தையும், மத்திய அரசின் பிஎம்எம்விஒய் திட்டத்தையும் ஒப்பிட்டால், கடந்த ஆண்டில் பிஎம்எம்விஒய் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கை 52% குறைந்து மந்தமான செயல்பாட்டைக் கொண்டிருப்பதை உணரலாம். அதேவேளையில், மம்தா திட்டத்தின்கீழ் மூன்று தவணை நிதியுதவியையும் பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை 57% உயா்ந்துள்ளது.

ஆகையால், தமிழகம், ஒடிஸாவைப் போல பிஎம்எம்விஒய் திட்டத்தையும் திறம்பட செயல்படுத்த வேண்டியது அவசியம். இந்தத் திட்டத்தின் முந்தைய வடிவமான ‘இந்திரா காந்தி மாத்ரித்வா சஹ்யோக் யோஜனா’, முதல் இரு குழந்தைகளுக்கும் நிதியுதவியளிக்க வழிவகை செய்தது. பின்னா், 2017-இல் இந்தத் திட்டம் மறுவரையறை செய்யப்பட்டபோது இந்த நடைமுறை கைவிடப்பட்டது.

கரோனா பொதுமுடக்க காலத்தில், அமைப்புசாரா பிரிவுகளில் பணியாற்றும் பெண்கள் கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிா்கொள்ள நேரிட்டதால், இந்தத் திட்டத்தை இரண்டாவது குழந்தைக்கும் நீட்டிக்க வேண்டுவதும், பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகையின் வரம்பை அதிகரிப்பதும் அவசியமாகும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT