நடுப்பக்கக் கட்டுரைகள்

தைத்திருநாளும் மாநில சுயாட்சியும்!

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

 மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்பது அண்ணாவின் உரத்த குரல். அண்ணா தன்னுடைய உயிலை "காஞ்சி' இதழின் தைப்பொங்கல் மலரில் வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது வருமாறு:
 "...மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்துக் கூறி வருகிறேன். இதற்கான நல்லாதரவு நாளுக்கு நாள் வளர்ந்தபடி உள்ளது என்பதிலே எனக்குத் தனியானதோர் மகிழ்ச்சி; நமது கழகம் மட்டுமின்றி வேறு பல அரசியல் கட்சிகளும் கட்சி சாராத அறிவாளர் பலரும் இதற்கு ஆதரவு காட்டுகின்றனர்...'
 அவர் அதற்கு வெகுகாலத்திற்கு முன்பே,1963-இல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது சில கருத்துகளைக் கூறியிருந்தார்:
 "அரசினுடைய "இறையண்மை' (ஒப்புயர்வற்ற ஆட்சி அதிகாரம்) என்பதற்கு நாம் கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது பொதுமக்களிடம் நிலைத்துள்ளதென நமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது கூட்டாட்சி ஒன்றியத்திற்கும் (மத்திய அரசு) அதன் அங்கங்களுக்குமிடையே (மாநிலங்கள்) பிரித்துத் தரப்பட்டுள்ளது.
 நாம் ஒரு கூட்டாட்சியமைப்பை (ஃபெடரல் ஃபார்ம்) ஏற்றிருக்கிறோம். அரசமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றையாட்சி அமைப்பு (யூனிடெரி ஃபார்ம்) கூடாது; கூட்டாட்சியமைப்பு முறை தான் வேண்டுமென்று விரும்பினார்கள். ஏனெனில் அரசியல் தத்துவ ஞானிகள் பலர் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்தியா மிகப் பரந்து கிடக்கின்றது.
 அதனை ஒரு துணைக் கண்டம் என அழைக்கக் கூடிய அளவிற்கு அது பரந்து விரிந்து கிடக்கின்றது. எஃகால் செய்த வரைச்சட்டத்தைப் போல் வலிவான ஓர் ஒற்றையாட்சியமைப்பை ஏற்க முடியாத அளவிற்கு, இந்நாடு மாறுபட்ட மரபுகளையும், வேறுபட்ட வரலாறுகளையும், பல தரப்பட்ட மனோபாவங்களையும் கொண்டுள்ளது.
 சென்ற பதின்மூன்றாண்டுகளாக நமது கூட்டாட்சி செயல்படும் தன்மையானது மாநிலங்களிடையே விரக்தி உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளதென்பதே எனது குற்றச்சாட்டு. மாநிலங்கள், சுங்கத் தொகை வசூலிக்கக்கூடிய சாதாரண நகராட்சி மன்றங்களைப் போல் விரைந்து மாறி வருகின்றன. அவை, இருக்கும் இடம் தெரியாமல் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன.
 அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்ற இயற்கையான உணர்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன. நமது கூட்டாட்சியமைப்பின் இவ்வகையான நடைமுறை, மாநிலங்களை மேலும் மேலும் விரக்தியடையச் செய்துள்ளது என்பதை நான் தெளிவாக்க விரும்புகிறேன். நமது அரசியல் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும்; மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும். இதனை மத்திய அரசு உணர வேண்டும் என்பதே மாநிலங்களின் கோரிக்கையாகும்...
 ...எனவே நமது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றை ஆட்சித் தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாகவே நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன். நாடாளுமன்றத்தின் அறிவுசால் உறுப்பினர்களாகிய நீங்கள் (மாநிலங்களின்) இந்தச் சிக்கலை ஏன் மூடி மறைக்கின்றீர்கள்? நீங்கள் அதனை உயர்மட்ட அரசு மன்றத்திற்குக் கொண்டு வருவீர். அதனை (அந்தச்சிக்கலை) தங்கு தடையின்றி நடமாட அனுமதிப்பீர்; (தற்போதைய) கூட்டாட்சியை, ஒரு மெய்யானக் கூட்டாட்சியாக மலர வைப்பதற்கு வழிவகை செய்திடுவீர்...' என முழங்கினார்,
 1969-ஆம் ஆண்டு, "விடியற்காலையே வாழ்க' (ஹெய்ல் தி டான்) என்ற மகுடமிட்டு "ஹோம்ரூல்' வார இதழில் "தம்பிக்கு' எழுதிய தன் இறுதி முடங்கலில்,
 "அன்புத்தம்பி! பதவிப் பித்துப் பிடித்துத் திரிபவனல்லன் நான். வெற்றுத்தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக் கூறி, நடைமுறையில் மத்திய அரசிற்கு மென்மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கிற (நமது) அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இதற்காக மத்திய அரசிற்கு எரிச்சலூட்டி, டெல்லியுடன் சச்சரவு கொள்வதே என் நோக்கம் என்று எனது நல்ல நண்பரான நம்பூதிரிபாடு கூறுவதையும் நான் விரும்பவில்லை.
 அதனைச் சரியான காலகட்டத்தில் தீர்மானிக்க வேண்டுமென்பதும் இன்றியமையாதது. உண்மைதான்; அப்படித் தீர்மானிக்கும் முன்னர், கூட்டாட்சித் தத்துவத்தை மக்களுக்குக் கற்றுத் தரவேண்டும். கொல்லைப்புற வாயில் வழியாக நுழையும் ஒருவகை இரட்டை ஆட்சியே நமது இன்றைய அரசியல் சட்டம் என்பதை, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலிருப்பதன் மூலமாக, சிந்திக்கும் ஆற்றல் படைத்த மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரமுடியுமெனில், உண்மையில் அதுவே நாம் அரசியல் உலகத்திற்குச் செலுத்திய உரிய பங்காகும்' என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணா.
 இந்தச் சூழலில் அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி தமிழக முதல்வரானார். அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முதன்முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்ற கருணாநிதி தில்லி சென்றார். தில்லி சென்று பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அமைச்சர்களை சந்தித்து விட்டு, தில்லி தமிழ்நாடு இல்லத்தில் 1969, மார்ச் 17 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
