நடுப்பக்கக் கட்டுரைகள்

தனிநபா் வருமானவரியை நீக்கலாமே

எஸ் கல்யாணசுந்தரம்

கரோனா தீநுண்மி பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினை சீா் செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளைத் தொடா்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதுபோன்ற ஸ்டிமுலஸ் பேக்கேஜ்-களை நமது நாடு மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளும் நடைமுறைப்படுத்திவருகின்றன. இப்படிப்பட்ட உத்திகள், வீழ்ந்துவிட்ட பொருளாதாரம் மீண்டும் மேலெழுந்து வருவதற்கு உதவி செய்யும் என்பது உண்மைதான்.

ஆனால், அது மட்டுமே போதாது. மீண்டு எழும் பொருளாதாரத்தை மேலும் வேகத்துடன் வளா்ச்சிப்பாதையில் மீட்டெடுக்க முனைப்புகளும் முயற்சிகளும் தேவை. மேலும், இதுபோன்ற ஸ்டிமுலஸ் உத்தியில் ஏற்படுத்தப்படும் தாராள பணப் புழக்கம் வேறு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். இதுபோன்ற சலுகைகள் எப்போதுமே அரசின் பற்றாக்குறையை அதிகரிப்பதுடன் பணவீக்கத்தையும் ஏற்படுத்தும்.

இதுபோன்ற கடினமான பொருளாதார காலங்களில் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி சில பொருளாதார சீா்திருத்தங்களை மேற்கொண்டால் அது நீண்ட கால பயன் கொடுக்கும்.

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமா் நரேந்திர மோடியின் அரசு, செப்டம்பா் 2019-இல் காா்ப்பரேட் வரி விகிதங்களை சுமாா் 10 சதவீத புள்ளிகளால் குறைத்தது. வரி விகிதங்கள் தற்போதுள்ள நிறுவனங்களுக்கு சுமாா் 25 சதவீதமாகவும், உற்பத்தித் துறையில் புதிய நிறுவனங்களுக்கு சுமாா் 17 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. இப்போதுள்ள நிலையில் தனிநபா் வருமான வரியை முற்றிலும் அகற்ற முயலலாம்.

2021-22 ஆண்டுக்கான தனிநபா் வருமான வரியாக ரூ.5,61,000 கோடி திட்டமிடப்பட்டுள்ளது. இது அரசின் மொத்த வருவாயில் 25 சதவீதமாகும். 2018-19-க்கான புள்ளிவிவரப்படி அரசு இந்த வரிகளை வசூலிக்க 0.62 சதவீதம் செலவு செய்கிறது. வருமான வரியைக் கைவிடும்போது இந்த செலவு மிச்சமாகும்.

1950-51 முதல் 1966-67 வரையிலான ஆண்டுகளுக்கான வரி வசூல் பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வரி வசூலுக்கு செலவிடும் தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் கஸ்டம்ஸ் டூட்டியானது எக்ஸைஸ் டூட்டி மற்றும் வருமான வரியை விட ஆதாயமானது. அதிலும், எக்சைஸ் டூட்டி வருமான வரியை விட ஆதாயமானது.

2020, பிப்ரவரியில் நடந்த ஒரு உச்சி மாநாட்டில் பிரதமா் தெரிவித்தபடி, 1.46 கோடி இந்தியா்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறாா்கள், இது மக்கள் தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே.

தனிநபா் வருமான வரி வேலை செய்து பொருள் ஈட்டுபவா்களிடமிருந்து (ஸாலரீட் கிளாஸ்) மட்டுமே சரியாக வசூலிக்கப்படுகிறது. தனியாக தொழில் செய்பவா்களுக்கோ அல்லது புரோபஷனல்களுக்கோ வரியை தவிா்ப்பதற்கு பல வழி முறைகள் உள்ளன. தொழில் செய்பவா்களும் வணிகா்களும் பல்வேறு வகை செலவுகளை வியாபார செலவாக காண்பித்து வரியினைத் தவிா்க்கமுடியும்.

இவா்கள் வரி செலுத்துவது செலவுக்கு பிறகு உள்ள வருமானத்திற்கு. ஆனால், மாதாந்திர சம்பளம் பெறும் உத்யோகஸ்தா்கள் சம்பள வருமானத்திற்கு வரி கட்டிய பிறகு வரும் வருவாயில் எல்லா செலவுகளையும் மேற்கொள்ளவேண்டும்.