 அப்போது "மாநிலங்களுக்கு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு; எங்களுடைய தலைவர் அண்ணாவின் கனவு; அதுவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையும் கோட்பாடும் ஆகும்' என்று தெளிவாக கருணாநிதி குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, "மாநில சுயாட்சி குறித்து விரிவான அறிக்கையை வழங்கக்கூடிய அளவில் ஒரு குழுவை அமைக்க இருக்கிறோம்' என்றும் கருணாநிதி குறிப்பிட்டார்.
 இந்த நிலையில், 1969 ஆகஸ்டு 19-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்த முறையான அறிவிப்பை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.வி. ராஜமன்னார் தலைமையில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார், நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகிய மூவர் கொண்ட குழுவை அமைத்தார்.
 நீதிபதி ராஜமன்னார் குழுவினர் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் இதுகுறித்து ஆய்வு நடத்தி, பல்வேறு கட்சிகள், முக்கியத் தரப்பினர்களிடம் வினாக்களை அனுப்பி, பதிலைப் பெற்று அந்த அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் 27.5.1971 அன்று அளித்தனர்.
 அப்போது முதல்வராக இருந்த மு. கருணாநிதி, ராஜமன்னார் குழு அறிக்கையை தமிழக சட்டப்பேரவையிலும், மேலவையிலும் விவாதத்திற்கு வைத்தார். மூன்று, நான்கு நாட்கள் விரிவான விவாதத்திற்குப்பின் மாநில சுயாட்சி தீர்மானம் அவரால் முன்மொழியப்பட்டு, 16.4.1974 அன்று ஏற்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
 மத்திய அரசு அந்தத் தீர்மானத்தைப் பெற்றுக்கொண்டது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, இது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று பதில் கடிதமும் அனுப்பினார். 46 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மறுபடியும் ராஜமன்னார் குழு அறிக்கை இன்றைக்கு அச்சில் வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
 மாநில சுயாட்சி என்பது விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் தலைவர்களே வலியுறுத்திய விஷயம். நாட்டின் விடுதலைக்கு முன்பே (பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே) மாகாண சுயராஜ்யம் என்றுதான் காங்கிரஸ் குரல் கொடுத்தது. அதுதான் மாநில சுயாட்சி.
 நாடு சுதந்திரத்திற்குப் பிறகு மாநில சுயாட்சிக்காக பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்தன. அதில் பிரதானமாக ராஜமன்னார் குழுதான் முக்கியமானதாகும். இது குறித்தான மீள் வாசிப்புகள், விவாதங்கள் இன்றைய காலகட்டத்தின் தேவை.
• மத்திய அரசு மொரார்ஜி தேசாய் தலைமையில் நிர்வாக சீர்திருத்தக் குழுவை அமைத்து மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்தது.
• முன்னாள் மத்திய அமைச்சர் கே. சந்தானத்தின் மத்திய - மாநில உறவு குறித்த அறிக்கை 1.4.1970-இல் வெளியானது.
• சிரோமணி அகாலி தளம் கட்சி, 1973, அக்டோபர் 16, 17-தேதிகளில் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையிலான 12 பேர் குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையினை, அனந்த்பூர் சாகிப் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றியது.
• மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு, அன்றைய அம்மாநில நிதியமைச்சர் அசோக்மித்ரா தயாரித்த, மத்திய - மாநில உறவுகள் குறித்தான அறிக்கையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசுக்கு 1.12.1977 அன்று அனுப்பினார்.
• அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, 9.6.1983 அன்று மத்திய-மாநில உறவுச் சிக்கல்களை ஆராய நீதிபதி சர்க்காரியா தலைமையிலான குழுவை மத்திய அரசு சார்பில் நியமித்தார்.
• காஷ்மீர், ஸ்ரீநகரில் காங்கிரஸ் அல்லாத 59 எதிர்க்கட்சித் தலைவர்கள் (17 அரசியல் கட்சிகள்) 1983, அக்டோபர் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் கூடி, மத்திய-மாநில உறவுகள் குறித்து விவாதங்களை நடத்தி ஸ்ரீநகர் பிரகடனத்தை அறிவித்தனர்.
• கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, பெங்களூரில் 1983, மார்ச் 20 -இல், காங்கிரஸ் அல்லாத தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதில், மத்திய - மாநில உறவுகள் குறித்தும், மாநிலத்துக்கு ஆளுநர் பதவி தேவையா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
• தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு நடத்த 1984, ஜனவரி 5, 6, 7, 8 தேதிகளில், சென்னையில் உள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் மாநாட்டைக் கூட்டினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாகத் தயார் செய்து மத்திய அரசு அமைத்த சர்க்காரியா குழுவிடம் வழங்கினார். இந்த அறிக்கை சட்டப்பேரவையிலும் வைக்கப்பட்டது.
• வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், இந்திய அரசியல் சாசனம் மறு ஆய்வுக்காக எம்.என். வெங்கடாசலையா தலைமையில் 2000, பிப்ரவரி 22-இல் அமைக்கப்பட்ட குழு, மத்திய-மாநில உறவுகள், மாநில ஆளுநர் குறித்த செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் விரிவான அறிக்கை அளித்தது.
 
 
 கட்டுரையாளர்:
 அரசியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

SCROLL FOR NEXT