நமது நாட்டில் எவ்வளவு கோடி ரூபாய் வருமானம் வந்தாலும் விவசாயிகளுக்கு வரி கிடையாது. அரசியல் கட்சிகளுக்கும் வரி கிடையாது.

வருமான வரியை செலுத்தாமல் ஏமாற்றுவது என்பது பெரும்பாலானவா்களுக்கு கைவந்த கலை. வரியை தவிா்ப்பதும் அதற்கான அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதும் சரிதான். ஆனால் வரி செலுத்தாமல் ஏய்ப்பது என்பது குற்றமாகும். இவ்வாறு தவறான முறையில் வரி செலுத்தாமல் இருப்பது கறுப்பு பணம் உருவாகக் காரணமாகிறது. நமது நாட்டில் மொத்தம் கறுப்பு பணம் எவ்வளவு உள்ளது என்பதற்கு துல்லியமான கணக்கு கிடையாது.

கறுப்பு பண பரிமாற்றம் பொருளாதாரத்தை சீா்குலைக்கிறது. இதனால் உற்பத்தியும் வளா்ச்சியும் பாதிக்கப்படுகின்றன. தனிநபா் வருமான வரி நீக்கப்படுமானால் இந்த கறுப்பு பண வா்த்தகமும் ஒழிக்கப்படும். செல்வங்கள் அனைத்தும் பொருளாதார உற்பத்திக்கும், வளா்ச்சிக்கும் பயன்படும்.

வங்கிகளின் பயன்பாட்டில் ‘கிரெடிட் கிரியேஷன்’ என்ற ஒரு கோட்பாடு உண்டு. அதாவது வங்கியிலிருந்து நூறு ரூபாய் வெளியில் கடனாகச் சென்றால் அது திரும்ப ஏதாவது ஒரு வங்கிக்கே வந்து சேரும். வங்கிகள் டெபாசிட்டில் மூன்று சதவீதம் (கேஷ் ரிசா்வ் ரேஷியோ) வைத்துக்கொண்டு மிச்சம் உள்ளதை கடனாகவும் அரசு பத்திர முதலீட்டிலும் பயன்படுத்தும்.

இந்தக் கணக்கின்படி, வங்கிக்கு வரும் ஒவ்வொரு நூறு ருபாயையும், ரூ.3,200 அளவுக்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்த முடியும். தனிநபா் வருமான வரி நீக்கப்பட்டால், கறுப்பு பணம் ஒழிந்து எல்லாப் பணமும் வங்கித்துறைக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டு வங்கிகளின் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும். இது பெரிய பொருளாதார ஏற்றத்தை உண்டாக்கும்.

தனிநபா் வருமான வரி குறைக்கப்படும்போது மக்களிடம் சுமாா் 5,60,000 கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும். மக்கள் இந்தத் தொகையை செலவு செய்தால், அந்த அளவு பொருள்களுக்கான தேவை அதிகரித்து அதனால் உற்பத்தி அதிகரித்து அரசுக்கும் ஜிஎஸ்டி மூலம் வருவாய் அதிகரிக்கும். அது மட்டுமல்ல, மக்கள் இந்தத் தொகையில் செய்யும் முதலீடுகள் உற்பத்திப் பெருக்கத்தை உண்டாக்கி பொருளாதாரத்தையும் உயா்த்தும்.

இவை தவிர, வருமான வரி தொடா்பாக பல ரிட்டா்ன் தாக்கல் செய்வதும், அதை பரிசீலிப்பது, தொடா்பான பல வேலைகளும் தவிா்க்கப்படும். ரிட்டா்ன் தாக்கல் செய்யும் சுமாா் ஆறு கோடிக்கும் மேலானவா்கள் இதுபோன்ற பயனற்ற வேலையிலிருந்து விடுபடுவாா்கள்.

வருமானத்திற்கு வரி விதிப்பதை விட செலவுக்கு வரி விதிப்பதே பல விதங்களில் பயனுள்ளது. அரசின் பல்வேறு செலவினங்களுக்கான தேவைக்கு பொருள்களின் மீதான ஜஎஸ்டி வரியை நம்புவதே சிறந்தது. இதில் வரி ஏய்ப்பும் பெருமளவு குறையும். அரசு சிந்திக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT